கலை

சிற்றிதழ் அறிமுகம் 14
கலை
Published on

"சுகமில்லாமலிருக்கும்
மச்சினனைப் பார்க்க
பிரபலமில்லா
சிற்றூன்றிற்கு
பயணச் சீட்டு கேட்க
தடையில்லா வசவுகளுடன்
இடையிலேயே இறக்கி விடப்பட்டேன்
இடைநில்லா பேருந்தொன்றிலிருந்து

இறங்கி விட்ட நானும்
கடந்து சென்ற மரங்களும்
நிற்கிறோம்
அறிமுகமில்லா நடுவழியில்

நானில்லா இருக்கையுடன்
பேருந்து நகர்ந்துவிட்ட போதிலும்
என்னோடு தங்கிவிட்டது
விரலிடை கரன்ஸி வித்தை காட்டிய
இரக்கமில்லா
நடத்துனரின் முகம்"

-ஏ.எம். ஜவஹர்
கலை மே 2005 இதழில்.........

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் சார்பில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ் கலை. தோழர் கடலூர் பாலனும் கவிஞர் மணிமுடியும் இணைந்து தொடங்கிய இவ்விதழின் ஆசிரியர், மணிமுடி. முதல் இதழ் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய ஆசிரியர் குழுவில் கடலூர் பாலன், எஸ். பாரதிகணேஷ், கு. கல்யாணசுந்தரம், பூ. பார்த்தசாரதி ஆகியோர் செயல்பட்டனர். தற்போது மணிமுடியுடன் ஒருங்கிணைப்புக் குழுவாக காரைமைந்தன், தளவை ராசேந்திரன், பாவெல் சூரியன், வசந்த் பாரதி ஆகியோர் செயல்படுகின்றனர். இந்த ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியம், தலித்தியம், மார்க்சியம் என கொள்கை சார்ந்தவர்களாக இருப்பது 'கலையின்' நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

முதலாண்டு மாத இதழாக வெளிவந்த கலை, அதன்பிறகு இரு மாத இதழாக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை (நவ.2005) 35 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆரம்ப காலத்தில் 34 பக்கத்தில் 5 ரூபாயில் வெளிவந்தது. இப்போது 58 பக்கத்தில் 7 ரூபாய் விலையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழின் முக்கிய ஆளுமைகளான பாரதி, பாரதிதாசன், ஜீவா போன்றோரது கோட்டோவியங்களை அட்டையில் தாங்கி வருவது கலையின் முக்கிய அம்சமாகும்.

கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம் என வெளியிட்டு வருகிறது கலை.

காசி ஆனந்தன், தணிகைச் செல்வன், வீ. அரசு, பத்மாவதி விவேகானந்தன், விழி பா. இதயவேந்தன், அன்பாதவன் போன்றோர் கலை இதழில் பங்களிப்புச் செய்து வருகின்றனர். புதிய படைப்பாளிகளையும் கலை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

ஈரோடு தமிழன்பன், அ. மார்க்ஸ், இன்குலாப், வல்லிக் கண்ணன், தி.க.சி, கே.ஏ. குணசேகரன் போன்றோரது நேர்காணல்கள் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ளன.

இரண்டாயிரத்திலிருந்து ஆண்டுதோறும் சிற்றிதழில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறது கலை. கவிதைக்கு பா. முத்துசாமி நினைவுப் பரிசும், சிறுகதைக்கு கவிஞர் கடலூர் பாலன் நினைவுப் பரிசும், கட்டுரைக்கு அறந்தை நாராயணன் நினைவுப் பரிசும் வழங்கி வருகிறது. இது படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் 'கலை'யின் சிறந்த பணியாகும்.

கலை இதழின் சார்பில் சில முக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் மணிமுடி. சப்தர்ஹஸ்மிக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கும், பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின் நவீனத்துவம், தமிழியம் குறித்த கருத்தாக்கங்களை மையப்படுத்தி 2003இல் மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றும் நடத்தியிருக்கிறார். இந்த மூன்று நாள் கருத்தரங்கில் எழுத்தாளர் சிவகாமி, அ. மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்து, கோட்பாடு அடிப்படையில் இயங்கும் சிற்றிதழ்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றை திருச்சியில் நடத்தினார். இக்கூட்டத்தில் 18 சிற்றிதழாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து, இதுவரை கவிதைத் தொகுப்பு வெளியிடாத பெண் கவிஞர்களுக்கான கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி, 13 பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'பெண்பா பேரிகை' எனும் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

ஆசிரியர் 'கலை' மணிமுடியைப் பற்றி....

கவிஞர், திறனாய்வாளர், பேச்சாளர், இயக்கச் செயல்பாட்டாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இலக்கிய வட்டத்தில் கலை மணிமுடி என நேசத்துடன் அழைக்கப்படுபவர். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். 'உஷாராயிரு' எனும் கவிதைத் தொகுப்பு 1975-இலும் 'கடலோரம்' எனும் கவிதைத் தொகுப்பு 1985-லும் வெளிவந்தன. சிற்றிதழ்ச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

அவரிடம் ஒரு கேள்வி:
கலையின் தொடர் பயணம் குறித்துச் சொல்லுங்கள்?


"தி.க.சி. குறிப்பிடும் சூழலியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம், மார்க்சியம் எனும் பஞ்சசீலக் கொள்கையை மையமாக வைத்து கலை இதழ் பயணித்துக் கொண்டிருக்கிறது. கோட்பாடு சார்ந்த சிற்றிதழ்களை ஒருங்கிணைப்பதும் பரிசளித்து படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும் கலை இதழின் முக்கிய நோக்கமாகும்" என்கிறார் மணிமுடி.

தத்துவங்களின் விவாதங்களை அறிந்து கொள்ள பயனுள்ள இதழ், 'கலை'.

பிப்ரவரி 03, 2006

கலை
காலம்
logo
Andhimazhai
www.andhimazhai.com