ராம் கணேஷ்
டாலஸ்
விடுதலைப் புலிகளை முழுக்க ஒடுக்கி விட்ட பின் என்ன ஆகும்? அங்குள்ள தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை இலங்கை அரசாங்கம் கொடுக்குமா?
இலங்கை அரசாங்கம், அது எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் சரி, அடிப்படையில் சிங்களப் பேரினவாத அரசாகத்தான் இருக்கும். கேள்வி கேட்க ஆளில்லாத நிலையில் லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் ஹிட்லரின் சித்ரவதை முகாம்களைப் போன்ற ஒரு பயங்கர உலகத்தில் வாழ நிர்பந்திக்கப்படுவார்கள். விரைவில் அந்த நிலை ஏற்படலாம் என்பதே இப்போது நிலவும் அச்சம்.
எஸ்.எம். கல்யாண்
டொரண்டோ
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்திப் பாடல்களைக் கேட்பதுண்டா?
“யுவராஜ்” படத்தில் ஜிந்தகி ஜிந்தகி என்று ஒரு பாடல் போட்டிருக்கிறார் பாருங்கள். சிரீனிவாஸின் இனிய குரலில் . மெய் மறக்க வைக்கும், நம் உள்மன உணர்வுகளை ஒரு தாலாட்டு போல தட்டி எழுப்பும் பாடல். டெல்லி 6ல் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வகை. ரஹ்மானின் “தி பெஸ்ட்” என்று அந்த ஆல்பத்தைச் சொல்வேன். தமிழில் இன்னும் செய்யாத பல இசை அற்புதங்களை அங்கே செய்து கொண்டிருக்கிறார் சென்னை மொஸார்ட்.
காமினி நடராஜ்
புதுடில்லி
இந்தியாவில் அடிக்கடி நடக்கும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குக் காரணம் உளவுத் துறையின் தோல்வி என்று சொல்லலாமா?
ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லட்டுமா? ‘ லஷ்கர் இ தொய்பா ‘ இயக்கம் சில காரணங்களுக்காக இந்திய செல்போன் சிம் கார்டுகளை வாங்க விரும்புகிறது என்கிற ரகசிய செய்தியை அறிந்த காஷ்மீர் மாநில உளவுத் துறை போலீஸ், அவர்களுக்கு உளவு அறியும் நோக்கத்தில் அந்த சிம்கார்டுகளை ஏற்பாடு செய்து கொல்கத்தாவிலிருந்து அனுப்பியிருக்கிறது. அந்த செல்போன் நம்பர்களை மத்திய உளவுத்துறையிடம் அளித்து அவற்றைக் கண்காணிக்கும்படியும் சொல்லிருக்கிறது. ஆனால் அவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் அண்ட் கோ உபயோகப்படுத்தியது அந்த செல்போன் நம்பர்களைத்தான்! உளவுத் துறையின் தோல்வி ஒரு பக்கம் என்றால், தீவிர அடிப்படைவாத மத உணர்வுகளைத் தூண்டிவிடும் கட்சிகளும் அமைப்புகளும் இன்னொரு பக்கம் காரணமாய் இருக்கின்றன.
மயில்வாகனன்
பெர்லின்
பெண்கள் கிரிக்கெட் ஏன் எடுபடவில்லை?
ஆண்கள் பரதநாட்டியம் ஏன் எடுபடவில்லை?
ஆர். கருணாமூர்த்தி
ஸ்லோ
சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்?
. “இந்தியாவில் முன்பு ஆயிரமாயிரம் ஜாதிகள் இருந்தன. இப்போது இரண்டுதான். ஒன்று, பெரிய தொப்பை உள்ள மனித ஜாதி இரண்டு, சிறிய தொப்பை உள்ள மனித ஜாதி. உலகின் எதிர்காலம் வெள்ளைத் தோல்காரனிடம் இல்லை. அவன் செல்பேசியிலும் போதைப் பொருட்களிடமும் சிக்கி வீணாய்ப் போய்விட்டான். எதிர்காலம் கடும் உழைப்பாளியான மஞ்சள் தோல்காரனிடம்தான் ( சீனன் ) இருக்கிறது. . கங்கையில் தயவு செய்து தலை மூழ்காதீர்கள். செத்துப் போன ஏதாவது ஒரு மனிதனின் அங்கமோ, எருமையின் மாமிசமோ அல்லது தொழிற்சாலை கழிவுகளின் ஏழு ரசாயனங்களில் ஒன்றோ உங்கள் வாயினுள் செல்லக் கூடும். இந்தியாவின் கடலோர நகரங்கள் எல்லாம் ஒளியுடன் காணப்படுகின்றன. ஆனால் ஆறுகள் ஓடும் ஊர்களில் எல்லாம் கருமை படர்ந்து கிடக்கிறது. பழைய டில்லியின் மார்க்கெட்டில் போய்ப் பாருங்கள். கோழிகளைச் சிறிய சிறிய கூண்டுகளில் நெருக்கியடித்து வைத்திருப்பார்கள். தங்களுடைய சக கோழிகளின் மிச்சங்களை அந்தக் கோழிகள் பார்த்தபடி இருக்கும். தங்களுக்கும் அதே கதிதான் விரைவில் என்பது அந்தக் கோழிகளுக்குத் தெரியும்..ஆனாலும் அவை எந்தக் குரலும், எதிர்ப்பும் எழுப்பாது. இந்திய மக்களும் அப்படித்தான் சுரணை கெட்டு போய் விட்டார்கள்..” என்று பக்கத்துக்குப் பக்கம் பொரிந்து தள்ளும், மனசாட்சியை உலுக்கும் அரவிந்த் அடிகாவின் “ஒயிட் டைகர்” . “ஸ்லம் டாக் மில்லியனருக்கு” அடுத்து சினிமாவாக எடுக்கக் கூடிய ( என் சிபாரிசு : மணிரத்னம் ) பிரமாதமான நாவல். இந்தியாவில் தொழிலதிபர் ஆக வேண்டும் என்றால் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைப் புட்டுப் புட்டு வைக்கிறது. புத்தகம் சொன்ன செய்தியை நிஜமாக்கியிருப்பவரின் பெயர்: ராமலிங்க ராஜு.
தேவராஜ்
சான்•பிரான்ஸிஸ்கோ
சிவாஜி கணேசன், எஸ்.வி. சுப்பையா, நாகேஷ், ஷாயாஜி ஷிண்டே - பாரதியார் வேடத்தில் ஜொலித்தவர் யார்?
மற்றவர்கள் நடித்தார்கள். ஷாயாஜி வாழ்ந்து காட்டினார்.
திலகவதி பன்னீர்செல்வம்
பெங்களூரு
சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தீவிரவாதத் தாக்குதல் எது?
மகாத்மா காந்தி மீது பாய்ந்த குண்டுகள். அதற்குக் காரணம் அவர் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்பதே.
எம். ஷாலி
லீட்ஸ்
புஷ் மீது ஷ வீசியது அநாகரீகத்தின் உச்சம் என்கிறாரே ஜெயகாந்தன்?
(வார்த்தை பத்திரிகையில்)
அபுகாரிப், குவாண்டனமோ சிறைச்சாலைகளில் கைதிகளை அமெரிக்கா நடத்திய விதமும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று ஈராக்கைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் காரியமும் நாகரீகத்தின் உச்சம் என்று நினைக்கிறாரோ என்னவோ.
சிவராஜன்
கோலாலம்பூர்
பழைய கடிதங்களைப் படித்துப் பார்ப்பது உண்டா?
அதில் ஒரு முக்கியமான சந்தோஷம் இருக்கிறது, அதற்கெல்லாம் பதில் போட வேண்டியது இல்லை.
***** ***** *****
'குமுதம்' பத்திரிகையில் பல வருடங்களாக 'அரசு பதில்கள்' எழுதி வந்த கிருஷ்ணா டாவின்ஸி உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். அரசியல், சினிமா, சமூகம், இலக்கியம், விஞ்ஞானம், கிரிக்கெட், டிவி என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகளை அனுப்பலாம்..sky is the limit!
உங்கள் கேள்விகளை தமிழ் அல்லது தமிங்கிலத்தில் அல்லது ஆங்கிலத்தில் கீழேயுள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்:
content@andhimazhai.com
andhimazhai@gmail.com
மே 01-2009