ரவிசுப்பிரமணியன்

குறும்பட இயக்குநர்-10
ரவிசுப்பிரமணியன்
Published on

கவிஞர் ரவிசுப்பிரமணியன் , ஆவணப்படத்துறையிலும் தனக்கென ஓரிடத்தை நிறுவியிருக்கிறார் . ' இந்திராபார்த்தசாரதி எனும் நவீன நாடகக்கலைஞன் ' ; 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ' எனும் ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார்.

ரவிசுப்பிரமணியனுக்கு பரதத்திலும் கர்நாடக இசையிலும் கூட ஈடுபாடு உண்டு.

முறையாக மூன்று ஆண்டுகள் தர்மாம்பாள் எனும் ஆசிரியையிடம் பரதம் பயின்றார். கர்நாடக இசையை கடந்த ஏழு ஆண்டுகளாக பயின்று வருகிறார். சாகித்ய அகதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இவர் உள்ளார்.

முதல் படம் இந்திரா பார்த்தசாரதியின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தியது. இரண்டாது படம், 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ' அரங்கநாதனின் வாழ்க்கையையும் ஒட்டு மொத்த தமிழ்க்கவிதை பற்றிய அவரது பார்வையையும் வெளிப்படுத்துகிறது.

'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் 'படம் குறித்து...

அழகிய இயற்கைக் காட்சிகளுடன் தொடங்குகிறது இந்த ஆவணப்படம் . பூங்காவில் தனியாக ஆடிக்கொண்டிருக்கும் ஒற்றை ஊஞ்சலின் அருகில் அமர்ந்திருக்கும் மா.அரங்கநாதனின் கையை நடுத்தரவயது கையொன்று தூக்கி நிறுத்துகிறது. பிறகு மா.அ பூங்காவை உலா வருகிறார். அவரைப்பற்றிய அறிமுகம் பின்னணிக் குரலில் ஒலிக்கிறது.

"பல வினோதங்கள் கொண்ட இலக்கிய உலகில் சில ஆளுமைகள் கூச்சம் தோன்ற ஒளிக்கின்றன. எல்லாமும் இருந்தும் சில ஆளுமைகள் அமைதியாய் இருக்கின்றன. இது ஏன் நிகழ்கிறது ? அதில் வியப்பில்லை .ஆனாலும் இது தொடர்ந்து தான் நிகழ்கிறது என்று தான் நிதர்சனம். மரபின் செழுமையும் நவீனத்துவத்தின் வீச்சும் தனித்த சிந்தனைப்போக்கும் ஒருங்கே அமையப்பெற்ற தமிழின் மூத்த படைப்பாளி மா.அரங்கநாதன்" என மா.அரங்கநாதனை அறிமுகம் செய்கிறது கருணைக்குரல். குரல் ரவிசுப்பிரமணியுடையது. முதலில் மா.அ வை தூக்கி நிறுத்திய கையும் அவருடையது.

தொடர்ந்து அவருடைய படைப்புகள் குறித்த அறிமுகம் வருகிறது.

மா.அரங்கநாதனின் நேர்காணல் தொடங்குகிறது. ஒய்.எம்.சி.ஏவில் அவர் 'யாதும் ஊரே யாவரும் கேளிர் ' கவிதை குறித்துப் பேசியதில் தொடங்கி கம்பராமாயணப்பாடல் , திருநாவுக்கரசர் பாடல் என விரிந்து , சமீபத்தில் அவர் படித்த கவிஞர்கள் இளம்பிறை , லதா ராமகிருஷ்ணன் கவிதைகள் வரை மிக நுட்பமாக விவரித்துச் சொல்கிறார். 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் 'என்னும் தலைப்பின் வரையறைக்கேற்ப கவிதை பற்றிய உரையாடல் , நேர்காணலில் வெளிப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்க முடியாது , உணரத்தான் முடியும் . விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது கவிதை 'எனக்கவிதை குறித்த தன் பார்வையை வெளிப்படுத்துடுகிறார் மா.அ.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரசங்கங்கள் அவரை இலக்கிய வாழ்விற்குத் தகுதியுள்ளவனாக ஆக்கியதையும் அவர் பதிவு செய்கிறார்.

அவர் பிறந்த ஊரான திருப்பதிசாரம் தொடங்கி , படித்த பள்ளிகள் , பார்த்த வேலை. அவரது குடும்ப உறவினர்கள் என அவரைச் சார்ந்த எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான ஆவணப்பட பாணியான சமகால எழுத்தாளர்களின் நேர்காணல், உடன்பணியாற்றியவர்கள் மற்றும் உறவினர்கள் நேர்காணல் இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

முழுக்க மா.அ வின் தனிமையை உச்சரிக்கும் படமாக இருக்கிறது. ஓரமாக உட்கார்வது , தனிமையில் ஊஞ்சல் ஆடுவது, பேரப்பிள்ளைகளிடம் விளையாடுவது போன்ற மௌனக் காட்சிகள் இதில் உள்ளன. அவரது கைகள் ஒரு கதாபாத்திரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிக் கவிதைகளும் இதில் உண்டு.

இசை இப்படத்தில் முக்கிய பாத்கிரம் வகிக்கிறது. இளையராஜா குழுவில் பணியாற்றும் சதானந்தம் இசையமைத்துள்ளார். எடிட்டிங் B.லெனின் , வடகரா மோகன் தாஸ் கேமரா , யாரும் ஊதியம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிசுப்பிரமணியனிடம்.

* நீங்கள் இலக்கியம் மற்றும் கலைத்துறையில் காலூன்றியதற்கான பின்னணியாக எதைச் சொல்வீர்கள் ?

சிறுவயதில் இசை , நாட்டியச் சூழலில் வளர்ந்தேன் . குறிப்பிட்ட காலம் அப்பாவுக்கு இன்னொரு வீடு இருந்தது. அவங்க இசை வேளாளர். அந்த வீட்டில் முழுவதும் இசை , நாட்டியம் , சங்கீதக்காரர்களின் சம்பாஷணைகள் நிறைந்த அந்தச் சூழலில் வளர்ந்தேன். என் பால்ய காலங்கள் பெரும்பாலும் என் வீட்டில் கழியவில்லை. இதைத்தவிர கும்பகோணம் நாகேஸ்வரன் சந்நதியில் வாழ்க்கை. காலையில் தேவாரம் , திருவாசகம் , பக்திப்பாடல்கள் , இதெல்லாம் ஒலிக்க ஆரம்பிக்கும். தினமும் அரைத் தூக்கத்தில் அதைக் கேட்பேன். மாலை நேரங்களில் பெரியார் , அண்ணா போன்ற திராவிடக்கழகப் பேச்சாளர்கள் கூட்டமும் அங்கே நடக்கும்.

*உங்களது ஆரம்பகால இலக்கிய வாசிப்பு மற்றும் இலக்கிய ஆளுமைகளின் தொடர்பு எவ்வகையில் ஏற்பட்டது ?

நான் மர்ம நாவல்கள் படித்துத்தான் இலக்கியத்துறைக்குள் வந்தேன். ராஜேஷ்குமார் , பட்டுக்கோட்டை பிரபாகர் , சாண்டில்யன் , சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களின் கதைகளைப் படித்தேன்.அதன் பிறகு வலம்புரி ஜான் , வைரமுத்து ,மேத்தா ,அப்துல் ரகுமான் போன்றோரின் நூல்களைப் படித்தேன்.

இளங்கலை பொருளாதாரம் இரண்டாமாண்டு படித்த போது தான் இதுவரை படித்தது பிரயோஜனம் இல்லை என்பது தெரிந்தது அந்த சந்தர்ப்பத்தில் தான் என்னுள் காதல் உருவானது. அப்போது மீராவின் கவிதைகள் படிக்கக்கிடைத்தது. அதன்பிறகு மீராவின் அன்னம் பதிப்பகம் வழியாக தீவிர இலக்கியத்தை நோக்கி ஒரு தேடல் தொடங்கியது.

இந்தச்சந்தர்ப்பத்தில் , விரும்பிய பெண்ணுக்கு கடிதங்களில் கவிதை எழுத வேண்டியிருந்தது. அந்த ஆசையில் தான் கவிதை எழுதினேன். அந்தக் கவிதைகள் வைரமுத்து, மேத்தா , மீரா, மாதிரி தான் எழுத முடிந்தது. இந்த 'இமிடேசன் ' பற்றிக் கூச்சப்பட்டு சொந்தமாக எழுதணும் , சுயமாக எழுதணும் என்கிற தேடலில் ரேணுகா , பாலகுமாரன் இவர்களுடைய நட்பால் தீவிரம் இலக்கியம் படிக்க தொடங்கினேன்.

அதன் பிறகு நகுலன் , ஞானக்கூத்தன் , வைத்தீஸ்வரன் , சு.ரா. , அழகிரி சாமி , கி.ரா, தி.ஜா, இவர்களுடைய எழுத்துக்கள் எனக்குப் புதிய கதவுகளை திறந்துவிட்டன.

அதற்கு பிறகு என் முதல் கவிதைத் தொகுப்பு 'ஒப்பனை முகங்கள் ' 1990 இல் வெளிவந்தது. பிறகு 'காத்திருப்பு ' (1995) , 'காலாதீத இடைவெளியில் ' (2000) , 'சீம்பாலில் அருந்திய நஞ்சு '(2007) ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன.

* கவிதைத் துறையிலிருந்து ஆவணப்படத்துறைக்கு வந்த சூழல் குறித்து...?

எட்டுவருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சார்ந்த வேலைகளிலேயே இருந்ததால் நான் ஒரு வணிக ரீதியான தயாரிப்பாளராக செயல்பட்டிருக்க முடியும் . ஆனால் வெளியில் வந்த பிறகு நமக்குக் கிடைத்த அனுபவத்தை இலக்கியத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற ஆவலில் ஆவணப்படத்துறைக்கு வந்தேன்.

*உங்களது முதல் ஆவணப்படம் இந்திரா பார்த்தசாரதியைப் பற்றியது முதலில் அவரைத் தேர்வு செய்ததற்கான காரணம் ?

இந்திரா பார்த்தசாரதியை முதலில் தேர்வு செய்ததற்கான காரணம் , அவருடைய எழுத்துக்கள் . குறிப்பாக அவரது நாடகங்கள் . பிறகு , அவரும் கும்பகோணம் . அவர் சாரங்கபாணி கோயில் சந்நிதி ; நான் நாகேஸ்வரன் கோயில் சந்நிதி . இவை தான் காரணம் . கும்பகோணத்தில் கரிச்சான் குஞ்சு , எம்.வி.வெங்கட்ராம் இவர்களுடைய தொடர்பும் எனக்கு இருந்தது. அவர்களுடைய எழுத்துரிமை கூட இதுவரைக்கும் என்னிடம் தான் உள்ளது. அந்த அளவுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது.

*உங்களது முதல் ஆவணப்பட அனுபவங்களைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன் ?

'இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன் ' என்று தலைப்பு சொன்ன போது , இ.பா. " நான் வெறும் நாடகக் கலைஞன் தானா?" என்று கேட்டார். ஒரு அரைமணி நேர ஆவணப்படத்தில் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் பிரதிபலிக்க முடியாது. நீங்க சிறுகதையாளர் , கட்டுரையாளர் , நாவலாசிரியர் , கல்வியாளர் ஆக இருந்தாலும் கூட உங்களின் முதன்மை அடையாளமாக உங்களை ஒரு நாடக எழுத்தாளராகத்தான் பார்க்கிறேன் . அந்தக் கோணத்தில் தான் சொல்லப்படவேண்டும் என்று நினைக்கிறேன். தவிர , ஒரு ஆவணப்படம் ஒரு உரையாடலின் துவகக்த்திற்கான மூலப்பொருளாக அமையுமே தவிர, அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிடாது; சொல்லிவிடவும் முடியாது என்றதும் இந்திரா பார்த்த சாரதியும் ஏற்றுக்கொண்டார்.

* மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ' எடுத்துள்ள விதம் திருப்தியளிக்கிறதா ? பரவலாக பாராட்டப்படும் இப்படம் குறித்து ஒன்றிரண்டு விமர்சனங்கள் வந்துள்ளனவே ?

மா.அரங்கநாதன் ஒரு நாவலாசிரியர் , கட்டுரையாளர், சிற்றிதழாளர், அவர் போதுமான அளவு கவனிக்கப்படவில்லையென்பது என் அபிப்ராயம் . இது அவரைப்பற்றி ஒரு அறிமுகப்படம். இப்படத்தின் பார்வையாளர்கள் அரங்கநாதனைத் தெரியாத இலக்கியம் வாசிக்கிறவர்களுக்கான ஒரு அறிமுகப்படம். வெறும் பயோடேட்டா குறிப்பாக இருக்காமல் கவிதை பற்றிய உரையாடலைக் கூடுதலாக சேர்த்துள்ளேன்.

இப்படத்தில் அரங்கநாதனின் பன்முக ஆளுமை வெளிப்படவில்லை என்று யாராவது கேட்டால் இதையேனும் செய்ய இங்கு யாரேனும் உண்டோ எனும் கேள்வியைத்தான் நான் கேட்க முடியும் . இதில் பணம் ஒரு முக்கியமான காரணி . ஒரு ஆவணப்படம் எடுக்க ஆகக்குறைந்தது மூன்று இலட்சம் தேவைப்படுகிறது. அதற்கான வருவாய் மார்க்கெட்டிங் எதுவும் நம்மிடம் இல்லை. இலக்கிய வியாபாரிகள் கவனமும் இன்னும் இங்கு திரும்பவில்லை.

இவையெல்லாம் தவிர்த்தற்கு செலவுதான் காரணம் . எவ்விதப் பலனும் இன்றித் தொடர்ந்து ஒரு வேலையைச் செய்யும் போது ஒரு சோர்வு வரத்தான் செய்கிறது. அதனால் சில வேளைகளில் படம் முடிந்தால் போதும் என்ற மனநிலை வந்துவிடுகிறது.

பொது இடங்களில் படம் எடுக்கவும் போதுமான வசதிகள் கிடையாது. அடையாள அட்டை கிடையாது இயக்குனர்கள் சங்கம் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை. இது போல பல்வேறு சிரமமான சூழலில் தான் ஆவணப்படம் எடுக்க வேண்டியுள்ளது.

இது பணம்புரளும் துறையாக இருந்தால் ஆயிரம் 'ஸ்பான்சர்'கள் வருவார்கள். என்னுடைய சொந்த செலவில் ரூ 35,000 செலவு செய்து இப்படத்தை எடுத்தேன். முதல் படம் 'இ.பா' சாகித்ய அகதமி தயாரித்தது. அதே போல் இப்படத்தையும் ஏதேனும் நிறுவனம் தயாரித்திருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கமுடியும்.

* கவிஞர் - ஆவணப்பட இயக்குநர் :எது மன நிறைவு அளிக்கிறது ?

கவிஞராக இருப்பதுதான் எனக்கு அதிக மன நிறைவு அளிக்கிறது. கவிஞர் என்பது முழுக்க முழுக்க தனி மனிதன் சார்ந்தது. Documentry ஒரு கூட்டு முயற்சி . கவிதை நினைத்த நேரத்தில் எழுதலாம் . மற்றும் கவிதை என்பது நுட்பமான உலகம் . ஒரு வகையில் கவிதைகள் எனக்கு Documentry யில் உதவி செய்கிறது எனலாம். காட்சி அமைப்பில் விவரணை எழுதுவதில் எனக்கு உதவி செய்கிறது.

* தமிழில் ஆவணப்பட விமர்சனங்கள் எப்படி இருக்கின்றன ?

சி.அண்ணாமலை , செந்தமிழன் , R.R.சீனிவாசன் , தியோடர் பாஸ்கரன் , வெங்கட் சாமிநாதன் , சொர்ணவேல் , அம்சன் குமார் , விட்டல் ராவ் , அசோகமித்திரன் , செழியன் , விஸ்வாமித்திரன் போன்ற ஆவணப்படத்துறையை புரிந்த எழுத்தாளர்கள் தான் ஒரு ஆவணப்படத்தைச் சரியான அர்த்தத்தில் மதிப்பீடு செய்ய இயலும். துரதிருஷ்டம் என்னவென்றால் கட்டுரைகள் எழுதுகிறவர்கள் ஆவணப்படங்களைப் பற்றியும் திரைப்படங்களைப்பற்றியும் மேதாவித்தனமான அரைவேக்காட்டுத்தனமான அபிப்பிராயங்களை வெளியிடுவதுதான்.

* அப்ப நீங்க சினிமாவிற்கு வந்தால் கமர்ஷியல் சினிமா எடுக்க மாட்டீர்களா?

சத்தியமா எடுக்க மாட்டேன். ஒருவேளை வாய்ப்பு வந்து நான் எடுக்கும் சினிமா கமர்ஷியலா வெற்றியடைந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

* புதிய புதிய குறும்பட /ஆவணப்பட இயக்குனர்கள் பலர் வந்து கொண்டேயிருக்கின்றனர். நம்பிக்கையூட்டக் கூடியவர்களாக யார் யாரை அடையாளம் காட்டுவீர்கள்?

செழியன் (திருவிழா) , செந்தமிழன் (பேசா மொழி , ஆடொடிகள் ), ஹரிகோப்பி (உப்புக்காத்து ) சி.அண்ணாமலை (அல்ப்ஸ் கூத்தாடிகள்) , ராஜாங்கம் (ஜல்லிக்கட்டு ) போன்றவர்கள் எதிர்கால ஆவணப்படௌலகில் மிகச்சிறந்த நம்பிக்கைக்குரியவர்களாக தோன்றுகிறார்கள்.

இந்த ஆவணப்படம் குறித்து மா.அரங்கநாதனின் கருத்துக்கள்...

* இந்த ஆவணப்படம் குறித்து சொல்லுங்கள் ? குறிப்பாக உங்களை ஒன்றைத்தன்மையில் காட்டியிருப்பது குறித்தும் படத்தின் தொழில் நுட்பம் குறித்தும் சொல்லுங்கள்?

"இந்த ஆவணப்படம் முழுக்க ரவியுடையது. கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஒரு படைப்பாளியின் ஒரு பகுதியை மட்டும் காட்டுவதின் காரணம் பலவாறாகச் சொல்லலாம். ஒன்று , கவிதையைப் பற்றித் தெள்ளத் தெளிவாக அலசி விட்டாலே கிட்டத்தட்ட படைப்பின் பல குறுபாடுகளையும் நாம் அலசி விட்ட மாதிரிதான்.

நீங்க சாதாரணமாக இருங்க என்றார் ரவி. படைப்பு பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ளாத நபர்களுக்கு அதை எவ்வளவு தூரம் விளக்கிச் சொல்ல முடியுமோ அவாளவு தூரம் விளக்கிச் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். இது அப்படிப்பட்டவர்களுக்கான படம். உங்களைப் பற்றிய ஒரு அறிமுகப்படம் என்று தான் சொன்னார்.

பொதுவாக நான் சிறு கதை எழுத்தாளன் என்று அறியப்பட்டவன் என் சிறுகதை , நாவல் பற்றிச் சொன்னவைகளும் இடம்பெற்றிருக்கலாம் என்கிற ஆதங்கமும் இருக்கத்தானே செய்யும் ?

எந்த நிறுவனம் சார்ந்தோ கட்சி சார்ந்தோ இந்தப்படம் இல்லாதிருப்பது மிகுந்த திருப்தி. நான் பார்த்திராத நண்பர்களும் இதைச் சொல்லியிருக்கிறார்கள். இலக்கியம் சார்ந்த படைப்பாக இது இருப்பது தானே நல்லது. இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும் ".

- யாழினி முனுசாமி

செப்டெம்பர் 22, 2007

அடுத்து>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com