இனிய ஹைக்கூ

சிற்றிதழ் அறிமுகம் 29
இனிய ஹைக்கூ
Published on

"அணைக்காக இடியுண்ட வீடுகள்
அகதிகளாய் மக்கள்
ஊர்கள் பிணம் சுடுகின்ற காடுகள்"
(ஆரண்யன்- இனிய ஹைக்கூ, இதழ் 18)

இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ்க்கவிதை, காலத்திற்கேற்ப வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் உள்வாங்கி மரபு, நவீனம், ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ எனக் கிளை பரப்பி செழித்து வருகிறது. மரபுக்கவிதைக்கும் நவீனக் கவிதைக்கும் பல சிற்றிதழ்கள் இடமளிக்கின்றன. ஹைக்கூ கவிதைகளுக்கு ஒரு சில பத்திரிகைகளே இடம் கொடுக்கின்றன. இத்தகைய சூழலில் முழுக்க முழுக்க ஹைக்கூ கவிதைகளுக்கென்றே வெளிவந்து கொண்டிருக்கிறது 'இனிய ஹைக்கூ' - இருமாத இதழ்.

தமிழில் புதிய அலையென எழும்பியுள்ள ஹைக்கூ கவிதைகளையும் இளைய ஹைக்கூ கவிஞர்களையும் தமிழ் வாசகப் பரப்பில் அறிமுகம் செய்வதும், ஹைக்கூ கவிதைகள் குறித்த தெளிவையும் புரிதலையும் தருவதுமான நோக்கில் தொடங்கப்பட்ட இவ்விதழ், ஆகஸ்டு 2000 - இல் முதல் இதழ் வெளிவந்தது. இதுவரை 20 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதன் ஆசிரியர், கவிஞர் மு.முருகேஷ், சிறப்பாசிரியர், கவிஞர் கவிமுகில், துணையாசிரியர்கள் : பல்லவி குமார், சோலை இசைக்குயில், குடந்தை ஆர்.எஸ்.நாதன், கா.ந.கல்யாணசுந்தரம், ஆரிசன் ஆகியோர். அத்துடன் 25 மாவட்டப் பொறுப்பாசிரியர்களும் உள்ளனர்.

ஹைக்கூ, நூல்முகம், ஹைக்கூ செய்திகள், மொழிபெயர்ப்பு ஹைக்கூ என வெளியாகி வருகின்றன. பெரும்பாலான ஹைக்கூ கவிஞர்களின் படைப்புகள் இதில் இடம்பெற்று வருகின்றன. 'கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே' எனும் இலக்கிய கொள்கையோடும் சமூகப்பார்வை குறித்த அக்கறையோடும் படைப்புகள் வெளியாகி வருகின்றன. அறிமுகக் கவிஞர்களை அடையாளப்படுத்தி வருவதும் நிலையான வடிவம் ஏதுமின்றி ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு வடிவத்தில் வருவதும் மாவட்டப் பொறுப்பாசிரியர்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பிதழாகக் கொண்டு வருவதும் இனிய ஹைக்கூவின் சிறப்பம்சமாகும். கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ஹைக்கூ கேள்வி-பதிலும், கவிஞர் நிர்மலா சுரே„¢ன் ஹைக்கூ தொடரும் சிறப்புப் பகுதிகளாகும். இதழின் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் 'ஹைக்கூ கவிதைத் திருவிழா'க்களை நடத்தி இளைய படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்து வருவது குறிப்படத்தக்கது.

"ஹைக்கூ கவிஞர்களை ஒரு இயக்கமாகி, ஹைக்கூ கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்துவதும் தமிழ் ஹைக்கூ கவிதைகளைப் பிறமொழிகளில் அறிமுகம் செய்வதும் எதிர்காலத் திட்டங்கள். புதுப்புது படைப்பாளிகளை நோக்கியும், கல்லூரிக்கவிஞர்களைத் தேடியும் பிற மாநில ஹைக்கூ ஆர்வலர்கள், பிற நாட்டுக் கவிஞர்கள் என இதழ் தனது பயணத்தைத் தொடர்கிறது" என்கிறார், ஆசிரியர் மு.முருகே‰.

ஆசிரியர் பற்றி.....
தற்போது 36 வயதாகும் மு.முருகேஸ், இதழ்ப் பணியோடு பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சமூகப்பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். 'விரல் நுனியில் வானம்' எனும் இவரது முதல் தொகுப்பு 1993 இல் வெளிவந்தது. 2004 இல் வெளிவந்த 'மின்னல் பூக்கும் இரவு' வரை 10 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் நான்கு ஹைக்கூ தொகுப்புகளை நண்பர்களுடன் இணைந்து தொகுத்திருக்கிறார். 'நிலா முத்தம்' எனும் பெயரில் இவரது ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. துணைவியார் கவிஞர் அ.வெண்ணிலா மற்றும் மகளுடன் வந்தவாசியில் வசித்து வருகிறார்.

ஹைக்கூ கவிதைகளுக்கான ஒரு களமாக வெளிவந்து கொண்டிருக்கிறது - 'இனிய ஹைக்கூ'.

மார்ச் 22, 2006

இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
logo
Andhimazhai
www.andhimazhai.com