ஒரு குளோசப்-3

கொடைக்கானல் - வணக்கம் தமிழகம்
 ஒரு குளோசப்-3
Published on

கொடைக்கானல்

அமெரிக்கர்களால் இந்தியாவில் கண்டுபிடிக்கபட்டு உருவாக்கபட்ட ஒரே மலைவாழ் ஸ்தலமான கொடைக்கானலுக்கு ஜுலை மாதம்
கிளம்பியபோது முடிவெடுக்க கொஞ்ச நேரம் தேவைபட்டது.கூட இருந்த நண்பர்கள் "வேண்டாம் இப்போது அங்கு மழை பின்னியெடுக்கும். நீ பேசாமல் குற்றாலம் போய்விடு "என்றார்கள்.எப்போதும் முன்வைத்த காலை பின் வைப்பதில்லை ஆதலால் மனதை
திடப்படுத்தி கொண்டு கிளம்பினோம். திண்டுகல்லின் வெப்பம், கொஞ்சம் பேருந்து அங்கிருந்து விலக விலக குறைந்து, வளைந்து நெளிந்து மலைபாதையில் ஏற தொடங்கியபோது முற்றிலுமான வேறொரு உலகம் எங்களை வரவேற்றது.

பேருந்தில் சென்று இறங்கிய மறு கணம் ஆ•ப் சீசன் என்பதால் வேலையற்று இருந்த கடைகளும்,மற்றவர்களும் சூழ்ந்து கொண்டார்கள்.பக்கத்தில் ஒரு அறையை ஏற்கனவே 'புக்' செய்து இருப்பதாக சொல்லி நகர்ந்தோம்.
புதிய இடங்களுக்கு போனால் ஆரம்பத்தில் ஏற்படும் அந்நியமான உணர்வு கொடைக்கானலில் சுத்தமாக இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.
சனி ஞாயிறு என்றால் மதுரை பக்கத்தில் இருந்து எல்லோரும் மலையேறி இங்கே வந்து விடுகிறார்கள் என்பதை மறு நாள் அறிந்து கொண்டோம்.

நட்சத்திர மீன் போலிருக்கிறது கொடைக்கானல் ஏரி. தேனிலவு தம்பதிகள் படகு ஓட்டுகிறார்கள்.பக்கத்தில் நிற்கும் குதிரைகளில் ஏறி சவாரி போகலாம்.எதிரே ஒரு பூங்கா உள்ளது.ஏரியை சுற்றிய சிறு இடம் தான் இந்த தலம்.கைடுகள் காண்பிக்கும் 16 இடங்களை அரை நாளில் சுற்றி விடலாம்.ஆனால் கைடுகள் காட்டாத இடங்களில் தான் கொடையின் மகத்துவம் உறைந்து இருக்கிறது.சில நாட்களாவது இந்த மென்மையான மலைப்பகுதியில் தங்கினால் தான் இந்த உணர்வு
சாத்தியம்.டிரெக்கிங் செல்ல 17 இடங்கள் இருக்கின்றன.

மலையின் அழகை ரசிக்க நடந்து செல்வது நல்லது. சுற்றி பார்க்க ஒரு டாக்சி தேவை. சைக்கிள்கள் வாடகைக்கு கிடைக்கும். செலவை மிச்சம் பிடிக்க டிராவல்ஸ் காரர்கள் குழுக்களாக வேனில் ஏற்றி சென்று சுத்தி காட்டுகிறார்கள்.
5 ரூபாய் டிக்கெட் வாங்கிகொண்டு "கோக்கர்ஸ் வாக்"என்ற பாறைக்குள் நுழையலாம்.ஒரு புறம் மலை சரிவு. நாம் போன மதியப்பொழுதில் எங்களைக் காண யாருமில்லை. பாதை சலனமற்று
கிடந்தது. தூரத்தில் கண்ணுக்கு முன்னால் சரிவை தாண்டி விரிந்திருந்தது ஊர்கள். மதுரை மாநகரத்தை இங்கிருந்து பார்க்கலாம் என்றார்கள். இரவில் ஒருவேளை எரியும் விளக்குகளைக் கொண்டு கண்டுகொள்ளலாம் போல. பகலில் எங்களுக்குத் தெரியவில்லை.

"பில்லர் ராக்"என்ற மலை பாறைகளை பார்க்கும் இடத்தில் கூட்டம் தேங்கி நிற்கிறது. அருகே ஒரு சிறிய பூந்தோட்டமும் உண்டு. உடனே போட்டோ எடுத்து தரும் நபர்களும் நிற்கிறார்கள்.நாங்கள் பார்த்தபோது பனிபடர்ந்து பில்லர் ராக் பகுதியை மறைத்தும் விலகியும் கண்ணாமூச்சி காட்டி கொண்டு இருந்தது. நாங்கள் அதன் பின்னணியில் 50 ரூபாய் கொடுத்து படம் எடுத்து கொண்டடோம். படமெடுத்த பிறகு பனி விலகி, பாறைகள் சிரித்தன.இப்பாறைகளின் மறு பகுதி தான் 'குணா குகைகள்' 'டெவில்ஸ் கிச்சன்'.

குணா கமலஹாசனின் 'அபிராமியை' அங்கே போனால்
நிச்சயம் நினைக்காமல் இருக்க முடியாது. அங்கே விழுந்து இறந்துபோன ஒருவர் பற்றிய அறிவிப்பு அச்சுறுத்துகிறது. இதற்குச் செல்ல சற்றுதூரம் நடந்து சரிவான பாறைகளில் ஏற வேண்டும். கால் வலி கண்டது.
கொடைகானலில் சிறு சிறு அருவிகளும் உண்டு. கொடையின் சற்று கீழே இருக்கும் 'வெள்ளி அருவி' 'சில்வர் பால்ஸ்' என்றால் தான் புரியும்.மலையோரம் பேருந்தில் செல்லும் போதே கூட்டம் பார்த்து கொண்டு இருப்பதை காணலாம்,இது சும்மா பார்க்க மட்டும் தான்.
கொடைகானலிலிருந்து 20 கி.மீ தூரத்தில் மன்னவனூர். இங்கு செம்மறி ஆடு ஆய்வு நிலையம் இருக்கிறது.அடர்ந்த மலை சரிவையும் அருகில் இருக்கும் ஏரியையும் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு டிரைவர் காட்டினார்.அழகான காட்சி, ஏரிவரை காரை ஓட்டசொல்லி விடாபிடியாக சற்று நேரத்தை அங்கு கழித்தோம்.

கொடையிலிருந்து வெளியே சற்றுதூரம் பயணித்தால் வருகிறது பூம்பாறை கிராமம். தமிழ் சினிமாவில் பல
படங்களில் பார்த்துவிட்ட மலை கிராமம்தான் இது.’சீவலப்பேரி பாண்டி’யில் நெப்போலியன் தஞ்சமடையும் ஊர்.
அப்புறம் பல இடங்களில் கைடு, ச் காரை நிறுத்தி இது ஒரு நல்ல இடம் பாருங்கள் என்று அனுப்பிவிடுகிறார்கள். சும்மா சும்மா இறங்கியதில் கால் அலுப்புகட்டியது.பழைய தற்கொலை பாறை, புதிய பாறை,கால்ஃப் மைதானம்,என்று சுற்றி அலுத்துவிட்டது.திரும்பிய இடமெல்லாம் யூகலிப்டஸ் தைலம் கிடைக்கிறது. அப்புறம் கொடைக்கானலில் சாக்லேட்டுகள் கிடைக்கின்றன. வீடுகளில் செய்யபடும் சாக்லெட் என்று சொல்லி தெருக்களில் ஒருவர் விற்கிறார். கொஞ்சம் வாங்கி வந்து வீட்டில் சில நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.

இதைவிட்டால் சில மியூசியம்கள் இருக்கிறது. நேரம் கிடைத்தால் போய் பார்க்கலாம். இங்கிருந்து 23 கி.மீ.தூரத்தில் 'பேரிஜம்'ஏரி இருக்கிறது. மனித காலடி அதிகம் படாத பகுதி. 10 பேர் மட்டுமே அங்கு செல்ல அனுமதி. இரவில் செல்ல முடியாது.மிக அற்புதமான இடம் என்கிறார்கள். .
கொடைக்கானல் வந்து அங்கு கிடைக்கும் பழங்களை சாப்பிடாமல் திரும்பி போககூடாது.3 ரூபாய்க்கு மலைபழம் கிடைத்தது.கடைக்காரர் "சார் பூவன் பழமே 2 ரூபாய்,மலைபழத்திற்கு 3 ரூபாய் கொடுக்க மாட்டீர்களா "என்றார் மறுக்க முடியவில்லை உண்மைதான் !.

Kodaikanal Travel Guide

Altitude :Situated 2133 meters above sea level, in the Palani Hills.

Climate: Max Temp 19Degree C ,Minimum Temp 13 Degree C

Languages spoken Tamil and English


Nearest Airport: The nearest airport is at Madurai (120 km from Kodaikanal).

Nearest railway station: The nearest railway stations are the Kodai Road Railway Station (80-km) and the Palani Railway Station (64-km).

Road Connection: Kodaikanal is connected by road with Madurai(120-km),Chennai (520-km), Trichy (197-km), Coimbatore (175-km), Kumili (160-km), and Ooty (264-km).

Local Transportation: Taxis and vans are available for local transportation. There are no auto-rickshaws in Kodaikanal.

STD Code :04542

Kodaikanal Stay

The TTDC run Hotel Tamil Nadu on Fern Hill Road.

- அஜிதன்

வெள்ளிதோறும் இரவு அஜிதனின்'வணக்கம் தமிழகம்' அந்திமழையில் வெளிவரும்....

அஜிதனின்'வணக்கம் தமிழகம்' பற்றிய உங்கள் கருத்துக்களை content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

 டிசம்பர் 04, 2009

<<<முந்தைய பகுதி

logo
Andhimazhai
www.andhimazhai.com