இசையரசி - 38

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்
பி. சுசீலா
பி. சுசீலா
Published on

“தேனிலையது: தேனினுமினியது.

தூ நிலையது: வான் நிலையது.

ஊன் உருக்கும்: உயிர் ஒளிர்விக்கும்.

கானத்தால் காலம் நிறுத்தும்

ஞாலத்தில் பி. சுசீலாவின் குரல் -இசையமைப்பாளர் திரு. ரமேஷ் விநாயகம்.

“ப்ரியா” – எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த இந்தப்  படம் இளையராஜாவுக்கும் பி. சுசீலாவுக்கும் ஒரு மைல் கல் எனலாம்.

இதன் பாடல்களுக்கான மெட்டுக்களை பெங்களூரில் லால் பாக் மைதானத்தில் கம்போஸ் செய்த இளையராஜா சென்னை வந்ததும் அவற்றை புதுமையாக ஸ்டீரியோபோனிக் தொழில் நுட்பத்தில் அமைக்க விரும்பினார்.  சரியாக அந்த நேரத்தில் கே. ஸ்டீரியோபோனிக் ஜே. ஜேசுதாஸ் தனது “தரங்கிணி” ஸ்டூடியோவில் புதிய இசைக்கருவிகளை வாங்கி வைத்து தனது பாடல்களை “ஸ்டீரியோ” முறையில் பதிவு செய்துகொண்டிருந்தார். இளையராஜாவின் விருப்பத்தைக் கேட்டதும் உற்சாகமான ஜேசுதாஸ் மேம்பட்ட தரத்தில் சில கூடுதல் இசைக்கருவிகளுக்கு அப்போதே ஆர்டர் கொடுத்து வரவழைத்து விட்டார்.

 “பரணி” ஸ்டூடியோவில் அனைத்தையும் செட் செய்து பிரியா படத்திற்கான பாடல் பதிவுகள் முதல் முறையாக ஸ்டீரியோபோனிக் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டன.

உலகத்தரத்திலான இசையாக இந்தியத் திரை உலகில் முதல் முதலாக வெளிவந்த இசை “ப்ரியா” படத்தில் தான்.

இதில் பி. சுசீலா “டார்லிங் டார்லிங் டார்லிங்” பாடலை ஸ்ரீதேவிக்காகப் பாடினார். 

ஸ்ரீதேவியுடன் இசை அரசி.
ஸ்ரீதேவியுடன் இசை அரசி.

இது நான்காவது தலைமுறை நடிகைகளுடன் பி. சுசீலா இணையும் காலகட்டம்.  ஏற்கெனவே ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமான மூன்று முடிச்சு படத்தில் “நான் ஒரு கதாநாயகி” பாடலைப் பி. சுசீலா அவருக்காகப் பாடி இருந்தார்.

தொடர்ந்து 1978-இல் வெளிவந்த “மச்சானை பார்த்தீங்களா” படத்திற்காக “மாம்பூவே சிறு மைனாவே” பாடலையும் ஸ்ரீதேவிக்காக சந்திரபோஸ் இசையில் கான கந்தர்வன் கே.ஜே. ஜேசுதாசுடன் இணைந்து ஸ்ரீதேவிக்காகப் பாடி அசத்தி இருந்தார் பி. சுசீலா.  “என் மனம் எங்கெங்கோ பறக்குது” என்று ஜேசுதாஸ் பாடும்போது பின்னணியில் பி.சுசீலாவின் ஹம்மிங் பாடலை வேறு தளத்துக்குக் கொண்டு செல்லும்.  கேட்கும் நம் மனங்களும் பால்வெளிப் பாதையில் பறக்கத் தொடங்கி விடும். மாம்பூவே சிறு மைனாவே YouTube 240p 

இப்படி ஒரே நடிகைக்குப்  பாடும் போதும் படத்துக்குப் படம் குரலில் மாறுபாடு காட்டி காட்சி அமைப்பையும் மனதில் நிறுத்துவதுப் போல அழகாகப் பாடிக் கொடுத்திருப்பார் அவர்.

அந்த வகையில் “ப்ரியா” படப்பாடல் ஸ்ரீதேவிக்காக அவர் பாடிய மற்ற பாடல்களிலிருந்து சற்று வித்யாசமான தொனியில் அமைந்திருந்தது.

இளையராஜாவும் – பி. சுசீலாவும் இணைந்து கொடுத்த பாடல் முத்துக்கள் எல்லாமே ஒன்றை ஒன்று விஞ்சி நிற்பவை.

“அச்சாணி” படத்திற்காக “தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு” என்று எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து மத்யமாவதி ராகத்தில் மயக்கினார் பி. சுசீலா. தாலாட்டு பிள்ளை ஒன்று - அச்சாணி (youtube.com)

“உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்” என்ற வரிகளில் மத்யமஸ்ருதியில் கீழிறங்கும் போது அந்தக் குரலும் பாடலும் செவிகளில் இனிமையைப் பாயவைக்காமல் இருக்குமா என்ன?  இந்த மாதிரியான சஞ்சாரங்களில் அவரது குரலில் எப்போதும் தென்படும் நளினமும் அழகும்  இந்தப் பாடல் முழுவதும் மனதை அள்ளத் தவறவில்லை.

“சிட்டுக் குருவி” படத்தின் “என் கண்மணி உன் காதலி” பாடலை மறக்க முடியுமா என்ன? OVERLAAPPING முறையில் இளையராஜா அமைத்த பாடலை எஸ்.பி.பி.- பி. சுசீலா பாடிக் கொடுத்திருக்கும் அழகே தனி. என் கண்மணி உன் காதலி | En Kanmani Un Kadhali Video Songs | Siva kumar | Ilaiyaraaja | Chittukkuruvi (youtube.com)

நடிகை மீராவுக்காக இந்தப் பாடலைப் பாடியவர் சுமித்ராவுக்காக “உன்னை நம்பி நெத்தியிலே” பாடலைப் பாடி இருந்தார்.  இரண்டு பாடலிலும் அவர் காட்டி இருக்கும் குரல் மாறுபாடு அவருக்கே உரித்தான ஒன்று.

தெலுங்கில் இளைய தலைமுறை நட்சத்திரங்களான ஜெயசுதா, ஜெயப்ரதா, ராதிகா ஆகியோருக்கென்று பாடி வந்த நேரத்தில் பி. சுசீலா ஒரு பிரச்சினையைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது.

கே.ஜே. ஜேசுதாஸ் – பி. சுசீலா
கே.ஜே. ஜேசுதாஸ் – பி. சுசீலா

தெலுங்கில் என்.டி.ராமராவ் கால மாறுதலுக்கேற்ப ராமர் கிருஷ்ணர் வேடங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் தவிர்த்து பெல்பாட்டம் பாண்ட்டெல்லாம் போட்டுக்கொண்டு அவரது உடல் வாகிற்கு ஒத்துழைக்காத கல்லூரி மாணவன் கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். (நாகேஸ்வரராவிற்கும் இது பொருந்தும்)

பி.சுசீலா – ஜெயசுதா
பி.சுசீலா – ஜெயசுதா

பாடல் காட்சிகளில் அவரது உடல் பருமனை மனதில் கொண்டு நடன அசைவுகளை நடன இயக்குனர்கள் வடிவமைக்க அவருக்கும் சேர்த்து உடன் நடிக்கும் ஸ்ரீதேவியோ, ஜெயப்ரதாவோ ஆட வேண்டி இருந்தது.  இப்படிப் பட்ட சூழ்நிலையில் அவருக்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் இளமைத் துடிப்புடன் கூடிய ஆண்மை கொப்பளிக்கும் சங்கதிகளையும், இளமைத் துள்ளல்களையும் சேர்த்துப் பாடி அதிகப்படியாக உழைக்க வேண்டி இருந்தது.

இந்த இடத்தில் தயாரிப்பாளர்கள் பி. சுசீலாவிடம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் போலவே துள்ளல் சங்கதிகளையும் முக்கல் முனகல்களையும் சேர்த்துப் பாடினால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தனர்.

“அவர் பாடுறாருன்னா அவரு ஹீரோவுக்குப் பாடறார். நான் ஹீரோயினுக்குத் தானே பாடுறேன்.  ஸ்ரீதேவிக்கும், ஜெயப்ரதாவுக்கும் லைட்டாப் பாடினால் போதுமே” என்று பி. சுசீலா சொன்னால் ஏற்கமாட்டார்கள்.

“இல்லையம்மா. அவருக்கு ஈடு கொடுத்து தம் கட்டிப் பாடினால் இன்னும் எடுப்பா ஸீன் நிக்கும்” என்பார்கள் தயாரிப்பாளர்கள்.

இதற்காகவே அவர் ஒலிப்பதிவுக்குப் போவதற்கு முன்னால் எஸ்.பி. பாலசுப்ரமணித்தைத் தனியாக அழைத்து “பாலு.  நீ எந்த எடத்துலே எப்படி அழுத்தம் கொடுக்கப்போறே? என்னென்ன வித்தையெல்லாம் செய்யப்போகிறாய் என்பதை இப்பவே சொல்லிடு. அதுக்கு ஏத்தமாதிரி நானும் ப்ளான் பண்ணி பாடறேன்” என்று முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டு இருவரும் சேர்ந்து பாடி பாடலை வெற்றிப்பாடலாக்கி விடுவார்கள்.

“அடவி ராமுடு” இதற்கு ஒரு சரியான உதாரணம். கே.வி. மகாதேவன் இசையில் பட்டையைக் கிளப்பிய பாடல்களை எல்லாம் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பி. சுசீலாவும் தூள் பரத்தினார்கள்.  “ஆரேசுகோயோபி பாரேசுக்குன்னாரு” பாடல் தெறி ஹிட் அடிக்க படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.

“வேட்டகாடு” படத்தில் “ஜாவிலிதோ செப்பனா” பாடலில் இதே போல எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து ஸ்ரீதேவிக்காக பாடி இருக்கும் சக்ரவர்த்தியின்  பாடலிலும் பி.சுசீலாவின் குரலிலும் சங்கதிகளிலும் இளமைத் துள்ளலைக் கேட்கலாம். Jabilitho Cheppana Full Video Song || Vetagadu || N.T.Rama Rao,Sridevi (youtube.com)

இவை மட்டுமல்ல. தமிழில் இளையராஜா இசை அமைப்பில் வெளிவந்த படங்களை தெலுங்கில் ரீ மேக் செய்த போது அவற்றில் தமிழில் வேறு பாடகர்கள் பாடிய பாடல்களை பி. சுசீலா தான் பாடி இருக்கிறார்.

“பஞ்ச பூதாலு” தெலுங்குப் படத்தில் “கவ்விஞ்சே கள்ளல்லோ” என்று ஒரு பாடல். எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பி. சுசீலாவும் பாடியது.  தமிழில் கிழக்கே போகும் ரயில் படத்தின் “மாஞ்சோலைக் கிளிதானோ” என்று ஜெயச்சந்திரன் பாடிய பாடல் மெட்டில் இளையராஜா அமைத்த பாடல் இது.  Panchaboothalu | Kavvinche Kallalo song (youtube.com). அந்த ஆரம்ப ஹம்மிங்கிலேயே அசத்தி இருப்பார் பி. சுசீலா.

“கொத்த ஜீவிதலு” – பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்” படத்தின் தெலுங்கு வடிவம்.  தமிழில் பி. சுசீலாவின் குரலில் பாடல்கள் எதுவுமே ஒலிக்கவில்லை. அதை ஈடுசெய்வதைப் போல தெலுங்கில் இரண்டு பாடல்களைப் பி. சுசீலாவின் குரலில் பதிவு செய்தார் இளையராஜா.

தமிழில் ஜென்சி பாடிய “இதயம் போகுதே” பாடல் “மனசே வெள்ளனே” என்று தெலுங்கில் பி. சுசீலாவின் குரலில் மனத்தைக் கொள்ளை கொண்டது.  ஜென்சியும், வசந்தாவும் பாடிய “தம் தனனம் தம் தன தாளம் வரும்” பாடலை தெலுங்கில் எஸ். ஜானகியுடன் இணைந்து பி. சுசீலாவைப் பாடவைத்தார் இளையராஜா.  (அந்த வகையில் ஆந்திர தேசத்து ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்!).

ஆகவே இளையராஜாவின் இசையில் அதிகம் பாடவில்லை என்று நாம் குறைப்பட்டுக் கொள்ள நியாயமே இல்லை.

“கடல் மீன்கள்” படத்தின் “மானே ஒரு மங்கலச் சிப்பி உன் தாயே” என்ற மெலடி பாடலை இளையராஜாவின் இசையில் அற்புதமாக பாடி சுஜாதாவுக்காகப் இருந்தார் பி. சுசீலா. Maane Oru Mangala Chippi Kadal meengal (youtube.com) “மணி முத்தென வந்தவன் நீயே” என்ற வரிகளில் அவர் உதிர்க்கும் சங்கதிகள் அப்படியே மனதை உருக்கும் வகையில் அமைந்தவை.  “கலைமானே” என்று உச்சத்தை எட்டி கீழிறங்கும் லாவகம்.  சரணங்களில் ராஜாவின் இசை பயணிக்கும் விதமெல்லாம் வேற லெவல். அதற்கு ஈடுகொடுக்கும் பி. சுசீலாவின் சாதுர்யமான அனுபவம் வாய்ந்த குரல் பாடலை ஒரு வெற்றிப்பாடலாக்கிவிடுகிறது.  முதல் சரணத்தில் சிறுவனின் தாயாகவும் அடுத்த சரணத்தில் வளர்ந்த வாலிபனின் வயது முதிர்ந்த அன்னையாகவும் பாடவேண்டும்.  முதல் சரணம் வரையில் தாய்மையும் இளமையும் நிறைந்த அந்தக் குரலில் அடுத்த சரணத்தின் ஆரம்பம் முதல் லேசான ஒரு முதிர்ச்சியும் தளர்ச்சியும் உன்னிப்பாகக் கேட்டால் துல்லியமாகத் தெரியும்.  இப்படி கதாபாத்திரத்தின் வயது மாறுதலினால் ஏற்படும் வித்தியாசத்தை வெகு நுணுக்கமாக குரலில் கொண்டு வந்து பாட பி. சுசீலாவால் மட்டுமே முடியும்.

இப்படி சுஜாதா போன்ற நடிப்புத் திறமை வாய்ந்த நட்சத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் சில்க் ஸ்மிதா போன்ற நடன நடிகைகள் கதாநாயகியானால் அவர்களுக்கும் பொருந்தும் அளவுக்கு பாடவும் பி. சுசீலாவால் முடியும் என்பதற்கு  “அடுத்த வாரிசு” படத்தில் இடம் பெற்ற “பேசக்கூடாது” பாடலும் , “சூரக்கோட்டை சிங்கக்குட்டி”க்காகப் பாடிய  வாலியின் “காளிதாசன் கண்ணதாசன்” பாடலும் எடுத்துக்காட்டு.

அதே நேரத்தில் பெரு வெற்றிபெற்ற “வருஷம் 16” படத்தில் குஷ்பூவுக்காக இவர் பாடிய “பூ பூக்கும் மாதம்” பாடலை இன்றளவும் யாராலும் மறக்கவே முடியாதே. 

பி. சுசீலாவை வாழ்த்திப் பேசும் நடிகர் சிவகுமார் – உடன் இருப்பவர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி – ஜோதிகா
பி. சுசீலாவை வாழ்த்திப் பேசும் நடிகர் சிவகுமார் – உடன் இருப்பவர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி – ஜோதிகா

இந்த நேரத்தில் திரை உலகில் ஏற்பட்ட இன்னொரு மாற்றத்தையும் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எண்பதுகளில் இளைய தலைமுறை நட்சத்திரங்களுள் ஸ்ரீவித்யா, சுஜாதா, சரிதாவிற்குப் பிறகு அறிமுகமான நடிகைகள் பெரும்பாலும் இரவல் குரல்களை மட்டுமே நம்பி இருந்தனர்.

அந்த வகையில் இப்போது பி. சுசீலா பாடியதெல்லாம் பெரும்பாலும் ஹேமமாலினி. அனுராதா, துர்கா  போன்ற டப்பிங் கலைஞர்களுக்குத்தான் என்ற நிலை வந்துவிட்டது.  சுசீலா மட்டும் என்று அல்ல எஸ். ஜானகி, வாணி ஜெயராம் போன்ற பாடகிகளுக்கும் இதே நிலைமைதான்.

இந்தச் சூழ்நிலையிலும் தனது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் நடிக்கும் நடிகையர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கேற்றவாறு பாடி அசத்தினார் பி. சுசீலா.

அந்தவகையில் “எங்க ஊரு காவக்காரன்” படத்தில் கெளதமிக்காக பாடிய “ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்” என்று பாடகர் மனோவுடன் இணைந்து பாடினார் பி. சுசீலா.  மனோவின் முதல் பாடல் இது. 

கடலோரக்கவிதைகள் ரேகாவுக்காக “ராசாவே உன்னை நம்பி” படத்தில் மனோவுடன் இணைந்து “ராசாத்தி மனசுலே என் ராசா உன் நெனைப்புதான்” என்ற பாடலை அருமையாகப் பாடிக்கொடுத்திருந்தார் பி. சுசீலா.  இளையராஜா எழுதி இசை அமைத்த இந்தப் பாடல் படத்தின் வெற்றிக்கே ஒரு காரணியாக இருந்தது. இந்தப் பாடலுக்காக 1989 ஆம் வருடம் சினிமா எக்ஸ்பிரஸ் திரை இதழின்  சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார் பி. சுசீலா.  

கே. பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் வசந்த்தின் முதல் படம் “கேளடி கண்மணி”. இந்தப் படத்தில் கவிஞர் மு. மேத்தா எழுதிய “கற்பூர பொம்மை ஒன்று” என்று பி. சுசீலா பாடியிருக்கும் பாடலில் அவரது குரல் இனிமையின் உச்சத்தைத் தொட்டது.

வெறும் நாற்பத்தைந்தே நிமிடத்தில் இளையராஜா முழுப் பாடலையும் அனைத்து இசைச் சேர்க்கைகளுடன் பி. சுசீலாவைப் பாடவைத்துப்  பாடல் பதிவு முடிந்ததும் இயக்குனர் வசந்த்திடம் “இந்தப் பாட்டை துண்டு துண்டு காட்சிகளாக இடம் பெற வைக்க முடியுமா?” என்று கேட்டார். “நீங்க சொல்லுறமாதிரியே மனித மனங்களை இசை வேட்டை ஆடும் இந்தப் பாடலைக் கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படத்தில் இடம் பெறவைத்து முழுதாகக் கேட்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டு பிறகு முழுதாகவும் காட்சிப் படுத்திவிடுகிறேன்” என்றார் வசந்த்.

தாயன்பின் பரிபூரணத்துவத்தை அப்படியே தனது குரலில் கொண்டுவந்து பி. சுசீலா இனிமையில் தோய்த்தெடுத்துப் பாடியிருக்கும் பாடல் என்றுதான் இதனைச் சொல்லவேண்டும். Karpoora Bommai Ondru - Keladi Kanmani | 4K Video Song | Susheela | Ilayaraja (youtube.com)

ஒரு இசையமைப்பாளராக அறிமுகமான தேனிசைத் தென்றல் தேவாவின் இரண்டாவது படமான   “மனசுக்கேத்த மகராசா”வில் அருமையான மெலடியாக “ஆத்து மெட்டு தோப்புக்குள்ளே அட அந்தி சாயும் நேரத்துலே” பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து நடிகை சீதாவுக்காகப் பாடினார் பி. சுசீலா.  (714) Aathu Mettu Thopukulle - HD Video Song | ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே | Manasukketha Maharasa - YouTube  தேவாவின் இசையில் பி. சுசீலா பாடிய ஒரே பாடல் இதுதான். ஒற்றைப்பாடல் என்றாலும் முத்தான பாடல்.

ஹோலி பண்டிகையின் உற்சாகக் கொண்டாட்டத்தைத் தந்த “நாயகன்” படத்தின் “அந்திமழை மேகம்” என்ற நடபைரவி ராகப் பாடலை யாராலும் மறக்கவே முடியாது.  டி.எல். மகராஜனுடன் இணைந்து உற்சாகம் தெறிக்க இனிமையும் இளமையும் பொங்கும் குரலில் பாடிக்கொடுத்திருந்தார் பி. சுசீலா.

“சின்னக் கவுண்ட”ரின் “முத்து மணி மாலை”யில் பி. சுசீலா உதிர்த்திருக்கும் முத்தான சங்கதிகள் வெல்வெட் பேழையில் வைக்கப்பட்ட நல்முத்துக்கள்.

இப்படி இளையராஜாவின் இசை ராஜாங்கத்துக்குச்  சற்றும் சளைக்காமல் ஈடுகொடுத்து வெற்றி கண்ட நமது இசை அரசியின் இசைச் சுரங்கத்தில் தன்னாலான முத்துகளை இட்டு நிரப்ப வந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

(இசையின் பயணம் தொடரும்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com