அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை உளவுத்துறை பரப்பியது, ஆதரவாளர்கள் பதறினர், செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல், ஊடகங்கள் அரசின் நெருக்கடிக்குள்ளாகியிருந்தன.
அப்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்த நாளிதழை பிரபாகரனே படித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டது நக்கீரன், பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் நொடியில் ஆற்றியது அந்தப்படம், பின்னாட்களில் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதும் உறுதியானது.
ஆனால் நக்கீரன் வெளியிட்ட அந்தப்படம் உண்மையாக எடுக்கப்பட்டதில்லை, வெட்டி ஒட்டப்பட்டது என்னும் ரகசியத்தை நக்கீரன் கோபால் ஒத்துக்கொண்டார். இப்போதுள்ள AI தொழில்நுட்பத்தால்கூட செய்யமுடியாத தரத்தோடு அந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது, அதைச் செய்தவர் கோபால்.. அவர் அடிப்படையில் ஒரு ஓவியர், வடிவமைப்பாளர்.
முரசொலி, தாய் போன்ற இதழ்களின் வடிவமைப்பாளராக இருந்த கோபால், தராசு பத்திரிகையின் வடிவமைப்பாளராகப் பணிபுரிந்ததோடு அதன் தயாரிப்பு மற்றும் விநியோகப்பிரிவின் பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டார்.
அதில் கிடைத்த தொடர்புகளைத் தவிர எந்தப் பொருளாதாரப் பின்புலங்களும் இல்லாத நிலையில் வெறும் நாலாயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டுதான் அவர் நக்கீரனைத் தொடங்கினார், 1988 ஏப்ரல் 20-ல் நக்கீரனின் முதல் இதழ் வெளியானது.
அனுபவமும், திறமையும், தகுதியான பணியாளர்குழுவும் உள்ள நம்பிக்கையோடு அவர் களமிறங்கினார்.. அதன்பிறகு எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் சோதனைகளையும், தடைகளையும் சந்தித்து வென்றார்.
ஆரம்பித்த நாளிலிருந்து எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல், குறிப்பாக அதிகாரத்தோடு சமரசம் செய்துகொள்ளாமல் செய்திகளை வெளியிட்டதற்காக நக்கீரனும், அதன் செய்தியாளர்களும், கோபாலும் சந்தித்த துயரங்கள், வேதனைகள் ஏராளம், அதிலும் ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்காலங்களில் நேரடியாகவே அடக்குமுறைகளிலும் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
நக்கீரன் சார்பாக காமராஜ் ஆட்டோசங்கரை சிறையில் ரகசியமாகச் சந்தித்தார், அவனது தன் வரலாற்றினைக் கேட்டறிந்து அதை வெளியிடும் உரிமையைப் பெற்றார். அதில் அவனுக்கு உதவிய, அவனால் பல்வேறு வகைகளில் ஆதாயம்பெற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் பட்டியலும் அடங்கியிருந்தது. ஆட்டோசங்கரின் மரண வாக்குமூலம் என்னும் பெயரில் வெளியாக இருந்த அந்தத் தொடரை அன்றைய அரசு தடை செய்தது..
பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பைப்பெற்று அத்தொடரை கோபால் வெளியிட்டார்..
அதன்பிறகு நக்கீரன் செய்த சம்பவம்- அ.தி.மு.க அலுவலகத்தைக் கைப்பற்ற நடந்த சண்டையை நேரடியாகப் பதிவு செய்தது. அந்தப் படச்சுருளைக் கைப்பற்ற ஜெ.அணியும் நடத்திய வழிமுறைகள் வெகு சுவாரசியமானவை, அதைக் காப்பாற்ற நக்கீரன் எடுத்த நடவடிக்கைகள் சாகசம் நிறைந்தவை.
அதுவரை தன் தம்பிகளை வழிநடத்திக்கொண்டிருந்த கோபால், நேரடியாகக் களமிறங்கியது வீரப்பன் காணொளிகளுக்காகத்தான். முதன்முதலில் வீரப்பனின் புகைப்படத்தை வெளியிட்டது முதல் வீரப்பன் கடத்திய ராஜ்குமாரை மீட்டதுவரை நக்கீரன் கோபால் நடத்திய சாகசங்களை கடந்த தலைமுறை நேரடியாக அறியும்.. இந்தத் தலைமுறை zee5 தளத்தில் நக்கீரன் தயாரித்து வெளியிட்ட கூஸ்முனுசாமி வீரப்பன் வலைத்தொடர் மூலமாக அறியும்.
மாயாவியாக அறியப்பட்ட வீரப்பனை வெளி உலகின் பார்வைக்குக் கொண்டுவந்து அவரது தரப்புக் காரணங்கள் கோரிக்கைகள் ஆகியவற்றை அறிய வைத்தது நக்கீரனுக்கும், கோபாலுக்கும் பெரும் பேரையும், புகழையும் கொடுத்தது. அதைவிடவும் அதிகமாக அடக்குமுறைகளையும், வழக்குகளையும் பெற்றுத்தந்தது. நீண்ட நெடிய வருடங்கள் நீதிமன்றங்கள் சிறைச்சாலைகள் என அவரும், அவரது செய்தியாளர்களும் அலைந்து திரிய நேரிட்டது, தமிழ்நாடு, கர்நாடகாவை உள்ளடக்கிய சிறப்பு அதிரடிப்படையும், அரசாங்கங்களும் நக்கீரனை முடக்க நடத்திய முயற்சிகள் அனைத்தையும் முறியடித்தார் கோபால்.
வீரப்பன் தரப்பை வெளிக்கொண்டுவந்தது மட்டுமன்றி அதிரடிப்படையினர் அப்பாவி மலைவாழ் மக்களின் உடமைகளைக் கொள்ளையடித்தது, போலி மோதல்களில் அவர்களைக் கொன்றது, சித்ரவதை கேம்ப்கள் அமைத்து கொடூரங்கள் புரிந்தது, பொய்வழக்குகளில் சிறையில் அடைத்தது என அனைத்து சட்டவிரோதச் செயல்களையும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார் கோபால், அதுமட்டுமின்றி இவைபற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதியரசர் சதாசிவம் ஆணையம் முன் மக்களைத் திரட்டிக் கொண்டுவந்து சாட்சியளிக்க வைத்தார்.
உண்மையில் ஒரு பெரும் அரசியல் இயக்கம் செய்ய வேண்டிய பணிகளைகோபால் செய்தார். ஆனால் அதற்காக அவர் கொடுத்த விலை மிக அதிகம்..
முதுபெரும் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி அவர்கள் நக்கீரன் மீதான அடக்குமுறைகளைப் பின்வருமாறு பட்டியலிடுகிறார்
-கால் முறிக்கப்பட்ட கதிரைதுரை
-விரல் வெட்டப்பட்ட சண்முகசுந்தரம்
-நக்கீரனை அடித்துக் கொடுத்தற்காக இன்னுயிர் பறிக்கப்பட்ட அய்யா கணேசன்
-வீரப்பனைச் சந்தித்தற்காக போலீசாரின் கொலைவெறிக்கு ஆளாகிக்கொடுமைகளை அனுபவித்த சிவசுப்பிரமணியன், ஜீவா
-நக்கீரன் விற்பனையாளர் என்பதற்காக சிறையில் தள்ளப்பட்ட ராஜபாளையம் பிச்சையா
-நக்கீரனை விற்பனை செய்ததற்காக சித்ரவதை செய்யப்பட்ட நிருபர்கள்
என்று அக்கிரமத்தை எதிர்த்து நக்கீரன் நடத்திய தர்மயுத்தத்தில் பங்குகொண்ட வீரமறவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
எது எப்படியாயினும் வெறும் வியாபாரமாக இல்லாமல் ஊடகதர்மத்தோடு கொள்கைரீதியாக தமிழ் இன,மொழி உணர்வுகளுக்கும் சமூகநீதிக்கும் ஆதரவாகவே நக்கீரன் எப்போதும் நின்றிருக்கிறது.
தென்தமிழகத்தின் சிறுநகரமொன்றிலிருந்து எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்து, நாலாயிரம் ரூபாயில் ஒரு பத்திரிகையைத் தொடங்கிய கோபால், இன்று இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அதற்காக அவர் கடந்து வந்திருக்கும் போராட்டப்பாதை மிக நெடியது.