கவிதை என்பது மாயம்

கவிதையின் கால் தடங்கள் - 27
Published on

“ கவிதை என்பது மாயம், 

மொழியில் கட்டப்படும் மாயம்

கவிஞன் என்பவன் மாயக்காரன் 

நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன்”

# விக்ரமாதித்யன் 

("எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு", சந்தியா வெளியீடு)   

விக்ரமாதித்யன் கவிதைகள்

O

“வாழ்வதற்கான போராட்டத்திலும் வாழ்வை கவிதையாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர் விக்ரமாதித்யன்.”

# வித்யாஷ‌ங்கர்

“முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதையில் இயங்கி வரும் விக்ரமாதித்யன் நவீன தமிழ்க் கவிதையில் புறக்கணிக்க முடியாத ஆளுமை. கவிதையின் பாடுபொருட்கள் பற்றிய கருத்தை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இவரளவுக்கு இயல்பெழுச்சியுடன் எழுதியவர்கள் குறைவு.”

# சுகுமாரன்

விக்ரமாதித்யன் கவிதைகளில் சில:

01

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு 

அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை

நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது 

சாரல் மழைபெய்து 

சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து 

தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன் 

அரவம் கேட்டு விழித்த சின்னவன் 

சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது 

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள் 

வெந்நீர் வைத்துக் கொடுத்தாள் 

வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள் 

வாசல்வரை வந்து 

வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து 

ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம் 

பிழைப்புக்காக 

பிரிந்து வந்துகொண்டிருந்தேன் 

மனசு கிடந்து அடித்துக்கொள்ள.

02

நெஞ்சு படபடக்கிறது

நீர் வீழ்ச்சியென்று

அருவியை 

யாராவது சொல்லிவிட்டால்.

03

பெரிய 

வித்யாசமொன்றுமில்லை அடிப்படையில்.

தீப்பெட்டி படம் 

சேகரித்துக்கொண்டிருக்கிறான் என் மகன் 

கவிதை 

எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்.

04

இருநூறு வார்த்தைகளில் 

வாழ்க்கை நடத்திவிடலாம்

இவனோ 

வார்த்தைகளின் ஊர்வலத்தில் 

வழி தவறிய குழந்தை.

05

தக்ஷ்ணாமூர்த்தியான

மாமிசம் தின்னாமல் 

சுருட்டுப் பிடிக்காமல் 

பட்டையடிக்காமல் 

படையல் கேட்காமல் 

உக்ரம் கொண்டு 

சன்னதம் வந்தாடும் 

துடியான கருப்பசாமி 

இடையில் நெடுங்காலம் 

கொடைவராதது பொறாமல் 

பதினெட்டாம்படி விட்டிறங்கி 

ஊர்ஊராகச் சுற்றியலைந்து 

மனிதரும் வாழ்க்கையும் 

உலகமும் கண்டுதேறி 

அமைதி கவிய 

திரும்பி வந்தமரும் 

கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும் 

எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும். 

06

சுவடுகள்

போனவருஷச் சாரலுக்கு 

குற்றாலம் போய் 

கைப்பேனா மறந்து 

கால்செருப்பு தொலைந்து -

வரும் வழியில்

கண்டெடுத்த 

கல்வெள்ளிக் கொலுசொன்று 

கற்பனையில் வரைந்த 

பொற்பாத சித்திரத்தை 

கலைக்க முடியலியே இன்னும்.

07

கூண்டுப் புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன 

நாற்றக்கூண்டு வாசத்துக்கு

பெரிதாக ஒன்றும் 

புகார் இல்லை

நேரத்துக்கு  

இரை

காலமறிந்து 

சேர்த்து விடப்படும் ஜோடி 

குட்டி போட 

சுதந்திரம் உண்டு

தூக்க சுகத்துக்கு

தடையில்லை

கோபம் வந்தால் 

கூண்டுக் கம்பிகளில் அறைந்துகொள்ளலாம்

சுற்றிச்சுற்றி வருவதும் 

குற்றமே இல்லை

உறுமுவதற்கு 

உரிமையிருக்கிறது

முகம் சுழிக்காமல் 

வித்தை காண்பித்தால் போதும்

சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து 

நடந்து கொண்டால் சமர்த்து

ஆதியில் ஒரு நாள் 

அடர்ந்த பசியக்காட்டில் 

திரிந்து கொண்டிருந்தனவாம் 

இந்தக் கூண்டுப்புலிகள். 

08

இவ்வளவுதான் முடிகிறது 

நேற்று நண்பகல் 

அஞ்சலகம் போய்விட்டு 

வருகிற வழியில் 

கீழே கிடந்த 

ஸ்கூட்டர் சாவியை எடுத்து 

பக்கத்தில் இருந்த டீக்கடையில் 

கொடுத்துவிட்டு வந்தேன் 

(தேடிக்கொண்டு வந்தால் 

கொடுத்துவிடச் சொல்லி)

கடந்த முறை 

கபாலீஸ்வரர் கோயில் சென்றிருந்தபோது 

ஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த 

முள்கொம்பை எடுத்து 

ஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்

கொஞ்ச நாள்கள் முன்பு 

தெரு நடுவே இறைந்துகிடந்த 

கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி 

தூரப் போட்டுவிட்டு வந்தேன்

போனவாரம் போல 

பார்வையிழந்த ஒருவரை 

சாலையின் குறுக்கே கடந்துபோக 

கூட்டிக்கொண்டு சென்றேன் 

சமீபத்தில்

தற்கொலையுணர்வு மேலிட்டிருந்த 

நண்பர் ஒருவரை 

தேடிப்போய் பார்த்து 

தேற்றிவிட்டு வந்தேன்

இரண்டு மூன்று நாள் இருக்கும் 

எதார்த்தங்களை எதிர்கொள்ள இயலாமல் 

சதா குடித்துக்கொண்டேயிருந்த

இளங்கவிஞன் ஒருவனை 

இதற்காகவெல்லாம் ஓய்ந்துவிடக்கூடாது என்று

எடுத்துச்சொல்லி இயல்புநிலைக்கு இட்டு வந்தேன்

கழிந்த மாதம் 

நடந்த விபத்திலிருந்து 

சிறிது காலம் 

குடிப்பதில்லையென்று இருக்கிறேன்

இவ்வளவுதான் முடிகிறது 

இந்த வாழ்க்கையில். 

09

முந்தாவிட்டால் ஒன்றும் 

மோசமில்லை

பிந்திவிட்டாலோ 

பெரும்பாதகம் வந்துவிடும். 

10

பறவைகள் 

பறக்கும் ஆகாயத்தில்.

புழுக்கள் 

வளரும் பூமியில்.

மானுடம் மட்டும் 

மயங்கும் இடம் தெரியாமல்.

11

இவ்வாறாக

அன்றைக்குப் போலவே 

இன்றைக்கும் 

ஆதரவாயிருக்கும் அம்மாவை 

ஐயோ பாவம் 

தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் 

ஆயிரத்தோரு சண்டைகளுக்கு 

அப்புறமும் 

அப்பா காட்டும் அக்கறையை 

அன்புக்கு நேர்வதெல்லாம் 

துன்பம்தானென்று விட்டுவிடலாம் 

மார்பில் 

முகம்புதைத்து 

மனைவி கேட்கும் கேள்விகளுக்கு 

மறுமொழியாக 

மெளனத்தை விட்டுவிடலாம் 

காலைக்கட்டி மயக்கும் 

குழந்தைகளை 

கடவுளின் அற்புதங்களை நம்பி 

சும்மா 

விட்டுவிடலாம்

முதுகுக்குப் பின் 

புறம்பேசித் திரிகிற 

நண்பர்களின் குணத்தை 

மன்னித்து 

மறந்துவிட்டு விடலாம் 

வேண்டியவர்களின் யோசனைகள் 

வேண்டாதவர்களின் கேவலப்படுத்தல்கள் 

இரண்டுமே 

விதியின் முன்புக்கு 

வீணென்று 

விட்டுவிடலாம் 

எனில் 

எல்லாவற்றுக்கும் மேலாக 

இயல்பிலேயே உறுத்திக்கொண்டிருக்கும் 

என் மனசாட்சிக்கு 

என்ன பதில் சொல்ல.

12

திருவிளக்கு முகம் செய்த கலைஞனை

தெரியாது எனக்கு.  

13

தூத்துக்குடிப் பிள்ளை கடையில் 

பொட்டலம் மடித்தவன் நீ

சித்தாளாய்

செங்கல் சுமந்தவன் நீ 

கீற்றுக் கொட்டகைகளில் 

வேர்க்கடலை விற்றவன் நீ

காயலான் கடையில் 

காலம் கழித்தவன் நீ 

வீடுவீடாகப் போய்

அழுக்கெடுத்தவன் நீ

வாளியேந்தி

எச்சில் இல்லை  எடுத்தவன் நீ

பத்து வயதில் 

ஓடிவந்து

ஓடும் ரயிலில் 

பெட்டிபெட்டியாய்த் தாவி

எத்தனை பேர் 

உன் காதைத் திருகியிருக்கிறார்கள்.

எத்தனை பேர்

உன் கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள்.

தென்னக ரயில்வேக்கு இன்னமும் 

தீராத கடனிருக்கு.

மறக்கமுடியுமா மாநகராட்சிப் பள்ளியில் 

மதிய உணவுக்குத் தட்டேந்தி நின்றதை. 

மாயக்கவிதை பண்ண 

மற்ற ஆளைப் பாரு.

நான் 

தொந்தரவுபட்ட பிள்ளையாய் இருந்தவன். 

இன்னமும் 

தொந்தரவுபடும் மனுஷன்தான்.

14

பக்கத்தில் இருக்கும்போது 

பாவம் பார்க்கக்கூட இல்லை 

விலகிப்போன பிறகோ 

விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

15

அவர்கள்

பேசுவது பகவத்கீதை

பின்னால் இருக்கிறது 

பாதுகாப்பான வாழ்க்கை.

16

விலைகூவி 

விற்கலாம்

இருக்கிறது சரக்கு 

எல்லோருக்குமாக 

ஒரு 

சிறு பிரச்சனை 

வியாபாரி அல்ல 

நான்

வீணாக 

அழிந்தாலும் கலைஞன்தான்.

17

அழகான 

பெண்களைப் பார்க்கையில் 

கண்ணியமாக இருக்கவா 

கலைஞனாக இருக்கவா

குழப்பமாக இருக்கிறது.

18

வேலைக்குப் போவாள் பெற்றவள்

வீட்டில் இருக்கும் கைக்குழந்தை

கட்டிய தாய்ப்பாலை 

சுவரில் பீய்ச்சிச் சிந்தவிடும் விதி.

கவிதைத் தொகுப்புகள்:

1. “விக்ரமாதித்யன் கவிதைகள்”, அம்ருதா வெளியீடு (2008, தொகுப்பாசிரியர் :  வித்யாஷங்கர்

   [முதல் தொகுப்பு "ஆகாசம் நீல நிறம்" (1982) முதல் "சேகர் சைக்கிள் ஷாப்" (2007) என்னும்   

    பதினைந்தாவது தொகுப்பு வரையான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு]

2. “வியாழக்கிழமையைத் தொலைத்தவன்”,  வம்சி வெளியீடு (2009)

3. “அவன் தாத்தாவானது எப்போது”, நற்றிணை வெளியீடு (2012)

***

logo
Andhimazhai
www.andhimazhai.com