பெயரைப் போலவே உலகளாவிய தத்துவத்தையும், தொன்மத்தையும் இணைக்கும் மிகநீண்ட ஒற்றை ஓவியக்கோடுதான் டிராட்ஸ்கி மருது
காந்தியவாதியாக இருந்து பின் ட்ராட்ஸ்கியவாதியாக மாறிய மருதப்பன் தன் மகனுக்கு இந்தப் பெயரைச் சூட்டினார், ஓவியக்கலை, சிற்பக்கலை மற்றும் தரமான உலகத் திரைப்படங்களை நேசித்த மருதப்பன், தன் மகனையும் அவ்வாறே ஊக்குவித்தார்
மருதுவும் பள்ளிப்பருவத்திலிருந்தே வரையத் தொடங்கிவிட்டார்.. ஓவியத்தின் நுட்பங்களைக் கற்பிக்கும் புத்தகங்களையும், உலகின் பெருந்தலைவர்களின் புத்தகங்களையும் தந்தையார் மகனுக்குக் கொடுத்து ஊக்குவித்தார்.. டாலி, பிக்காஸோ போன்றவர்களையும் அப்போதே அவர் அறிமுகப்படுத்தினார்..
இப்படியாக மருது தன் பிள்ளைப்பருவத்திலேயே அரசியல், பண்பாட்டுத்தளங்களில் தெளிவான பார்வையுடனேயே ஓவியப்பாதை-யில் தன் பயணத்தைத் தொடங்கினார்
அன்றிலிருந்து இன்றுவரை தத்துவமாகவும், தொழில்நுட்பமாகவும் காலமாற்றங்களில் பின்தங்கிவிடாமல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே முன்வரிசையில் நிற்கிறார்
எண்பதுகளின் மத்தியில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் HOW என்னும் இதழொன்றில் அவர் படித்த ஒரு கட்டுரை அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.. இயல்பாகவே தனது ஓவியங்கள் அசையவேண்டும் என்ற தாகத்தில் இருந்த அவருக்கு கம்யூட்டர்- ஓவியர்களின் நண்பன் என்னும் அந்தக் கட்டுரை புதிய பாதையைத் திறந்தது. அதுகுறித்து தேடித்தேடி வாசித்து அதன் தொழில்நுட்பத்தைக் கற்றறிந்தார்.. ஒரு கம்ப்யூட்டரையும் வாங்கினார்..
அன்றைக்கு கம்யூட்டர் வாங்கிய விலைக்கு சென்னையின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பெரிய வீட்டையே வாங்கியிருக்க முடியும். கம்யூட்டர் வாங்கியபிறகு கித்தானையும், தூரிகையையும் கொண்டு வரையும் மரபுரீதியான ஓவியங்களை புதிய பரிமாணங்களோடு, கம்யூட்டர்கொண்டு வரையத்தொடங்கினார், இது கணினி கொண்டு வரையப்பட்ட ஓவியம் என்ற குறிப்போடு விகடன் இவரது ஓவியத்தை வெளியிட்டது. ஓவியங்கள் மட்டுமின்றி அனிமேஷன், மற்றும் திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சிகளையும் வரையத் தொடங்கி, இன்றைய செயற்கை நுண்ணறிவு வரைக்கும் அவர் காலமாற்றங்களோடு சேர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறார்.
பெரும்பாலும் நமது தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்பட்ட அரசர்களின் உடையமைப்பு, அரண்மனைகளெதுவும் தமிழ்த்தன்மை கொண்டவையல்ல, அவை மராத்தியர்களின் தாக்கம் கொண்டவை என்கிறார் மருது.. அவர் கலை இயக்குநராகப் பணிபுரிந்த தேவதை படத்தில் தமிழ் சிற்றரசனின் அசலான அரங்கையும், எளிய உடைகளையும் காட்சிப்படுத்தியிருந்தார்
தொன்மங்களை நவீனப்படுத்துவதும், ஓவியங்களில் தமிழ் அடையாளங்களை மீட்டெடுப்பதுவுமே நோக்கமென சொல்லும் மருது வெறும் துறை சார்ந்த வெற்றிக்காகவோ, பொருளீட்டும் நோக்கத்திற்காகவோ தன் ஓவியங்களைப் பயன்படுத்தவில்லை, ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களோடு சேர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார்
இயக்கம் சார்ந்த இதழ்கள், பிரசுரங்கள், இலக்கிய இதழ்கள், இலக்கிய நூல்களின் அட்டைகள் என அவர் வரைந்த ஓவியங்களுக்கு அவர் ஊதியம் எதுவும் பெற்றதில்லை. இப்படியான சமூகப் பங்களிப்பாகத்தான் அவரது ஓவியங்களில் பெரும் பகுதி வரையப்பட்டிருக்கின்றன
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் ஈழத்துக்கு அழைக்கப்பட்டு, போராளிகளின் கலைப் பிரிவுக்கு ஓவியம் குறித்த பயிற்சி அளித்தவர், அப்போது பிரபாகரனிடமும், மற்ற புலித்தலைவர்களிடமும் தான் கண்ட அர்பணிப்பையும், ஒழுங்கையும் நெகிழ்வோடு சொல்வதைக் கேட்டால் மெய்சிலிர்க்கும்.
தான் கற்றவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கையளித்துக் கொண்டே இருக்கும் மருது, தமிழ்நாடு அரசின் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்
சமகாலத் தமிழர்களுக்கு வார்த்தைகளில் இருக்கும் தேர்ச்சியும், பார்வையும் மற்ற துறைகளில் குறைவாக இருக்கிறதென்று கவலையோடு சொல்கிறார் மருது. உலக சமூக மாற்றங்களை தொலைநோக்குக் கண்கொண்டு பார்க்கவும், அவற்றோடு சேர்ந்து பயணப்படவும் நம் பார்வையும் அக்கறையும் இன்னும் வளர்ச்சி பெறவேண்டும் என்கிறார்..
நம் அரசு அரசியல் நெறிசார்ந்த செயல்பாட்டில் முன்னணியில் இருந்தால் மட்டும் போதாது, பண்பாடு சார்ந்த தளங்களிலும் மிக ஆழமான பார்வையோடும், செயல் திட்டத்தோடும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
பல்வேறு நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் தற்காலத் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான ஒருங்கிணைந்த தமிழ்ப்பாடத்திட்டத்தை வகுத்ததில் மருதுவின் பங்கு மகத்தானது.தற்போது அவர் மாணவர்களைச் சந்தித்து உரையாடுவதில் பெரு விருப்பம்கொண்டவராக இருக்கிறார்.
வெவ்வேறு கலைவடிவங்களையும், நுண்கலை களையும் ஒரே வளாகத்தில் கற்பதற்கான செயல்திட்டம் உருவாகவேண்டுமென்பது அவரது விருப்பமாக இருக்கிறது, இதுபோன்ற பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு வாய்ப்பளிக்கும் கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும்
தமிழ்நாட்டின் ஒவ்வோர் எழுச்சியும் இந்தியாவுக்கு வழிக்காட்டுகிறது. எனவே இங்கு எந்த பண்பாட்டு எழுச்சியும் உருவாகிவிடாமல் தடுப்பதில் பல சக்திகள் ஈடுபட்டுள்ளன. இவற்றை அடையாளம் கண்டு முறியடிக்க இந்த அரசால் மட்டுந்தான் முடியும், இதில் ஐந்தாண்டுகள் பின்தங்கிவிட்டால், அதிலிருந்து மீள்வதற்கு இருபதாண்டுகளுக்கு மேலாகும் என்றும் எச்சரிக்கிறார் மருது
டிராட்ஸ்கி மருது என்பது வெறும் பெயரன்று. நுண்கலைகளின் வாழும் வரலாற்று ஆவணம்!