அடுத்த அட்டாக் ஐம்பெரும் காப்பியம்தான்…படித்ததும் கிழித்ததும் பாகம் - 2

அடுத்த அட்டாக் ஐம்பெரும் காப்பியம்தான்…படித்ததும் கிழித்ததும் பாகம் - 2
Published on

"பாபர் மசூதி இடிப்பிற்கான ஐடியாவே அய்யன் திருவள்ளுவன் தந்ததுதான்…”

” வள்ளுவரின் காமத்துப்பால்தான் தேவநாத குருக்களை கருவறையிலேயே கஜமுஜாவில் ஈடுபட ஊக்குவித்தது ….”

” திருக்குறளில் “வலியறிதல்” வாசித்த பிறகே கோட்சே துப்பாக்கி வாங்கினான்…”

என்றெல்லாம் எடுத்துவிடலாம்தான்…. கேட்பவன் கேணையனாக இருந்தால்.

நீங்கள் அவருக்கு விபூதியடிக்கலாம்…

குல்லா மாட்டலாம்…

சிலுவையைத் தொங்க விடலாம்….

அவ்வளவு ஏன் அகோரியாகக்கூட அம்மணமாய் ஓடவிடலாம்.

ஆனால் எவற்றுக்குள்ளும் அடக்கிவிடமுடியாது அந்த அய்யனை. அதுதான் அவர் வலிமை.

ஏற்கெனவே முயற்சித்துப் பார்த்தவர்களில் பலர் மூச்சை நிறுத்தி பல நூற்றாண்டுகளாயிற்று.

இன்றைக்குக் காவி கட்டிவிட்டு கமண்டலத்தைக் கையில் கொடுக்கும் கிறுக்குகள் நாளையே ” ’காதற் சிறப்புரைத்தல்’ எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானது” என்று காதலர் தினத்தில் கழுதையோடு கழுதையாக வந்து நிற்கும்.

இப்படித்தான் ”பெரியாரைப் பொளக்கிறேன்” என்று ஆர்ப்பரித்துப் புறப்பட்டு… பெரியாரை அறியாத அடுத்த தலைமுறைக்கும் அவரைக் கொண்டுபோய் சேர்த்தார்கள்.

இப்போது வள்ளுவருக்கு வந்திருக்கிறார்கள்.

நமது சனியன்களோ பெரியாரை படி… வள்ளுவரை படி… படி… என்று நாம் கரடியாய்க் கத்தினாலும் காதிலேயே போட்டுக் கொள்ளாது. ஆனால் கண்ட நாயெல்லாம் குறைக்கும்போதுதான் நம்மவர்கள் உறக்கம் கலைந்து தேடத் தொடங்குகிறார்கள்.

உண்மையில் நம்மவர்களுக்கும் அறிவூட்டும் அரிய பணியைத்தான் இந்த “காவி”ய நாயகர்கள் செய்து வருகிறார்கள். அதற்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும். ஆகவே இத்”திருப்பணி”யை வள்ளுவரோடு நிறுத்தாமல் ஐம்பெரும் காப்பியத்தை நோக்கியும் நீட்டிக்க வேண்டும்.

அப்போதுதான் வெறும் மனப்பாடப் பகுதியின் மதிப்பெண்களுக்காக மட்டும் வாசித்த இத்தலைமுறையும் கல்லைக் கொண்டு துரத்துவதற்கு வசதியாக இருக்கும் என்பது இந்த எளியோனின் பேராசை.

அது…ஏற்கெனவே பெரியார் பிரச்சனையில் புண்ணான பட்டக்சுக்கு பர்னால் போட்டமாதிரியும் இருக்கும்…

குப்புறப்படுத்தபடி ”அகண்ட பாரதத்தில்” அடுத்து எங்கு கால் வைக்கலாம் என ஆலோசித்த மாதிரியும் இருக்கும்.

யோசியுங்க தமிழகத்தின் பொழுதுபோக்குச் செம்மல்களே….

**********

நேற்று மாலை நண்பர் கெளதமன் அதிர்ச்சிகரமான தகவல்களோடு அறைக்கு வந்தார்.

தமிழகத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு எனப்பயணப்பட்ட அவர் மேற்கு மட்டும் எதற்கு மிச்சம் என கோவையில் டேரா  போட்டு… அதாவது (குடிவந்து) இரு ஆண்டுகள் இருக்கலாம். ஜெயகாந்தனின் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான நண்பர். ஆயினும் சுயசிந்தனையாளர்.

பேச்சு பல்வேறு பக்கம் பயணித்து மீண்டும் அய்யன் திருவள்ளுவனிடமே வந்து நின்றது. திருவள்ளுவர் யார் என்கிற பட்டிமன்றம் ஒருபக்கம் இருக்கட்டும்…

ஆனால் திருக்குறளை யார் யாரெல்லாம் மொழி பெயர்த்தார்கள் என்கிற திசை நோக்கி பேச்சு நகர…. அடுத்து அவர் சொன்ன சில தகவல்கள் எனக்கு புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது என்பதுதான் உண்மை.

நான் இதுவரைக்கும் சந்தித்த இலக்கிய ஸ்வாஸிப்பாளர்கள்…

இலக்கியப் பிரக்ஞையாளர்கள்…

பிரதியைக் கட்டுடைக்கும் ஸாஹித்யக் கொத்தனார்கள்….

யாரும் நம்ம கெளதமன் சொன்ன தகவல்களைப் பற்றி மூச்சுகூட விட்டதில்லை.

முப்பதுகளில் வந்த ”மணிக்கொடி” பத்திரிக்கையைப் பற்றி பேச்சு வந்தாலே….

”ப்ச்…ப்ச்…ப்ச்… அந்த மணிக்கொடி காலம்….”

”ச்சே…. நம்ம ராமையா… ச்சொக்கலிங்ஹம்…. ச்சே….”

”ம்ம்…ம்ம்..ம்ம்… மணிப்ப்ரவாள நடைன்னா….”

”ஹூம்…. ஹூம்… சிறுபத்திரிக்கையா இருந்தாலும்… மாதாந்திரியா இருந்து வாராந்திரியா  வந்தப்போ நான் பூந்தி ஷாப்டுட்டு இருந்தேன்…”

”ப்ச்…ப்ச்… அந்தக் கவிதானுபவம் இருக்கே… ப்ச்….ப்ச்…”

(தயவுசெய்து யாரும் இதை “கவிதா” ”அனுபவம்” என்று பிரித்து வாசிக்க வேண்டாம்.,,,)

”மணிக்கொடில நம்ம ஸ்ரீநிவாஸன் எழுதீண்டு இருக்கச்சே….”

என்று வாயில் டியூன் போடுவார்களே ஒழிய… அந்த மனிதர் அர்ப்பணிப்புடன் செய்த அந்த அற்புதமான விஷயத்தைப் பற்றி மூச்சுகூட விட மாட்டார்கள்.

அதுதான் : அவரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு.

அந்த மணிக்கொடியின் பிதாமகர் சீனிவாசன் எழுத்தாளராக… கட்டுரையாளராக… வலம் வரும் வேளையில் இவரது எழுத்து ”ஆங்கிலேய அரசை ஏளனப்படுத்துகிறது”… ”சுதந்திர முழுக்கத்துக்குத் துணை போகிறது” என்று சொல்லி நாசிக் சிறையில் அடைக்கப்படுகிறார் 1932 இல்.

சக கைதிகளுடன் பேசக்கூடாது…. அரசியல் கதைக்கக் கூடாது…. எந்த ஆங்கிலப் பத்திரிக்கையிலும் அரசியலைப் பற்றி மூச்சுகூட விடக்கூடாது என்கிற கட்டளைகள் வேறு.

இதுவே வசதியாகப் போய்விடுகிறது சீனிவாசனுக்கு.

அரசியல் பேசக்கூடாது…

எழுதி வெளியில் அனுப்பக்கூடாது….

அவ்வளவுதானே…

எனக்கு வாசிக்க புத்தகங்களும்… எழுத நோட்டும் வேண்டும்… என்று கேட்க அனுமதிக்கிறது சிறை நிர்வாகம்.

சிறையில் இருக்கும் கணவருக்கு ப்ளேட்டோ… சாக்ரடீஸ்…. இராமாயணம்… உட்பட பல நூல்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிறார் அவரது மனைவி. அவற்றுள் ஒன்றுதான் திருக்குறள்.

அப்படித்தான் வள்ளுவரது திருக்குறளும் மொழி பெயர்க்கப்படுகிறது நாசிக் சிறையில்.

1899 இல் பிறந்த ”மணிக்கொடி” சீனிவாசன் எழுதியவற்றில் எண்ணற்றவை நூலாக வெளிவந்து விட்டன. ஆனால் இன்னமும் வெளிவராமல் இருப்பவனவற்றுள் முக்கியமானது அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருக்குறள்தான்.

ஒன்றே முக்காலடி குறளுக்கு ஒன்றே முக்காலடியிலேயே அமைந்த அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பு.

எந்த மொழியிலும் புலமை பெற்றவனில்லை நான். ஆனால் மணிக்கொடி சீனிவாசனின் இம்மொழி பெயர்ப்பு சீரானதுதானா என சீர்தூக்கிப் பார்த்து செப்பனிடப்பட்டு விரைவில் பதிப்பிக்கப்பட்டால் எண்பத்தி ஆறு ஆண்டுகள் முன்னமே இத்தகைய பணியில் ஈடுபட்ட ஒரு மனிதனின் உழைப்பு காலம்கடந்தாவது மதிக்கப்படும்.

சிற்றிலக்கிய மரபின் தொடக்கமே திராவிட இயக்க ஒவ்வாமையின் பக்க விளைவுதான். அதில் மணிக்கொடிக்கும் பங்குண்டுதான். பாரதிதாசன் "தமிழ் எங்கள் மூச்சாம்" என்றெழுதினால் "தமிழ் எனக்கு மூச்சுதான்... ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்" என ஜெலுசில் சாப்பிட்டும் பயனளிக்காது வயிற்றெரிச்சலில் எழுதியவர்தான் பிற்பாடு வந்த ஞானக்கூத்தன். ஆனாலும் அவர்களைப் போன்று நாமில்லையே . “அவர் நாண நன்னயம் செய்”வதுதானே வள்ளுவன் காட்டிச் சென்றது….?

ஆக…. இந்நூலை வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற தீரா தாகத்தோடு 2001 ஆம் ஆண்டே கணிணியில் தட்டச்சிவைத்துக் காத்திருந்தார் அவரது புதல்வர்களில் ஒருவரான ஜயதேவ் சீனிவாசன். ஆனால் அவரும் காற்றோடு கலந்துபோய் ஓரிரண்டு ஆண்டுகள் ஆயிற்று.

ஆனால் திருக்குறள் ஆங்கிலப் பதிப்பு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் எழுதிய அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் மட்டும் காற்றோடு கலக்காமல் காலம் கடந்தும் நிற்கின்றன.

அதுதான் :

”இந்துக்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் வள்ளுவர் தங்கள் மதத்தைச் சார்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவதும் சரியல்ல. ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் குறளின் கருத்துக்கள், தங்கள் மதத்தின் சித்தாந்தங்களை தழுவி இருக்கிறது என்று எண்ணினால், மற்ற மதத்தினரும் அவ்வாறே கூற முடியும் என்பதை உணரவேண்டும்.

மேலும் குறளில் கூறப்பட்ட சில கருத்துக்கள் அவரவர் மதத்தின் சில அடிப்படை ஆசாரங்களுக்கு மாறுபட்டு இருப்பதாகவும் தெளிவுபடும்.

ஆகவே, உண்மை எது என்றால், வள்ளுவர் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும், அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் ஜாதி, மதம், இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டது”.

(இதுதான் சீனிவாசனின் புதல்வர் ஜெயதேவ் வெளிவராத அந்நூலுக்கு எழுதிய வெளிவராத அணிந்துரை….)

மணிக்கொடி சீனிவாசன் அவர்களின் அரசியல் பயணத்தில் அநேகவற்றோடு நாம் முரண்படலாம் உடன்படலாம். ஆனால் சிறைக்கம்பிகள் மட்டுமே சாட்சியாக நின்ற பொழுதுகளில் அவர் வடித்த திருக்குறளின் ஆங்கில மொழியாக்கப் படைப்பு அச்சிலேற்றப்பட வேண்டும்.

அப்போதுதான் எண்ணிப்பார்க்கவே முடியாத எண்ணற்றவற்றைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே தமிழ் மண்ணில் இருந்து திருவள்ளுவர் என்கிற ஒரு மனிதர் சிந்தித்திருக்கிறார் என்கிற அற்புதம் ஆங்கிலம் பேசும் மக்களுக்கும் புலப்படும்.

(இத்தொடர் வாரம்தோறும் வெளியாகும் )

logo
Andhimazhai
www.andhimazhai.com