நடவு

சிற்றிதழ் அறிமுகம் 10
நடவு
Published on

".....
ஏதாவது காரணம் சொல்லி
அடிக்கடி சந்திக்கும்
உன் தோழியரின் முகங்கள்
அச்சுறுத்தவில்லை என் இரவுகளை
எப்போதோ சந்தித்த
என் பள்ளிப் பிராயத்து நன்பனை
இப்போதும் நான் சந்திப்பதாக
நீ சந்தேகப்படும் வரை".

ஆணாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தும் புதிய மாதவியின் ' கணவரின் தோழியர்' எனும் இக்கவிதை நடவு-ஜூலை'05 இதழில் வெளியாகியுள்ளது."
"மணிமுத்தாற்றங்கரையிலிருந்து முதல் படைப்பிலக்கியக் குரல் எழுகிறது". என்கிற முழக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடவின் முதல் இதழ் வெளி வந்தது. இது வரை (ஜூலை'05) 13 இதழ்கள் வெளிவந்துள்ளன.

இவ்விதழின் ஆசிரியர் ஜி.டி. என்கிற கோ. தெய்வசிகாமணி.ஆசிரியர் குழு, தமிழ்ச் சேரன், அரசிளங்குமரன்.

சிறுகதை,கவிதை, கட்டுரை, கலைகள் பற்றிய விமர்சனம் எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.சினிமா ரசிகர் மன்ற செயல்பாடுகள், மனித உரிமைப் பிரச்சனைகள்,பாசிசமயமாகிவரும் சமூக அமைப்பு எனப் பொதுவான சமூகப் பிரச்சினைகள் குறித்த கட்டுரைகளும் இதில் வெளிவருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் வீரப்பன் பெயரால் அதிரடிப்படை நடத்திய அத்துமீறல்கள் குறித்து " குருதி உறைந்த பூமி", "நிழல் தேடும் பாதங்கள்", "சில இடத்தில்" ஆகிய சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறது.

காவல் துறையின் அத்துமீறல்கள் குறித்த படைப்புகளையும் நடவு வெளியிட்டு வருகிறது." தொடர்ந்து தரமான கவிஞர்களையும்,கலைஞர்களையும் உருவாக்குவதை எதிர்காலத் திட்டமாகக் கொண்டு நடவு செயல்படுகிறது.

இதன் ஆசிரியர் ஜீ. டி. கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

'நடவு' வின் நோக்கம்..

"வட தமிழ் நாட்டில் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது,சமூக விழிப்புணர்வையும்,நல்லிணக்கத்தையும் வளர்ப்பது, மாற்றுக் கலாச்சரத்தை உருவாக்குவது. அத்துடன் விளிம்பு நிலை,கலை, இலக்கிய வளர்ச்சி, அதிகார வர்க்கத்துக்கு எதிரான மாற்றுக் குரல் ஆகியனவற்றை மையப்படுத்தி எங்கள் இதழ் பயணித்துக் கொண்டிருக்கிறது. அச்சுக்கூட வசதியின்மையால் வணிக நோக்கில் இதழைக் கொண்டு செல்லமுடியவில்லை.வாசகர்களிடமும் பரவலாக்க முடியவில்லை" என்கிறார்.

ஜனவரி 30, 2006

நடவு
உன்னதம்
logo
Andhimazhai
www.andhimazhai.com