முகம்

சிற்றிதழ் அறிமுகம் 4
முகம்
Published on

தமிழ், தமிழன், தமிழ்நாடு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொன்டு வெளிவருகிறது 'முகம்'.

தமிழ் அறிஞர்களின், சாதனையாளர்களின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வெளிவரும் இதழ் 'முகம்'. இதன் ஆசிரியர் மாமணி. முதல் இதழ் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. ஒரு மாதம் கூடத் தடையின்றி தொடர்ந்து 269 இதழ்கள் வெளிவந்துள்ளன ( ஆகஸ்டு 05 வரை). ஆரம்ப ஓராண்டுகால அட்டையை பாரதியார், புதுமைப்பித்தன், என மறைந்த தமிழ் இலக்கிய அறிஞர்கள் அலங்கரித்தனர். பிறகு நெல்சன் மண்டேலா, நேரு, எம்.எஸ்.சுப்புலட்சுமி எனப் பலரது படங்கள் முகத்தின் அட்டையை அலங்கரித்தது. இப்படி 236 பேருடைய புகைப்படம் அட்டைப்படத்தில் வெளிவந்துள்ளது. அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கவிதைகளும், சிறுகதைகளும் உண்டு.

என்.எஸ்.கிருஷ்ணணின் கிந்தனார் காலாட்சேபத்தால் ஈர்க்கப்பட்டு மாமணியும் 'கிந்தனார் பதில்கள்" எனும் கேள்வி - பதில் பகுதியை முகத்தில் எழுதத் தொடங்கினார். எள்ளல் தொனியுடன் எழுதப்படும் இக்கேள்வி பதில்கள் 'முகம்" வாசகர்களிடம் தனிச் சிறப்பு பெற்றவை.
எடுத்துக்காட்டாக இரண்டு கேள்வி - பதில்கள்

கே: கணவன் முன்னால் செல்ல, மனைவி பின்னால் செல்வது நல்லதா? மனைவி முன்னால் செல்ல கணவன் பின்னால் செல்வது நல்லதா?

ப: பின்னால் வரும் மனைவி மேல் நம்பிக்கை உள்ள கணவன், முன்னால் செல்லலாம். பின்னால் வரும் கணவன் மேல் நம்பிக்கை உள்ள மனைவி முன்னால் செல்லலாம். சாலைப்போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருவரும் இணைந்து செல்வது எல்லாவற்றிலுமே நல்லதுங்க.

கே: நீதியை மதிப்பவர்கள் யார்?

ப: நிதியை மதிக்காதவர்கள்.

இப்படி எள்ளலும் குத்தலுமான பதில்கள் மூலம் சிந்தனையைத் தூண்டுபவர் மாமணி. இந்தப் பதில்களை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குகிறேன். பிறகு முப்பது நாள்களில் நேரங்கிடைக்கும்போதெல்லாம் மெருகேற்றுகிறேன் ' என்கிறார் மாமணி. கேள்வி பதில்களை தொகுத்து 'கிந்தனார் பதில்கள்", கிந்தனார் சிந்தைனைகள்" என இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 200 பேரைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளை மூன்று புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறார். எழுத்தாளர்களையும் சாதனையாளர்களையும் வாழும்போதே கவுரவிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்களுக்கு அவ்வப்போது பாராட்டு விழாவையும் நடத்துகிறார் மாமணி. ஆய்வாளார் ஆ.இரா. வேங்கடாசலபதி 1983 இல் முகத்தினுடைய உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பெ.கி. பிரபாகரன் போன்ற எழுத்தாளர்கள் முகம் மூலம் அறியப்பட்டவர்கள்.

இதழில் தற்போதைய சிறப்பாசிரியராக முனைவர் இளமாறன் செயல்படுகிறார்.
முகமாமணி ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 'உண்மையின் சிறகுகள்'(கவிதை), 'தாயே" (குறுங்காவியம்) பன்மொழிப்புலவர் அப்பாத்துரை, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், ஜீவாநாரண துரைக்கண்ணன் ஆகியோரது வாழ்க்கை வரலாற்று நூல்களையும், 'யாருக்காக சுமந்தார்', மாமணியின் சிறுகதைகள் 60 ' எனும் இரண்டு சிறுகதை தொகுப்புகளையும் ' மண்டோதரியின் மைந்தன்' எனும் நாடகத்தையும் எழுதியிருக்கிறார். இவர் கொள்கை பிடிப்புள்ளவர். சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இது போன்ற பத்திரிக்கைகளை தேடிப் படிப்பது ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பெற உதவக் கூடும்.

ஜனவரி 12, 2006

முகம்
உயிர்மை
logo
Andhimazhai
www.andhimazhai.com