உயிர்மை

சிற்றிதழ் அறிமுகம் 5
உயிர்மை
Published on

நவீன தமிழிலக்கிய பரப்பில் பல சிற்றிதழ்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில், தனக்கென இடத்தைப் பெற்று வெளிவந்து கொண்டிருக்கிறது 'உயிர்மை' மாத இதழ். 2002 டிசம்பர் முதல் உயிர்மை பதிப்பகத்தை நடத்தத் தொடங்கிய மனுஷ்யபுத்திரன், அதன் தொடர்ச்சியாக 'உயிர்மை' இதழைக் கொண்டுவரத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உயிர்மை முதல் இதழ் வெளிவந்தது.

" தனி நபர்களை மையமாகக் கொண்ட இலக்கிய அரசியலை முடிந்தவரை தவிர்ப்பது, உலக அளவிலான கலை, இலக்கிய ஆளுமைகள் தொடர்பான பதிவுகளை விரிவாக மேற்கொள்வது" என்கிற நோக்குடன் இதழை நடத்திக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன். உயிர்மையின் சிறப்பம்சம், தொடர்ந்து 'பத்தி'களை வெளியிடுவது. ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் தொடர்ந்து எழுதுவதன் மூலம்தான் அத்துறை பற்றிய விரிவான ஆதாரங்களை வாசகன் பெற முடியும் என்பதால் இத்தகைய பத்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடுகிறார். அவ்வகையில் கார்டூன் வரலாறு பற்றி டிராட்ஸ்கி மருதுவும், சுற்றுச் சூழல் பற்றி நா. முருகேச பாண்டியனும் உலகக் கவிஞர்கள் பற்றி பிரம்மராஜனும், ஆழ்நதியைத் தேடி எனும் தலைப்பில் ஜெயமோகனும் கவிதைகளோடு ஒரு சம்வாதம் எனும் தலைப்பில் ஞானக்கூத்தனும் எழுதிய தொடர்கள் குறிப்பிடத்தக்கன.

இத்தொடர்களின் ஊடாக தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் மற்றும் இளம் படைப்பாளிகளின் சிறு கதைகளையும் கவிதைகளையும் நாடகங்களையும் உயிர்மை வெளியிட்டு வருகிறது. கட்டுரைகளைப் பொறுத்தவரை யமுனா ராஜேந்திரன், அ. மார்க்ஸ், நாஞ்சில்நாடன், அ. ராமசாமி போன்றோர் எழுதிய கட்டுரைகள் வாசகர்களின் கவனத்திற்கும் விவாத்திற்கும் உரியனவாக இருந்தன.

இரண்டாவது கட்டமாக உயிர்மை எஸ். இராமகிருஷ்ணணின் 'விழித்திருப்பவனின் இரவு, சுகுமாரனின் 'பின்குறிப்பு', பிரேம்-ரமெஷின் 'முடிவுகளுக்கு வெளியே' ஆகிய தொடர்களை ஆரம்பித்தது.

எஸ். ராமகிருஷ்ணன் தன்னுடைய தொடரில் உலகில் மிக முக்கிய எழுத்தாளர்களின் எழுத்து அல்லாத பிறதுறை ஈடுபாடுகளைப் பற்றி எழுதியதன் மூலம் ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய பரந்த அக்கறைகள் பற்றிய ஒரு விரிவான பார்வையை இத்தொடரில் ஏற்படுத்தியிருக்கிறார். பிரேம்-ரமேஷ் எழுதிய தொடரில் அடிமை முறை, பின் நவீனத்துவம், கம்யூனிசம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் வரவேற்பைப் பெற்றன. வாழ்வின் கசப்பும் இருளும் நிறைந்த அனுபவங்களையும் காட்சிகளையும் தமது தொடரில் பதிவு செய்திருக்கிறார் சுகுமாரன்.

நாடகத்துறை தொடர்பாகவும் உயிர்மை தொடர்ந்து தம் பங்களிப்பைச் செய்து வருகிறது. பல இளம் மற்றும் மூத்த நாடகக் கலைஞர்களின் நேர்காணல்களும் அவர்களைப் பற்றிய அறிமுகங்களும் நாடக நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்திருக்கின்றன. பல புதிய கவிஞர்களையும் உயிர்மை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பதிப்புத் துறையிலும் 'உயிர்மை பதிப்பகம்' முக்கியமான புத்தகங்களை வெளியிட்டு தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சுஜாதாவின் சிறுகதைகளை 'விஞ்ஞான சிறுகதைகள்', 'ஸ்ரீரங்கத்துக் கதைகள்', தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டு பாகங்கள் என நான்கு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறது.
ஜெயமோகனின் குறுநாவல்கள் முழுத் தொகுதி, எஸ்.. ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி' நாவல், சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் பாப்லோ நெரூடாவின் கவிதைகள், தியோடர் பாஸ்கரின் 'எம் தமிழர் செய்த படம்', எஸ்.வி. ராமகிருஷ்ணனின் 'அது அந்தக் காலம்' போன்றவை உயிர்மையின் முக்கிய வெளியீடுகளாகும்.

ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், நவீனத் தமிழ்க் கவிதைகளில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர். இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. 'மனுஷ்யபுத்திரன் கவிதைகள்' எனும் முதல் தொகுப்பு 1988ஆம் ஆண்டு மணிமேகலை பிரசுரத்தின் வெளியீடாக வந்தது. 1993இல் 'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்', 98-இல் 'இடமும் இருப்பும்', 2001இல் 'நீராலானது' 2004இல் 'மணலின் கதை' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 'எப்போதும் வாழும் கோடை', 'காத்திருந்த வேளையில்' எனும் கட்டுரைத் தொகுப்புகள் 2004, செப்டம்பரில் வெளிவந்துள்ளன.

இளம் படைப்பாளர்களுகாக தேசிய அளவில் வழங்கப்படுகிற 'சன்ஸ்கிருதி சம்மான்' விருது 2003ஆம் ஆண்டில் மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்பட்டது.

2004இல் 'இலக்கியச் சிற்பி' எனும் விருதை 'அமெரிக்க இலக்கிய நண்பர்கள்' எனும் அமைப்பு இவருக்கு வழங்கியுள்ளது. அதே ஆண்டு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தனிநபர் படைப்பாற்றலுக்கு வழங்குகிற தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது தொடர்ந்து இதழியல் துறையிலும் பதிப்புத் துறையிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

உயிர்மையின் எதிர்காலத் திட்டம் என்ன?

"இன்றைய காலகட்டத்தில் தீவிர இலக்கியத் தேவைக்கேற்ற பணியை உயிர்மை செய்யும். காலப் பொறுத்தமற்றதை உயிர்மை செய்யாது" என்கிறார், மனுஷ்யபுத்திரன்.

ஜனவரி 12, 2006

உயிர்மை
புதுவிசை
logo
Andhimazhai
www.andhimazhai.com