வரலாற்றில் பின் நோக்கிப் பயணித்தல்

திசையாற்றுப்படை - 17
வரலாற்றில் பின் நோக்கிப் பயணித்தல்
Published on

சிட்டி ஆப் காட் (City of God) என்றொரு படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரத்தின் பிரம்மாண்டமான சேரியின் வாழ்வியலை மையப்படுத்திய படம். குறிப்பாக போதைப் பொருள் வியாபாரமும் அதன் உடன்பிறந்த வன்முறையும் அங்குள்ள இளைஞர்களையும் சிறுவர்களையும் சீரழித்துள்ளதைச் சித்தரிக்கும் படம். அந்தத் திரைப்படம் மூன்று காரணங்களுக்காக பெரிதாகக் கவனிக்கப்பட்டது. ஒன்று அதன் கதைகூறும் முறை.

நேர்கோட்டுத் தன்மையல்லாத (நான் - லீனியர்) முறையில் கதைசொன்ன விதம். இரண்டாவது, அடித்தட்டுச் சமூகத்தின் வாழ்வியலை அப்பட்டமாகப் பேசியது. மூன்றாவதாக ஒரு புதிய திரைமொழியையும் அதற்கான மாற்று அழகியலையும் உருவாக்கிய படமாகவும் இருந்தது. இத்தகைய நான் - லீனியர் சினிமாக்கள் உருவாவதில் பல்வேறு படங்களின் பங்களிப்பு இருந்தாலும் எல்லா அம்சங்களும் கூடி வந்த, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக இது இருந்தது. 100 ஆண்டுகளைக் கடந்த திரையுலக வரலாற்றில் புதிய கதைக் களங்களும், கூறு முறைகளும் தொழிற்படுவதற்கு தனிப்பட்ட இயக்குநர்கள் முன்னோடிகளாக இருந்தாலும் அத்தகைய புதிய போக்குகளை, படைப்பாளிகள் உருவாக்க அந்தந்த சமூக வரலாற்றுச் சூழல்களே அடிப்படைக்காரணங்களாக இருக்கின்றன. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் உலகமயச் சூழல் உருவாக்கிய உலகளாவிய பின்நவீனத்துவ குழப்பங்கள், அடித்தள மக்கள் பற்றிய உரையாடல்கள் பொதுவெளிக்கு வந்தமை உட்பட்ட பல்வேறு காரணிகளால் கலை இலக்கிய உலகில் பல்வேறு புதிய மரபுகள் தோன்றின. அதன் திரையுலக வெளிப்பாடே ‘சிட்டி ஆப் காட்’ போன்ற படங்கள்.

வழக்கமாக ஆங்கிலப் படங்கள் தவிர்த்த உலகப் படங்கள், திரைப்பட விழாக்கள் வழியாகவே நமக்கு வந்துசேரும். அதற்கு சில பல ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் 1990களில் திரைப்பட குறுவட்டுகள் (டிவிடி) சென்னையில் ‘டிக் டாக்’ போன்ற கடைகளில் வாடகைக்கும், கள்ளச் சந்தையிலும் கிடைக்கத் தொடங்கின. ஆக ‘சிட்டி ஆப் காட்’ சில மாதங்களில் சென்னைக்கு வந்து சேர்ந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. நம் தமிழ் இயக்குநர்களையும் அந்தப்படத்தின் குரூர அழகியல் உலுக்கி எடுத்தது. உலகப் படங்களை உற்று நோக்கிவரும் உலக நாயகன் அந்தப் பந்தயத்தில் முந்திக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். 2004 இல் கமலின் விருமாண்டி வெளிவந்தது. தொடர்ந்து 2007 இல் அமீரின் பருத்திவீரன் வெளியானது. இவ்விரு படங்களும் தமிழிலும் இந்தியத் திரையுலகிலும் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

கலை இலக்கிய வரலாற்றில், புதிய கருத்தாக்கங்களை, தனிப்பட்ட கலைஞர்களே தொடங்கி வைக்கிறார்கள். ஒரு வகையில் ‘காலம்’ தனிப்பட்ட கலைஞர்கள் மூலமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்று இதைப் புரிந்துகொள்ளலாம். அப்படித்தான் சனநாயகம், சமத்துவம், தனிமனித சுதந்திரம், பாலின சமத்துவம் ஆகிய பேசுபொருட்களும், அதன் கலை வெளிப்பாடான பல்வேறு பாணிகளும் உருவாகியுள்ளன. காலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற கலைஞர்கள் அவ்வண்ணமே உருவாகிறார்கள். இத்தகைய கலை இலக்கிய மாற்றங்கள் மற்றுமான புதிய போக்குகள் மனித சமூகத்தின் முன்னோக்கிய பயணமாகவே இருந்திருக்கின்றன. சிற்சில பின்னடைவுகள் இருந்தாலும் அவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது வரலாறு. கலை இலக்கிய வரலாற்றில் யாரும் பின்னோக்கிப் பயணிக்க முடியாது.

இந்த நீண்ட முன் கதைக்குக் காரணம், சமீபத்தில் காணநேர்ந்த கவுண்டம்பாளையம் திரைப்பட முன்னோட்டமும் அதன் இயக்குநர் ரஞ்சித்தின் பேட்டிகளும்தான். பெரும் போராட்டங்களுக்குப்பின் ஒரு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஒரு அரசியல் கட்சியையும் அது பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களையும் அதீத வன்மத்தோடும் துவேசத்தோடும் கொச்சைப் படுத்துவதான பேச்சுக்களுக்கு தமிழகத்தில் எந்தவிதமான எதிர்வினைகளும் இல்லை. சில யூ டியூப்பர்களைத் தவிர எந்த அரசியல் ஆளுமைகளும் இதைக் கண்டித்தார்களில்லை. பேசிப்பேசி கூடுதல் முக்கியத்துவத்தை உருவாக்கவேண்டாம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கக்கூடும்.

இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதா? வெளியாகவில்லையா? என்பது பற்றி நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. வெளியாகியிருந்தாலும் அது மக்களால் புறம் தள்ளப்படவே செய்யும். ஆக தமிழகப் பார்வையாளர்களெல்லாம் முற்போக்கானவர்கள், ஆகவே பிற்போக்குக் கருத்தியல்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதல்ல. பல காலங்களாக பிற்போக்கான படங்களையும் ரசித்துப் பழக்கப்பட்டவர்கள்தான். ஆனால் படம்பேசும் கருத்து முன்பின் இருந்தாலும் அவர்களுக்கு, அவர்கள் ரசனைக்குட்பட்ட ஒரு திரைப்படமாக அது இருந்தாகவேண்டும். எஜமான், சின்னக்கவுண்டர், நாட்டாமை போன்ற படங்களெல்லாம் சாதியத்தை அல்லது நிலவுடமைச் சமூகத்தை, பெண்ணடிமைத்தனத்தைத் தூக்கிப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைகள் அல்ல. நாயகர்களை மனதில் கொண்டு கதை உருவாக்கும்போது அந்த இயக்குநர்களின் தன்னுணர்வற்ற அடிமனத்தின் வெளிப்பாடாகச் சேர்ந்து கொள்ளும் அம்சங்களே அவை. எல்லாத் தரப்பினரையும் திரையரங்கிற்குக் கொண்டு வருவதைப் பிரதான நோக்கமாகக் கொண்ட இந்த இயக்குநர்கள் சில சமூகங்களை அதிருப்திக்குள்ளாக்க மாட்டார்கள்தானே! சில சமயங்களில் இதற்கு மாறாக சில பெயர்கள், சில சமூக அடையாளங்களை முன்வைத்து பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்துவிடலாம் எனத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட படங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் அந்தப்படங்கள் எவையும் பார்வையாளர்களால் கண்டுகொள்ளப்பட்டதில்லை.

 பாரதிராஜா கூட பசும்பொன் என்றொரு படத்தை இயக்கினார். அதில் சிவாஜியும் இருந்தார். ஆனால் ஒப்பீட்டு அளவில் பாரதிராஜாவின் பிற படங்கள் அளவுக்கான வரவேற்பை அது பெறவில்லை. ‘திருப்பாச்சி அருவாளத் தீட்டிக்கிட்டு வாடா..வாடா’ என்று தாஜ்மகால் படத்திற்காக அவர் அழைத்தபோது தமிழகப் பார்வையாளர்கள், அருவாளத் தீட்டுனதுபோதும்… புள்ளைங்கள படிக்கவையிங்கப்பா… என்று சொல்லி நகர்ந்துவிட்டார்கள். ஒருவேளை ‘தேவர் மகன்’ படத்தின் வெற்றி அவரை அப்படித் தப்புக்கணக்குப் போட வைத்திருக்கலாம். தேவர்மகன் படம் இரண்டு விசயங்களாலேயே ஒரு சாதியப்படமாகத் தடம்புரண்டது. தேவர் மகன் என்ற தலைப்பும், தேவர் காலடி மண்ணே என்ற பாடலும் இல்லாமல் இருந்திருந்தால் அந்தப்படம் இத்தகைய சர்ச்சைகளை உருவாக்கியிருக்காது. அதைத் தவிர்த்துவிட்டு அது ஒரு சிறந்த திரைக்கதையம்சமுள்ள நேர்த்தியான திரைமொழியால ஆக்கப்பட்ட படம்தான். சாதியத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிய வெற்றிபெற்ற படங்களான சின்னக்கவுண்டர், எஜமான், நாட்டாமை போன்ற படங்களின் பொதுத்தன்மை அவை வெகுசன ரசனைக்கு உகந்த வகையிலான திரைப்படங்களாக உருவாக்கப்பட்டவை. ஆக, படங்கள் ‘திரைப்படங்களாக’ இல்லாத பட்சத்தில் அவை தயவு தாட்சன்யமின்றி நிராகரிக்கப்படுவதையே நாம் பார்த்து வருகிறோம். பெரும் தலைவர்களாகக் கருதப்படும் காமராஜர், அம்பேத்கர் திரைப்படங்களும்கூட எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நம் தலைவருக்காக இந்தப்படத்தை பார்த்துவிடுவோம் என்று எந்த சமூகமும் திரண்டு வந்ததை நாம் பார்த்ததில்லை.

உலகம் முழுவதுமே பார்வையாளன் கலைகளின் முன் மட்டுமே தன் சாதி, மத, இன அடையாளங்களைத் தற்காலிகமாக இறக்கிவைத்து இளைப்பாறுகிறான். அதனால்தான் இன்றுவரை அமெரிக்க கறுப்பினத்தவரை அங்கீகரிக்காத வெள்ளையினத்தவரால் ‘ஜாஸ்’ இசையைத் தூக்கியெறிந்துவிட முடியவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரம் உற்பத்தி செய்யப்படும் காலத்தில்கூட, பெரும்பாண்மை இந்துக்கள் வாழும் இந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மானையோ, ஷாருக்கானையோ, சல்மான்கானையோ புறம் தள்ள முடியவில்லை. தலித்துகள் மேல் வெறுப்பை உமிழும் தலைவர்களும் தொண்டர்களும்கூட இளையராஜாவின் மடியில்தான் இளைப்பாறுகிறார்கள். வெறும் விஜய் என்றிருந்தவரின் பூர்வீகத்தை அகழாய்வுசெய்து அவர் விஜய் அல்ல ஜோசப் விஜய் என்ற உண்மையை உலகத்திற்கு அறிவித்தபின்னும் அவர் சூப்பர் ஸ்டாராகத் தொடர்வது எதை உணர்த்துகிறது?

இந்தியத் திரையுலகில் கடந்த 20ஆண்டுகளில் அடித்தளமக்கள் குறிப்பாக தலித்துகள், மதம் மற்றும் பாலினச் சிறுபான்மையர் பற்றிய கதைக்களங்கள் எடுத்தாளப்படுவதைக் கவனிக்க முடிகிறது. இந்தியாவில் நிகழ்ந்து வரும் சமூக அரசியல் மாற்றங்களின் பகுதியாக, விளைவாக யாராலும் தடுக்க இயலாத போக்காகவே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழிலும் புதிய அலையாக அடித்தள, தலித்திய வாழ்வு பேசுபொருளாகியது. குறிப்பாக தலித்திய வாழ்வியலை அரசியலோடு உரத்தகுரலில் பேசத் தொடங்கியவர்களான இயக்குநர்கள் ரஞ்சித், மாரிசெல்வராஜ் இருவரின் படங்களும் பெருவாரியான மக்களால் கவனிக்கப்படுவதற்குக் காரணம் பார்வையாளர்களின் மனமாற்றமல்ல. அவர்களின் படங்கள் ‘படங்களாக’ இருப்பதால்தான். ஒரு திரைப்படம் தரக்கூடிய திரையனுபவத்தை தங்கள் தேர்ந்த திரைமொழியால் வெளிப்படுத்தும் ஆற்றலே அவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. அவர்களின் தலித் அரசியலை வெறுப்பவர்கள்கூட அவர்களின் படங்களைப் பார்த்தாக வேண்டியதாகிறது. ஆகவே காலம் புரண்டு படுக்கிறபோது கீழிருப்பது மேல் எழுவதும் மேலிருப்பது கீழ் சரிவதையும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். கவுண்டம்பாளையம் ரஞ்சித் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கவும் முடியாது. கலை இலக்கியப் போக்கை எதிர்த்திசையில் நகர்த்தவும் இயலாது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com