அரங்கேற்றம் - 3

அரங்கேற்றம் - 3
Published on

வனத்தாதி, நாடகக் கலைஞர் ச. முருக பூபதி எழுதி இயக்கிய நாடகம். இவர் மதுரகவி பாஸ்கரதாஸின் பேரனும், எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வம், கோணங்கி ஆகியோரின் தம்பியும் ஆவார்.  புரசீணியம் எனும் செவ்வக அமைவுடைய சபாவில் தான் நாடகம் நிகழ்த்த வேண்டும் என்பதை முற்றாக விட்டு, வீதி அல்லாது ஒரு பொது வெளிசார்ந்த  சடங்கியல் மற்றும் வாழ்வியல் களத்தில் இருந்து தான் நாடகம் உயிரூட்டம் பெறுகிறது என்ற கோட்பாட்டைக் கொண்டவர் இவர். நாடகக் கதைக்கருவிற்கு ஒத்த ஓரிடத்தில் தான் நாடகம் போட வேண்டும் என்பதைத் தனக்கான உத்தியாகக் கொண்டவர். எனக்குச் சீனியர்.

கல்லூரி நாடகத்துறையில் காலை நேரங்களில் நாடகம் பற்றிய படிப்பும் மாலையில் செய்முறை நிகழ்வுகளும் நடக்கும். ஒவ்வொரு நாட்களுமாய் நாடகம் என்னுள் ஆனந்தம் கொள்ளத் தொடங்கிற்று. அவ்வாறாக ஆறு மாதங்கள் கடந்து போயிருந்தது.  சனி, ஞாயிறுகளில் முருகபூபதி நாடகத்திற்கு முகமூடிகளும் பொம்மைகளும் செய்ய கோவில்பட்டிக்குப் போகிறோம் வாரீயா என ஜெகனும் வெங்கடேசனும் கேட்க, ஓ வாரேன் என்றேன். இரு நாட்கள் கழித்து புதுச்சேரியில் இருந்து பஸ்சில் கோவில்பட்டிக்குப் புறப்பட்டோம். கோவில்பட்டி வந்திறங்கியதும் முருகபூபதி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அம்மா, அப்பா, அக்கா, மாமா, அண்ணா என எல்லோருமே உறவுக்காரர்களாய் நின்று வரவேற்றனர். பூபதியின் அம்மா, பாஸ்கரதாசின்  கலை மகள் எங்கள் முகம் வருடி  அழைத்துச் சென்றார்.

 காலைப்பணிகள் எல்லாம் முடிந்ததுமே  முகமூடிகள், பொம்மைகள் தயாரிப்புக்கான பலூன், பேப்பர், பசை எல்லாம் வந்து சேர்ந்தன.  சிற்பி வெங்கடேசனும் ஓவியர் ஜெகனும் முகமூடி தயாரிப்பில் தனி ஆளுமை பெற்றிருந்தனர். ஒரு தினத்தில் உற்றுக் கவனிக்கத் தொடங்கி, மறுதினத்தில் மாஸ்க் செய்ய ஆரம்பித்தேன். வியந்தபடியே ஒரு முகமூடியைச் செய்து முடித்தேன்.  இரண்டு மாதகால சனி, ஞாயிறுகள் கோவில்பட்டியிலேயே கழிந்ததன. மாஸ்க் முடித்த ஓய்வு நேரங்களில் அண்ணா வீட்டிலுள்ள நூலகத்தில் படிப்பதும், நாடக ஒத்திகை பார்ப்பதும் தொடர் செயல்பாடாகவே இருந்தது. நாடகத்திற்கு முழுவடிவம் கிடைத்ததும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு காட்டில் நாடகம் போட முடிவு செய்யப்பட்டது.

குறித்த நாளில் சுப்பையா, வெங்கடேசன், ஜெகன், தனசேகரன், ஆனந்தவேலு, புருசோத்தமன் எனப் பலரும் பல பகுதிகளிலிருந்து வந்து திருவண்ணாமலையில் ஒன்று சேர்ந்தோம். அதற்குள் அரங்கப் பொருட்களுடன் முருகபூபதியும் வந்திருந்தார்.  அங்கு கவிஞர் பவா செல்லத்துரை அண்ணா வீட்டில் காலை டீ, உணவை முடித்து விட்டு ஒத்திகைக்காகக் காட்டிற்குள் சென்றோம். நாடக நிகழ்விடம் பக்கத்தில் காவல் தெய்வம் வீரியம் சூழ நின்று கொண்டிருந்தது. வேண்டி முடித்தோம். நாடக நடிப்பிடமும் பார்வையாளர் அமர்விடமும் நடிகர்களாலேயே கல் முள் களைந்து கதைக்கேற்ற நடிப்புத்தளமாக உருவானது. இந்த அரங்கச் செயலாக்கங்களே முதல் நாள் ஒத்திகையாக அமைந்தது. வனத்தின் மக்களையும் சடங்கையும் வாழ்வையும் பேசுகின்ற அந்த நாடகத்திற்கு பொருத்தமான இடமாகவே நிகழ்விடம் இருந்தது.

அண்ணாமலையார் கோயில் அருகில் உள்ள நண்பர் ஒருவர் வீடொன்றில் தங்கினோம். பலர் கூறக் கேட்ட அண்ணாமலை அப்பனை 1999 ல்தான் முதன் முதலாக வனத்தாதி காணுறச் செய்தாள்.   நண்பர்களின் வீடுகளில் இருந்து உணவு வரும். பவா அண்ணாவின் கவனிப்பு அதிகமிருந்தது. நான்கு நாட்கள் ஒத்திகை, ஐந்தாம் நாளில் நாடகம் என்று முடிவு செய்திருந்தனர்.  நான் செய்த பொம்மையும் முகமூடியும் நாடகத்தில் வந்த போது ஏற்பட்ட மகிழ்வானது என்னுடலில் இன்னும் மிச்சமிருக்கிறது. நாடகத்தில் மின்னொளி விளக்குப் பயன்படுத்தினால் கதையின் அழகியல் சிதைவதாய் நினைத்த பூபதி தீப்பந்தங்களைப் பயன்படுத்த முதல் நாளிலேயே முடிவு செய்தார். இதற்காக ஒத்திகைக் கால இரவுகளில் தீப்பந்தத்திற்குச் துணி சுற்றுவோம்.  நாடகம் மிகச் சிறப்பாக உருவகம் பெற்றிருந்தது.

நிகழ்வின் முன் நாளில் இறுதி ஒத்திகை நடந்துகொண்டிருந்தது.  அன்று மதியம்  ஓட்டல் ஒன்றிலிருந்து அசைவ உணவு கொண்டு வந்து தந்தார்கள்.  சாப்பிட்டோம். மாலை ஒத்திகை நடக்கும் போதிலிருந்தே எனக்கு வயிறு வலிக்கத் தொடங்கியது. எதையும் காட்டிக் கொள்ளாமல் ஒத்திகையில் ஈடுபட்டேன். ஒத்திகை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வலி  கடுமையானது.  அடுத்த நாள் நாடகம். பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். குளுக்கோஸ் ஏறி ஊசி, மருந்து என வைத்தியம் நடந்தது.  வலி மட்டும் சிறு அளவில் விட்டு விட்டு வந்து கொண்டே இருந்தது. எனது பாத்திரத்தை மாற்றி விட்டு,  வசனம், வருகை, ஆடும் இடம்  எல்லாம் மற்ற பாத்திரங்களுக்கு மாற்றி வீட்டிலேயே ஓர் ஒத்திகையை பூபதி அண்ணா பார்த்துவிட்டார்.

காலை ஒத்திகையும் மாற்றி அமைத்தபடியே நடந்தது. மருத்துவ மனையில் படுத்தபடி கிடக்கும் எனக்கோ, உடல் துயரைக் காட்டிலும் நாடகத்தில் நடிக்க முடியவில்லையேங்கிற மனத்துயர் வாட்டி எடுத்தது. நாடகம் பார்க்கச் செல்ல வேண்டுமாய் அழத்தொடங்கினேன். எனக்குத் துணையாக இருந்த நண்பர், பூபதி அண்ணாவிற்குப் போன் செய்து செல்ல , கார் ஒன்றை அனுப்பி வைத்தனர். காரில் சாய்ந்து படுத்தபடி நாடக நிகழ்விடத்திற்குச் சென்றேன். நாடகம் தொடங்க பத்து நிமிடம் பாக்கியிருந்தது. ஒப்பனை பூசிய நண்பர்களைப் பார்த்ததும் உடல் நோய் மறந்தது, ஆனால் மறையவில்லை. பூபதி அண்ணாவிடம் நானும் நடிக்கிறேன் என்றேன். உடல் பலவீனமாய் இருக்கிறது வேண்டாம் என்றார். பிடிவாதமாய் கேட்டேன். நடிகனாக உடலை மெல்ல அசைத்தபடி தீப்பந்தம் அணையாமல் எண்ணையை ஊற்றும்படி சொன்னார். நாடகம் முடியும் வரை  தீப்பந்த உயிரூட்டியாக அசைந்து நடித்து விட்டு மருத்துவமனைக்குத் திரும்பினேன்.  இந்த நாடகம் நிகழ்த்தப்பட்ட இடங்களில் எல்லாம் தீப்பந்த உயிரூட்டியாகவே இருந்தமையால் வனத்தாதியின் ஒளியமைப்பாளன் எனவும் என்னை நான் நினைத்துக் கொள்ளலாம். திருவண்ணாமலைக்கும் தீப்பந்த உயிரூட்டத்திற்கும்  ஒரு தொடர்பு உண்டு. கார்த்திகைத் தீபம் அன்று ஊரில் தீச்சூந்து ஆடுவோம். முதல்  தீபமும் தீச்சூந்தும் என்னுடையதாகவே இருக்கும். சூந்து தென்னை ஓலை, கம்புத்தட்டை, சோளத்தட்டை, ஆகியவற்றால் கட்டி இருப்போம். தீவைத்துச் சுழன்றாடுவோம். நாடக பந்தத்திற்கு எண்ணை ஊற்றிய நிகழ்வும் அண்ணாமலைக் கார்த்திகைத்தீபமும் ஓரிடத்தில் தொடர்புபடுகிறது.

என் மூன்றாம் நாடக அரங்கேற்றம் இவ்வாறாய் இருந்தது. நாடகம் முடிந்திருந்தாலும் என் வயிற்று வலியானது நின்றபாடில்லை. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் வெங்கடேசன் சேர்த்து விட்டார். குணம்பெற ஒரு வாரம் பிடித்தது.

(கார்த்திகேயன் நாடகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்தநவீன  நாடகக்கலைஞர். பல சின்னத் திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சூதாடிச் சித்தன் என்கிற இவரது பாத்திரம் அனைவருக்கும் நினைவிருக்கும். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் இவரது மேடை அனுபவங்கள் இத்தொடரில் வெளியாக உள்ளன.)

logo
Andhimazhai
www.andhimazhai.com