ஆரிய வர்த்தத்தின் ஆடுகள்! - போதியின் நிழல் 39

ஆரிய வர்த்தத்தின் ஆடுகள்! - போதியின் நிழல் 39
Published on

மகத தேசத்தில் கங்கையைக் கடந்து நுழைந்தபோது அப்படியே தரையில் விழுந்து வணங்கினேன். ததாகதரின் 45 ஆண்டுகால வாழ்வில் பெரும்பகுதி இம்மண்ணில்தான் கழிந்திருக்கிறது. பிம்பிசாரன், அஜாத சத்ரு, அசோகன் என ததாகதரின் தர்மத்துடன் தொடர்பு கொண்ட மன்னர்கள் ஆண்ட பூமி. அசோக மகாராஜாவின் பங்களிப்பை யார்தான் மறக்க முடியும்?
பாடலிபுத்திரத்தின் மகோன்னதமான கோட்டைச் சுவர்களும், அதன் பழைமையும் என் மனத்துக்குள் ஏராளமான கற்பனைகளை விளைத்திருந்தன. ஆனால் எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே. அசோக மகாராஜாவுக்குப் பின்னால் மகத சாம்ராஜ்யம் மெல்ல சிதைந்துபோய்விட்டது. நானோ அவருக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து அவரது ராஜ்யத்துக்குள் வருகிறேன். உலகில் எந்த ஒரு வம்சமும் சுமார் இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் சாதாரணமாக நிலைப்பது இல்லை. மகதசாம்ராஜ்யம் மட்டும் அதற்கு விதிவிலக்காகிவிடக்கூடுமா? அங்கு இருந்தவை சிதைந்த ஸ்தூபிகளும் கற்தூண்களுமே. சங்க வரலாற்றில் மிக முக்கியமான இடம் பெற்றுவிட்ட அந்நகரில் இருந்த முக்கியமான இடங்களை தரிசித்தேன். சுமார் ஆயிரம் வீடுகள் அந்நகரத்தில் இருக்கலாம். அதன் தெருக்களில் ஏழுநாட்கள் தங்கியிருந்து அலைந்து திரிந்தேன்.

ஆனால் நான் பாடலிபுத்திரத்தின் சத்திரம் ஒன்றில் அந்த ஏழுநாளில் ஓரிரவில் சந்தித்த நிர்வாண சந்நியாசியை மறக்க இயலவில்லை. அவன் ததாகதரை நிந்தித்தான். அவரது அகிம்சையை அவன் நிந்தித்தான். அவனது நிணநாற்றம் வீசும் உடலின் வாசனையை மீறி அவனது சொற்கள் என்னை இம்சித்தன.

‘‘சீனத்து சந்நியாசியே’’ என்று என்னை அழைத்தான் அவன்.

‘‘உன் புத்தனின் அடிச்சுவடுகளை வணங்க நீ வந்துள்ளாய். இதோ இந்த பாடலிபுத்திரத்தின் நிலையைப் பார். பொதுவாக ஆரியவர்த்தத்தின் நிலையைப் பார். எந்த அரசனும் இப்போது ஆண்மையுடன் இல்லை. ரத்தத்தைப் பார்த்தால் நடுங்குகிறார்கள். சுத்த வீரன் என்று யாரும் இல்லாமல் மெல்ல இப்பூமி காயடிக்கப் பட்டு வருகிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் வீரமே இல்லாமல் அந்நியர்களின் கையில் இம்மக்கள் சிக்கிக் கொள்வார்கள். என்ன காரணம் என்று கேட்கிறாயா? மனிதன் தானாக சண்டையிடாவிட்டாலும் தன்னைக் காத்துக் கொள்ளவாவது சண்டையிட வேண்டும். உங்கள் புத்தன் கண்டது மிகப்பெரிய கனவு. சக உயிர்களை இம்சை செய்யாத உலகம். நாகரிகத்திலும் செல்வத்திலும் இங்கு மக்கள் வளர்ந்திருந்தார்கள். ஓரளவுக்கு வலிமையான ஆட்சிகள் நிலவின. இதற்குமேல் அவனுக்கு ஆதரவளிக்கக பிம்பிசாரனும் பசனேந்தியும், ஆரியவர்த்தத்தின் மிகப்பெரிய வணிகர்களும் கிடைத்தார்கள்.தன் தர்மத்தை புத்தனும் அவனது சீடர்களும் இங்கே பரப்ப முடிந்தது. ஆனால் புத்தனின் மரணத்துக்குப் பின் அவனது சீடர்கள் அடித்துக்கொண்டார்கள். ஆக மெல்ல அவர்களின் பூசலால் அவனது தர்மம் அழிந்துவிடும் என்று நினைத்தால், அடுத்த நூறே ஆண்டுகளில் இந்த அசோகன் வந்து சேர்ந்தான். தன் உறவினர்களை எல்லாம் வெட்டித்தள்ளி ஆரியவர்த்தம் முழுக்க ஒரே குடைக்குள் ஆண்ட மிகப்பெரிய மன்னன். அவனது ஆதரவு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று புத்த சங்கத்தினர் தவம் கிடந்தார்கள். ஆனால் அசோகனது ரத்தவெறியின் வீச்சம் அவர்களை நெருங்கவிடாது செய்தது. அவன் ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னால் கலிங்கத்தின் மீது படையெடுத்து அவனது படைகள் ஆடிய ருத்ரதாண்டவம் இம்மண்ணை குளிரச் செய்தது. எவ்வளவு ரத்தம்? ஆனால் எதற்கும் கலங்காத அசோகனது மனத்தை ஒரு கெட்டிக்கார பிராமணன் அந்த ரத்தத்தைக் காட்டியே கரைத்துவிட்டான். திஸ்ஸா மொகாலி புத்தன் என்கிற பிக்கு பதினாறு வயதுக்குள்ளேயே மூன்று வேதங்களையும் கரைத்துக் குடித்தவன். இம்மண்ணில் வைதிக நெறியின் பாதுகாவலனாக விளங்கவேண்டிய அவன் புத்தனின் சங்கத்தில் சேர்ந்தான். தனக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டி இந்த பாடலிபுத்திரத்தின் மகாராஜாவைக் கவிழ்த்துவிட்டான். அசோகன் வாளைத் தூக்கி எறிந்தான். அவனது சமையற்கூடங்களில் இறைச்சி வாசனை ஓய்ந்தது. அவன்தான் மணம் கமழும் இறைச்சியை உண்ணுவதில்லை என்றால் அவன் மக்களும் உண்ண முடியவில்லை. ஆடு மாடுகளைக் கொலை செய்யாதே என்று தெருத்தெருவாய் எழுதி வைத்தான். அவன் உங்கள் சங்கத்துக்காக மூன்றுமுறை இந்த ஜம்புத்வீபத்தை தானமாக அளித்தான். பின்னர் ஒவ்வொரு முறையும் தன்னிடம் இருந்த பொன் பொருளைக் கொடுத்து அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். இவ்வளவு அள்ளிக் கொடுத்தால் என்ன ஆகும்? செல்வம் இருந்தால்தான் எந்த தர்மமும் வளரும். உங்கள் தர்மம் மட்டும் அதற்கு விதிவிலக்கா? பிழைக்க சிரமப்பட்ட இத்தேசத்தின் வறிய மக்கள் மூன்றுவேளை சோறுக்காக வலியவந்து மடாலயங்களில் சேர்ந்தார்கள். ஆன்மீகப் பயிற்சி சோற்றுப் பயிற்சி ஆனது. போலிப்பிக்குகள் பெருகினார்கள். சகிக்கமுடியாமல் மொகாலி புத்தன் கூட அஹோகங்கா மலைக்குப் போய்விட்டான். அட இதுவும் ஒரு விதத்தில் நல்லதுக்குத்தான். அவர்களே அடித்துக்கொண்டு இத்தர்மத்தை ஒழித்துவிடுவார்கள் என்று பார்த்தால், அசோகன் மீண்டும் தலையிட்டான். உண்மையான பிக்குகள் போலிகளை வெறுத்து, சங்கத்தின் நியமங்களை அவர்களுடன் சேர்ந்து கடைப்பிடிக்க மறுத்தார்கள். சக்கரவர்த்திகள் எப்போதும் குருட்டுப் பயல்கள்தானே? இந்த சிக்கல் புரியாமல் நியமங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அசோகன் உத்தரவு போட்டான். அவனிடம் மகா முட்டாளாகிய ஒரு தளபதி இருந்தான். நியமங்களைக் கடைபிடிக்காத பிக்குகளின் தலையை முச்சந்தியில் வைத்து சீவிவிட்டான் அவன். பாடலிபுத்திரம் அகிம்சாவாதிகளின் குருதியால் நனைந்தது. அசோகனுக்கு தகவல் தாமதமாகத் தெரிந்தது. குற்ற உணர்ச்சி அவனை ஆட்கொண்டது. இதை மொகாலிபுத்தன் மீண்டும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். மலையிலிருந்து இறங்கிவந்தான். அசோகனிடம் சொல்லி ஆயிரம் பிக்குகள் கூடும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னான். ஆயிரம் கற்றறிந்த பிக்குகள் கூடினார்கள். தர்மசூத்திரங்களை ஒன்பது மாதங்கள் ஒன்றாகச் சேர்ந்து மீண்டும் எழுதினார்கள். ஒழுங்குபடுத்தினார்கள் என்றுதான் உங்கள் ஆட்கள் அதைப் பற்றிச் சொல்வார்கள். அடேய்... என்றைக்கு சரித்திரத்தை முழுமையாக யாராவது சொல்லியிருக்கிறார்கள்? நான் சொல்வதைக் கேள். புத்தன் மறைந்து 200 ஆண்டுகளுக்குள் நடந்த மூன்றாவது மகாநாடு அது. மொகாலி புத்தன், சங்கத்தில் ஊடுருவியிருந்த போலிகளையும் எதிர்ப்பாளர்களையும் அசோகன் உதவியால் சங்கத்திலிருந்து வெளியேற்ற அம்மாநாட்டைப் பயன்படுத்தினான். சங்கத்தை பரப்ப ஆட்களை எல்லாதிசைக்கும் அனுப்பச்சொன்னான். ஆரியவர்த்தம் தாண்டி கடல்கடந்து ஆட்கள் போனார்கள். இளவரசன் மகேந்திரனும் இளவரசி சங்கமித்திரையும்கூட தெற்கே போனார்கள். எல்லாம் மொகாலி போட்ட திட்டம்தான். சீன சந்நியாசியே, திட்டம் போடாமால் உலகில் எந்த விஷயத்தையும் பரப்பிவிட முடியாது. புத்தன்கூட தன் தர்மத்தைப் பரப்புவதற்காக மிகபெரிய திட்டத்தைப் போட்டான்: அவன் தன் சீடர்களுக்கு என்ன சொன்னான்? மா எகேனா த்வே அகாமித்தா! நாலாதிசைக்கும் போங்கள். ஒரே திசையில் இரண்டுபேராகப் போகாதீர்கள். . இதை விட மிகப்பெரிய உத்தி உலகில் இருக்கமுடியுமா? ஆனால் தன் குருவையும் மொகாலி விஞ்சிவிட்டான். அசோகனைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஆரியவர்த்தம் முழுக்க தர்மத்தை நிலைபெறச் செய்துவிட்டான். பௌத்தம் அரச மதம் ஆனதால் புத்தனின் சொற்களுக்கு ஆதரவு கிடைத்தது. பிக்குகள் கொழித்தார்கள். அசோகனுடன் இந்த வரிசை நின்றுவிடவில்லை. நாகசேனன் மெனாண்டரை தன் வழிப்படுத்தினான். பின்னர் கனிஷ்கர், இப்போது ஹர்ஷன். அரசர்களின் உதவியுடன்தான் இம்மதம் வளர்கிறது. செழிக்கிறது. உங்கள் தேசத்துக்கு இப்படி ஒரு அரசன் அனுப்பிய பிக்குதான் ததாகதரை அறிமுகப் படுத்தினான். உங்கள் மன்னரை முதலில் கைக்குள் போட்டிருப்பான் அந்த பிக்கு. பின் நாடு முழுக்க தன் அகிம்சையையும் தர்மத்தையும் பரப்பியிருப்பான். ஆனால் இந்த தர்மத்தால் என்ன நிகழ்கிறது தெரிகிறதா? உழைக்கப் பயந்தவன், வாளெடுத்தால் நடுங்குபவன் எல்லாம் புத்தம் சரணம் கச்சாமி என்று போய்விட்டான். இருந்த கொஞ்ச நஞ்ச சுத்த வீரனும் இதைப் பார்த்து வாளைக் கீழே போட்டுவிட்டான். ஹர்ஷனைப் பார்த்தாயா? போரே வேண்டாம் என்று அமைதியாகி விட்டான். தெற்கே புலிகேசியிடம் தோற்றாலும் திரும்பிப் பழிவாங்காமல் அமைதியாகி சங்கம் சரணம் கச்சாமி என்கிறான். ஏனப்பா, சீனதேசத்துக்கு அறிஞனே, மேற்கே பல நாடுகள் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அவர்கள் எல்லாரும் காட்டு மிராண்டிகள் என்றும் காலை உணவுக்கே மனித ரத்தம் தான் குடிக்கிறார்கள் என்றும் நான் கேள்விப்படுகிறேன். அவர்கள் படையெடுத்து வந்தால் இந்த சோம்பேறி அகிம்சைக் கூட்டத்தின் மொழி அவர்களுக்குப் புரியுமா? இந்த தேசமே என் கண்ணுக்கு இப்போது மிகப்பெரிய கொலைக்கூடத்துக்கு முன்னால் அடைக்கப் பட்டிருக்கும் ஆட்டு மந்தையாக என் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்கு தலைமை வகிக்கிறது ஹர்ஷன் என்னும் ஆடு... அந்த மந்தையில் ஒரு ஓரமாக சீனத்திலிருந்து வந்திருக்கும் ஆடாகிய நீ.....’’

ஹா..ஹா.... என்று அவன் புரையேறும் வரை சிரித்துக்கொண்டே இருந்தான். நான் அவசரமாக அந்த சத்திரத்தில் இருந்து வெளியேறினேன்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com