தமிழ்ப் பணி

சிற்றிதழ் அறிமுகம் -40
தமிழ்ப் பணி
Published on

பேச்சுத் தமிழும் ,ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிகைச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு , தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறு பத்திரிகைகள். நவீன கலை இலக்கியத்திற்கென்று பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருப்பதைப்போல் தமிழ் மரபைப் போற்றும் பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.அவற்றில் குறிப்பிடத்தக்க இதழ் 'தமிழ்ப்பணி' மாத இதழ்

" என்னை நன்றாய் எந்தைப் படைத்தனன்
அன்னைத் தமிழை அகிலம் உயர்த்தவே" என்பதை முழக்கமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ் , 1971 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ( ஏப்ரல்) முதல் இதழ் வெளிவந்தது. தொடர்ந்து 36 ஆண்டுகளாக இடைவிடாது வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.இவ்விதழின் நிறுவனர் மற்றும் சிறப்பாசிரியர் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன். ஆசிரியர் வா.மு.சே. திருவள்ளுவர். " உலக அரங்கில் தமிழுக்கும் தமிழருக்கும் ஓர் இடம் பெற்றுத் தருவதும் , கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் தமிழ்ப்
பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும் தமிழ்ப்பணியின் நோக்கமாகும் " என்கிறார் வா.மு.சே.

தமிழுக்காகப் போராடுகிறவர்கள், இயக்கவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் போன்றவர்கள் இவ்விதழில் தொடர்ந்து எழுதி வருகின்றனர். கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், இராமகுருநாதன்,அவ்வை நடராசன், கோவை ஞானி ஆகியோர் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

மரபுக் கவிதை, புதுக் கவிதை, நூல் மதிப்புரை, அறிவியல் தமிழ் கட்டுரைகள், சங்க இலக்கியப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு போன்ற பகுதிகள் வெளியாகிவருகின்றன. தமிழ்ப் பணி இதழுடன் பன்னாட்டுத் தமிழ் மன்றத்தையும் நடத்தி வருகிறார் வா.மு.சேதுராமன்.

பல உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இணைப்பு பாலமாக இருப்பது , உயர்தனிச் செம்மொழி தமிழ் என்பதை உலக அரங்கில் நிலை நாட்டுவது போன்ற முக்கிய குறிக்கோள்களுடன் இயங்கி வருகிறது பன்னாட்டு தமிழுறவு மன்றம்.

ஆசிரியர் பற்றி

தற்போது 79 வயதாகும் முனைவர் வா.மு. சேதுராமன் 'கலைமாமணி' உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.பல்வேறு உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு வருபவர்.இலக்கியம், பயண நூல் , ஆய்வு, மொழிபெயர்ப்பு என பலதுறை சார்ந்து ஏறக்குறைய 90 நூல்களூக்கு மேல் எழுதியிருக்கிறார்.நூற்றுக்கணக்கான தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழாக்களை நடத்தி சிறப்பு செய்திருக்கிறார். தமிழ்மணி புத்தகப் பண்ணை என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

ஜீன் 23, 2006

தமிழ்ப் பணி
வல்லினம்
logo
Andhimazhai
www.andhimazhai.com