"தன்னலம் கருதாத நூறு வழக்கறிஞர்களை உருவாக்குவதே லட்சியம்!''

Mohan
ப.பா.மோகன்
Published on

இவர்கள் செய்திருப்பது மிகக்கொடூரமான சாதி ஆணவப்படுகொலை, நியாயமாக இவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும், ஆனால் நான் கொள்கையளவில் மரண தண்டனைக்கு எதிரானவன், எனவே இந்தக்கொடூரக் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும், சிறையிலிருந்தபடியே இந்த சமூகம் சமத்துவமானதாக மலர்வதை இவர்கள் காணவேண்டும்,”

ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் கூடுதல் அரசுதரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களின் வாதம்தான் இது!

சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், ஸ்வாதியும் நாமக்கல் கல்லூரியொன்றில் படித்துவந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள், 2015 ஜுன் 23 அன்று திருச்செங்கோடு மலைக்கோவிலில் பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர்.

அதே தேதியில் திருச்செங்கோட்டில் மதவாத அமைப்புகளின் தூண்டுதலின் பேரால் கொங்குவேளாளர் சாதிசங்க அமைப்பின் சார்பாக பெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு எதிரான கண்டனக் கூட்டமும் நடந்தது, அதில் கலந்துகொண்டவர் தீரன்சின்னமலை பெயரால் சாதி அமைப்பு வைத்திருக்கும் யுவராஜ்.

திருச்செங்கோடுமலை அந்தப் பகுதியிலிருக்கும் காதலர்கள் சந்தித்து உரையாடுவதற்கான இடம், தனது பரிவாரங்களுடன் அங்கு செல்வது யுவராஜின் வழக்கம். தனது சாதியைச் சேர்ந்த பெண்ணுடன், மற்றசாதி இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தால் அடித்து விரட்டுவது அவரது சமூகச் செயல்பாடு.

சம்பவ தினத்தன்று தனது ஆதரவாளர்களுடன் அவ்வாறே சென்ற யுவராஜ் அங்கு கோகுல்ராஜும், ஸ்வாதியும் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறார், விசாரித்தபோது கோகுல்ராஜ் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது, அவரை அடித்து, கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச்சென்றனர்.

மறுநாள் ஈரோடு பள்ளிபாளையம் அருகில் தலை துண்டிக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் கோகுல்ராஜ் பிணமாகக்கிடந்தார், தற்கொலை செய்துகொள்வதாக ஒரு கடிதமும் அவரிடமிருந்து கிடைத்தது.

இதனை கொலைவழக்காகப் பதிவு செய்யவே பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த இளம் காவல்துறை அதிகாரி விஷ்ணுப்ரியா மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

அது மட்டுமன்றி இந்த வழக்கின் சாட்சிகள் 42 பேர் பிறழ்சாட்சிகளாயினர், வழக்கின் வலுவான சாட்சியமளித்த ஸ்வாதியும் தான் திருச்செங்கோடு மலைக்குப் போகவே இல்லையெனவும், யுவராஜைப் பார்க்கவில்லையெனவும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தன் வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டார், இப்படியாக இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் பெரும் முயற்சிகள் நடந்தன.

இந்நிலையில் கொலைசெய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா, இவ்வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் வழக்கறிஞராக ப.பா. மோகனை நியமிக்குமாறு மனுக்கொடுத்தார். பல தடைகளைக் கடந்து ப.பா.மோகன் இவ்வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

இப்படி நியமிக்கப்பட்டாலும் அவருக்கு வேண்டிய உதவிகள் எதுவும் முறையாகக் கிடைக்கவில்லை.. தனது ஊரான பவானியிலிருந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு பெரும்பாலும் அவர் தனது சொந்த செலவிலேயே செல்ல நேர்ந்தது.

வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் பிறழ்சாட்சியங்களாக மாறிய நிலையில் இந்த வழக்கில் குற்றத்தை நிரூபிக்க எந்த நம்பிக்கையும் இல்லாத சூழல்தான் இருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அகங்காரத்தோடு விடுதலைக்குக் காத்திருந்தனர்.

இந்த வழக்கின் சவால்களை உணர்ந்த மோகன் மூன்று அம்சங்களை மட்டும் தனது வாதத்துக்குப் பலமாக வைத்துக்கொண்டார்.

1.மின்னணு சாட்சியம் 2.இது கொடூரக்கொலை என்ற கூடுதல்மருத்துவரின் பிணக்கூராய்வு அறிக்கை 3. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யுவராஜின் பேச்சு

திருச்செங்கோடு  மலைக்கு நான் போகவேயில்லை, கோகுல்ராஜைப் பார்க்கவே இல்லை என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருந்தார் யுவராஜ், ஆணவக்கொலை குறித்து புதியதலைமுறையில் கார்த்திகைச்செல்வன் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தினார். அதில் தானாகப்போய் கலந்துகொண்ட யுவராஜ் உண்மையில் நடந்தவை அனைத்தையும் பேசியிருந்தார், ஏறக்குறைய ஒப்புதல் வாக்குமூலமாக இருந்த இந்தப் பேச்சை வைத்து தனது வாதத்தை வலுவாக்கினார், இதில் கார்த்திகைச் செல்வனும் சாட்சியமளித்தார்.

முக்கிய சாட்சியங்களின் பிறழ்வை நிராகரித்து மோகனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்பத்குமார் யுவராஜுக்கு மூன்று வாழ்நாள் ஆயுள்தண்டனையும், மேலும் பத்து பேருக்கு வாழ்நாள் ஆயுள்தண்டனையும் கொடுத்து 2022 மார்ச் 5 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தார்.

அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் பவானியில் பிறந்தவர் ப.பா.மோகன். அவரது தந்தை பி.என்.பாலு, தாயார் பாக்யலட்சுமி இருவரும் கம்யூனிஸ்ட்கள், மோகன் மட்டுமின்றி அவரோடு பிறந்த மற்ற ஆறு பேருமே கம்யூனிஸ்ட்களாகவே வளர்க்கப்பட்டனர். அவரது வீடு கட்சி அலுவலகம் போல கம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்து தங்கிச்செல்லும் இடமாகவே இருந்தது.

மோகன் குமாரமங்கலத்தின் மீதுள்ள மரியாதையின் காரணமாகவே இவருக்கு மோகன் என்ற பெயர் வைக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்(AISF) மாநிலப்பொதுச்செயலாளராக முழுவீச்சில் பணியாற்றிய ப.பா.மோகன் வழக்கறிக்கறிஞரான பிறகு தொழிற்சங்கப்பணிகளில் ஈடுபட்டார்.

ஈரோடு நகராட்சியின் துப்புரவுப் பணியாளர் பாதாளச்சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தார், நகராட்சி அவருக்கு இழப்பீடு கொடுக்க மறுத்தது. அதுகுறித்த வழக்கில் பணியிலிருந்தபோது அத்தொழிலாளி குடிபோதையால் இறந்தார் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். நிரம்பி வழியும் சாக்கடை இருக்கும் தெருவைக் கடக்கும்போதே தாங்கமுடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்லும் நாம், அதில் மூழ்கி சுத்தம் செய்யும் தொழிலாளி குடிப்பதைக் குற்றமாகப் பார்ப்பதும், அதனைக் காரணம் காட்டி இழப்பீட்டை நிராகரிப்பதும் தவறு என்று மோகன் வாதம் செய்தார். அத்தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது. இதுவே இவரது முதல் வழக்காகும்.

பர்கூர் சோள்கணை பகுதி மலைவாழ் மக்கள் அங்கு வசிக்கவும், கிடைக்கும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் வனப்பாதுகாப்புச்சட்டம் உத்தரவாதமளிக்கிறது, மக்கள் அங்கு கிடைக்கும் புளியை அந்தியூர் சந்தையில் விற்று வாழ்ந்து வந்தனர், அதற்கு மாமூல் வசூலித்த வனத்துறையினர் அதில் ஐம்பது சதவீதம் பங்கு தரவேண்டும் என்று கேட்டனர், தர மறுத்த்தற்காக 27 மலைவாழ்மக்கள் மீது பொய்வழக்கு புனையப்பட்டது. ப.பா.மோகன் இதற்கு எதிராகவும் வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத்தந்தார்.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் தேவாரம் உட்பட்டவர்கள் பொய்வழக்கு சுமத்தி கைதுசெய்த அப்பாவி மக்களின் விடுதலைக்கும், நிவாரணத்திற்கும் போராடி வாங்கித்தந்தார்.

மலைவாழ் மக்களின் முறையீடுகளை ஈரோடு மனித உரிமை நீதிமன்றம் தொடர்ச்சியாக மறுத்து வந்தது. இதற்கெதிராக ஐ.நா. சபையின் வியன்னா தீர்மானப்படி மனித உரிமைச் சட்டத்தை அமல்படுத்த ப.பா.மோகனும் அவரது உதவியாளர்களும் வி.பி.குணசேகரன், பி.எல். சுந்தரம், மோகன்குமார் போன்ற இடதுசாரித் தலைவர்களும் போராடி ஈரோட்டுக்கு மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் மனித உரிமைதொடர்பாக குறிப்பிடத்தக்க உத்தரவைப் பெற்றுக்கொடுத்தனர். பியூசிஎல் தலைவர் கண்ணபிரான் இதில் முக்கியப் பங்காற்றினார்.

இதேபோல திருப்பூரில் சாய்க்கழிவால் நொய்யலாறு மாசுபடுவதற்கெதிராகவும்,அங்கு நடக்கும் தொடர்கொலைகளைக் கண்டித்தும் புரட்சிகர இளைஞர் முன்னணி போராட்டம் நடத்தியது. இதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த மூவர் மீதும், மூன்று ஈழத்தமிழர்கள் மீதும்  11 பொய்வழக்குகள் போடப்பட்டன. ப.பா.மோகன் அவர்களுக்காக வாதாடி விடுதலை பெற்றுத்தந்தார்.

திட்டமிட்டு இஸ்லாமிய மக்கள்மீது கோவையில் கலவரம் நடத்தப்பட்டு, 18 இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டனர், சொத்துகள் உடமைகள் சூறையாடப்பட்டன. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் நடந்த தொடர்கலவரம், படுகொலைகள் தொடர்பாக 167 இஸ்லாமியர்கள் மீது வழக்குப் போடப்பட்டு காலவரையறையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர், இதில் 18 பேர் தவிர மற்றவர்களுக்கு மோகன் விடுதலை வாங்கித்தந்தார்.

மேலவளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  தலித் உள்ளாட்சி நிர்வாகிகளைக் கொன்ற வழக்கை சேலத்துக்கு மாற்ற வைத்து, தன் பொறுப்பில் சாட்சிகளைப் பாதுகாத்து குற்றவாளிகள் 17 பேருக்கு தண்டனை வாங்கித்தந்தவர் ப.பா.மோகன்.

இப்போதும் மலைவாழ் மக்களைப் பாதுகாக்கவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கவும் ஊரூராக ஓடிக்கொண்டே இருக்கிறார் மோகன். தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் வகையில் தன்னலங்கருதாத நூறு வழக்கறிஞர்களை உருவாக்குவதும், ஒருங்கிணைப்பதுவுமே தனது லட்சியம் என்கிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com