“சுசீலாம்மாவின் தேன்குரல் இருக்கிறதே அது கடவுள் நமக்காக அவருக்குக் கொடுத்த அருட்கொடை. ஒரு இசை அமைப்பாளனாக நான் இசை அமைத்த முதல் பாடலே பி. சுசீலா அவர்கள் பாடியதுதான். அவருடைய பரந்த இசை அனுபவம் எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. - இளைய தலைமுறை இசை அமைப்பாளர் திரு. அமுத பாரதி.
அறிமுகப் படுத்திய இசை அமைப்பாளர் திரு. பெண்டியாலா முதல் எழுபதுகளில் முன்னுக்கு வந்துகொண்டிருந்த வி. குமார், சங்கர்-கணேஷ் வரை ஒவ்வொரு இசை அமைப்பாளருக்கும் அவர்களது எதிர்பார்ப்புக்கும் மேலாக நூறு சதவிகித அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடிக் கொடுத்த பாடகியருள் முதன்மை பெற்ற பாடகியாகத் திகழ்ந்தார் பி. சுசீலா.
அதே நேரம் அவருக்கிருந்த ஆழ்ந்த இசை ஞானத்திற்கு.. பாடல் பதிவின் போது தனது மேதமையை வெளிக்காட்டிக்கொள்ள “இந்த இடத்துலே இப்படி கூடச் சங்கதி சேர்த்துக்கிட்டா இன்னும் எடுப்பா இருக்குமே?” என்று என்றாவது ஒரு நாள் கேட்டிருப்பாரா?
“அவரைப் பொறுத்தவரை மியூசிக் டைரக்டர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை மட்டும் தான் பாடுவாரே தவிர அதற்கு மேல ஒரு சின்ன சங்கதியைக் கூட அவர் வெளிப்படுத்தவே மாட்டார். அவங்களுக்குத் தெரியாதா என்ன? அவங்க சொல்லிக் கொடுக்குற குரு. அதை அப்படியே பாடுறதுதான் சரி. “ என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்தவர் அவர்.
அதே நேரத்தில் சக பாடகர்களுக்குத் தன்னால் எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்கத் தவறமாட்டார் அவர்.
“ஆரம்பத்துலே பாட வந்த புதிதில் நான் ரீடேக் வாங்கினா என்னாலே அவங்களுக்கு மறுபடியும் பாடியதையே திரும்பப் பாடுகிற சிரமம் ஏற்படும். ஆனால் அதை எல்லாம் பெரிசா நினைக்காம “ஆரம்பத்துலே அப்படித்தான் இருக்கும். போகப்போக சரியாகிடும்” என்று என்னை உற்சாகப் படுத்திப் பாட வைப்பார் அவர்” – என்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் நடித்த காமிரா மேதை கர்ணன் அவர்கள் இயக்கிய முதல் படம் “காலம் வெல்லும்”. இந்தப் படத்தில் ஒரு காபரே நடனப் பாடல். பொதுவாக எல்.ஆர்.ஈஸ்வரியைத்தான் இப்படிப்பட்ட பாடல்களைப் பாட வைப்பார்கள். ஆனால் மாறுதலாகப் பி. சுசீலாவைப் பாட வைத்தார்கள் சங்கர் கணேஷ்.
கவியரசு கண்ணதாசன் எழுதிய “எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும்பொழுது” என்ற பாடலை பி. சுசீலா தனது குளிர்க்குரலில் போதை ஏற்றிப் பாடி இருக்கிறார். அதிலும் ஆரம்பத்தில் அவர் கொடுக்கும் சிலிர்ப்பும், கிளுகிளு சிரிப்பும்... சரணங்களில் அந்தக் குரல் உச்சத்தில் இசைக்கும்போது.. இனிமையின் எல்லையையே தொட்டு விடுகிறது அந்தக் குரல். காட்சிப்படி வில்லன் கூட்டத்தை மயக்க கதாநாயகன் செய்யும் சாகசத்தின் ஆரம்பம் தான் இந்தப் பாடல். Ellorum Thirudargale - Kaalam Vellum Tamil Song - Jai Shankar (youtube.com)
“கை போட்டுத் திருடிவிடு – கதை நன்றாக முடித்துவிடு” என்ற வரிகளுக்குப் பிறகு அவர் கொடுக்கும் அந்த ஹம்மிங்.....அதைத் தொடரும் அந்த “இன்னும் என்ன?” என்ற வார்த்தைகளின் உச்சரிப்பு... அதெல்லாம் வேற லெவல்.
இரண்டாவது சரணத்தின் இணைப்பிசையைத் தொடர்ந்து அவர் இசைக்கும் அந்த துக்கிணியூண்டு அரை நொடி ஹம்மிங்...”மாணிக்கம் வைரம் மரகதம் எல்லாம் அங்கும் இங்கும் உண்டு” – என்று உச்சத்தில் இசைக்கும்போது அந்த இனிமை எந்த வர்ணனைக்குள்ளும் அடங்காத ஒன்று.
எழுபதுகளின் ஆரம்ப வருடங்களில் வெளிவந்த “வசந்த மாளிகை” – நடிகை வாணிஸ்ரீக்கு ஒரு மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. “ பிரேம நகர்” என்ற பெயரில் ஏற்கெனவே தெலுங்கில் நாகேஸ்வரராவ் அவர்களுடன் வாணிஸ்ரீயேதான் நடித்திருந்தார். தமிழில் முதலில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாக ஜெயலலிதாவைத் தான் நடிக்க வைக்க முடிவெடுத்தார்கள். அந்த நேரத்தில் அவரது தாயான நடிகை சந்தியா காலமாகிவிடவே ஜெயலலிதாவால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. ஆகவே வாணிஸ்ரீயே தமிழிலும் ஒப்பந்தமானார்.
இரு மொழிப் படங்களிலும் கதாநாயகிக்குப் பி. சுசீலாவே பாடினார்.
திரை இசைத் திலகத்தின் இசையில் தெலுங்கின் “எவரோ ராவாலி”, தமிழில் “கலைமகள் கைப் பொருளே” பாடலாக சிவரஞ்சனியில் மனதை வசீகரித்தது. Kalaimagal Kai Porule Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie | Sivaji Ganesan |Vanisri (youtube.com)
ஆரம்ப ஹம்மிங்கிலும் பாடலிலும் ஆதங்கத்தை அழகாகத் தனது குரலில் வெளிப்படுத்தி இருந்தார் பி. சுசீலா.
“நான் யார் உன்னை மீட்ட – வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட” – என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் “ஏனோ துடிக்கின்றேன்.” என்ற வரிகளில் வரும் அந்த “ஏனோ” என்ற ஒற்றைச் சொல்லில் ஒரு கார்வை கொடுத்திருப்பார். அந்தக் கார்வையில் லேசான ஒரு விசும்பல் தொனிக்குமே.. அது தான் சுசீலாம்மாவின் ட்ரேட் மார்க். ஒற்றை வார்த்தைதானே என்று அதனை லேசாகக் கடந்துபோகாமல் அதிலும் கூட காட்சியின் தாக்கத்தை நம்மை வானொலியில் கேட்கும்போதுகூட உணர வைத்திருப்பார் அவர்.
“மயக்கமென்ன” – பாடல்..கவியரசரின் வரிகளும், கே.வி. மகாதேவனின் இசையும், டி.எம்.எஸ். – பி. சுசீலாவின் குரல்களும் இன்றளவும் – ஏன் – என்றுமே மறக்கவே முடியாத ஒரு மகத்தான பாடல். Mayakkam Enna Video Song | Vasantha Maligai Tamil Movie Songs | Sivaji Ganesan | Vanisri (youtube.com)
சரணத்தின் கடைசி வார்த்தைகளை பாடகர் பாடும்போது வேறு எந்த வாத்திய இசையும் இல்லாமல் நிசப்தமாக்கி – அதன் பிறகு தாள வாத்தியத்தை இட்டு நிரப்பி – வார்த்தைகளுக்குத் தனி அழகைக் கொடுக்கும் கே.வி. மகாதேவனின் தனித்தன்மை வெளிப்படும் சரணம்தான் “அன்னத்தைத் தொட்ட கைகளினால்” என்று ஆரம்பிக்கும் கடைசிச் சரணம்.
இதில் கடைசி வரி பி.சுசீலா என்னும் இசை அரசியிடம் சரணடைகிறது.
“உன் உள்ளம் இருப்பது என்னிடமே..”என்ற வார்த்தைகளுக்குப் பிறகு அனைத்து இசைக் கருவிகளும் அடங்கிய நிலையில் – “அதை உயிர் போனாலும் தரமாட்டேன்.” என்ற வார்த்தைகளில் அவர் கொடுத்திருக்கும் அழுத்தம்.. பாடிக் கொடுத்திருக்கும் அழகு.. எல்லாமே உண்மைக் காதல் இப்படித்தானே இருக்கும் என்று நினைக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
“அடி அம்மா ராசாத்தி சங்கதி என்ன” பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு செமையான குத்துப் பாடல் –டி.எம்.எஸ். – பி. சுசீலாவின் குரலில் கேட்பவரை அப்படியே எழுந்து நின்று ஆடவைக்கும் பாடல். இந்தப் பாடல் காட்சி மட்டும் திரையில் இடம்பெற்றிருந்தால் அரங்கமே அதிர்ந்திருக்கும். டி.எம்.எஸ். அவர்களின் கம்பீரக் குரலுக்கு ஈடு கொடுத்து அருமையாக இளமைத்துள்ளல் ததும்பும் குரலில் பாடி இருந்தார் பி. சுசீலா. படம் வெளிவந்த புதிதில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது. இசைத்தட்டிலும் ஒலி நாடாக்களிலும் – இன்றைய காலகட்டத்தில் யு டியூபிலும் கேட்கக் கிடைக்கிறது. Vasantha Maligai | Adiyamma Rajathi song (youtube.com)
நடிகர் திலகத்திற்கு ஒரு வசந்த மாளிகை என்றால் மக்கள் திலகத்திற்கு ஒரு மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது “உலகம் சுற்றும் வாலிபன்”. வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல. இமாலய வெற்றி.
இந்தப் படத்திலும் படத்தில் இடம் பெறாமல் இசை ஆல்பங்களின் தொகுப்பில் பெற்ற இனிமை ததும்பும் பாடல் தான் “ஓ மை டார்லிங்..என்று டி.எம்.எஸ். ஆரம்பிக்க “ஓ மை ஸ்வீட்டி” என்று சிணுங்கலான குரலில் தொடர்ந்து “உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நாள்” என்று பி.சுசீலா இணையும் பாடல். மெல்லிசை மன்னரின் முகப்பிசையும் இணைப்பிசையும் பாடலின் ரிதமும்.. பிரம்மாண்டமாக மனதை நிறைக்கும் பாடல். Oh My Darling (youtube.com) .
இதே போலவே “நினைக்கும் போதே தனக்குள் சிரிக்கும் மாது” என்ற தனிப்பாடலும் பி. சுசீலாவின் குரலில் ஒலிப்பதிவாகித் திரையில் இடம் பெறாமல் போன – ஆனால் இசைத் தட்டில் இடம் பெற்ற பாடல். Ninaikkum Pothu - Ulagam Sutrum Valiban (1973) - P. Susheela (youtube.com). இளமை, இனிமை, புதுமை மூன்றும் நிறைந்த குரலில் அருமையாகப் பாடிக்கொடுத்திருக்கிறார் பி.சுசீலா.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர். – மஞ்சுளா ஜோடி பாடுவதாக அமைந்த “லில்லி மலருக்குக் கொண்டாட்டம்” பாடலில் “அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே” என்று பல்லவியில் தனது இந்தப் பகுதியை வெகுவாக அனுபவித்துப் பாடியிருக்கிறார் பி.சுசீலா. ராகேஸ்ரீ, யமுனகல்யாணி ராகங்களை இணைத்து பிரம்மாண்டமான ரிச்சான ஆர்கஸ்ட்ரைசேஷனோடு பாடலை மெல்லிசை மன்னர் அமைத்த விதம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. லில்லி மலருக்கு | Lilly Malarukku | Ulagam Sutrum Valiban | T.M.S & P.Susheela | M.S.V | Kannadasan (youtube.com)
இதேபோல கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களுடன் இணைந்து நடிகை சந்திரகலாவிற்காக “தங்கத் தோணியிலே” பாடலில் இனிமையில் தனது குரலைத் தவழ வைத்தார் பி.சுசீலா. தங்கத்தோனியிலே கே.ஜே.ஏசுதாஸ் பி.சுசிலா வாலி எம்.எஸ்.விஸ்வநாதன் (youtube.com) . மெல்லிசை மன்னரின் மகத்தான இசைத் திறமைக்கு இந்தப்பாடல் மணிமகுடமாக அமைந்தது. அருமையான ஆர்கஸ்ட்ரைசேஷன். கவிஞர் வாலியின் இந்தப் பாடலை மோகன ராகத்தில் ஆரம்பித்து யமுனா கல்யாணி, ஹேமாவதி ஆகிய ராகங்களின் கலவையாக அற்புதமாக அமைத்துக்கொடுத்த பெருமை எம்.எஸ்.வி.அவர்களுக்கென்றால் அதனை சரியாக உள்வாங்கி உச்ச ஸ்தாயி சாரீரத்தில் பாடினாலும் குரலில் துளிக்கூடப் பிசிறே தட்டாமல் இனிமைத் தேனில் குரலைக் குழைத்தெடுத்து நமது செவிகளில் பரவச் செய்கிறார் பி. சுசீலா.
இவற்றுக்கெல்லாம் மேலாக இந்தப் “பச்சைக்கிளி முத்துச்சரம்” பாடலைப் பாடி இருக்கிறார் பாருங்கள். இதுவே ஒரு மாபெரும் சாதனை. பச்சைக்கிளி முத்துச்சரம் Pachaikili Muthucharam Song-4K HD Video #mgrsongs #tamiloldsongs (youtube.com)
உலகம் சுற்றும் வாலிபனைப் பொறுத்தவரை அனைத்துப் பாடல்களையும் முதலில் மெல்லிசை மன்னர் அமைத்துக்கொடுக்க அவற்றுக்குப் பொருத்தமானபடி காட்சி அமைப்பையும் கதையையும் தயார் செய்தார் எம்.ஜி.ஆர். அந்த வகையில் கதைப்படி இந்தப் பாடல் காட்சியில் நடித்தவர் தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங் ராத் என்பவர்.
அவர் யார் – எப்படி இருப்பார் – அவர் குரல் எப்படி இருக்கும் என்றெல்லாம் ஒன்றுமே தெரியாமல் தமிழே தெரியாத ஒரு பெண் பாடினால் எப்படி இருக்குமோ அப்படி மழலை கொஞ்சும் குரலில் – அதேநேரம் – தனது தனித்தன்மையான சரியான உச்சரிப்புடன் – பி. சுசீலா அவர்கள் பாடி இருப்பது பிரமிக்க வைக்கும் ஒரு அசகாய சாதனை அல்லவா?
எம்.எஸ்.வி. என்னும் இசைச் சக்ரவர்த்தியோ ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்துகொண்டே இந்தப் பாடலில். மத்யமாவதி, புஷ்பலதிகா, நடபைரவி ஆகிய ராகங்களை அருமையாகப் பயன்படுத்தி உலகத்தையே சுற்றிக் காட்டியதோடு நிற்காமல் தமிழ் நாட்டு கதாநாயகனும் – தாய்லாந்து நாயகியும் பாடுவதாக அமைந்த காட்சிக்கேற்ப தவிலையும் xylaphone ஐயும் பாடல் முழுவதும் மாற்றி மாற்றி ஒலிக்க வைத்து பட்டையைக் கிளப்பி இருப்பார் அவர்.
***
எழுபதுகளின் ஆரம்பத்தில் பல புது முகங்கள் திரையில் அறிமுகமானார்கள்.
அடுத்த தலை முறை நடிகைகளாக சுஜாதா, ஸ்ரீ வித்யா, லட்சுமி, மஞ்சுளா, சந்திரகலா, லதா, ஸ்ரீப்ரியா, சரிதா .. என்று அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் தமக்கென புதுப் பாணி அமைத்துக்கொண்டு தத்தம் திறமையால் வெற்றிப்படிகளில் ஏற ஆரம்பித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் முந்தைய தலை முறை நட்சத்திரங்கள் வயதுக்கேற்றபடி அம்மா, அக்கா வேடங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகிக் கொண்டிருந்தார்கள்.
புன்னகை அரசி கே.ஆர்.விஜயா ஒருவர்தான் இந்த அலையிலும் தாக்குப் பிடித்து தன்னையே மையப்படுத்தி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அவரது திறமையின் வெளிப்பாடாக அமைந்த படங்களில் மெல்லிசை மாமணி வி. குமாரின் இசையில் அருமையான பாடல்கள் பி. சுசீலாவிற்குப் பாடக் கிடைத்தன. கஸ்தூரி விஜயம் படத்தின் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு” பாடல் இன்றளவும் திருமண மேடைகளில் புதுமணத் தம்பதியினரை வாழ்த்தும் மங்கல வாழ்த்துப் பாடலாக கேட்டுக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஹிட் கண்ணதாசனின் "பல்லாண்டு பல்லாண்டு" கல்யாண வாழ்த்து தமிழ் பாடல்கள்| Hornpipe Record Label (youtube.com)
கே.ஆர். விஜயா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் படம் “தீர்க்க சுமங்கலி”. இதில் மெல்லிசை மன்னரின் இசையில் ஜெயசுதாவிற்காகப் பாடிய பாடல் “தீர்க்க சுமங்கலி வாழ்கவே”. மிக அற்புதமான மனதை நிறைக்கும் மங்கலப்பாடல். தீர்க்க சுமங்கலி தீர்க்க சுமங்கலி வாழ்கவே பி.சுசிலா கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன் (youtube.com)
இந்த வரிசையில் “விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்” என்ற சூதாட்டம் படப் பாடலும், மூன்று தெய்வங்கள் படத்தில் இடம் பெற்ற “வசந்தத்தில் ஓர் நாள்” பாடலும் எழுபதுகளில் இசை அரசியின் இசைச் சாம்ராஜயத்தின் ஒளித் தீபங்கள்.
“வசந்தத்தில் ஓர் நாள்” – தர்பாரிகானடா ராகத்தில் குறில் நெடில்களுக்கு தக்க ஏற்ற இறக்கங்களோடு கூடிய பாடுவதற்கே கடினமான ஒரு பாடல். மெல்லிசை மன்னர் அமைத்த மேல்ஸ்தாயிச் சஞ்சாரங்களை மிகச் சரியாக உள்வாங்கிப் பாடி ஒரு வெற்றிப் பாடலாக்கி விட்டிருக்கிறார் பி. சுசீலா.
ஒரு சரணத்தில் மகிழ்ச்சிப் பெருமிதம், அடுத்த சரணத்தில் அதிர்ச்சியின் சோகம் இரண்டையும் ஒரே குரலில் ஒரே பாடலில் வெளிப்படுத்திய மகத்தான சாதனையையும் சொர்க்கம்” – படத்தின் “ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து” பாடலில் தனது நீண்ட இசைப் பயணத்தில் சாத்தியப்படுத்தி இருக்கிறார் பி. சுசீலா.
இந்த நேரத்தில் சிறந்த பாடகிக்கான அகில இந்திய விருது இரண்டாவது முறையாக சவாலே சமாளி படத்தின் “சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு” பாடலுக்குக் கிடைத்தது.
இப்படி எழுபதுகளின் ஆரம்பத்தில் தனது சாதனைச் சரித்திரத்தை வெற்றிப் பக்கங்களால் நிரப்பிக் கொண்டிருந்த இசை அரசியின் புகழ் மாலைக்கு தன்பங்குக்கு என்றும் வாடாத நறுமண இசை மலர்களைக் கோர்த்துக் கொடுக்க...
கம்பம் பள்ளத்தாக்கிலிருந்த பண்ணைப்புரம் என்று குக்கிராமத்திலிருந்து கிளம்பி வந்து 1976ஆம் வருடம் புதிய இசை அமைப்பாளராகத் திரை உலகில் கால் பதித்தார் இளையராஜா.
(இசையின் பயணம் தொடரும்..)