’சூட்டிங்’ என்பது ஒரு சிறார் நாடகம். இந்நாடகத்தை வேலு சரவணன் எழுதி இயக்கி உள்ளார். சிறுவர் நாடகமே தன் வாழ்வு எனக் கட்டமைத்து வாழ்ந்து காட்டி வெற்றி கண்ட குழந்தைகள் நாடகக் கலைஞர். தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி செய்து வருபவர். பல மேடைகளைக் கண்ட பல்லி, கடல் பூதம், சூட்டிங், அங்கா துங்கா ஆகிய சிறார் நாடகங்களை எழுதி இயக்கியவர். குதூகலத்துடன் அரங்கின் கடைசி இருக்கையில் இருக்கும் சிறார் வரையும் மேடை நோக்கி ஈர்ப்பவர். விளையாட்டை அரங்க மொழியாக்கி மகிழ்ச்சிப்படுத்துபவர். பல மேடைகளைக் கண்ட இவரின் சூட்டிங் நாடகமே எனது இரண்டாம் நாடக அரங்கேற்றம்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் நான் சேர்ந்து இரண்டு மாதங்களே கடந்து போயிருந்தது. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் மாலையில் நடக்கும் கலை நிகழ்வுகளில் நாடகம் ஒன்று போட இருக்கிறோம் வாரீயா என நண்பர் வெங்கடேசன் கேட்க, சரி என்று அவனுடன் கிளம்பினேன். இந்த நாடகத்தின் இயக்குனர் வேலு சரவணன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினான். ஏற்கனவே வேலுசரவணன் அண்ணாவைச் சென்னையில் நடந்த நாடகப் பயிற்சிப் பட்டறையில் சந்தித்தது. குழந்தைகள் நாடகத்தில் இந்திய அளவில் பேசப்படும் சிறார் நாடகக்காரர். மூவாயிரம் பள்ளிகளில் குழந்தைகளுக்காக நாடகம் போட்டவர் என அறிந்திருந்தேன். மிக எளிய வீட்டில் எளிமையான மனிதராய் அந்த குழந்தை கலைஞன் என்னை வரவேற்றார். வீடெங்கும் பொம்மைகள், முகமூடிகள், நாடகத்திற்குப் பயன்படுத்தும் உடைகள் என அரங்கக் கூடமாக வீடு இருந்தது. அங்கு நாடகப் பயிற்சிப்பட்டறை நண்பர்களான பிரபாகரன், தனசேகரன், ஜெகன் ஆகியோர் இருந்தனர்.
மதிய உணவை அண்ணா வீட்டிலேயே கூட்டாக உண்டு முடித்தோம். நெய்வேலியில் எந்த நாடகத்தைப் போடலாம் என்று விவாதித்து விட்டு, முடிவாகச் சூட்டிங் நாடகத்தை ஒத்திகை பார்க்கத் தொடங்கினர். துள்ளிக்குதிப்பதும், தலைகீழாய் நடப்பதும், கயிற்றில் ஏறுவதும், மானாய், குரங்காய், நரியாய், மனிதராய், ஆடாய், கிளியாய் நிமிட நேரங்களில் உரு மாறி உடல் பாவனையைக் காட்டி அவர்கள் பார்த்த ஒத்திகையைக் கண்டு வியப்பு எழும் பாவனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்,. சரியாய் இரவு 7 மணிக்கு ஒத்திகை முடிந்தது. அண்ணாவிடம் நாடகம் நல்லா இருக்கு என்றேன். குழந்தையாய்ச் சிரித்தபடி குழந்தைகளுக்கான நாடகம் என்றார். என் புரியாமையை உணர்ந்தவராய் குழந்தைகளுக்காகப் பெரியவங்க நடிக்கிறது ஒருவகை நாடகம், குழந்தைகளே நடிப்பது இன்னொரு வகை நாடகம் என்றார். புரிந்ததாகத் தலையை ஆட்டினேன். டீ வந்தது, குடித்து முடித்துக் கிளம்பும் நேரம். அண்ணா என்னிடம் இந்த நாடகத்தில் நடிக்கிறீயா என்றார். எனது ஆர்வத்தை நண்பர் வெங்கடேசன் சொல்லி இருக்கிறார். அச்சமும் வியப்பும் கலந்தவனாய்ச் சரி என்றேன். நாளைக்கு ஒத்திகைக்கு வெங்கடேசுடனேயே வந்திடு என்றார். நண்பர்களுடன் பகிர்ந்து விட்டுக் கிளம்பினேன்.
ஏப்பா இந்த நாடகத்தில் என்னாலெ நடிக்க முடியுங்கறே என்றேன். ஏ முடியாது முடியும் என்றார் வெங்கடேசன். சரி நாளைக்குப் பார்ப்போம் எனக் கூறிப் பல்கலைக் கழகத்திற்க்குப் பஸ் வெச்சு விட்டார். விடுதி வரும் வரையிலும், தூக்கத்திலும், நாடகக் காட்சிகள் அச்சமூட்டியபடி உடலை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. நம்மாள் நடிக்க முடியுமா? எனும் கேள்வியுடன் மறுநாள் ஒத்திகைக் களத்திற்கு வந்து சேர்ந்தாயிற்று. இனி நானும் துள்ளிக்குதிப்பதும், தலைகீழாய் நடப்பதும், கயிற்றில் ஏறுவதும், மானாய், குறங்காய், மனிதராய், கிளியாய் நிமிட நேரங்களில் உரு மாறி நடித்தாக வேண்டும். இதைச் சாத்தியமாக்கப் பழைய அனுபவங்களே உதவிட வேண்டும். கிணற்றிலும், வைக்கோல் குவியலிலும் குதித்ததும், கிணற்று மோட்டாரில் தண்ணீர் உறிஞ்சும் குழாய்ப் பந்தில் சேறும் சகதியும் கட்டி இருக்கும் போது அதைச் சரி செய்யக் கிணற்றின் ஆழ்பகுதிக்குக் கயிறு கட்டி சென்று வந்த அனுபவமும் நாடக ஒத்திகையில் உதவியது. சிறு பதட்டம் சில நிமிடங்களில் சரியானது. நான் குரங்கு, மான், சிறுவன் என மூன்று பாத்திரங்களில் நடிக்க வேண்டியிருந்தது. குரங்காக மாறிச் சரசரவென கயிற்றில் ஏறி இறங்கப் பழகி விட்டேன்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நாடகம் போட ஆழி குழந்தைகள் நாடகக் குழுவுடன் புதுச்சேரியில் இருந்து நெய்வேலிக்குப் புறப்பட்ட நேரம் உற்சாகத்தைக் கிளப்பியது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி 1999 எங்களை நகரின் முன்வாயிலில் இருந்தே வரவேற்று அழைத்தது. நான்காம் நாள் புத்தகக் கண்காட்சியின் முக்கிய நிகழ்வில் ஒன்றாகச் சூட்டிங் நாடகத்தை விளம்பரப்படுத்தி இருந்தனர். புத்தகக் கண்காட்சியில் கூட்டம் நிறைந்திருக்க, நேராக அரங்கிற்குச் சென்றோம். சிறுவர், பெண்கள் என அரங்கில் நிறைவாகக் கூடி இருந்தனர். நான் முதன் முதலாகப் பெரிய புத்தகச் சந்தையைக் கண்டு வியந்து நின்றேன். நாடகத்திற்காக அரங்கத்தில் கட்ட வேண்டிய தொங்கு கயிறு மற்றும் அரங்கப் பொருட்களை விரைவாக வைத்து விட்டு ஒப்பனைக்குத் தயார் ஆனோம்.
நாடக அரங்கில் கட்டியிருந்த கயிறு, ஒத்திகை அளவைவிட நீளமாக இருந்தது. எனக்குள் ஒரே அச்சம். கயிற்றில் ஏறிப்பார்க்கலாம் என நினைத்தேன். அதற்குள் ஒப்பனையும் உடையும் அணிய வேண்டியதாயிற்று. முக்கிய நபர்களும் அரங்கின் முன் இருக்கையில் அமர்ந்தாயிற்று. இனி நிகழ்வில் தான் ஏறியாக வேண்டும். ஒருமுறை ஈரோட்டில் போலீஸ் உதவி ஆய்வாளர் (SI) பணிக்குக் கயிறு ஏறிய ஞாபகம் மனதில் வந்தது. நாடகம் தொடங்கியது . சிறுவர்கள் பாத்திரத்தில் இருந்து குரங்காய் மாறி கயிற்றில் ஏறத் தொடங்கியதும் நானும் ஏறத் தொடங்கினேன். சரசரத்த வேகத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க வேண்டும். இரண்டாம் முறை இறங்கும் போது கயிறு வழுக்கியது, எல்லோரையும் விட வேகமாக இறங்கி விட்டேன். ஆனால் இரண்டு கைகளிலும் பெருவிரல் தவிர மீத விரல்கள் சிதலமடைந்து இரத்த பிசுபிசுப்புடன் தோல்கள் தொங்கியது. யாரிடமும் காட்டிக்கொள்ளாமலே ஓடியாடி நடித்து, நாடகமும் நிறைவுற்றது. கைகுலுக்க வந்தவரிடம் கும்பிடு போட்டுக்கொண்டேன்.
ஒப்பனையும் உடையும் களைந்ததும் நிர்வாகிகள் உணவு உண்ண அழைத்துச் சென்றார்கள். விரல் வலி வயிற்றுப் பசியை முற்றாகப் போக்கி இருந்தது. எனக்கு எதுவும் வேண்டாம் என்றேன் . ஏப்பா என்னாச்சு எனக் கேட்டபடி பிரபாகரன் கையைப் பிடிக்க இழுக்க, அம்மா… என்றேன். நாடகக் குழுவிலுள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இறங்கத் தெரியாமல் கை கிழிந்த விபரம். வேலு சரவணன் அண்ணா மிரண்டு போய் விட்டார். சமையல் குழுவினர் சிறிய கரண்டி ஒன்றைக் கொடுத்துதவ, விரல் சுவை தேடிய நாக்குக்குப் பதில் செல்ல முடியாமல், உண்டு முடித்து விட்டுப் புத்தகக் கடைகளை நோக்கிச் சென்றேன். இரண்டு வாரங்கள் கரண்டிச் சோறு தான். எனது இரண்டாம் நாடக அரங்கேற்றம் இவ்வாறாய் இருந்தது. வேலு சரவணன் அண்ணாவின் அடுத்த தயாரிப்பான அங்கா துங்கா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த, சில நாள் ஒத்திகைக்குப் பிறகு அரசியல் விளையாட்டு காரணமாக விலக நேரிட்டது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
(கார்த்திகேயன்நாடகத்துறையில்முனைவர்பட்டம்பெற்றவர். சிறந்தநவீன நாடகக்கலைஞர். பலசின்னத்திரைத்தொடர்களிலும்நடித்துள்ளார். அண்ணாமலைதொலைக்காட்சிதொடரில்சூதாடிச்சித்தன்என்கிறஇவரதுபாத்திரம்அனைவருக்கும்நினைவிருக்கும். சுமார்ஐம்பதுக்கும்மேற்பட்டநாடகங்களில்நடித்திருக்கும்இவரதுமேடைஅனுபவங்கள்இத்தொடரில்வெளியாகஉள்ளன.)