பெண் கவிகள்

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-29
பெண் கவிகள்
Published on

எல்லா காலத்தையும் விட படித்தவர்கள் தற்போது அதிகம். அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி படித்தவர்கள் கூடுதல். பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் பெருகி உள்ளன. பத்திரிகைகள் பொதுத்தன்மையை விட்டு விட்டு துறை வாரியாகக் கவனம் செலுத்துகின்றன.

பெண்களுக்கு, சிறுவர் - சிறுமிகளுக்கென்று பத்திரிகைகள் வருகின்றன. பெண்கள் பத்திரிகை கூடி உள்ளது என்பது சந்தோசமானது தான். ஆனால் அவற்றில் பஞ்சம் அறிவே. கறையைப் போக்குவது எப்படி, வத்தல் போடுவது எப்படி, விவாகரத்து ஏன் - என்பதுதான் பெண் பத்திரிகைகளின் முக்கியமான அம்சம். அது தமிழ் பெண்கள் பத்திரிகைக்கு மட்டும்தான் என்று இல்லை. பொதுவாக பெண்கள் பத்திரிகைக்கு உரிய குணமாகவே உள்ளது. அப்புறம் கடவுள், ஆகம், புனித யாத்திரை, அருள்பாவிக்கும் அம்மாள், தோம் நீக்கும் இறைவன் திருத்தலம், மூட்டுவலி, இடுப்புவலி நீக்கும் வைத்தியம். இப்படிப் பட்டவைதான் பெண்கள் சம்மந்தப்பட்டது என்று பத்திரிகை ஆசிரியர்கள் - வெற்றிகரமான பத்திரிகைகளைப் பார்த்து விட்டு தீர்மானித்து அப்படியே நடத்துகிறார்கள். அதில் கொஞ்சம் இளைய பத்திரிகைகள் உண்டு. அதில் காதல் உண்டு. ஆனால் அடிப்படை மாறுதல் கிடையாது. எத்தனைத்தான் பெண்கள் படிப்பு, பதவி என்று மேல்நிலை அடைந்து இருந்தாலும் அவர்கள் உலகம் தனியாக இருக்கிறது. அது அடுப்பங்கரை சார்ந்தது. எனவே அடுப்பங்கரை கலாச்சாரத்தை மறுபடியும் மறுபடியும் ஸ்தாபிக்கிறார்கள்.

அப்புறம், குடும்பப்பாங்காÉ கதைகள், போலி கதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். நிஜம் என்பதை ஒழித்து விட்டக் கதைகள். அதுவும் பெண்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று இருக்கின்றன.

இருபதாண்டு காலமாகத் தமிழ்ப் பெண்களின் அபிமான எழுத்தாளர் யாரென்று கேட்டால், கிடைக்கும் பதில் ஆச்சிரியமாக இருக்கும். ஆனால் அந்த எழுத்தைத்தான் பெண்கள் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்றுதான் இல்லை, தமிழர்கள் வாழ்கிற எல்லா நாட்டிலும் பெண்கள் படிக்கிறார்கள். நாடு வித்தியாசம் இல்லை, அது பொதுகுணம். தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று கவி பாடி உள்ளது போல், தமிழ்ப்பெண்களின் ரசனை தனியாக உள்ளது. அது படிப்பு தொழில் பற்றியது இல்லை, ரசனை சம்பந்தப்பட்டது.

இலக்கியம் என்று ஒன்று உள்ளது என்பது தெரியாமலேயே அவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அவர்கள் புடவை எடுப்பதில் உள்ள கலை நேர்த்தி - அதை உடுப்பதில் உள்ள அழகு, அறிவு - இலக்கியத்தில் இல்லாமல் போய்விட்டது. அது பெண்கள் சம்மந்தப்பட்டது என்று தனியாகச் சொல்ல முடியாது. சுமூகத்தின் பொது குணம். முதல் தரமானது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் போனது. கல்வியின் குணம் என்று சொல்ல முடியாது. கல்வியின் நோக்கம் ரசனை இல்லை. ரசனை தனித்தனி ஆளாக உருவாகி சமூகத்தின் பொதுப் பண்பாவது. அந்தப் பொதுப் பண்பே இனத்தின் பண்பாக மிளிர்கிறது. ஆனால் ரசனையை கல்வி, கேள்வி, பரம்பரை என்பது தன்னளவில் உருவாக்குகிறது. முறையான சமூகத்தில் இருந்துதான் முதல்தரமான படைப்பு வெளிவருகிறது. ஒரு நல்ல படைப்புக்காக எத்தனையோ முறையாக படைப்புக்களை ஏற்பதும் - அங்கீகரிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது தவிர்க்கவே முடியாதது.

பொதுமக்கள் ரசனை, அங்கீகாரம் பற்றி எத்தனைதான் கவலைப்பட்டாலும் - அது மனித இனத்தின் ஒரு கூறு. அது இருக்கவே செய்யும். ஆனால் அது அந்தச் சமூகத்தில் இருந்து முதல் தரமான படைப்பு வருவதை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை என்பதற்கு சமூகமே சான்றாக உள்ளது.

நன்முல்லையார், வெள்ளிவீதியார், ஒளவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் என்பது எடுத்துச் சொல்லும் பெயர்கள். கசடுகளையும், அழுக்குகளையும் இவை தொலைதூரத்திற்குத் தள்ளி விடுகின்றன. சரித்திரம் மறுபடியும் மறுபடியும் இவர்களையே சார்ந்து உள்ளது.

(சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.)

மார்ச் 14, 2006

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com