காவியக் கவிஞர் வாலி

நெஞ்சம் மறப்பதில்லை -19
காவியக் கவிஞர் வாலி
Published on

சில வருடங்களுக்கு முன்... பாண்டிச்சேரி கம்பன் விழாவில், இலங்கை ஜெயராஜ் தலைமையிலான பட்டிமன்றத்தில் பங்கேற்க சென்றிருந்தேன். தொடங்கிய இடத்திலேயே முடியும் இடுக்குப் புள்ளிக் கோலத்தின் இழைகளைப் போல, வேறு ஏதோ நிகழ்ச்சியில் ,கம்பனைப் பற்றி நான் பாண்டிச்சேரியில் பேசியதைக் கேட்டு விட்டு, கம்பன் விழாவிலும் கம்பனைப் பற்றி பேச வைத்தார்கள். பட்டிமன்றத்திற்கு முந்தைய நிகழ்வாக கவிஞர் வாலி தலைமையில் கவியரங்கம் இருந்தது. அவருக்கு அருகில்  அக்கா ஆண்டாள் பிரியதர்சினி அமர்ந்திருந்தார். அவர் பொதிகையில் "காலைத் தென்றல் " நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்திருந்தார். அவரிடம் சென்று நலம் விசாரித்த போது,அருகில் அமர்ந்திருந்த கவிஞர் வாலியிடம் ,இவங்க பேர் சுமதி....இவங்களும் கவிஞர் தான் என அறிமுகப் படுத்தினார். தன் வாழ்க்கை அகராதியில் ,ஆணவம் என்ற வார்த்தையே இல்லாத அந்த முத்தன்ன வெண்நகையாளரை பணிவோடு வணங்கினேன்  .ஊர், வேலை ஆகியவற்றை விசாரித்த பின் மேடைக்கு சென்று விட்டார். பட்டிமன்றம் தொடங்கும் போது,அரங்கத்தில் இருந்தவர் நான் பேசுவதற்கு முன்பு கிளம்பி விட்டார்.என் பேச்சை கேட்காமல் போய் விட்டாரே என வருத்தமாக இருந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து , வள்ளுவர் கோட்டத்தில் ,தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் ,அவ்வை நடராஜன் நடுவராக இருந்த பட்டிமன்றத்தில் பேசினேன். அன்றும் அரங்கத்தில் இருந்த வாலி, நான் பேசுவதற்கு முன் கிளம்பி விட்டார். அடுத்த நாள் அவருக்கு போன் செய்தேன்...

"நீ நல்லா பேசினியாம்மே...கலைஞரே ரொம்ப பாராட்டுனாராமே ..."என்றார் .சந்தோஷமாக இருந்தது. அதன் பின் அவ்வப்போது தொலைபேசியில் அவரோடு பேசி வந்தேன்.

தகப்பன்சாமி கவிதைத் தொகுப்பை வெளியிடும் முயற்சியில் இருந்த போது,கவிஞர் வாலியிடம் அணிந்துரை வாங்க விரும்பினேன். ஆனாலும் கேட்க தயக்கமாக இருந்தது."என் கவிதைகளை அனுப்புகிறேன் .படித்துப் பாருங்கள் "என சில கவிதைகளை அனுப்பி வைத்தேன். பழநிபாரதி அண்ணன், "அதெல்லாம் அணிந்துரை கொடுப்பார் .நீ கேளு" என்று சொன்னாலும்,எனக்கு மிகுந்த தயக்கமாக இருந்தது. ஒருநாள், "நாளை சென்னை வர்றேன் ஐயா....சந்திக்கலாமா "என கேட்டேன்.  "பதினோரு மணிக்கு வா" என்றார் . ஆனால் ,நான் அவர் வீட்டிற்கு போய் சேர, பனிரெண்டரை மணி ஆகி விட்டது. அவரைப் பார்த்து நான் வணக்கம் என சிரித்தபடி கை கூப்ப ,அவரோ,மிகவும் கோபமாக  "பதினோரு மணிக்கு தானே வர சொன்னேன் ஏன் இவ்ளோ லேட்?", என கேட்க ,"லேட்டாயிடுச்சுங்கய்யா..."என்ற என் பதிலில் இன்னும் ரௌத்ரமானார். எதுவும் பேசாமல் கோபமாக அவர் அமர்ந்திருக்க ,அவரின் உதவியாளரும் ,உறவினருமான சுவாமிநாதன் என்னை பரிதாபமாக பார்த்தார். அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என எனக்குத் தெரியவில்லை.

சில நொடிகளில் ,"கவிதையெல்லாம் படிச்சேன்,எல்லாம் நல்லாயிருந்துச்சு.தகப்பன்சாமி என்னை ரொம்ப பாதிச்சுட்டான். extra ordinary கவிதை அது" என்றதும்,அப்பாடா....என நிம்மதியாக இருந்தது. "லேட்டா வந்ததுக்கு சாரிங்கய்யா..."என தழுதழுத்தேன். "கமல் வர்றேன்னான்.ஒரு பொண்ணு வருதுய்யா ...நீ சாயந்தரம் வா ன்னு சொன்னேன் . நீ லேட்டா வருவன்னு தெரிஞ்சிருந்தா,அவனை வர  சொல்லியிருப்பேன்"என்றார் கோபமில்லாமல். மிகுந்த நெகிழ்ச்சியோடு அவரை ஆச்சர்யமாக பார்த்தேன். இப்போதாவது என்னை,பேச்சாளர் எழுத்தாளர்  பாடலாசிரியர் என ஒரு நான்கு பேருக்கு தெரியும் . ஆனால், எனக்கென்று எந்த அடையாளமும் இல்லாமல் இருந்த காலத்தில், உலகநாயகன் என தமிழ்த் திரையுலகம் கொண்டாடும், ஒருவரிடம், ஒரு பொண்ணு பார்க்க வருதுய்யா ....நீ சாயந்தரமா வா..என்றவரை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்றோ...."ஒரு வி.ஐ.பி.வர்றார்"என்றோ , என்னை அப்புறம் வா என சொல்லியிருக்கலாம் தான்....ஆனால் அவர் அதை செய்யவில்லை. எனக்கு கவிஞர் வாலியை மிகவும் பிடித்தது, அந்த நிமிடத்தில் தான். அன்றைக்கு நிறைய பேசினோம் . விமர்சனத்துக்குள்ளான அவரின் பாடல்கள் பற்றியும் பேச்சு வந்தது. " நான் அதுக்கெல்லாம் கவலையே பட மாட்டேன்"என சிரித்தார். தன்னை விமர்சனம் செய்கிற யாருக்கும் அவர் பதில் சொன்னதில்லை. தன்னை தூற்றியவர்களிடம் கோப பட்டதே இல்லை. எத்தனை கடுமையாக விமர்சனம் செய்தாலும்,சிரித்தபடி அவைகளைக் கடந்து,நியூட்டனின் மூன்றாம் விதியை பொய்யாக்கிக் கொண்டிருந்தார். யாராவது ஏதாவது சொன்னால் உடனே எனக்கு மன வருத்தம் மிகுந்து விடும். சிறிய அளவிலான விமர்சனத்திற்கு கூட, இருளிடம் சரணடைந்து விட்ட,கம்பி மத்தாப்பின் கடைசி ஒளிப்பொறியைப் போல,நம்பிக்கைகளை இழந்து,கதறி அழும் எனக்கு வாலியின் அந்த குணம் , மிகப் பெரிய பாடம்.

மற்ற பாடலாசிரியர்கள் பற்றி பேச்சு வந்தது. "பரவாயில்லையே ...எல்லா பாடலாசிரியர்களையும், தெரிஞ்சு வச்சிருக்கியே ..எல்லாருமே என்னை அப்பான்னு தான் கூப்பிடுவாங்க. ." என்றவரிடம்  "நானும் உங்களை அப்பான்னு கூப்பிடலாமா ." என கேட்டேன்.

"நீ சின்ன பொண்ணு .....அவங்களுக்கும் அப்பா...உனக்கும் அப்பான்னா சரியா வராது...நீ என்னை தாத்தான்னு கூப்பிடு " என்றார்.

கவிஞர் வாலி ஐயா,எனக்கு வாலி தாத்தா ஆனது இப்படித்தான். வாலி தாத்தாவிடம் ,நான் வியந்து பார்த்த குணம், அவர் யார் மீதும் பொறாமை பட்டதே இல்லை.  இரண்டு கவிதைகள் பத்திரிக்கையில் வந்து விட்டாலே ..."நான் எவ்வளவு பெரிய கவிஞர் தெரியுமா "என பெருமை பேசுபவர்கள் மத்தியில் , பதினைந்தாயிரம் பாடல்கள் எழுதிய ஒருவருக்கு நியாயமாக இருக்க வேண்டிய பெருமை , சிறிது கூட அவரிடம் இருந்ததில்லை.எங்கள் காதல் திருமணம், உறவுகள் யாருமில்லாமல் இருப்பது எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பென்னியும் பாப்பாவும் இப்ப தி.நகர் ல இருக்காங்க தாத்தா...நான் தி.நகர் போகணும் என்று சொன்னதும் ,"அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல ...சரி...அடுத்த தடவை கூட்டிட்டு வா"என்று வழியனுப்பி வைத்தார். கடைசி வரை அவரிடம் அணிந்துரை கேட்கவே இல்லை. ஆழி நீரை,தன் அலகால் குடித்து தீர்த்து விட நினைக்கிற, அன்றிலின் ஆசையைப் போல்,அது மிகப்பெரிய பேராசை என்று தோன்றியதால்,அவரிடம் அணிந்துரை கேட்கவில்லை .

ஒருமுறை ,நல்லிசை குப்புசாமி செட்டி, வாலி அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார். நானும் வருகிறேன் தாத்தா  என்று சொன்னதும் , இதுக்காக நீ கோபியிலிருந்து வர வேணாம் ....ஏதாவது சென்னையில் வேற வேலை இருந்தா மட்டும் வா...என கண்டிப்பாக கூறினார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியின் தாளாளர் பாலாஜி அவர்கள், நவம்பர் பதினான்காம் தேதி சென்னையில் ஒரு நிகழ்ச்சி ....நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்றார். அதற்கு முதல் நாள் நவம்பர் பதிமூன்றாம் தேதி தான் வாலி ஐயாவிற்கு பாராட்டு விழா...மிக மகிழ்ச்சியாக அந்நிகழ்ச்சிக்கு சென்றேன் .

ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் ,சூர்யா,எம்.எஸ்.விஸ்வநாதன், சரோஜாதேவி ,வைரமுத்து ,எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.நிகழ்ச்சி முடிந்ததும், எல்லோரும் பூங்கொத்துக்களோடும், பொன்னாடைகளோடும் வாலி அவர்களிடம் வாழ்த்து தெரிவித்தனர். எதுவும் வாங்கிக் கொண்டு போகாத நான்,திரு திரு வென விழித்துக் கொண்டிருந்தேன்.

என் அருகில் அமர்ந்திருந்த கவிஞர் இளைய கம்பன்,"நீ ஒண்ணும் கொண்டு வரலயா...இந்தா ...இந்த சந்தன மாலையை கொடு...நான் சால்வை போர்த்துறேன்..."என, தன்னிடமிருந்த சந்தன மாலையைக் கொடுத்தார். பெரும் கூட்டத்திரளில், ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த என்னை, கை காட்டி அருகில் அழைத்தார் .

"முன்னாடியே வந்துட்டியா ...சாரி....சரியா பேச முடியல....தப்பா எடுத்துக்காத " என்றவரிடம் , ஐயோ...தாத்தா...எதுக்கு சாரி எல்லாம் ...நீங்க வந்தவங்களை கவனிங்க. ..நான் கிளம்புறேன்"என விடை பெற்றேன்.

ஏறக்குறைய எல்லோரிடமும் ,வந்ததுக்கு தேங்க்ஸ் என்றும், சரியா பேச முடியாததுக்கு, சாரி என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

எப்படி ரஜினியும், கமலும், சூர்யாவும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, வந்திருக்கிறார்களோ, அப்படித்தான், இங்கு வந்துள்ள அனைவரும் என, எல்லோரையும் ஒரே மாதிரி மதித்த அந்த குணம், எல்லோருக்கும் வசப்படாத ஒன்று. ஆளுக்கு ஏற்றார்போல் பேசாத, அனைவரையும் சமமாக பார்க்கிற மனது, எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை .

திருச்சி சிவா அவர்கள் வாலி ஐயாவிற்கு நடத்திய பாராட்டு விழாவிற்கு, பென்னியோடு போயிருந்தேன். பென்னியை அறிமுகப் படுத்தியதும் ,அவரின் கையைப் பிடித்துக்கொண்டு,"உங்க லவ் ஸ்டோரி எல்லாம் சொன்னாங்க....யாரும் இல்லன்னு நினைக்காதீங்க....சீக்கிரம் மனசு மாறி சேர்த்துக்குவாங்க"என்றவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம்.

அதன் பின்,அவர் உடல் நிலை நலிவுற்ற சமயங்களில் ,"உங்களை பார்க்க வர்றேன் தாத்தா" என்றால் ,"எப்பவுமே என்னைப் பார்க்குறதுக்குன்னு வராத....சென்னையில் ஏதாவது வேலை இருந்தா மட்டும் அப்படியே என்னை வந்து பாரு"என்றார் . அதன்படியே, அவரை பார்க்க வேண்டும் என தோன்றினாலும் ,சென்னை வரும்போது மட்டும் ,நேரத்தைப் பொறுத்து அவரை சென்று பார்ப்பேன். காற்றடிக்கும் போதெல்லாம் உதிரும் பூவாக இல்லாமல் , காலம் பார்த்து உதிரும் இலையாக இருந்தேன்.

கோமாவில் இருக்கிறார் ,கவலைக்கிடமாக இருக்கிறார் என பத்திரிக்கைகளில் செய்தி வந்த போது,அவரை  தொடர்பு கொள்ளவே முடியவில்லை. கடந்த வருடம் ஜூலை பத்தொன்பதாம் தேதி,குரோம்பேட்டையில் உள்ள எஸ்.எஸ்.எம்.பள்ளியில் பேச அழைத்திருந்தார்கள். பதினெட்டாம் தேதி மாலை,சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் ,வாலி இறந்து விட்டார் என தகவல் வந்தது. ஆனால் எனக்கு அழுகை வரவில்லை. மறுநாள் அதிகாலையில் சென்னையை சென்றடைந்ததும், ஒரு மாலை வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன். வீட்டு வாசலில், காவல்துறையினரும்,ஊடக துறையினரும் இருந்தார்கள்.கண்ணாடிப் பெட்டிக்குள் பிணமாக படுத்திருந்த வாலி தாத்தாவின் அருகில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதும் எனக்கு அழுகை வரவில்லை . அந்த அறையில் சுவாமிநாதனும்,அவர் மனைவியும் மட்டும் இருந்தார்கள்.

"எப்போ இறந்தார்....மத்த கவிஞர்கள் வந்துட்டுப் போயிட்டாங்களா... தாத்தாவோட பையன் எங்கே..."என,சம்பிரதாய கேள்விகளை சுவாமிநாதனிடம் கேட்டு விட்டு ,"கிளம்புறேன்"என்றேன்.

அருகில் நின்று கொண்டிருந்த அவரின் மனைவி,"எங்க போகணும் ...உங்க வீடு எங்க இருக்கு...?"என வினவினார். கோபிசெட்டிப்பாளையத்தில்....என்றதும்,

''கோபியா ....அங்க இருந்து ஐயாவுக்காக வந்தீங்களா ...'' என்றவரிடம் "இல்ல...இன்னிக்கி குரோம்பேட்டையில் ஒரு ஸ்கூலில் பேச கூப்பிட்டு இருக்காங்க ....அதுக்காகவும் தான்"....என்றபடியே , வாலி தாத்தாவைப் பார்த்தேன்.

"எப்பவும் என்னைப் பார்க்குறதுக்குன்னு சென்னைக்கு வர கூடாது ...வேற ஏதாவது வேலையா சென்னைக்கு வரும் போது மட்டும் தான் என்னை வந்து பார்க்கணும் "என,அடிக்கடி அவர் சொன்னதையும் ,இந்த நிமிடம் வரை அந்த உத்தரவை நான் மீறாததையும் , உணர்ந்த நொடியில்,அழுகை பிரவாகமெடுக்க, கைக்குட்டையில் முகம் புதைத்து,தேம்ப ஆரம்பித்தேன்.

சற்று முன்பு வரை,சகஜமாக பேசிக் கொண்டிருந்த பெண்,கிளம்புகிறேன் என சொல்லியவள் ,திடீரென ஏன் இப்படி அழுகிறாள் என அந்த அக்கா,என்னை திகைப்போடு பார்த்தார். பொழுது லேசாக புலர ஆரம்பித்தது.அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டேன்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் தான். ஆனால் ,நாகரீகம் பார்க்காமல் வாய் விட்டு கதறி அழ,அந்த நேரம் , எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது.... கவிஞர் வாலியே , என்னை தாத்தான்னு கூப்பிடுன்னு என்ட்ட சொன்னார் என,சொல்லிக் கொள்வதில் எந்த பெருமையும்  எனக்கு வந்து விடப் போவதில்லை . மாறாக,யாரைப் பார்த்தும் பொறாமைப் படாத,....எந்த கணத்தையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத.....எல்லோரையும் நேசித்த.....திறமையாளர்களை மனமுவந்து பாராட்டிய.....எந்த விமர்சனத்திற்கும் கவலைப்படாத.....யாரையும் புறம் கூறாத ...யார் வாய்ப்பையும் கெடுக்காத ....  அவரின் பரந்த மனதில்,கால் பங்கையாவது கொண்டு என் வாழ்நாட்களை கடந்து விட வேண்டும். அப்போது தான் அவரை தாத்தா என்று அழைத்ததற்கு அர்த்தம் இருக்கும்.... அந்த வார்த்தையை நிச்சயம் அர்த்தப் படுத்துவேன்.

(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும்)   

logo
Andhimazhai
www.andhimazhai.com