சிறை எனக்கு, தண்டனை உனக்கு!

பெருவழிப்பாதை -6
சிறை எனக்கு, தண்டனை உனக்கு!
Published on

ஒப்பீட்டளவில் கொஞ்சம் எளிதான வேலை கல்லூரிப் பேராசிரியர் வேலை, அதுவும் தமிழ்ப் பேராசிரியர் வேலை... ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து முடித்தவுடன் படிப்பதை நிறுத்திவிடலாம்...

பத்துமுப்பது நகைச்சுவைத்துணுக்குகளை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டால்போதும், பட்டிமன்றப் பேச்சாளராகி பலநாடுகள் சுற்றலாம்.. பணம் சேர்க்கலாம், தொலைக்காட்சிப் பிரபலமாகலாம்

ஆனால் ஒரு தமிழ்ப்பேராசிரியர் தன் பணிக்காலத்தில் எட்டுமுறை சிறை சென்றார், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றபின் பதினெட்டு மாதங்கள் தேசப்பாதுகாப்புச் சட்ட்த்தில் பொடா கைதியாக சிறையிலிருந்தார்..

அவர் பெயர் சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனர், இன்றைய இளைய தலைமுறைக்காக திராவிடப்பள்ளியை நடத்திக்கொண்டிருக்கும் திராவிடக் கருத்தாளர்,

தமிழ்ப்பற்றாளர். முழக்கமில்லாமல் அணுக்கமாக உரையாடும் தொனியிலான மேடைப்பேச்சுகளும், தொலைக்காட்சி விவாதங்களுமே அவரது அடையாளம்

அவரது தந்தையார் காரைக்குடி இராம.சுப்பையா, பெரியாரின் நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர்களில் ஒருவர், திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர்..

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவரது தந்தையார் தி.மு.க. தலைவர்களை அழைத்துவந்து பொதுக்கூட்டங்களை நடத்துவார்.. தலைவர்களின் தேதி கிடைத்தவுடன் அந்தத் தேதியில் கூட்டம் கேட்கத்  தன் மகனைத் தயார் செய்துவிடுவார்.. முன்வரிசையில் மண்ணைக்கூட்டி அச்சிறுவனை அமரவைத்துவிட்டு கூட்டம் முடியும்வரை சுற்றிச்சுற்றிவந்து கூட்டத்தைக் கண்காணித்துக்கொண்டிருப்பார்

கூட்டம் முடிந்து தன்மகனின் கைப்பிடித்து அழைத்துச் சென்றபடி அன்றைய பேச்சாளரின் பேச்சுகுறித்து தன் மகனிடம் விசாரிப்பார். முடிந்தவரைக்கும் பேச்சாளர் பேசிய தொனியிலேயே தன் தந்தைக்குப் பேசிக்காட்டுவான் அச்சிறுவன், முரசொலி, குத்தூசி ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் வாய்விட்டு சத்தமாகப் படித்துக் காட்டவேண்டுமென்பதும் தந்தையார் அவருக்கு இட்ட பணி.. இப்படியாக பிஞ்சுப்பருவம்தொட்டே திராவிடப்பேச்சும் கருத்துகளும் அவருள் பதிந்தன..

கல்லூரியில் படிக்கும்காலத்தில் அவருக்கு இரண்டு கதாநாயகன்கள்,  ஒன்று பெரியார், இன்னொன்று எம்.ஜி.ஆர் என்பது அவரை அறிந்தவர்கள்கூட அறியாத ரகசியம், காலப்போக்கில் அவர் மனதில் பெரியார் மட்டுமே நிலைபெற்றார்.

சென்னை கெளரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரியில் சுப.வீ. தமிழ்ப்பேராசிரியரானார்.. ஈழத்தில் ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே சுப,வீ. விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்தார்.. விடுதலைக்குயில்கள் என்னும் அமைப்பையும், மாத இதழையும் நடத்தினார்.. இன உணர்வுள்ள இளைஞர்கூட்டம் அவர் பின்னால் திரண்டது, புலிகளை ஆதரித்து பல பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்தார்

1990-ல் நெடுமாறனோடு சேர்ந்து தஞ்சையில் தமிழர் தன்னுரிமை மாநாடு நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்

1991-ல் ஈழப்போராட்டம், திராவிட உணர்வுகளுக்கான இதழாக  இனி என்னும் மாத இதழை ஆரம்பித்தார், ராஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்ட காலத்தில் ஈழத்தைப்பற்றியும், புலிகளைப்பற்றியும் பேசத்தயங்கிய காலத்தில் இனி இதழின் அட்டைகளை கர்னல் கிட்டு, தம்பி பிரபாகரன் படங்கள் அலங்கரித்தன

இக்காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியதால் பலமுறை சிறைக்கு அனுப்பப்பட்டார்..

சிறையிலிருந்து வந்தபிறகும் கவிஞர் மு.மேத்தா, இயக்குநர் வி.சி.குகநாதன், ஆகியோரோடு சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரப்பயணத்தை மேற்கொண்டார்..

சிறையிலிருந்த நாள்களில் எல்லாம் சிறையிலிருப்பதாகச் சொல்லி சம்பளமற்ற விடுமுறைக்கு விண்ணப்பிப்பதும், பிணையாணை பெற்று வந்தபிறகு பணியில் சேர்வதுமாக அவர் ஆசியர் பணி தொடர்ந்தது.. சிறையிலிருக்கிறேன்னு எழுதாம, சொந்தவேலை காரணமாக என்றாவது எழுதிக்கொடுங்களேன் என்றது கல்லூரி நிர்வாகம். ‘சிறை செல்வது என் சொந்த வேலை காரணமாக இல்லையே, இதனால் வேலை போகுமென்றால் போகட்டும்’ என மறுப்பார்.

1996-ல் இப்படியாக வேலூர் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது கல்லூரியிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார், அந்த சமயத்தில் அவருக்காக வாதாடி, மீண்டும் அந்த வேலையைப் பெற்றுத்தந்தவர் அப்போதைய வழக்கறிஞரும், பின்னாளில் நீதியரசருமான தோழர் சந்துரு, இதற்கான கட்டணமெதுவும் வாங்க மறுத்துவிட்டார் சந்துரு.

தனது 45-வது வயதில் கல்லூரி வேலையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று நேரடி அரசியலில் ஈடுபட்டார், மாணவர் நகலகம் அருணாச்சலம் அவர்களை வெளியீட்டாளராகக்கொண்டு நந்தன் இதழைத் தொடங்கினார், இயக்கப்பணிகளைத் தொடர்ந்தார்.

தனது மூன்று பிள்ளைகளில் இருவருக்கு சாதிமறுப்புத் திருமணம்  செய்துவைத்தார். வெளிநாட்டில் வசிக்கும் அவரது மகள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது என் பேரக்குழந்தை தமிழ்மண்ணில்தான் பிறக்கவேண்டுமென மகளைத் தன் வீட்டிற்கு வரவழைத்தார்.

மகள் வந்த சிலநாட்களில் தேசபாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்கள் சிறையிலிருந்தார் சுப.வீ., அவர் தன் பேரனை சிறையிலேயே காண நேர்ந்தது. சிறையிலிருந்த அந்த நேரத்தில் அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதம் உணர்வாளர்கள் மத்தியில் இன்னும் உருக்கமாக நினைவுகூரப்படுகிறது, ”சிறை எனக்கு, தண்டனை உனக்கு..” என்பது அதிலிருக்கும் காவியவரி.

பல தமிழ்த் தேசியர்கள் ஜெயலலிதா அம்மையார் காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு தி.மு.க. ஆளும் காலத்தில் மட்டும் கடுமையாகக்குரல் கொடுப்பார்கள், அவர்கள் தேசியத்தமிழர்கள். மென்மையாகவும், உறுதியாகவும் எப்போதும் தமிழர் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்துக்கொண்டே இருப்பவர் சுப.வீரபாண்டியன் என்னும் திராவிடத்தமிழர்.

காலம்பூராவும் கால்தேய நடந்து கத்திக் கொண்டிருப்பதால் பணமோ, பதவியோ கிடைக்கப்போவதில்லை என்று இவர்களுக்கும் தெரியும்.. ஆனாலும் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். நம் இனத்தின், மொழியின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் பின்னால் இப்படி ஓராயிரம் பேர் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com