சம்பவாமி யுகே ! யுகே !

தெற்கே உதித்த சூரியன் - 21
சம்பவாமி யுகே ! யுகே !
Published on

அன்புள்ள வாசக நண்பர்களே !

சுமார் ஆறுமாதங்களாக என்னுடன் நிகழ்த்திய ஒரு விதமான ஆன்மீகப்பயணம் இப்போது முடிவுக்கு வருகிறது. ஆறுமாதங்களாக - இதை எழுதிவந்ததன் காரணமாக - பரமாச்சாரியாரை தினமும் திரும்பத் திரும்ப நினைத்து , அந்த நினைவில் என்னை மேன்மேலும் தூய்மைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் - எஸ் . சாம்பமூர்த்தி சாஸ்திரி எழுதிய புத்தகத்தைதேடி படியுங்கள். சுவாமிகளின் திக் விஜயம் பற்றி இன்னும் பல நுணுக்கமான தகவல்கள் அதில் உள்ளன.

ஆனால் , ஆச்சாரிய சுவாமிகளைப் பற்றி இவை எல்லாம் போதாது. இன்னும் பற்பல தகவல்கள் சேகரிக்க வேண்டும் .அவர் நடத்திய 'சதஸ்' பற்றிய விவரங்கள் , அப்போது அவர் ஆற்றிய உரை போன்றவைகளை ஒன்று விடாமல் தொகுக்க வேண்டும் .பக்தர்களின் அனுபவங்களை எல்லாம் சேகரிக்க வேண்டும் . ' தெய்வத்தின் குரல் ' என்பதாக அவர் சொற்பொழிவுகள் வந்துள்ளன. அதை தயவு செய்து படித்து பாருங்கள். எத்தனை புதுமையான - அற்புதமான - நாம் அறியாத பற்பல விஷயங்களை சொல்லியிருக்கிறார்! சுவாமிகளின் அதிசயிக்கத்தக்க அறிவு மட்டுமின்றி - நம் மீது அவருக்குள்ள கருணையும் புலப்படும்.
பாரதத்திருநாட்டின் மீது சுவாமிகளுக்கு பெரும் மதிப்பும் - அதன் எதிர்கால எழுச்சி பற்றி பெரும் நம்பிக்கையும் இருந்தது. தமிழகத்தின்
மீதும் - தமிழ் மக்கள் மீதும் அவருக்கு அன்பு அதிகம்.அவர் பேசுவதைக் கேளுங்கள்.

" ஆதியில் மநு இருந்ததே தமிழ்நாட்டில்தான் . இங்கே தான் வேத வித்யை , ஞானம் , பக்தி எல்லாம் ரொம்ப செழிப்பாக இருந்திருக்கிறது.

த்ராவிடேஷ¥ பூரிச : என்பார்கள்.

தமிழ்நாட்டில் தாயுமானவர் , பட்டினத்தார் , போன்றவர்கள் என்றில்லை. மற்ற மதங்களைச் சேர்ந்த வேதநாயகம் பிள்ளை , மஸ்தான் சாகிப்போன்றவர்கள் கூட தமிழ் மண்ணின் விஷேசத்தால் , பரம வேதாந்திகளாக இருந்திருக்கிறார்கள். வேத தர்மத்தின் ஆதி வீடே இதுதான்.

அந்தத்திலும் - கலி முடிவிலும் அவதரிக்கப் போகிற கல்கி - திராவிட தேசத்தில் திருநெல்வேலிச் சீமையில் தோன்றப் போகிறார் என்றுதான் சொல்லியிருக்கிறது. அங்கேதான் வேத தர்மத்தில் தவறாத ஒருவருக்கு , புத்திரராக கல்கி தோன்றப் போகிறார் என்று புராணத்தில் சொல்லியிருக்கிறது ".

*******************

1994 ம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி . சனிக்கிழமை . பிற்பகல் மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

பத்திரிக்கை பணிகள் முடிந்த நிலையில் - ஆசிரியர் பிரிவின் சக தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது -

காஞ்சியில் - ஸ்ரீமடத்தில் - பரமாச்சாரியார் உடலைத் துறந்த செய்தி வந்தது. எதிர்பாராத செய்தி. நிசப்தமாக இருந்தோம். சிலர் கண்களில் கண்ணீர். நான் சுதாரித்துக் கொண்டு , ஆசிரியருக்கு தகவல் கூறி - உடனடியாக பத்திரிக்கையில் பரமாச்சாரியாருக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியை சேர்க்கும் பணியை கவனித்தேன்.

சூரியனுக்கு அஸ்தமனம் என்பது உண்டா என்ன? அது ஜகஜ் ஜோதியாக இருக்கவே செய்கிறது. நம் கண்ணுக்கு தெரிவதில்லை. அதுதானே உண்மை !

தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித்துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்போலே -

ஒரு சாதாரண மனிதனுக்கு நேரும் சாவு பற்றி மகாகவி பாரதி கூறினான் !

18 மொழிகளில் வல்லவராய் - பாரத தேசத்தின் பண்பும் கலாச்சாரமும் மீண்டும் வளம் பெற உழைத்தவராயிற்றே சுவாமிகள் !

அவரது சாதனைகளை எளிதில் பட்டியலிட முடியுமா? அதே நேரம் தவயோகியாய் - நம் நாட்டின் பழம்பெரும் முனிவர்கள் போல - அப்பர் போன்ற நாயன்மார்களைப் போல , மகத்தான ஆழ்வார்களைப் போல , அருட் ஜோதி வள்ளல் போல , ஷீரடி சாய்பாபா போல கருணையால் மக்களைக் காத்தவராயிற்றே !

காஞ்சி பெரியவருக்கும் புத்தர் பெருமானுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன . புத்தர் போல வைகாசி பவுர்ணமி நாளில் பரமாச்சாரியாரும் பிறந்தார். மிருக வதையை புத்தர் போல எதிர்த்தார்.

ஒரு சாதாரண மனிதருக்கு வரும் மரணமும் - சுவாமிகளின் மறைவும் ஒன்றல்ல என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

சுவாமிகளுக்கு 1993 ம் ஆண்டில் மேமாதம் 7ம் தேதி 99 வயது முடிந்து 100 வயது தொடங்கியது. பிரதமர் நரசிம்மராவ் கலந்து
கொண்ட மாபெரும் விழா அப்போது நடந்தது.

100 பவுன் தங்கக் கிரீடம் சூட்டி , தங்க காசுகளால் கனகாபிஷேகம் செய்வித்தார்கள் .

சுவாமிகள் 120 ஆண்டுகள் இருப்பார் என்று பக்தர்கள் நம்பி இருந்தனர். சுவாமிகள் மறைவால் பக்தர்கள் - ஏன் - ஆன்மீக இந்தியாவே ஏழையாகிவிட்டது.

20 ம் நூற்றாண்டு முழுவதும் ஆன்மீக ஒளி வீசிய சூரிய ஜோதி அல்லவா சுவாமிகள் ?

ஆச்சாரிய சுவாமிகள் பற்றி தேடித்தேடி படிப்பதை வழக்கமாகக் கொண்டவர்களுக்கு ராமாயணமும் - மகாபாரதமும் படிக்கின்ற ஒரு பரவச உணர்வு அப்போதெல்லாம் ஏற்படும் . பரமாச்சாரியாரும் - ராமர் - கிருஷ்ணன் போலவே நெஞ்சில் நிறைகிறார்.

பரமாச்சாரியார் 1970 க்குப் பிறகு, மெல்ல மடத்தின் பொறுப்புகளிலிருந்து விலகி விட்டார் எனலாம்.
அவர் எப்போதுமே பணம் காசுகளை கையால் தொட்டு பக்தர்கள் யாரும் பார்த்தது இல்லை.

ஒரு சமயம் பெரும் பணக்காரர் பதினைந்தாயிரம் ரூபாய், பூ பழங்களுடன் ஒரு வெள்ளித்தட்டில் வைத்து சுவாமிகளுக்கு சமர்ப்பித்தார்.

அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஓர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் , " எங்கள் பள்ளி கட்டிடத்தைப் புதுப்பிக்க பதினைந்தாயிரம் ரூபாய் தேவை ....சுவாமிகள் அதைத் திரட்ட ஆசிர்வதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்! சுவாமிகள் அந்த ஆசிரியரை சற்று இருக்குமாறு சொல்லியிருந்தார்! ஒருமணி நேரத்திற்குள் பிரச்னை தீர்ந்தது! சுவாமிகள் ஆசிரியரை அழைத்து பணக்காரர் கொடுத்த தொகையை அவரிடம் கொடுக்கச் செய்து ,ரசீதும் அவர் பெயரில் வழஙகச் செய்தார்!.



"மடம் நடப்பதற்கு இப்போது நீங்கள் பட்டணத்தில் தருகிற பணம் வேண்டும் என்பதே இல்லை . மடங்களுக்கு பணபலம் ஆள்பலம் எல்லாமே குறைச்சலாக இருக்க வேண்டும் என்பதுதான் என் அபிப்பிராயம் , பரிவாரம் , பட்டாளங்கள் நிறைய தேவையில்லை . மடத்தின் அதிபதியாக இருக்கப்பட்டவரின் யோக்கியதைதான் அதற்கு பணம் , பலம் எல்லாம் " - இவ்வாறு ஒரு முறை சென்னையில் பேசி இருக்கிறார் பரமாச்சாரியார்.

நமது நாட்டு அரசியல் நிலைமைகளை பார்த்தவர்கள் - இன்னொரு மகாத்மா மீண்டும் பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள். ராஜாஜியே இப்படி பிரார்த்தனை செய்திருக்கிறார்.

ஆதி சங்கரரின் மறு அவதாரமாகவே போற்றப்பட்ட நம் வணக்கத்துகுரிய பரமாச்சாரியார் - மீண்டும் இங்கே அவதரித்து - பாரதநாட்டின் ஆன்மீகச் செல்வத்தை பெருக்க வேண்டும் , நம்மை தெய்வநெறி காட்டி நேர்வழி செலுத்த வேண்டும் என்று இறைவனை வேண்ட தோன்றுகிறது.

தர்மத்தை நிலை நாட்ட நடந்த குருஷேத்திர யுத்தத்தில் - யுத்தகளத்தில் - குதிரைகளை பிடித்து இழுத்து தேரை சற்று நிறுத்தி - அர்ஜூனனுக்கு கண்ணன் கீதோபதேசம் சொன்ன போது -
' சம்பவாமி யுகே யுகே ' என்று வாக்குறுதி அளித்திருக்கிறான்.

கண்ணன் வாக்கு பொய்ப்பதில்லை .

வணக்கம் .

தெரியுமா?

பாபாவின் தியாகம்

ஷீரடி பாபாவின் தீவிர பக்தர் தாத்யா பாடீல்.இந்த பக்தர் 1918 ம் ஆண்டு விஜய தசமி அன்று மரணம் அடைவார் என்று பாபா கூறினார்.

ஆனால் அந்த தினத்தில் தன் பக்தரை காப்பாற்றி,அதற்கு பதிலாக பாபா சமாதி கண்டார்.பக்தருக்காக தன் உயிரை தியாகம் செய்தார்.



'தெற்கே உதித்த சூரியன்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

ஜனவரி   03 , 2008

<<<முந்தைய பகுதி

logo
Andhimazhai
www.andhimazhai.com