அதாங்க அரசியல்! '- கற்பதுவே கேட்பதுவே கருதுவதே-6 சுகுமாரன் எழுதும் தொடர்

அதாங்க அரசியல்! '- கற்பதுவே கேட்பதுவே கருதுவதே-6 சுகுமாரன் எழுதும் தொடர்
Published on

மிழன்  நாளிதழ் சுதந்திரமான பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. ஆனால் நாளடைவில் கட்சி சார்ந்த இதழாகவே உருமாற்றம் அடைந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. அன்று திமுக காரர்களின் அபிமானப் பத்திரிகையாக இருந்தது கட்சி இதழான முரசொலி அல்ல; கட்சிக்காரரான கே.பி.கந்தசாமி யின் 'தினகரன்' . அதற்குப் போட்டியாகத் தமிழனை நிறுத்த நடந்த செயல்கள் அதை கிட்டத்தட்டக் கட்சிப் பத்திரிகையாகவே மாற்றின. கலர் முரசொலி என்ற பெருமையும் வந்து சேர்ந்தது. இதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் அன்று முரசொலி, குங்குமம் வெளியீட்டு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக இருந்த கலாநிதி மாறன். கட்சிச் சார்புநிலை விரிவான வர்த்தகத்துக்கு ஊறு விளைவிப்பது என்பதை அவரது வணிக மேலாண்மை அறிவு உணர்த்தியிருந்தது. பத்திரிகையை ஒரு பொது ஊடகமாக நடத்த அவர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.  கட்சிக்காரர்களும் ஆதரவளிக்காமல் பொது வாசகர்களும் பொருட்படுத்தாமல் பத்திரிகை நாளுக்கு நாள் விற்பனையில் இளைப்பதைப் பார்க்க முடிந்தது.

இந்த எச்சரிக்கை உணர்வுதான் கலாநிதி மாறன், சன் டிவியைத் தொடங்கியபோது முன்னால் நின்றிருக்க வேண்டும். கட்சி சார்பில்லாத ஊடகமாக அதை முன்னெடுத்துச் செல்ல அவரைத் தூண்டியது. சன் டிவி என்பது முழுக்க முழுக்க அவருடைய கனவும் செயலுமாக இருந்ததால் அதைச் சுதந்திரமாகச் செய்ய முடிந்தது. ஆனால் தமிழன் நாளிதழில் அதைச் செய்து காட்ட அவரால் முடியவில்லை.

விற்பனை அதிகமில்லாத நாளிதழாக இருந்தபோதும் தமிழனுக்குக் கணிசமான வாசகர்கள் இருந்தார்கள். தமிழில் வெளிவந்த முதல் பலவண்ண நாளிதழ் என்பது ஒரு சின்னக் காரணம். சார்பு நிலைப் பத்திரிகையாக இருந்ததால் கட்சியின் நலனுக்குக் குந்தகம் வராத செய்திகள் மட்டுமே வெளிவந்தன. அவை பொது வாசகருக்கு எந்த உற்சாகத்தையும் தராதவை என்பதை நிர்வாகம் உணர மறுத்தது. மாறாக பிரபலமான யாரையவாது ஆசிரியராகப் போட்டுப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தது. கவிஞர், மன்னிக்க, கவிக்கோ அப்துல் ரகுமானைச் சிறப்பாசிரியராக நியமித்தது.

தற்கிடையில் ஒரு நாள் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. கலைஞரின் சாமர்த்தியமான குறுக்கீடு பத்திரிகையைப் பாதாளத்தில் விழாமல் தடுத்தது. அவர் பிடிவாதமாக இருந்திராவிட்டால்  ஒரு கோர தாண்டவம் நடந்திருக்கக் கூடும்.

ஐ ஏ எஸ் அதிகாரியான சந்திரலேகா ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் புகார்களை முன்வைத்திருந்தார். தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவியில் இருந்த அவர் தனது பதவிக்காலத்தில் நடத்திய ஆய்வில் , தனது துறையில் நடந்திருந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். அதையொட்டி அரசுக்கும் அவருக்கும் இடையே மூண்ட மோதலில் சந்திரலேகா தனது பதவியையே ராஜினாமாச் செய்தார். சுப்ரமணியன் சுவாமியின் கட்சியில் சேர்ந்தார். ஊழலைப் பற்றிப் பேசினார். பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி ஆதாரங்களை எடுத்து வைத்தார். மிகவும் பரபரப்பாக இருந்த அந்த நாட்களின் ஒரு பகலில் சந்திரலேகாவின் மீது திராவகம் வீசப் பட்டது. அந்தச் செய்தி முதன்முதலில் கிடைத்தது எங்கள் வளாகத்துக்குத்தான். ஆசிரியப் பிரிவு கொண்டாட்டத்தில் துள்ளியது. ஒரு ஸ்கூப் கிடைத்த மகிழ்ச்சியில் கிறுகிறுத்தது. தொலை பேசிகள் மும்முரமாயின. அலறிக் கொண்டிருந்தன. அழைத்தும் அழைக்கப் பட்டும் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதில் கிடைத்த ஒரு தகவல் அதிர்ச்சி கரமானதாக இருந்தது. அன்றைய ஆளும் கட்சியைச் சேர்ந்த அஞ்சா நெஞ்சனான அமைச்சர் ஒருவர்தான் ஆசிட் வீச்சைத் திட்டமிட்டு செயல் படுத்தியவர் என்ற விவரம் கிடைத்தது. மூத்த பத்திரிகையாளர் அதை உற்சாகமாக எழுதிப் பரபரப்பான செய்தியாக்கினார். அன்றைய இதழின் தலைப்புச் செய்தியாக இந்தப் புலனாய்வு விவரமே அச்சானது. சம்பந்தப் பட்ட அமைச்சரின் படத்துடனும் அவரது பழைய குற்றங்களின் பட்டியலுடனும் அச்சேறிய பத்திரிகைப் பிரதிகள் மாலையே வெளியூர் விநியோகத் துக்காக எடுத்துச் செல்லப்பட்டன.  

ஒரு ஸ்கூப் வெளியிட்ட பெரும் திருப்தியுடன் அலுவலகம் இருந்தபோது தொலைபேசி அழைப்பு. கலைஞர் கருணாநிதி. தனக்கு அனுப்பட்ட பத்திரிகைப் பிரதியைப் பார்த்த மறு நொடி அழைத்திருந்தார். முதலில் சரமாரியாகத் திட்டித் தீர்த்தார். பத்திரிகை விநியோகத்தை நிறுத்தச் சொல்லி உத்தவிட்டார். உடனே அலுவலகம் வருவதாகச் சொன்னார். அலுவலகம் ஸ்தம்பித்தது. விநியோகத்துக்காகக் கட்டி வைக்கப்பட்ட பண்டில்கள் ஓரம் கட்டப்பட்டன. சென்னைப் பதிப்புக்கான வேலை நிறுத்தப்பட்டது.

பத்துப் பதினைந்து நிமிடங்களில் கலைஞர் வந்து சேர்ந்தார். ஆசிரியப் பகுதி சீனியர்களை அழைத்தார். அறைக்குள் கரகரத்த குரலில் அதிர் வேட்டுகள் முழங்குவதை வெளியே லேசாகக் கேட்க முடிந்தது. கதவைத் திறந்து வெளியே வந்த பஷீரின் முகம் தொங்கிப் போயிருந்தது. ஆட்களிடம் பேசி விநியோகத்துக்குக் கொண்டு சென்ற எல்லாப் பிரதிகளையும் திரும்பப் பெற அறிவுறுத்திக் கொண்டிருந்தார். ஏழு மணி வாக்கில் மீண்டும் திருத்தப்பட்ட செய்தியுடன் பத்திரிகை மீண்டும் அச்சானது. கட்டுகள் வண்டியேறிப் போனது. கலைஞரும் திரும்பச் சென்றார். அலுவலக வளாகம் கொஞ்சம் ஆசுவாச மடைந்தது, தேநீர் அருந்தவும்  புகை பிடிக்கவும் வெளியே வந்தபோது அலுவலகம் இருக்கும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழே இருந்து நான்கைந்து அம்பாசிடர் கார்கள் உறுமிக் கொண்டு போவதைப் பார்த்தேன். உள்ளே முரட்டு முகங்களுடன் ஆட்கள் இருந்தார்கள். விஷயம் தெளிவானது. அமைச்சர் பெயர் ஆசிட் வீச்சில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தி தெரிந்து வந்திருக்கிறார்கள். கலைஞர் உள்ளே இருந்ததால்  தாக்குதலுக்குக் காத்திருந்திருந்திருக்கிறார்கள். அமைச்சரின் பெயர் கலைஞர் தலையீட்டால் நீக்கப்பட்டது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் திரும்பியிருக்கிறார்கள்.

''இங்க நடக்கிறது அவங்களுக்கு எப்படி சார் தெரியும்?'' என்று பஷீரிடம் கேட்டேன்.

''அதாங்க அரசியல்'' என்றார் அவர். புரியவில்லை. அன்று மட்டுமல்ல; இன்றும் புரியவில்லை. அன்று கருணாநிதியால் ஆதரிக்கப்பட்ட சந்திரலேகா பின்னர் அதே கருணாநிதியால் நிறுத்தப்பட்ட ஸ்டாலினுக்கு எதிராக எப்படி சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டார்? என்பது புரியவில்லை.

(சுகுமாரன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளிவரும்)

logo
Andhimazhai
www.andhimazhai.com