சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் – 106

ஆளுநரும்  நடிகையும்
சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் – 106
Published on

மீனச் சூட்டை விட ஒன்றோ இரண்டோ டிகிரி அதிகமான தேர்தல் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கிறது கேரளம். இந்த முறை இடது ஜனநாயக முன்னணி என்றால் அடுத்த முறை ஐக்கிய ஜனநாயக முன்னணி என்று ஆட்சி மாற்றம் நடை பெறுவது கேரள வழக்கம். மலையாளிகள் அந்த அளவுக்கு ஜனநாயக விரும்பிகள். ஆக வரும் தேர்தலில் ஆட்சியமைக்கப் போவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிதான் என்பது எதிர்பார்க்கப்பட்ட முடிவு. ஆனால் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதுதான் நடை பெறவிருக்கும் தேர்தலின் மர்மம். மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற பெரும் வெற்றியை சட்டமன்றத் தேர்தலிலும் பெற முடியும் என்று காங்கிரஸ் கூட்டணி நம்புகிறது. அப்படியொன்றும் இராது என்று தற்காப்புத் தந்திரங்களுடன் களமிறங்கியிருக்கிறது இடது முன்னணி.

காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதன் கூட்டணிக் கட்சிகளே குளறுபடி ஆக்கியிருக்கின்றன. கேரள காங்கிரஸ் மாணி பிரிவும் கே.ஆர். கௌரியம்மாவின் ஜனாதிபத்ய சம்ரக்ஷண வேதியும் ( ஜனநாயகப் பாதுகாப்பு அமைப்பு - ஜே.எஸ்.எஸ்.) விரோத சிநேகத்துடன் கூட்டணியில் இருக்கின்றன. முஸ்லிம் லீக் உட்கட்சிப் பூசல்களுடன் தேர்தலைச் சந்திக்கிறது. கேரள காங்கிரஸ் பால கிருஷ்ண பிள்ளை பிரிவு மீகாமன் இல்லாத கலம் போலத் தத்தளிக்கிறது. இடமலையார் மின் திட்ட வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு அந்தக் கட்சியின் தலைவர் ஆர். பாலகிருஷ்ணபிள்ளை சிறை வாசம் அனுபவித்துகொண்டிருக்கிறார்.இடது அணியிலிருந்து தாவிய இன்னொரு கேரள காங்கிரஸின் தலைவர் பி.ஜே.ஜோசப், மாணி காங்கிரசில் இணைந்த பின்னும் முறுக்கிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் நாயரா நஸ்ராணியா என்ற குழப்பம் நீடிக்கிறது. ரமேஷ் சென்னித்தலையும் உம்மன் சாண்டியும் முதல்வர் பதவிக்கான முதல் எண் அம்பாசிடர் காரில் போடுவதற்கான கதர் துண்டுடன் காத்திருக்கிறார்கள். சோனியாவின் கடாட்சம் யாருக்கு என்று பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து நையாண்டியாகச் சிரித்துக் கண்ணடிக்கும் லீடர் கருணாகரன் இல்லாத தேர்தல் இது என்பதுதான் காங்கிரசுக்கு ஆறுதலளிக்கும் ஒரே நற்செய்தி.

இடது முன்னணியிலும் குழப்பங்களுக்குக் குறைவில்லை. வெற்றி வாய்ப்பில்லாத இடங்களையே தங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி என்று பொருமிக் கொண்டிருக்கிறது கூட்டணியின் பங்காளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. முதல்வர் அச்சுதானந்தனுக்கு முதலில் வாய்ப்பில்லை என்றும் தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதால் மீண்டும் போட்டியிட அனுமதிக்கிறோம் என்றும் கட்சித் தலைமை நாடகமாடியது. அது நாடகம் என்று அம்பலமானது இடது முன்னணியின் பலவீனம். முதல்வராக சோபிக்க முடியாத வி.எஸ்.அச்சுதானதனால் திறமையான எதிர்க்கட்சித் தலைவராகச்
செயல்பட முடியும் என்பது இடது முன்னணியின் ஆசுவாசம்.


@

பிரச்சாரக் களத்தில் அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள் என்ற கீர்த்தியை இடது முன்னணி வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இரண்டு நிகழ்ச்சிகள் அதற்குச் சாட்சி.

கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர் பி.ஜெயராஜன் ஊடகப் பணியாளர் ஒருவரைத் தாக்கி இந்த வீரசாகசப்
படலத்தைத் தொடங்கி வைத்தார். தேர்தலையொட்டி ஏஷியாநெட் தொலைக்காட்சி 'போர்க்களம்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.
முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து நிறுத்தி விவாதத்தில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியின் போது ஏஷியாநெட் தொலைக்காட்சியின் கண்ணூர் பிரிவு தலைமைச் செய்தியாளர் ஷாஜஹான் ஒரு கேள்வியை முன்வைத்தார். கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனாரின் அரசியல் செயலாளராக இருந்த பி.சசியின் அதிகாரக் குறுக்கீடுகள் பற்றியது அந்தக் கேள்வி. கேள்வியைக் கேட்டதும் வெகுண்ட ஜெயராஜன், ஷாஜஹானின் கன்னத்தில் விட்டார் ஓர் அறை. மாவட்டச் செயலாளரே கோதாவில் இறங்கிய பிறகு தொண்டர்கள் சும்மா இருக்க முடியுமா? அவர்களும் ஷாஜஹானை வளைத்துச் சாத்தி விட்டார்கள். அதற்குள் பொது மக்களும் ஊடகப் பணியாளர்களும் சேர்ந்து ஷாஜஹானைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று விட்டார்கள். 'இந்த ஆள் ஒரு
காங்கிரஸ் ஏஜெண்ட்' என்று தர்ம அடியை நியாயப்படுத்தினார் ஜெயராஜன். கூடவே ஓர் எச்சரிக்கையும் விடுத்தார். 'இது கண்ணூர் தெரிஞ்சுக்கோ, இங்கே வாலாட்டக் கூடாது'.

சம்பவம் இப்போது காவல்து¨றையின் விசாரணையில் இருக்கிறது.

இரண்டாவது அடிகொடு படலத்தின் நாயகர் உணவுத் துறை அமைச்சர் சி.திவாகரன். மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர் ஊடகப்
பணியாளரை அடிக்கலாமென்றால் அமைச்சர் பொது மக்களை அடிக்கலாம். பிளவுபடாமலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின்
தீவிரம் கட்சி இரண்டாகப் பிளந்தபோது மார்க்சிஸ்டுகளுடன் போய்விட்டது என்ற அவப் பெயரைத் துடைப்பதற்காகவும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருநாகப் பள்ளி வேட்பாளர் திவாகரன் அப்படிச் செய்திருக்கிறார்.

கருநாகப் பள்ளி ரயில் நிலையத்தில் பயணிகளைச் சந்தித்து வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார் திவாகரன். நடை மேடையில் காத்திருந்த பயணிகள் ஒவ்வொருவரிடமும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ஓட்டளிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அமைச்சர் என்று தெரிந்ததும் பயணிகள் பெஞ்சை விட்டு எழுந்து நின்று பேசினார்கள். குலசேகரபுரத்தை சேர்ந்த சுதாகரன் மட்டும் உட்கார்ந்தபடியே அமைச்சருடன் உரையாடினார். ஓர் அமைச்சரை மதிக்காத பிரஜையின் நடவடிக்கையைப் பொறுத்துக் கொண்டார் திவாகரன். என்ன இருந்தாலும் ஒரு வாக்காளர், அவருடைய வாக்கும் முக்கியமானது என்ற எண்ணத்தில் சுதாகரனிடமும் தனக்கு
வாக்களிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். 'நான் யூடிஎஃப் அனுதாபி. அதனால் உங்களுக்கு என்னால் வாக்களிக்க முடியாது'
என்று சுதாகரன் சொல்லாமல் இருந்திருக்கலாம். சொன்னார். அதுவரை பொறுமையாக இருந்த அமைச்சர் திவாகரன் பொங்கி
எழுந்து சுதாகரனை அறைந்தார். அடிபட்ட சுதாகரன் பின்னர் மருத்துவமனையில் அடைக்கலம் புகுந்தார். காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு நாள் போராட்டத்துக்கான காரணம் கிடைத்தது.

முன்னாள் எம்.பியும் இப்போது பரவூர் சட்டமன்ற சி.பி.ஐ. வேட்பாளருமான நண்பர் தோழர்.பன்யன் ரவீந்திரனைச் சந்திக்க
கட்சி அலுவலகத்துக்குப் போனபோது திவாகரன் 'அடித்தது நானல்ல' என்று பெரும் குரலில் மறுத்துக் கொண்டிருக்கும்
காட்சியைப் பார்க்க முடிந்தது. வெளியே வந்ததும் கூட வந்த ரவியேட்டனிடம் கேட்டேன். 'அடித்தது நிஜமா பொய்யா?'.
'தல்லிப் பழுப்பிக்கான் ஓட்டு மாங்ஙயல்லென்னு பக்ஷ்ய மந்த்ரி அறியேண்டே?' என்றார். (அடித்துப் பழுக்க வைக்க ஓட்டு
மாங்காயல்ல என்று உணவு மந்திரிக்குத் தெரிய வேண்டாமா?).

'இதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பரவாயில்லை. அவர்கள் மீடியா ஆட்களையோ வாக்காளர்களையோ அடிப்பதில்லை.
சொந்தக் கட்சி வேட்பாளர்களைத்தான் அடிப்பார்கள்' என்றேன். 'ஆராணு ஆ ராஷ்ட்ரீயக்காரன்?' என்று ஆவலோடு
விசாரித்தார். விஜயகாந்த் என்று சொல்ல என் தமிழ் மனம் இடம் கொடுக்கவில்லை.

@

மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதையை 'சமகாலிக மலையாளம்' வார இதழ் வெளியிட்டிருந்தது. அதன் தமிழாக்கம்
இங்கே. இது ஓர் அரசியல் கவிதையா, இதில் வரும் பாத்திரங்கள் யார் யார் என்பதை உங்கள் ஊகத்துக்கு விடுகிறேன்.அல்லது
உங்கள் ஊகத்திலிருக்கும் பாத்திரங்களுடன் பொருத்தியும் கவிதையை வாசிக்கலாம்.தேடுங்கள், கண்டடைவீர்கள்.

ஆளுநரும் நடிகையும்
----------------


'நீ ஒரு மாநிலம்'
ஆளுநர் நடிகையின் கூந்தலை வருடிக்கொண்டே சொன்னார்:
'நதிகளும் அணைக்கட்டுகளும்
மரங்களும் மலைகளும் நிறைந்த
ஜனசந்தடி நிரம்பிய ஒரு மாநிலம்'

'தங்களின் ஒவ்வொரு விரலும்
ஒவ்வொரு கட்டளை; அவை
என்னை சிலிர்க்கச் செய்கின்றன'
நடிகை சொன்னாள். 'இருந்தாலும்
இந்த அமைச்சரவைக் கலைக்கப்
பரிந்துரைக்கக் கூடாதா?
எனில் இன்னொரு ஆண்
அறிய முடியாத சுகங்களை
நான் தங்களுக்குத் தருவேன்'

ஓ, அறிக்கைகளைப்போல
காம சுகம் தருபவை வேறில்லை.
ஆனால், காரணம் வேண்டும்'
நடிகையின் மடியில் கிடந்து
ஆளுநர் முன்னுரைத்தார்.

'ஊரில் அமைதியின்மையும் அராஜகமும்
பற்றி யெரிந்தால் போதாதா?'
ஆளுநரின் எழுச்சியுற்ற மூக்கில்
முத்தமிட்டபடிக் கேட்டாள் நடிகை.

'அது உன்னால் முடியும்
என் கிளியோபாட் ராவே'
ஆளுநர் அவளை மெல்லக் களைந்து
அறிவுறுத்தினார்.

'ஓ, அது என் ஆட்களுக்குத் தெரியும்
கொஞ்சம் கொலைகள், ஊர்வலங்கள்,
ஆர்ப்பாட்டங்கள், ஓரிரு துப்பாக்கிச் சூடு'
ஆளுநரின் இடுப்புக்கிடையில்
ஊளையிட்டுக் கொஞ்சினாள்.
'மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்'
கவர்னர் வெறிபிடித்தவரானார்.

வெளியே
ஆட்சியைக் கலைப்பதற்கான
ஆளுநரின் பரிந்துரை காத்துக் கிடந்தது,
இளம் வநச்சுப் பற்களுக்காகக்
காத்துக் கொண்டு
புற்றின் முன்னால் மழையில் நனைந்து கிடந்த
கஸாக்கின் இதிகாசத்து ரவியைப்போல.


(இன்னும்...)

ஏப்ரல் 01, 2011

logo
Andhimazhai
www.andhimazhai.com