இலக்கியத்தில் சண்டை

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-34
இலக்கியத்தில் சண்டை
Published on

இலக்கியத்தில் சண்டை பிரசித்தி பெற்றது. அதற்கு காலம், இடம், நாடு, மொழி - என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. எல்லா நாட்டிலும் இலக்கியவாதிகள் இலக்கியத்தின் பெயராலேயே சண்டையிட்டு வந்து உள்ளார்கள். அந்தச் சண்டையின் முக்கியமான அம்சம் சொந்த லாபம் இல்லை என்பதுதான். தரம் - என்று தாங்கள் நம்பிய தரத்திற்காகவே சண்டையிட்டு வந்து இருக்கிறார்கள்.

புத்தகங்கள் காகிதத்தில் அச்சிட ஆரம்பித்ததும் சண்டை சூடு பிடித்துக் கொண்டுவிட்டது. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், இராமலிங்கசுவாமிகள் திருவருட்பா - இல்லை. அது மருட்பாதான் என்று சண்டையிட்டு புத்தகம் போட்டார்.

ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் பெரிய அளவில் இலக்கியச் சண்டை இட்டவர் புதுமைப்பித்தன். கதை எழுதுவதில் அவர்க்கு இருந்த ஆர்வம் போலவே இலக்கியச் சண்டையிலும் ஆர்வம் இருந்தது. குறிப்பாக அவர் தன் காலத்தில் பிரபலமாக இருந்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி மீது தன் திறமை முழுவதையும் பிரயோசித்து சண்டைபோட்டார். அடுத்தவர் நிலைகுலைய வைக்கும் சொற்களை எல்லாம் அவர் எடுத்து விட்டார்.

அச்சு இயந்திரம் எல்லாவற்றையும் அச்சடித்துக்கொடுக்கும். அதற்கு பேதம் ஏதும்கிடையாது. எனவே எழுதியதும் அச்சடித்ததும் காண கிடைக்கிறது. புதுமைப்பித்தன் கதை எழுதியதற்கு எடுத்துக் கொண்ட சிரமத்தைவிட வசைபாட அதிகமான சிரமம் எடுத்துக்கொண்டார். அவர் கல்கியைத்தான் வம்புக்கு இழுத்து சண்டை போட்டார் என்பது இல்லை. தற்கால தமிழ் வசனம் - என்ற நூல் எழுதிய அருணாசலம் புதுமைப்பித்தன் பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. அதற்காக ஒரு கவிதை எழுதி சண்டை போட்டார். அது புதுமைப்பித்தன் எழுதிய கவிதை இல்லையென்றும் - அவர் சீடர் ரகுநாதன் எழுதியது என்று சொல்வது உண்டு. ஆனால் புதுமைப்பித்தன் கவிதையாக - அவர் இதெல்லாம் செய்யக்கூடியவர் என்பதால் - ஏற்கப்பட்டுவிட்டது. புதுமைப்பித்தன் வெளிப்படையாக சண்டைபோட்டார் என்பதுதான் முக்கியமானது.

க.நா.சுப்பிரமணியமும், சி.சு.செல்லப்பாவும் எப்பொழுதும் சண்டைப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களோடு சண்டை போட்டது மாதிரி, தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டார்கள். அந்தச் சண்டை தனிப்பட்ட சண்டையாக வெளியில் இல்லை. அது இலக்கியச் சண்டையாக - மெல்லிய தொனியில் இருந்தது.

சி.சு.செல்லப்பாவிற்கு தமிழ் இலக்கிய உலகத்தில் பிடிக்காத ஒரு ஆளென்றால் அது க.நா.சுப்பிரமணியந்தான். இலக்கியம் பற்றிய அவர் கருத்துகளை செல்லப்பா முற்றாக நிராகரித்தார். அவர் முக்கியமான இலக்கியவாதிகள் என்று கணித்த ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா - மீது விமர்சனத்தை வைத்தார். அது சி.சு.செல்லப்பாவை வெகுவாகப் பாதித்துவிட்டது. தன் இறுதிவரையில் க.நா.சுப்பிரமணியத்தை எதிர்த்து சண்டை போட்டுவந்தார்.

க.நா.சு. இறந்த பிறகும் கூட செல்லப்பா தன் சண்டையைவிடவில்லை. அதுதான் இலக்கியத்தின் சிறப்பு. ஆள் காலமானபின்பும் அவன் கருத்துக்கள் உள்ளன. எனவே சண்டையை கருத்துகள் மீது தொடர்வது சாத்தியமாகிறது.

1970-க்களில் பிரபலமான சண்டைக்காரர் வெங்கட சாமிநாதன். தீவிரமான இலக்கியவாதி. இலக்கியம் என்பது பன்முகங்கொண்டது என்று நம்பியவர். தன்னோடு தன் கருத்துக்களோடு முரண்படுகிறவர்களை எதிர்த்து சண்டை இடுவதில் சமர்த்தர்.

சேர்ந்த பணத்தைப் போட்டு 'இலக்கிய ஊழல்' என்ற புத்தகம் போட்டார். ஆறுமுக நாவலர்க்குப் பிறகு சண்டைக்காகப் புத்தகம் போட்டவர் இவர்தான் என்று சொல்லவேண்டும்.

இலங்கையில் இருந்து வந்த தர்முசிவராமு, ஆறுமுக நாவல் வழி தோன்றல் மாதிரி இலக்கியச் சண்டையை தொடர்ந்து நடத்தி வந்தார். மரணமே அவர் சண்டை இடுவதை நிறுத்தியது. அவர்க்கு நண்பர் - பகைவர் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. சண்டை இடுவதில் அவர்க்கு சலிப்பே வந்தது இல்லை. எனவே அவர் கடைசி மூச்சு உள்ளவரையில் சண்டையிட்டு வந்தார்.

சண்டை போடுவது மனிதனின் சுபாவத்தில் உள்ளது. அது ஆதி அளாதி குணம். இலக்கியவாதிகள் - எழுதத் தெரிந்தவர்கள் சண்டையை முன்னெடுத்து செல்கிறார்கள். இலக்கியத்தில் சண்டை என்பது தவிர்க்க முடியாதது. சிலர் எழுதி சண்டைபோடுகிறார்கள். அது தைரியசாலிகள் செய்வது. கோழைகள் மனத்திற்குள்ளே சண்டைபோடுகிறார்கள். அதைவிட கோழைகள் மற்றவர்கள் சண்டைபோடுவதை ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். சண்டை என்பது சாமான்ய சொல்லாக இருப்பதால் சர்ச்சை என்று ஒரு படி மேலே தூக்கி வைத்துவிடுகிறார்கள். சண்டையின் மேலான சொல் போர்தான். இலக்கியத்தில் சண்டை என்ற சொல் அதிகம் இல்லை. சண்டை நிஜம். நிஜத்திற்கு இலக்கியத்தில் சண்டை கவிஞற்குத்தான் இடமுண்டு.

(சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.)

ஏப்ரல் 18, 2006

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com