அங்குலிமாலன்!- போதியின் நிழல் 36

அங்குலிமாலன்!- போதியின் நிழல் 36
Published on

உபாலி முன்னே செல்ல யுவான் சுவாங், மெதுவாக பின்னே சென்றார். கடுமையான வறட்சிக்குள்ளாகியிருந்த கிராமங்களைக் கடந்து அந்த நகருக்கு வந்திருந்தனர். சாக்கியர்களின் அரசர் சுத்தோதனர் ஆட்சி செய்து, சித்தார்த்தர் பிறந்து வளர்ந்து, உலக அவலங்களைக் கண்டு வெறுத்து துறவு பூண்ட நகரம். கபிலவஸ்து. சிராவஸ்தியில் முக்கியமான இடங்களைக் கண்டபின்னர் கபிலவஸ்துக்கு வந்திருந்தார் யுவான். உபாலி அங்கிருந்த விஹாரம் ஒன்றில் வசித்துவந்த இளம் பிக்கு. யுவானுக்கு வழிகாட்டியாக கபிலவஸ்துவின் முக்கியமான இடங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.
செங்கல்லால் கட்டப்பட்டு இடிந்துபோயிருந்தது சுத்தோதனருடைய அரண்மனை. அதன் அடித்தளம் மீது விஹாரம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதற்குள் சுத்தோதனனரின் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
‘‘ததாகதர் பிறந்து வளர்ந்த இடம். இங்கு வந்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் பிக்குவே’ என்றார் உபாலி.
‘‘சரித்திரத்தின் பக்கங்களில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதற்கு எனக்கொரு வாசலாக இது இருக்கிறது. அத்துடன் இந்த இடங்களைப் பற்றி ஏற்கெனவே படித்து கேள்விப்பட்டு மனதளவில் வாழ்ந்திருக்கிறேன். இங்கு வந்தபிறகு இவற்றைப் பார்க்கையில் மன எழுச்சி ஏற்படுகிறது’’
சுத்தோதனரின் சிலைக்கு முன்பாக யுவான் சில நிமிடங்கள் மௌனமாக நின்றார்.

‘‘இங்கிருந்து சற்று வடக்காகச் செல்வோம். மாயாதேவியாரின் படுக்கையறை இருந்த இடத்தில் ஒரு விஹாரம் உள்ளது. அதில் மாயாதேவியாரின் சிலை உள்ளது. வாருங்கள்’’ என்றார் உபாலி.
சிவந்த கற்களால் ஆன அந்த விஹாரம் ஒரு வினோதமான குளுமையைக் கொண்டிருந்தது. நளினமான தெய்வீகம் பொங்கும் மாயாதேவியை தரிசித்தார் யுவான். பின்னர் அங்கேயே பல இடங்களைக் காண்பித்தார் உபாலி. சித்தார்த்தர் தன் தாயாரின் கருவறைக்குள் வெள்ளையானை வடிவில் கனவில் பிரவேசித்த இடம்; அசித ரிஷி குழந்தையாக இருந்த புத்தரின் ஜாதகத்தைக் கணித்து புத்தபிரானின் வார்த்தைகளைக் கேட்பதற்குள் வயதாகி இறந்துவிடுவேனே என்று கண்ணீர் விட்டு அழுத இடம்; பிற சாக்கிய அரச இளைஞர்களுடன் சித்தார்த்தர் போர்க்கலை பயின்ற இடம்; வயதான மனிதன், நோயுற்ற மனிதன், இறந்தவன், உலகை வெறுத்த துறவி ஆகியோரை சித்தார்த்தர் பார்த்த இடங்கள்; குதிரையில் ஏறி நகரை விட்டு நள்ளிரவில் நீங்கிய இடம்.

அன்றிரவு கபிலவஸ்துவிலேயே யுவான் தங்கினார். அறையின் அகன்ற சாளரம் வழியாக மேல்வானத்தின் நிலவொளி அறைக்குள் கசிந்து அதை நிரப்பியிருந்தது. உள்ளே நான்கைந்து பிக்குகள் யுவானின் பயண அனுபவங்களைக் கேட்பதற்காக வந்திருந்தனர்.

தன் பயண அனுபவங்களையெல்லாம் மெல்ல யுவான் சொல்லத் தொடங்க கபிலவஸ்துவை விட்டு அதிக தூரம் வெளியே சென்றிராத அந்த பிக்குகள் வாயைப் பிளந்தனர். உபாலி ஒரு கட்டத்தில் மிகுந்த ஆச்சரியத்துடன் எழுந்து நின்றே விட்டார். கொள்ளையர்களை யுவான் சந்தித்த அனுபவங்களை அவர்கள் நடுக்கத்துடன் கேட்டனர்.

சிராவஸ்தியில் தான் பார்த்த இடங்களைப் பற்றி விவரமாகச் சொன்னார் யுவான்.

பிரேசேனஜித் அரசனாக இருந்த நேரம் வரைக்கும் புத்தரையும் சங்கத்தையும் பேணிப்பாதுகாப்பவனாக இருந்தான். அவனிடமிருந்து மகன் விடூடூபன் ஆட்சியைக் கைப்பற்றி சாக்கியர்களைப் பழிவாங்க எண்ணி படைகளைத் திரட்டி கபிலவஸ்து நோக்கிச் சென்றான். கபிலவஸ்துவின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னால் இலைகளே அற்ற காய்ந்த மரமொன்றின் அடியில் அமைதியே உருவாக தன்னந்தனியே அமர்ந்திருந்த புத்தரை எதிர்கொண்டான் அவன். படைகளை நிறுத்திவிட்டு குதிரையிலிருந்து அவர் அருகே சென்றான். உச்சி வெயிலில் நிழலே மனித வடிவாக இருந்த புத்தர் முன்பாக மண்டியிட்டான்.
‘‘புனிதரே.. இலைகளும் கிளைகளும் உள்ள மரத்தின் அடியில் அமராமல் இந்த வெயிலில் காய்ந்துபோன இம்மரத்தின் அடியில் நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்களே?’’

‘‘என் சாக்கிய உறவுகள்தான் என் கிளைகளும் இலைகளும்’’ அமைதியாக வெளிவந்தன சொற்கள். ‘‘அவர்களே அபாயத்தில் இருக்கிறார்கள். நான் எங்குபோய் நிழலைத் தேடுவேன்?’’

புத்தரின் சொற்கள் அவன் இதயத்தைத் தொட்டன. விடுடூபன் தன் படைகளுடன் திரும்பிச் சென்றுவிட்டான். இது இரண்டு முறை நடந்தது. மூன்றாவது முறை சாக்கியர்களின் கர்மவிதிப்படி நடக்கட்டும் என்று புத்தர் விட்டுவிட்டார். விடுடூபன் சாக்கியர்களை பூண்டோடு அழித்துவிட்டான்.

‘‘விடுடூபனை புத்தர் சந்தித்த இடத்தில் ஒரு ஸ்தூபி உள்ளது. அதைக் கண்டேன்’’ என்றார் யுவான்.


‘‘அங்குலிமாலனை ததாகதர் திருத்திய இடமும் உள்ளதே.. அதைக் கண்டீர்களா?’’ என்று ஒரு மூத்த பிக்கு கேட்டார்.
யுவான் புன்னகைத்தார். ‘‘ஆம். அவ்விடத்தையும் தரிசித்தேன். அங்குலிமாலன் கதைதான் எத்தனை அருமையானது... ஆனால் அக்கதையில் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் உள்ளன அல்லவா?’’

‘‘ஆம். யுவான் அவர்களே... அங்குலிமாலனை மகத நாட்டில் ததாகதர் கண்டதாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். அவன் காட்டில் வாழ்ந்த கொடியவன் என்றுதான் பலரும் அறிந்திருக்கிறார்கள். அவன் கலைகள் பல கற்ற பிராமண குலத்து இளைஞன் என்பதை யாரும் அறிந்திலர்’’ என்றார் மூத்த பிக்கு.

அகிம்சகா என்ற பிராமண இளைஞன் ஒரு மிகப் புகழ்பெற்ற குருவிடம் கல்வி பயின்று வந்தான். மிக அழகாக இருந்த அவன் மிகுந்த உடல்வலிமையுடன் இருந்தான். குருவின் சீடர்களிடையே மிகுந்த புத்திசாலியாகவும் மிக விரைவில் எதையும் கற்றுத் தேர்ந்துவிடக்கூடியவனாகவும் இருந்தான். அகிம்சகாவின் மீது குருவின் இளம் மனைவிக்கு ஆசை வந்துவிட்டது. ஆனால் அகிம்சகா இணங்கவில்லை. எனவே குருவிடம் தன்னிடம் அவன் தவறாக நடக்க முயன்றதாக புகார் கூறிவிட்டாள் அவள். குருவுக்கு அகிம்சகா மீது நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ துணிச்சல் இல்லை. ஆனால் அவர் தந்திரக்காரர். அகிம்சகாவின் வாழ்வையே அழிக்க முடிவு செய்தார்.
ஒரு வாரம் விரதம் இருந்து ஆயிரம் பேரைக் கொன்று அவர்களின் விரல்களைச் சேகரித்தால் இறவாத நிலையை அடையலாம் என்று அதை நிறைவேற்றி தன் சீடன் என்ற பெருமையை குருவுக்கு அளிக்குமாறு கோரினார். முதலில் அகிம்சகா தயங்கினாலும் பின்னர் இறவாத தன்மையைப் பெறும் ஆசையால் அந்த கொடூரச் செயலுக்கு இணங்கினான். 999 பேரைக் கொன்று அவர்களின் விரல்களை மாலையாக அணிந்து அங்குலிமாலன் ஆனான். அவன் பசியுடன் இருப்பதை அறிந்து அவனது தாய் அவனை உணவு எடுத்துக் கொண்டு காணவந்தாள். அவளை ஆயிரமாவது ஆளாகக் கொன்று விரலை வெட்டி எடுத்துக்கொள்ளும் மாபாதகத்தை அங்குலிமாலன் செய்யத் தயாரானான். அந்த நிலையில்தான் புத்தர் அங்குலிமாலன் முன்பாகத் தோன்றி அவனை ஆட்கொண்டார். அங்குலிமாலன் புத்த சங்கத்தில் சேர்ந்து விரைவிலேயே உயர்ந்த ஞான நிலை எய்தினான்.


இந்த கதையை வேறு சில வடிவங்களில் கேட்டிருந்த யுவான் அமைதியாக இருந்தார். ‘‘ஒரு சில பத்தாண்டுகளிலேயே சரித்திரம் மாறிவிடுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைய சம்பவம் அல்லவா? காலபோக்கில் இடைச்செருகல்களும் மாறுதல்களும் வருவது இயற்கைதான்’’ என்றார் மூத்த பிக்கு.

யுவான் தலை அசைத்தார். ‘‘ததாகதரைக் கொல்ல தேவதத்தன் விரல்நகங்களில் கொடிய விஷத்தைத் தடவிக்கொண்டு வருகையில் அப்படியே பூமி பிளந்து அவனை நரகத்துக்குக் கொண்டு சென்றது. அந்த பள்ளத்தையும் அங்கே கண்டேன்’’ என்றார் யுவான்.
‘‘சாரிபுத்தர் தன் ஆன்மீக வலிமையை நிரூபித்த இடத்தில் ஸ்தூபி ஒன்று உள்ளது. அதைக் கண்டீர்களா?’’ மூத்த பிக்கு ஆர்வத்துடன் கேட்டார்.

‘‘சகோதரரே அந்த சம்பவத்தைச் சொன்னால் நாங்களும் கேட்போம் அல்லவா?’’ என்றார் உபாலி.

இம்முறை யுவான் அச்சம்பவத்தை விளக்கினார்.

சாரிபுத்தரும் மௌத்கல்யாயணரும் ராஜகிருகத்தில் சஞ்சயா என்ற பரிவிராஜரின் சீடர்களாக இருந்தவர்கள். நெருங்கிய நண்பர்கள். ஒரே நேரத்தில் ததாககதரிடம் வந்தவர்கள். மிகுந்த உயர்வான ஞானநிலையை அடைந்தவர்கள். ஆனால் அவர்களுக்குள் யார் உயர்ந்தவர் என்கிற ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனவதாப்தா ஏரிக்கரையில் ஒருமுறை புத்தர் தன் சீடர்கள், தேவர்க்ளுடன் அமர்ந்திருந்தார். அவர்களுடன் சாரிபுத்தர் இல்லாததைக் கவனித்தார் புத்தர். மௌத்கல்யாயணர் தான் சென்று ஒரே நொடியில் சாரிபுத்தரை அழைத்துவருவதாகச் சொல்லிவிட்டு வான் வழியாக ஜேதாவனத்துக்கு வந்தார். அங்கே தன் குடிலில் சாரிபுத்தர் தன் கிழிந்த ஆடையைத் தைத்துக் கொண்டிருந்தார். தன் நண்பரை உடனே தன்னுடன் வருமாறு மௌத்கல்யாயணர் ஏவினார்.

‘‘சகோதரரே என் ஆடையைத் தைத்து விட்டு வருகிறேன்’’ என்றார் சாரிபுத்தர்.

‘‘ இதெல்லாம் ஒருவேலையா... இதோ என் மந்திர சக்தியால் உம் ஆடையை நொடியில் தைத்துவிடுகிறேன்’’ என்ற மௌத்கல்யாயணர் உடனே அதைச் சரிசெய்தார். ‘‘நீர் இப்போதே என்னுடன் வரவேண்டும். இல்லையெனில் உம்மைக் காதைப் பிடித்து தூக்கிக்கொண்டுபோய் புத்தர் முன்னிலையில் சேர்ப்பேன்’’ என்று கூவினார் மௌத்கல்யாயணர்.
சாரிபுத்தர் அமைதியாகப் புன்னகை செய்தார்.
‘‘சரி.. என்னைத் தூக்குவது இருக்கட்டும். இதோ கீழே கிடக்கும் என் துண்டை எடுத்துக் கொடும்’’.
மௌத்கல்யாயணர் அலட்சியமாக அதை எடுக்கக் குனிந்தார். என்ன ஆச்சரியம்? அதை கொஞ்சம் கூட அவரால் அசைக்க முடியவில்லை. தன் மந்திர சக்தி அனைத்தையும் பிரயோகித்தார். ஏன்... நில நடுக்கத்தைக் கூட உண்டு பண்ணினார். அந்த துண்டை அசைக்க முடியவில்லை. தான் தோற்றுவிட்டதை உணர்ந்த அவர் வான் வழியாக ஏரிக்கரைக்குத் திரும்பினார். அவர் வந்திறங்கியபோது தனக்கு முன்பாகவே சாரிபுத்தர் அங்கே அமர்ந்திருந்ததைக் கண்டார். தன் மந்திர சக்திகளைவிட ஆன்மீக ஞானமே வலிமையானது என்பதை அவர் உணர்ந்தார். அந்த கூட்டத்திலேயே தான் உணர்ந்ததை அறிவிக்கவும் செய்தார்.

நள்ளிரவைக் கடந்திருந்தது. பிக்குகள் ஒவ்வொருவராக யுவானிடம் விடைபெற்றுக் கொண்டனர். தனியாக சாளரம் வழியாக கபிலவஸ்துவை நிலவொளியில் யுவான் சுவாங் கண்டார். ஒரு சிலகணங்களுக்கு அந்த சிதைந்த நகரம் உயிர்பெற்றது. அகன்ற வீதியில் வெண்ணிற யானை பெருத்த ஓசையுடன் வேகமாக ஓடியது. அதன் பின்னால் ஒரு சாம்பல்நிறப்புரவி வேகமாகப் பின் தொடர்ந்தது. சிவந்த உயரமான இளைஞன் ஒருவன் முழு கவசமணிந்து கையில் வாளேந்தி அக்குதிரையைத் துரத்திக்கொண்டே ஓடினான். சட்டென்று ஒருகணம் திரும்பிய அவன் முகத்தில் எல்லையில்லா கருணை வழிந்து யுவான் சுவாங்கின் அறையை நிரப்பியது.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவ

logo
Andhimazhai
www.andhimazhai.com