'யாதும் ஊரே'

சிற்றிதழ் அறிமுகம் 35
'யாதும் ஊரே'
Published on

"அருமைத் தமிழ் மொழியை
ஆட்சியில் ஆற்றல் செய்யார்
அருமைகள் சொல்வாரடி - கிளியே
பேச்சினில் வல்லாரடி.
தாய்மொழிக் கல்வி ஓங்கத்
தம் கடன் ஆற்றல் செய்யார்
வாய்கள் கிழியச் சும்மா - கிளியே
வாழ்க தமிழே என்பர்"
-ம.இலெ.தங்கப்பா
(யாதும் ஊரே - 2006, ஏப்ரல்)

போலித் தமிழினத் தலைவர்களை அம்பலப்படுத்தும் இது போன்ற படைப்புகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் 'யாதும் ஊரே' பல்சுவை மாத இதழ். இதன் ஆசிரியர் நா.வை.சொக்கலிங்கம். 1997 ஜனவரியில் 'நம்ம ஊரு' எனும் பெயரில் பல்சுவை திங்களிதழாகத் தொடங்கப்பட்டு அதே வருடம் அக்டோபர் மாதம் வரை நம்ம ஊரு எனும் பெயரிலேயே தனிச்சுற்று இதழாக வெளிவந்து கொண்டிருந்தது.

"சமூகத்தின் அடித்தளத்தை அமைத்துத் தரும் சிந்தனையாளர்களின் தொண்டனாக இந்த இதழ் உங்களுக்குப் பணியாற்றும். கதை, கவிதை, கட்டுரை, இலக்கிய ஆய்வுகளுடன் உள்ளுர்பிரச்சினைகளையும் உங்கள் முன்னால் வைக்கும். யாருடைய உள்ளத்தையும் வேதனைப் படுத்துவதற்காக அல்ல. விரைந்து செயலாற்ற என்கிற அறிவிப்புடன் 'நம்ம ஊரு' முதல் இதழ் வெளிவந்தது. பவா சமத்துவன் சிறுகதை, டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நேர் காணல், சுரதா கவிதை, போன்ற படைப்புகளும் அரசியலில் நிகழ்ந்த முக்கிய நிகழ்சிகளும், உள்ளுர் பிரச்சினைகள், பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் போன்றவற்றுடன் உள்ளுர் இளைஞர்களின் படைப்புகளும் முதல் இதழில் வெளியாகியுள்ளன.

1997 நவம்பரில் 'யாதும் ஊரே' எனப் பெயர் மாற்றம் பெற்று பதிவுப் பெற்ற இதழாக வெளிவரத் தொடங்கி தொடர்ந்து இன்னும் பல்சுவை மாத இதழாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை (ஏப்ரல் 2006) 93 இதழ்கள் வெளிவந்துள்ளன. தமிழ்த் தொடர்பான போராட்டச் செய்திகள், ஈழத் தமிழர் குறித்த செய்திகளுடன் பெரியார் கருத்துகள் சார்ந்து இயங்குபவர்களின் படைப்புகள் யாதும் ஊரே இதழில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இவ்விதழில் வெளியாகும் கேலிச் சித்திரங்கள் மிகவும் முக்கியமானதாகும். இதில் வரும் கேலிச் சித்திரங்களை பல்வேறு இதழ்கள் எடுத்துக் கையாள்கின்றன. தமிழ், தமிழர் நலம் சார்ந்து பிற இதழ்களில் வெளிவருகின்றவற்றை எடுத்து இவ்விதழில் மறுபிரசுரம் செய்வதும் உண்டு. அதே போல இவ்விதழில் வரும் கட்டுரைகள் பிற இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்படுவதும் உண்டு. நூல் அறிமுகம் பகுதியில் பல நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.



பெருஞ்சித்திரனார், தணிகைச் செல்வன், இன்குலாப், பழ.நெடுமாறன், பொன்.செல்வகணபதி, அனுவெண்ணிலா, சா.முத்துக்குமரன், சுப.வீரபாண்டியன், கி.த.பச்சையப்பன், ப.சுந்தரராசன், இளங்குமரனார், தமிழண்ணல், அருண்மொழி, மறைமலையான், கவிபூங்குன்றன், போன்றோரது படைப்புகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன.

ஜனவரி 2004லிருந்து ஒவ்வொரு இதழும் ஒரு சிறப்பிதழாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. முதல் சிறப்பிதழ் 'பாவாணர் - நெடுமாறன்' சிறப்பிதழாக வெளிவந்தது. கேலிச்சித்திரம் சிறப்பிதழ், புரட்சி கவிஞர் சிறப்பிதழ், அயோத்தி தாசர், மயிலை சீனி.வேங்கடசாமி, அம்பேத்கர், புதுமைப்பித்தன் ஆகியோரது சிறப்பிதழ்கள் வெளிவந்துள்ளன. மார்ச் 2006 இதழ் தி.க.சி சிறப்பிதழாகவும் ஏப்ரல் 2006 இதழ் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளது.

பல்வேறு அமைப்புகள் இவ்விதழைப் பாராட்டி பரிசளித்துள்ளன. தமிழிச் சிற்றிதழ்ச்சங்கத்தின் 2002ஆம் ஆண்டுக்கான 'சிறந்த சிற்றிதழ்' பரிசை 'யாதும் ஊரே' பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பற்றி.....
நா.வை.சொக்கலிங்கம், சென்னை துறைமுகத்தில் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆவடிப் பட்டியில் பிறந்து சென்னை வாசியாகவிட்ட இவருக்கு தற்போது வயது 70. பம்மல் நாகல்கேனி தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். இச்சங்கத்தின் சார்பில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பொதுச் சேவையும் செய்து வருகிறார். தலைநகர் தமிழ்ச் சங்கம் இவருக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சந்தா மற்றும் முகவரி:
தனிஇதழ் - ரூ.8.00
ஆண்டுக்கட்டணம் - ரூ.100.00
புரவலர் கட்டணம் - ரூ.3000.00

முகவரி
நா.வை.சொக்கலிங்கம்,
யாதும் ஊரே இதழ்,
6, ஆனந்தன் தெரு,
திருவள்ளுவர் நகர்,
பம்மல், சென்னை - 600 075.
தொ.பேசி - 044-22485166

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.

மே   02 , 2006  

'யாதும் ஊரே'
மது மலர்
logo
Andhimazhai
www.andhimazhai.com