பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி - 34

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்
Published on

“சரஸ்வதி தேவியின் மறுபிறப்பு யாரென்று என்னைக் கேட்டால் நான் பி.சுசீலா அவர்கள்  இருக்கும் இடத்தைத்தான் காட்டுவேன்.  “சரவணப் பொய்கையில் நீராடி”, மற்றும் “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல” என்ற பாடல்கள் என் வாலிபப் பருவத்தை இசைப் பருவமாக்கியது.  என் இசையமைப்பில் நிறைய பக்திப் பாடல்களும், சினிமாப் பாடல்களும் பாடியிருக்கிறார். என்னைப் போன்ற வளரும் இசை அமைப்பாளர் போடும் பாடலுக்குத் தன் குரலால் அழகு சேர்த்துப் பாடலை மெருகேற்றுவார்.” இசை அமைப்பாளர் “தேனிசைத் தென்றல்” சி. தேவா

துயரமான அந்தச் சம்பவத்தை எப்படிக் கடந்துவந்தார் பி.சுசீலா?

“எனக்கு அது முதல் குழந்தை. பொறந்தப்ப ரொம்ப அழகா இருந்தது.  ஆனால் அரிதான ஒரு தோல் வியாதி தாக்கியது.  அதற்கு மருத்துவ ரீதியான எல்லா முயற்சிகளும் தோல்வி அடைஞ்சப்ப அஞ்சலிதேவி அவர்கள் மூலமாக புட்டபர்த்தி சத்யசாய் பாபா அவர்களை தரிசனம் செய்தேன்.  அதுதான் பகவான் கிட்டே என் முதல் சந்திப்பு.  அப்படி அவர் கிட்டே நான் வரணும் என்பதற்காகத்தான் அந்தக் கஷ்டமே ஏற்பட்டதோ என்னவோ?  புட்டபர்த்தியிலே அவர் கிட்டே குழந்தையை கொண்டு போய்க் காட்டினேன். அவருக்குத்தான் எல்லாம் தெரியுமே. பகவானாச்சே. நமக்குத்தானே ஒண்ணும் தெரியாது.  குழந்தை பிழைக்கவில்லை.  என்னதான் முயற்சி எல்லாம் பண்ணினாலும் கர்மாங்கற ஒண்ணு இருக்கே. அதன் பலனை நாம அனுபவிச்சுத்தானே ஆகணும். ஆனால் அப்போ அதெல்லாம் ஒண்ணும் தெரியவே இல்லே.  ஸ்வாமி ஏன் அப்படிப் பண்ணினார்னு கோவம் கோவமா வந்தது.  அவரைப் பார்க்கவே போகலே. அவரும் என்னை கட்டாயப்படுத்தலே. என் போக்குலேயே விட்டுட்டார்.  நாளாக நாளாக நானாவே அவர் கிட்டே டோட்டல் சரண்டர் ஆகிட்டேன். பகவான் தான் எல்லாமே என்ற பக்குவம் எனக்கு தன்னாலே வந்துடுச்சு. அதுக்கப்புறம் பகவான் அனுக்கிரகத்தாலே  எனக்கு ஜெயகிருஷ்ணா பிறந்தான்.  புட்டபர்த்தி காலேஜ்லே பகவானோட கண்காணிப்பிலே படிச்சி வளர்ந்து இப்ப நல்லா இருக்கான். எல்லாமே அவர் செயல்தான்.” – என்று ரேடியோ சாய் பண்பலை வானொலிக்கு அளித்த நேர்காணலில் இந்தத் துயரச் சம்பவத்தை தான் கடந்து வந்த விதத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார் பி. சுசீலா.

**

“உயர்ந்த மனிதன்” தயாரிப்பிலிருந்த நேரத்தில் குணச் சித்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா அவர்கள் “காவல் தெய்வம்” படத்தைத் தயாரித்தார்.

இளம் ஜோடியான சிவகுமார் – லட்சுமி இணைந்து பாடுவதான கவிஞர் மாயவநாதனின் “அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கணும்” என்ற பாடலை ஜி.தேவராஜனின் அருமையான இசையில் தாராபுரம் சுந்தரராஜனுடன் இணைந்து லட்சுமிக்காகப் பாடினார் பி.சுசீலா. அய்யனாரு நெறஞ்ச வாழ்வு | Aiyanaaru Neranja Vaazhvu | Sivakumar | Lakshmi | Kaval Deivam | Video Song (youtube.com)

ஆரம்ப வரிகளிலேயே மனதை ஆக்கிரமித்துவிடுகிறது பி.சுசீலாவின் குளுமையும், இனிமையும் நிறைந்த குரல்.

இந்தப் பாடல் நடிகர் சிவகுமார் அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த பாடல்.

“காவல் தெய்வம்” படத்தில் சிவகுமார் - லட்சுமி
“காவல் தெய்வம்” படத்தில் சிவகுமார் - லட்சுமி

“கிழங்கட்டைகளையே பார்த்து அலுத்துப்போன கண்களுக்கு உண்மையிலேயே இளமையோடு இருக்கும் இரண்டு இளம் உள்ளங்களின் அளவான உறவாடல்களைப் பார்க்கும்போது இவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்தத் தோன்றுகிறதல்லவா?” என்று பாடல் காட்சியின் படத்தைப் போட்டு குமுதம் விமரசனத்தில் குறிப்பிட்டிருந்தது.

**

எழுபதுகளில் புதிய இசை அமைப்பாளராக முன்னேறி வந்து கொண்டிருந்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு திருப்பு முனையாக அமைந்தது ஜி.என்.வேலுமணி அவர்களின் “நம்ம வீட்டு தெய்வம்”.

பழையனூர் நீலி கதையை பட்டை தீட்டி டிங்கரிங் செய்து திரைக்கதை அமைத்து தாய்க்குலத்தைக் கவரும் வகையில் படமாக்கி இருந்தார் ஜி.என். வேலுமணி.

இறந்த மனைவியின் உருவில் தெய்வம் வீட்டுக்கு வந்து தவறு செய்தவனுக்குத்  திருந்தச் சந்தர்ப்பங்களும் கொடுத்து முடிவில் தண்டிக்கும் கதை.

இந்தப் படத்தில் கதாநாயகி கே.ஆர்.விஜயாவிற்கு மட்டுமல்லாமல் வில்லி வேடம் ஏற்றிருந்த விஜயலலிதாவிற்கும் பின்னணி பாடி இருந்தார் பி. சுசீலா.

“ஆசை மனதில் கோட்டை கட்டி..” – கற்பைக் காப்பாற்றிக்கொள்ள தற்கொலை செய்து கொண்ட தனது சகோதரியை அந்த முடிவுக்குத் தள்ளியவனையே தங்கை திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. 

திருமணத்திற்குப் பிறகுதான் அந்த உண்மை அவளுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அந்தச் சகோதரி பாடும் பாடலாக அமைந்த பாடலை அற்புதமாக நேசமும், பாசமும், நெகிழ்வும் மிளிர அற்புதமாகப் பாடி இருக்கிறார் பி. சுசீலா. Aasai Manathil Kottai Katti song in Namma Veettu Deivam SUSHEELA KANNADASAN KUNNAKUDI VAIDHYANATHAN (youtube.com)

விஜயலலிதா பாடுவதாக “எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ ” – என்ற ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவை சிருங்கார ரசம் தொனிக்கப் பாடி அசத்தி இருக்கிறார் பி. சுசீலா. Enakkum Unakkum - Namma Veettu Deivam - Tamil Classic Song (youtube.com)

“வாகீச கலாநிதி” திரு. கி.வா. ஜகன்னாதன் அவர்கள் திரைப்படத்திற்காக எழுதிய பாடல் தான் “உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி” பாடல். Namma Veettu Deivam - Ulagamellam - Tamil Classic Song - Nagesh (youtube.com)

இந்தப் பாடலில் தெய்வம் பாடுவதாக அமைந்த பிற்பகுதிச் சரணங்களைப்  பி.சுசீலாவின் தெய்வீகக் குரலில் கேட்கும்போது மனதிலேயே தெய்வ சான்னித்தியம் பரவத்தான் செய்கிறது.

படத்திலேயே சிகரமாக அமைந்த பாடல் இது.

**

குடும்பக் கதைகளில் “பணமா பாசமா” “உயிரா மானமா” “குலமா குணமா” என்றெல்லாம் பட்டிமன்றத் தலைப்புகளில் கேள்வி எழுப்பி வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருந்த இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் கவனம் புராணப் படங்களின் பக்கம் திரும்ப “ஆதி பராசக்தி” வெள்ளித் திரைகளில் அருள்பாலிக்க ஆரம்பித்தாள்.

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் பிரம்மாண்ட இசையில் பி.சுசீலா மூன்று பாடல்களைப் பாடியிருந்தார். 

நாட்டியப் பேரொளி பத்மினிக்காக “மாயி மகமாயி” என்ற மாரியம்மன் தாலாட்டுப் பாடலையும், “நானாட்சி செய்துவரும் நான் மாடக் கூடலிலே” பாடலையும் பாடியிருந்தார் பி.சுசீலா.  ஒரே நடிகைக்கு அவர் பாடியிருக்கும் இரண்டு பாடல்கள்!  ஆனால் அந்த இரண்டிலும் தான் குரலில் எத்தனை வித்தியாசங்களைக் காட்டிப் பாடிக் கொடுத்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது பிரமிக்க வைக்கிறார் அவர்.

தன்னைச் சோதிக்க நினைத்த ஆங்கிலேயே கலெக்டருக்கு சோதனையை ஏற்படுத்தித் திருந்திய பிறகு  சோதனையைத் தீர்க்கும் பாடல் தான் “ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா” என்று  தொகையறாவாகத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் அவரது குரல் முழுக்க முழுக்க உச்ச ஸ்ருதியில் ஒலிக்கும்.  Aayi Mahamayi - Tamil Devotional Song - Aathi Parasakthi - #Navratrispecial (youtube.com)

“எனக்கு என்ன ஸ்ருதின்னு  எல்லாம் தெரியாது. மியூசிக் டைரக்டர் இப்படி இந்த ஸ்ருதியில் இந்த மாதிரி பாடுங்கன்னு சொல்லிக் கொடுப்பார்.  ஓஹோ. இந்தப் பாட்டுக்கு இந்த ஸ்ருதிதான் போலன்னு அவங்க சொல்லிக்கொடுக்குற மாதிரியே பாடிட்டு வந்துடுவேன்.” என்று கூறுபவரை என்னவென்று சொல்வது?

தன் பலம் என்னவென்றே தெரியாத அனுமனைப் போலவே தனது திறமைகள் அனைத்தையும் தன்னடக்கம் என்னும் திரை போட்டு மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான பெண்மணி என்றே தான் சொல்லவேண்டும்.

அடுத்து “நானாட்சி செய்துவரும்” பாடல் ஆனந்த பைரவியில் ஆரம்பித்துச் சாரங்கா ராகத்தில் முடிகிறது. இரண்டு ராகங்களையும் பி.சுசீலா பாடியிருக்கும் விதத்திலேயே கனிவுடன் கூடிய தெய்வீகத்தை நம்மால் உணரமுடிகிறது. Naan Atchi Video Song | Aathi Parasakthi Movie Songs | Gemini Ganesan | Jayalalithaa | PyramidMusic (youtube.com)

உச்ச கட்டக் காட்சிக்கான “வருகவே வருகவே” .. தட்சனின் மகளான தாட்சாயணி தனது தந்தையின் அகம்பாவத்தை ஒடுக்கத்  தன்னை சிறை எடுத்துச் செல்ல வரும்படி ஈசனை அழைக்கும் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த நடனப் பாடல். வருகவே வருகவே HD Vidoe Song | ஆதி பராசக்தி | ஜெமினி கணேசன் | ஜெயலலிதா | கே.வி. மகாதேவன் (youtube.com)

அரசகுமாரியின் கம்பீரம், அலட்சியம், ஆவேசம், கனிவு, காதல், தாபம் என்று அனைத்தையும் அந்த ஒரே குரலில் எப்படித்தான் இவரால் கொண்டுவர முடிகிறதோ என்ற பிரமிப்பு இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் தோன்றும்.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களில் பி. சுசீலாவின் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

“தாமரை நெஞ்சம்” – இந்தப் படத்தில் பி. சுசீலா தனித்துப் பாடிய இரண்டு பாடல்களும், எல்.ஆர். ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடிய ஒரு பாடலும் ஹிட் பாடல்கள்.

“ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்” – பாடல் சர்க்கரைப் பாகில் தோய்த்தெடுத்த இனிமை நிறைந்த பாடல். Aalayam Enbathu... | Thamarai Nenjam | Tamil Movie Song (youtube.com)

இந்தப் பாடலில் இடையில் “ஸரி கம பத நி- நி த ப க கரி ஸ” என்ற ஸ்வரங்களை பி. சுசீலா பாட திருப்பிப் பாடும் சிறு பெண்ணின் குரலுக்கு பாடி இருந்த சிறுவன் பின்னாளில் ஒரு பின்னணிப் பாடகராகவும், குரல் கலைஞராகவும் பிரபலமானார்.

திரு. எஸ்.என். சுரேந்தர் தான் அந்தச் சிறுவன்.

“தித்திக்கும் பாலெடுத்து” பாடல் எப்போதுகேட்டாலும் மனதில் தித்திக்கும் ஒரு பாடல். ஆனால் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட பாடல். Thithikkum Paleduthu...- தித்திக்கும் பாலெடுத்து... (youtube.com)

**

இரண்டு கதாபாத்திரங்கள் ஒரே பாடலைப் பாடவேண்டும் என்றால் அதற்கு இரண்டு பாடகியரைப் பாடவைப்பதுதான் வழக்கம்.

அப்படி இல்லாமல் ஒருவரே இரண்டு கதாபாத்திரங்களுக்கும் குரலில் வேறுபாடி காட்டிப் பாட முடியுமா.?

முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நமது இசை அரசி.

“காவியத் தலைவி” – நடிகை சௌகார் ஜானகியின் சொந்தப் படம்.  கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சௌகார் ஜானகிக்குத்  தாய் – மகள் என்று இரட்டை வேடங்கள்.

தாய் – மகள் இருவருமே ஒரே பாடலை பாடுவதாக அமைந்த காட்சி அமைப்புக்கு பி.சுசீலா பாடிய பாடல் தான் “ஒரு நாள் இரவு- பகல் போல் நிலவு.” பாடல். Oru Naal Iravu Song HD | ஒருநாள் இரவு | KAVIYA THALAIVI|1970 | KANNADHASAN | Sowcar Janaki. (youtube.com)

முதல் பகுதிகளில் மகளுக்காகப் பாடும்போது ஒரு இளம் பெண்ணின் ஏக்கம் அந்தக் குரலில் தொனிக்கும்..

“அன்னை முகமோ காண்பது நிஜமோ

கனவோ நனவோ சொல்கின்றேன்..” என்று உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்த....  வயலின்களின் உச்சஸ்தாயி வீச்சுக்களைத் தொடர்ந்து..

“கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா – என்

கண்மணி சுகமா சொல் என்றேன்..” என்று தாய் பாட ஆரம்பிக்கிறாள்.  இந்தப் பகுதியில் துல்லியமாக ஒரு நுணுக்கமான முதிர்ச்சியை எப்படித்தான் அந்தக் குரலில் கொண்டுவர முடிந்ததோ!

தனிப்பாடல் என்றால் அது சாதாரணம் தான்.  ஆனால் ஒரே பாடலில் சட்டென்று தாய்மையின் முதிர்ச்சியை குரலில் வெளிப்படுத்த வேண்டும் என்றால்.. அது..கண்டிப்பாக அசாதாரணம் தான்.  அதிலும் இந்த “என்” என்ற ஒற்றை வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் .. தாய்மையின் ஏக்கமும், தாபமும் நிறைந்த அந்த “ஏன்” மனதை என்னவோ செய்யும்.

அதே போல “மகளே வாழ் என வாழ்த்துகிறேன்” ..என்ற வரிகளில் “மகளே” என்ற ஒரே வார்த்தை உச்சரிப்பு .. அதில் தொனிக்கும் உருக்கம். இப்படி எல்லாம் பாடச் சுசீலாம்மா  ஒருவரால்தான் முடியும்.

**

நவம்பர் 23 – 1970. டி.எம்.எஸ். – பி.சுசீலா இருவருக்கும் மிகச் சிறப்பான ஒரு கௌரவத்தைக் கொடுத்த நாள்.

மெல்லிசை மன்னரின் இசையில் மோகன ராகத்தில் பதிவான “தமிழ்த் தாய் வாழ்த்து” இவர்களின் இணைக்குரலில் பதிவு செய்யப்பட அந்தப் பாடலை அனைத்து அரசு விழாக்களும் , கல்வி நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவானாலும் முதலில் “இறை வணக்கப்” பாடலாக ஒலிக்கச் செய்து பிறகுதான் நிகழ்ச்சிகள் தொடங்கப் படவேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அரசாணை ஒன்றின் மூலம் நடைமுறைக்கு கொண்டுவந்த நாள் தான் அது.

நாட்டின் முதல் குடிமகன் உட்பட அரசு விழாக்களில் கலந்து கொள்பவர் யாராக  இருந்தாலும் இந்த இருவரின் குரலில் ஒலிக்கும் “தமிழ்த் தாய் வாழ்த்தி’ற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியே ஆகவேண்டும்.

தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட நமது இசை அரசியைத் தமிழன்னை தனது அருமை மகளாக ஸ்வீகரித்துக் கொள்ளாமல் இப்படிப்பட்ட ஒரு சிறப்பான பேறு அவரை வந்து சேர்ந்திருக்க முடியாது.

**

1972 – ஆம் ஆண்டு. மற்றொரு சாதனைச் சிகரத்தில் பி. சுசீலாவை உயர்த்தி வைத்தது.

அதுதான் எச்.எம்.வி. (இப்போது “சரிகம”) நிறுவனம் சார்பாக முதல்முதலாக அம்மன் பாடல்கள் இசை ஆல்பம் பி.சுசீலாவின் குரலில் வெளிவந்து ஆன்மீக உலகத்தில் மகத்தான சாதனை படைத்தது.

பிரபல பக்திப் பாடக சகோதரர்கள் கே.வீரமணி-சோமுவின் இசையமைப்பில் கவிஞர் கல்பனாதாசன் அவர்கள் இயற்றிய “ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா” உள்ளிட்ட பாடல்கள் அடங்கிய இசை ஆல்பம் வெளிவந்து விற்பனையில் மகத்தான சாதனை படைக்க ஆரம்பித்தது.  கிட்டத் தட்ட ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்த இந்த இசை ஆல்பம் ஒலிக்காத வீடுகளே இல்லை.  கோவில் திருவிழாக்களே இல்லை.

“ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா – சர்வ சக்தி ஜெய துர்கா” – என்ற முதல் பாடலே அன்னை பராசக்தியின் காவலை ஒரு ரட்சையாக இல்லம் தோறும் கொண்டு வந்து சேர்த்தது.

ஆன்மீக தனி இசை ஆல்பத்தில் நமது இசை அரசியின் பயணம் அப்போதுதான் ஆரம்பித்ததா என்ன?

(இசையின் பயணம் தொடரும்)

logo
Andhimazhai
www.andhimazhai.com