அரங்கேற்றம் - 4

அரங்கேற்றம் - 4
Published on

பாரதக்கூத்துக் கலைஞர் கண்ணப்ப தம்பிரான் குடும்பத்தில் இருந்து வந்தவராகிய வ ஆறுமுகம் சார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதி இயக்கிய நாடகம் தூங்கிகள்.  நாடகமே வாழ்வு அதனுள்ளே குடும்பம் என இன்றும் வாழும் தாடிக்காரர். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் இணைப்பேராசிரியராகவும் தலைக்கோல் நாடகக் குழுவின் தலைவராகவும் இருந்து வருபவர். இந்திய அளவில் நிகழ்ந்த தேசிய நாடக விழாக்களில் தமிழ் நாடகத்தை அதிக எண்ணிக்கையில் கொண்டு சென்றவர்.  கருஞ்சுழி என்ற நாடகத்தை எழுதி இயக்கி தமிழுக்குப் புதிய நவீன நாடகத்தை அறிமுகம் செய்தவர். துணிகளை அரங்காக்கி ஐந்து நாடகங்களை மேடை ஏற்றிய கலைஞர்.

அர்த்தமற்ற சில மனிதர்களால் ஏற்படுத்தப்படும் செயல்பாடுகள் ஒரு சமுகத்தின் துயரமாக மாறிவிடுவதைத் தூங்கிகள் நாடகம் அபத்த நாடக வடிவமாகக் காட்டியது. உளவியல் பார்வையில்  மனித வாழ்வை எடை காணும் நாடகம். இதில் மூன்று பாத்திரங்கள் மட்டுமே உண்டு. முதல் பாத்திரம் சூத்திரதாரி நிலையில் இருந்து தூங்கியபடியே பேசத் தொடங்கும். நீங்க இன்னும் தூங்கலையா, எப்ப தூங்கப் போறீங்க, தூங்குங்க எனப் பார்வையாளனைக் கட்டாயப் படுத்தியவாறு  ஒரு வாழ்வியல் சம்பவத்தைப் பேசிவிட்டுச் செல்லும். அந்தச் சம்பவத்திற்குள் இருந்து இரு பாத்திரங்கள் வந்து பேசத் தொடங்கும்.  விரிந்த பெருங்காட்டில் பயன்பாடு இல்லாத ரயில் பாதையின் குகை முன்பாக நாடகம் தொடங்குகிறது.  

தலைமை விமானியின் விருப்பத்தின்படி ஒட்டு மொத்த விமானப் பயணிகளையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் விபரீத விபத்தில் இருந்து தப்பித்தவனாக ஒரு பாத்திரம். விமானப் பணிப்பெண் ஒருத்தியுடன் சில மணி நேரத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த அன்பின்  காரணமாக அவசரக் கதவின் வழியே குதித்து பெருங் காட்டிற்குள் வீழ்ந்தவன். சில நாட்களாய் மனித உறவைத் தேடித் திரிபவன்.

மற்றொரு பாத்திரம் தாயை இழந்த அகதி.  பல ஆண்டுகளுக்கு முன்னர் உள் நாட்டு உத்தம் காரணமாக, ரயிலில் தாயுடன் இடம் பெயர்ந்தவன்.  கொடும் பயணத்தின் போது பிடிக்காத ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டவன். தன் தாயை இழந்து தனிமைக் காட்டில் அலைந்து திரிகிறான். இவ்விருவரும் சந்தித்து பேசிக்கொள்ளும் நிகழ்வு தான் நாடகம்.

எனது பாத்திரம் விமானப் பயணி. தினமும்  மாலையில் பல்கலைக்கழக வகுப்புகள் முடிந்த பிறகு நாடகத்துறையில் உள்ள சங்கரதாஸ்சாமிகள் சிற்றரங்கில் ஒத்திகை நடக்கும். மாலை 4.30 இருந்து இரவு 8 மணிவரை நாடக ஒத்திகை நடக்கும். சனிக்கிழமைகளில் முழுநாளும்  ஒத்திகை நடக்கும்.  இவ்வாறு நாடகத் தயாரிப்புக்கான பணிகள் மிக வேகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் மதியம் ஆறுமுக சாரின் ஸ்கூட்டர் வண்டியை எடுத்துக் கொண்டு சாப்பிட விடுதிக்குப் போனேன். அங்கு எனது அறையில் மதுப் புட்டிகளுடன் புதுச்சேரி நண்பர்கள். ஒத்திகையை மனதில் கொண்டு தவிர்த்தேன். ஆனாலும் விருந்தாளிகள் கொண்டு வந்த புட்டிகள் என்னைக் கவிழ்த்திவிட்டது. கண் விழித்த போது மணி இரவு 7. பயந்து போன மனத்துடன் நாடகத் துறையை நோக்கி ஸ்கூட்டரில் பயணித்தேன். நண்பர் கணேஷ் அண்ணாவும் சாரும் சிற்றரங்கில் ஆளைக் காணாமல்  உச்ச வெறுப்பில் இருந்தார்.

சார் என்னைப் பார்த்ததும் கடும் கோபம் கொண்டவராய் என் முகத்தில் விழிக்க வேண்டாம் எனக் கூறிவிட்டார். அன்று ஒத்திகை இல்லை. அடுத்த நாள் ஆறுமுகம் சார் வகுப்பிற்கு நான் போகவும் இல்லை. மாலையில் ஒத்திகைக்குச் செல்லாமல் வேப்பமரத்தடியில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்தேன். கணேசன் அண்ணாவே வழக்கம் போல ஒத்திகை பார்க்க அழைத்தார். நான் போகவில்லை. நேற்று நடந்த சம்பவத்தை ஆறுமுக சாரும் மறந்து போயிருந்தார். என் முகத்தில் விழிக்க வேண்டாம் என அவர் கூறியதை என்னால் மறக்க முடியவில்லை.

கணேசன் அண்ணாவின் தொடர் அழைப்பினால் அரங்கத்துக்குள் சென்று அவருடன் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தேன். ஆறுமுக சார் அரங்கத்துள் வந்ததும் அவர் முகத்தைப் பார்க்காமல் எதிர் திசையில் அமர்ந்து கொண்டேன். அவர் என் அருகில் வரும் போதெல்லாம் எதிர் திசையில் மாறிக் கொள்வேன். எனது செய்கை யாருக்கும் புரியவில்லை. ஆறுமுக சாருக்குக் குழப்பம். கணேசன் அண்ணா என்னைத் தனித்து அழைத்துச் சென்று என்னடா பிரச்சனையினு கேட்டார். நேற்று நடந்ததைச் சொன்னேன். சிரித்தபடி சரியான நாடகக் காரன் நீதாய்யா என்றபடிக்  கட்டிப்பிடித்து அனைத்துக் கொண்டார். ஆறுமுக சார் தன் சொல்லை உடனே வாபஸ் பெற்றுக் கொண்டார். நானும் சாரின் முகத்தைப் பார்த்து விட்டேன். இந்த மகிழ்வைக் கொண்டாட ஒத்திகையை நிறுத்தி விட்டு, முத்தியால்பேட்டையில் மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார். மது மகிழ்வோடு இருவரின் வருத்தமும் தோற்றம் தெரியாமல் மறைந்தது. மதுவில் வந்த துயர் மதுவால் மறைந்தது.

இரண்டு மாத ஒத்திகைக்குப் பிறகு நாடகம்  சென்னை தமிழினி 1999 ல் நடத்திய இலக்கிய விழாவில் நிகழ்த்தப்பட்டது. டில்லி செ. இரவீந்திரன் சார் ஒளியமைப்பு இயக்குனராக இருந்தார். ஒண்ணேகால் மணி நேரம் நாடகம். எனது பாத்திரம் கண்ணீர் சிந்தியபடி காதல், நட்பு, இன்பம், துன்பம், போதை, ஆட்டம் கொண்டாட்டம் என எல்லாவற்றையும் பேசியடி இருக்கும்.  ஒற்றைப்பாத்திரம் அரைமணி நேரம் பேசினாலும் பார்வையாளர்களை அசைவின்றி அமர வைத்திருக்கும்.  எனது நடிப்பு பலருக்கும் பிடித்துப் போயிருந்தது.  பேராசிரியர் இலங்கை க. சிவத்தம்பி அய்யாவும், கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி அய்யாவும் பேராசிரியர் சே. இராமானுசம் அய்யாவும் முக்கியப் பார்வையாளராக வந்திருந்து என்னைப் பாராட்டிய மகிழ்வு இன்னும் உள்ளத்தில் பதிந்திருக்கிறது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com