சரித்திரம்

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-31
சரித்திரம்
Published on

சரித்திரம் என்பது பொதுவாக தேசத்தின் வரலாறு என்று தான் இருக்கிறது. தேசத்திற்குத் தனியாக சரித்திரம் கிடையாது. அது மன்னர்களின் போர் - வெற்றி தோல்வி சார்ந்து இருக்கிறது. அதோடு அவன் கட்டிய அரண்மனைகள் கோவில்கள், தர்ம காரியங்கள், வேளாண்மை சிறக்க வெட்டிய ஏரிகள், கால்வாய்கள், அவன் பாடிய கவிதைகள், ஆதரித்த புலவர்கள் - இப்படி பல வரலாறு சரித்திரத்தின் அங்கமாகிவிடுகிறது. அதனூடே சொல்லப்படாத ஒரு சரித்திரம் உண்டு. அதுமறைக்கப்பட்ட சரித்திரம். எப்படி ஒரு மன்னன் ஆட்சியைப் பிடித்துக்கொண்டான் அதைத் தக்க வைத்துக் கொள்ள அவன் என்னென்ன காரியங்கள் செய்தான் என்பதுதான். அது பெருமை தரக்கூடியதாக இல்லை. எனவே மறைக்கப் பட்டுள்ளது. எழுதப் பட்ட சரித்திரத்தைவிட மறைக்கப் பட்ட சரித்திரம் அர்த்தம் மிக்கது. சரித்திரம் என்பதை அதுவே எல்லா காலத்திலும் நிலை நிறுத்திக்கொண்டு வருகிறது.

மாவீரர்கள், யுத்தம் என்பதேயே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு கையில் வாளும், மனத்தில் வஞ்சக சிந்தனையுங் கொண்டு அலைந்து கொண்டு இருந்தவர்கள் வாழ்க்கை சரித்திரமாக இருக்கிறது. அதில் இருந்து மனித சமூகம் கற்றது அதிகம் இல்லை என்பதுதான் போர்வீரர்களின் சரித்திரம் சொல்லும் செய்தியாக இருக்கிறது. சரித்திரத்தில் அதிகாரம் என்பது இல்லாமல் வாழ்ந்தவர்கள் - அதிகாரத்தை எதிர்த்து - கலகம் செய்து வாழ்ந்தவர்கள் சரித்திரம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அதுதான் சரித்திரம் என்பதின் மகத்தான சரித்திரம். அது மனித குலத்தின் மேன்மை º¢றப்பு என்பதின் சரித்திரம். அந்த சரித்திரத்தில் தான் சாக்ரட்டீஸ், பிளாட்டோ, புத்தர், ஏசுநாதர், திருவள்ளுவர், கம்பர், இராமலிங்க சுவாமிகள் - எல்லாம் வருகிறார்கள்.

மாபெரும் மனிதர்கள் என்று கொண்டாடப்படும் இவர்கள் ஆள் வைத்து சரித்திரம் எழுதிகொள்ளவில்லை. தன் கொள்கைகளைப் பரப்பு காரியங்கள் செய்ய அரசர்களின் ஆதரவை நாடவில்லை. ஆனால் பல மாபெரும் மன்னர்கள் மாமனிதர்களின் கருத்து, சிந்தனை, வாழ்க்கை இலட்சியம் என்பதை மக்கள் முன்னெடுத்து செல்வதை தம் கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக சரித்திரத்தில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கைச் சரித்தரத்தோடு எத்தனையோ கிளை சரித்திரம் துளிர்த்து இருக்கும். அதாவது தன் ஆசிரியரை - குருவை மேம் படுத்த சீடர்கள் ஜோடித்து அழகு படுத்தி வைத்து இருக்கிறார்கள். அதனை ஒவ்வொரு தலை முறையிலும் சிந்தனைவாதிகள் களைந்து உண்மையான சரித்திரத்தை மக்கள் உணர்கிற வகையில் ஆவன செய்து வருகிறார்கள். அதுவும் ஒரு சரித்திரம்தான்.

அதிகாரம் ஏதுமற்ற மாமனிதர்கள் தங்கள் கருத்துகளாலும் சிந்தனையாலும் மக்களிடையே செல்வாக்குப் பெற்று இருப்பதைப் பார்த்து, அதிகாரம் செலுத்தும் மன்னர்கள் தங்களின் சரித்திரத்தை கவிகளைக் கொண்டு பாட வைத்தும் - அவற்றை கல்லில் வடித்தும் இருக்கிறார். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பதினொறாவது நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் கீர்த்தியுடன் ஆட்சி புரிந்த சோழ மன்னர்கள் தங்களின் வாழ்க்கை வரலாற்றை மெய்க்கீர்த்தி என்று பெயரிட்டு கல்லில் அடித்திருக்கிறார்கள்.

மொகலாய மன்னர்கள் அரசபை கவிஞர்களைக் கொண்டு தம் வாழ்க்கை வரலாற்றை எழுதவைத்து இருக்கிறார். பாபர் நாமா, அக்பர் நாமா - என்ற பெயரில் மன்னர்களின் வாழ்க்கை வரலாறு உலாவி வருகிறது.

சரித்திரம் என்பது புதிய சொல். தமிழில் பழங்காலத்தில் சரிதை என்று வழங்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் வால சரிதை நாடகங்களில் என்று சொல்லப்பட்டுள்ளது.

கி.பி.எட்டாம் நூற்றாண்டில் சரிதை என்று சொல்லோடு சரித்திரம் என்ற சொல்லும் புழக்கத்திற்கு வந்துவிட்டது. திவாகரம் நிகண்டு, கொண்ட நினைவினிற் பூசை செய்யும் சரித்திரம் கண்டு என்கிறது.

சரித்திரம் என்பது எழுதப் பட்டதை விட - எழுதப்படாமல் தான் இருக்கிறது. எழுதப் படாமல் விட்டது உண்மை. உண்மையான சரித்திரம் என்பதை அடையவே ஒவ்வொரு தலை முறையிலும் சரித்திரம் எழுதப்படுகிறது.

சரித்திரம் என்பது தேசத்தின் சரித்திரம் மட்டுமன்று அது மனிதர்களின் சரித்திரமும் சேர்ந்ததுதான். அதன் காரணமாகவே நாவலாசிரியர்கள் நாவலை சரித்திரம் என பெயரிட்டு எழுதி உள்ளார்கள்.

தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் அது 1879 - ஆம் ஆண்டில் வெளிவந்தது.

(சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.)

மார்ச் 29, 2006

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com