"பாட்டி வீட்டுக்குப் பயணிக்கும் போதெல்லாம்
ஜன்னலோர இருக்கைக்காக
சண்டையிட்ட இளம்பிராயம்....
கரை புரளும் காவேரி....
கரையோரம் கரி நாள் கூட்டாஞ்சோறு....
வழி நெடுக வாழைத் தோட்டம்....
மண்தொடும் சின்னப் பண்ணை மாமரங்கள்....
பித்தளைச் செம்புடன் பெருசுகள் ஜமா....
இப்பொழுதும் பயணிப்பதுண்டு
நெருக்கமான கடைவீதி....
புழுக்கத்துடன் ஜனத்திரள்....
மனைகளான மரைக்காயர் நிலங்கள்....
மன்றங்களான படிப்பகங்கள்....
புகைக் காற்றுடன் முடை நாற்றம்....
முள் இருக்கையானது ஜன்னலோரம்...!"
- நெய்வேலி பாரதிக்குமார்
(மதுமலர், ஜன-மார்ச்06)
1984 ஜனவரியில் 'மதுமலர்' மாத இதழ் தொடங்கப்பட்டது. கையெழுத்து இதழாக தனிச்சுற்றுக்கு மட்டும் வெளியிடப்பட்டு வரும் இதன் ஆசிரியர், வலம்புரி லேனா. 1990 வரை கையெழுத்து இதழாகவே மாதாமாதம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. இப்படி 60 இதழ்கள் வரை வெளிவந்தது. பிறகு 1991லிருந்து அச்சில் வெளிவரத் தொடங்கியது. அதன் பிறகு ஒரு வித்தியாசமான முயற்சியாக இன்லேண்ட் கவரில் படைப்புகளைத் தாங்கி இன்லேண்ட் இதழாக 6 இதழ்கள் வெளிவந்தன. ஜனவரி - மார்ச் 2005லிருந்து காலாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கதை, கவிதை, கட்டுரை, ஹைக்கூ, கடித இலக்கியம், நூல் விமர்சனம், இலக்கியச் செய்திகள் போன்ற பகுதிகள் வெளியாகி வருகின்றன.
இந்த சிற்றிதழில் வெளியான கவிதை ஒன்று கலை இதழில் சிறந்த சிற்றிதழ் படைப்புகளுக்கான பரிசைப் பெற்றிருக்கிறது. 2000இல் ஹைக்கூ சிறப்பிதழ் ஒன்றையும் மதுமலர் வெளியிட்டிருக்கிறது.
சிங்க.சௌந்தரராஜன், வல்லம் தாஜீபால், இராம்.ஆதிநாராயணன், ஹரணி, அன்பாதவன், இலக்குமிகுமாரன், ஞானதிரவியம், விக்கிரமாதித்யன், பொன்.குமார், கவிஓவியத்தமிழன், பா.சத்தியமோகன், க.அம்சப்பிரியா, வளவதுரையன், தஞ்சை ராகவ்.மகே‰, போன்றோரது படைப்புகள் இவ்விதழில் தொடர்ந்து வெளிவருகின்றன. ஜனரஞ்சக எழுத்தாளர்களின் படைப்புகளும், நவீன எழுத்தாளர்களின் படைப்புகளும் ஒரு சேர இவ்விதழில் வெளியாகி வருகின்றன.
"புதிய படைப்பாளிகளை வெளிக்கொணர்வதும், தரமான இலக்கியத்தையும், தரமான படைப்பாளிகளையும் வளர்த்தெடுப்பதும் இவ்விதழின் நோக்கமாகும்" என்கிறார் ஆசிரியர், வலம்புரி லேனா.
ஆசிரியர் பற்றி....
தற்போது 37 வயதாகும் வலம்புரி லேனா எம்.ஏ. இதழியல் பட்டதாரி. சுயதொழில் செய்து வருகிறார். கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர். 'சந்தனக்காடு', 'சூரியவீதி', என்கிற இரு கவிதைத் தொகுப்புகளையும் 'மனங்கொத்திப் பறவை' எனும் ஹைக்கூ தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். பல்வேறு தொகுப்பு நூல்களிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
"பெரிய அளவில் மாத இதழாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. காலம் வாய்க்கும் போது இது நடக்கும்" என்கிறார் ஆசிரியர்.
மே 19, 2006