'எழுச்சி தலித்முரசு' எனும் பெயரில் 1997 பிப்ரவரி 14 அன்று முதல் இதழ் வெளிவந்தது. தொடக்கத்தில் 28 பக்கத்தில் கறுப்பு - வெள்ளை அட்டையுடன் வெளிவந்தது. இப்போது 44 பக்கத்தில் வண்ண அட்டையுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. தொடக்க கால ஆசிரியர், பெ.சந்திரகேசன், பொறுப்பாசிரியர், புனித பாண்டியன்.
"சாதி ஒழிப்பிற்கான, சமூக நீதிக்கான அரிய பணியில் அறிவுச் சுரங்கம் அம்பெத்கர், தன்மானச் சிங்கம் தந்தை பெரியார் வழி நின்று தலித் முரசு செயல்படும். இதுதான் எமது இலட்சியம் - இலக்கு - எல்லை" என்கிறÐ முதல் இதழ் தலையங்க அறிவிப்பு.
நேர்காணல், நூல் அறிமுகம், தொடர், வாக்குமூலம், தலையங்கம், கடிதம் போன்ற பகுதிகள் வெளியாகி வருகின்றன. இவ்விதழில் வெளியாகும் நேர்காணல்கள் குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அளவிலான கலை, இலக்கிய, அரசியல் ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம் பெற்று வருகின்றன.
கத்தார், வி.பி.சிங் உள்ளிட்டவர்களின் முக்கிய நேர்காணல்கள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. இப்படி இதுவரை (ஏப்06) 120 நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. நூல் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. 'யாருங்க இப்பெல்லாம் சாதி பாக்குறாங்க' பகுதியில் சாதி ஒடுக்கு முறைகள் தொடர்பான பல்வேறு செய்திகள் இடம் பெற்று வந்தன. இப்பொழுது 'மீண்டெழுவோம்' பகுதியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
தலித்முரசின் முக்கியப் பகுதியாக முன் பக்க உள் அட்டையில் அம்பெத்கர் சிந்தனைகளும் பின்பக்க உள்ளட்டையில் பெரியார் சிந்தனைகளும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
அடுத்து, தலித்முரசில் வரும் தொடர்கள் முக்கியமானவையாகும். சுப.வீரபாண்டியன் எழுதிய 'உடைபடும் சித்திரங்கள்', ரவிக்குமார் எழுதிய 'மால்கம் எக்ஸ்', கவுதமசன்னா எழுதிய 'தலித் அரசியல்', வே.மதிமாறன் எழுதிய 'பாரதிய' ஜனதா பார்ட்டி, போன்ற முக்கியமான பல தொடர்கள் வெளிவந்துள்ளன.
ஏபி.வள்ளிநாயகம் எழுதும் 'விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்', யாக்கன் எழுதும் 'ஜனநாயக இருள்' போன்ற தொடர்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜீன் 2003லிருந்து 'எழுச்சி தலித்முரசு' தலித்முரசாக பெயர் மாற்றம் பெற்று புனித பாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. 2004லிருந்து அழகிய பெரியவன், விழி.பா.இதயவேந்தன், இளங்கோவன், யாக்கன், காவ்யா, ஆகியோர் ஆசிரியர் குழவில் இடம் பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரியில் 'ஆண்டுச்சிறப்பிதழ்' ஒன்றை வெளியிட்டு வருகிறது.
«ழகிய பெரியவன், ஜெய ராண், கோ.சுகுமாறன், வள்ளிநாயகம், அன்பு செல்வம், கே.எஸ்.முத்து, எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, யாக்கன், முருகப்பன், பூவிழியன், போன்றோர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். அவ்வப்போது சில முக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறது தலித்முரசு.
தலித் முரசு சார்பில் 2002இல் பாமாவுக்கும் 2003 இல் அழகிய பெரியவனுக்கும் 'தலித்முரசு கலை இலக்கிய விருது' வழங்கப்பட்டுள்ளது. சில முக்கியமான தனி வெளியீடுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஆங்கிலத்திலும் 'The Dalit' எனும் பெயரில் நான்கு இதழ்கள் வெளிவந்தன. தலித்முரசு 2005லிருந்து www.dalithmurasu.com எனும் இணைய முகவரியிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இனி ஆசிரியர் புனித பாண்டியனுடன்....
"தலித்முரசின் எதிர்காலத் திட்டம் என்ன?"
"அம்பெத்கர் எழுதிய 'சாதியை ஒழிக்க என்ன வழி' எனும் புத்தகத்தை தமிழில் மலிவு விலையில் வெளியிடும் திட்டமும், தலித் முரசில் எட்டுப் பக்கங்களை அதிகப்படுத்தி தலித் இலக்கியத்திற்கு ஒதுக்கும் திட்டமும் இருக்கிறது."
"உங்களைப் பற்றியும் தலித் முரசு இதழின் தொடர் பயணம் பற்றிக் கூறுங்கள்?"
"சாதியற்ற, ஏற்ற தாழ்வற்ற, சமத்துவ சமுதாயத்தை அமைக்க வேலை செய்து கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருவன். இந்து மத அடையாளத்துடன் வரும் ஒரு பத்திரிகை பல இலட்சங்கள் இங்கு விற்பனையாகிறது. ஆனால் சாதி ஒழிப்புக்காக வெளிவந்து கொண்டிருக்கும் தலித் முரசு பத்திரிகை ஒரு சாதிய பத்திரிகையாக அடையாளம் காணப்படுகிறது. இது தற்செயலான செயல் அல்ல. திட்டமிடப்பட்ட செயல் 'தலித்' என்பது மராத்தி சொல். இது சாதீய சொல் அல்ல. 'வேர் பிடித்தவர்கள்' என்று இதற்கு அர்த்தம். இம் மண்ணின் வேர்பிடித்த மக்கள் இன்று வேரின்றி கிடக்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான தளமாக தலித் முரசு வந்து கொண்டிருக்கிறது. குரலற்றவர்களின் குரலாக தலித் முரசு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது" என்கிறார், புனித பாண்டியன்.
ஜூன்01, 2006