புதிய புத்தகம் பேசுது

புதிய புத்தகம் பேசுது

சிற்றிதழ் அறிமுகம் 13
Published on

 "சமீபத்தில் நான் படித்தவற்றுள், பிரிட்டிஷ் காலனியாக இருந்து விடுவிக்கப்பட்ட நைஜீரியாவில் நிகழ்ந்த அக்கிரமங்களின் சாட்சியமான 'பயா·பரவை நோக்கி' எனும் மொழிபெயர்ப்பு நூல் முக்கியமானது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் 'நிழல்களின் உரையாடல்' நூலை மொழிபெயர்த்த போது நான் அனுபவித்த துயரமான கணங்களை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்திவிட்டார் நூலாசிரியரும், துயர நாடகத்தின் முக்கிய பாத்திரமுமான புச்சியமெச்சட்டா.

கதை சொல்லி ஆட்சி மாற்றம் எனும் கேவலமான பேரம் நிகழும் சூழலில் மக்கள் ஒருவரை ஒருவர் துன்புறுத்தி சிதைத்துக் கொல்லும் வக்கிரத்தை கண்டு பதைக்கும்போது நாமும் பதைக்கிறோம். அவர் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி குற்றுயிராய் கிடக்கும் போது நாமும் குமுறுகிறோம். இத்தனைக் கொடுமைகளையும் அனுபவித்த பிறகாவது நல்லதொரு முடிவு ஏற்படுகிறதா? இல்லை. மிகக் கோரமான ஒரு முடிவுதான் முகத்திலறைகிறது.

நமக்கு ஒரே ஆறுதல் நிகழ்ச்சிகளின் சாட்சி அனைத்துத் துன்பங்களையும் சகித்து மீண்டிருக்கிறார் என்பது. அவர் நேர்மை துறந்து துரோகத்தில் இறங்கவில்லை. சோரம் போகவில்லை, தனது மண்ணையும் மக்களையும் மறந்துவிடவில்லை".

- இரா. நடராசன் மொழிபெயர்த்த புச்சியம்ச்செட்டாவின் 'பயா·பரவை நோக்கி' எனும் நைஜீரிய நாவலைப் பற்றிய இவ்விமர்சன வரிகள் புத்தகங்களுக்கென்றே வெளிவரும் இதழான 'புதிய புத்தகம் பேசுது' இதழில் (நவ.2005) வெளியாகியுள்ளது.

உங்கள் நூலகம், நூல் நயம் வரிசையில் புத்தகங்களைப் பேசுவது, வாசிப்பைப் பரவலாக்குவது எனும் நோக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது 'புத்தகம் பேசுது' மாத இதழ்.

பாரதி புத்தகாலயத்தின் சார்பில் வெளிவரும் இவ்விதழ் 2002இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர், க. நாகராஜன். பொறுப்பாசிரியர் சூரியசந்திரன். புத்தகம் பேசுது இதழ் வெளிவந்த போது எல்லா பத்திரிகைகளும் அதைப் பாராட்டி எழுதியது குறிப்பிடத்தக்கது.

புத்தக விமர்சனத்திற்கென்றே இவ்விதழ் வெளிவந்தாலும் தமிழின் முக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களும் இவ்விதழில் இடம் பெற்று வருகின்றன.

லஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன், க. பஞ்சாங்கம், பாமா, தி.க.சி., இன்குலாப், பா. செயப்பிரகாசம், இந்திரன் போன்றோரது நேர்காணல்கள் இடம்பெற்று வருகின்றன.

நூலகம் அறிவோம் எனும் தொடரில் ரோஜாமுத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம் போன்ற முக்கிய நூலகங்கள் குறித்து எழுதப்பட்டு வருகின்றன.

நூல் அறிமுகம், நூல் விமர்சனம், நூல் விலைப்பட்டியல், நேர்காணல் தொடர், வாசிப்பு அனுபவம் சார்ந்த சிறப்புக் கட்டுரை என வெளியிட்டு வருகிறது புத்தகம் பேசுது.

"வாசிப்பின் மந்த நிலையை மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தி உடைத்தது பாரதி புத்தகாலயம்" என்கிறார் பொறுப்பாசிரியர் சூரியசந்திரன். சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பிதழ், நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறப்பிதழ், உலகப் புத்தக தின சிறப்பிதழ் என அவ்வப்போது சிறப்பிதழ்களை வெளியிட்டு வருகிறது. மூத்த கலை இலக்கியவாதிகள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றி, 'வாசித்ததில் நேசித்தது' எனும் தலைப்பில் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது. காலச்சுவடு கண்ணன், ஆ.இரா. வேங்கடாசலபதி, பெருமாள்முருகன், மனுஷ்யபுத்திரன், இராம. குருநாதன், பத்மாவதி விவேகானந்தன், கமலாலயம், இந்திரன், அ. மார்க்ஸ், மயிலை பாலு, சு.பொ. அகத்தியலிங்கம், வல்லிக் கண்ணன் என அனைத்துத் தரப்பினரும் இதில் பங்களித்து வருகின்றனர்.

உலகப் புத்தக தினத்தைம் முன்னிட்டு நூறு சிறு நூல்களை வெளியிட்டிருக்கிறது பாரதி புத்தகாலயம். 500 இடங்களில் புத்தகக் கண்காட்சியும் நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் 'எழுத்தாளர் சங்கமம்' எனும் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில் வல்லிக்கண்ணன், சிட்டி, ம.சு. சம்பந்தம் முதலானோர் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இளம் மற்றும் மூத்த படைப்பாளிகளின் படைப்பாளுமையை முழுமையாக ஆராய மாவட்டந்தோறும் 'புதிய சங்கம்' எனும் ஆய்வரங்கை நடத்தி வருகிறது. முதல் நிகழ்ச்சி மேலாñமை பொன்னுசாமியின் படைப்புகள் கனிமொழியின் படைப்புகள் குறித்தும் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கவிஞர்கள் இன்குலாப், கலாப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது நிகழ்ச்சி எஸ். ராமகிருஷ்ணன் படைப்புகள் குறித்தும் சி. மணி படைப்புகள் குறித்தும் சேலத்தில் நடைபெற்றது.

பொறுப்பாசிரியர் சூர்யசந்திரனைப் பற்றி....

கவிஞர், பத்திரிகையாளர், இயக்க செயல்பாட்டாளர், சிறுகதையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் சூர்யசந்திரன். 'சாரதா' பத்திரிகையின் பொறுப்பாசிரியராக மூன்றாண்டுகள் பணியாற்றியவர்.

சங்கொலி, விடிவெள்ளி, இன்தாம் இணையதளம் ஆகியவற்றில் பணிபுரிந்திருக்கிறார்.



'பெண்ணே நீ' பத்திரிகையில் இவர் எழுதிய பெண் கவிஞர்கள் பற்றிய 'கவிக் குயில்கள்' எனும் தொடர் குறிப்பிடத்தக்கது.

"வாசிப்பை இயக்கம் ஆக்குவது, புத்தகம் பேசுதுவின் முக்கிய நோக்கமாகும். வாசகனுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வாசிக்கத் தூண்டுவதும் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் எங்களின் முக்கிய பணியாகும். எங்கள் பணியின் பெருமை அடுத்த தலைமுறையில் தெரியவரும்" என்கிறார் நம்பிக்கையுடன் சூரியசந்திரன்.

புத்தகங்களுக்கான புத்தகம் என்பதால் புத்தகம் பேசுகிறது வாசகர்களின் மனதோடு நெருக்கமாகப் பேசுகிறது.

சந்தா விவரம்:

பக். 32
விலை ரூ 10/
ஆண்டுச் சந்தா ரூ 250

(ஆண்டுச் சந்தா செலுத்துவோருக்கு பாரதி புத்தகாலயத்தின் புத்தகங்கள் கழிவு விலையில் கிடைக்கும்).

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர்,
புத்தகம் பேசுது,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை - 8.

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது

பிப்ரவரி   03 , 2006

புதிய புத்தகம் பேசுது
கலை
logo
Andhimazhai
www.andhimazhai.com