“எனக்குப் பாடத் தெரியாது. அதுமட்டுமல்ல: ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு நடிகனாக இருப்பதால் எனக்கு ஒரு பாடலைப் பொறுமையாக அமர்ந்து கேட்கவும் நேரமில்லை. ஆனாலும் பி. சுசீலா அவர்களின் பாடலை ஏதாவது ஒலிப்பதிவுக் கூடத்திலோ அல்லது வானொலியில் எப்போதாவது போகிற போக்கில் கேட்க நேர்ந்தாலோ அந்தக் குரலின் இனிமையில் அப்படியே லயித்துப் போய் என்னையும் அறியாமல் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிடுவேன். அந்த அளவிற்கு அவரது குரல் என்னை மெய்மறக்கச் செய்துவிடும்.
- தெலுங்கு குணச்சித்திர நடிகர் சத்யநாராயணா.
எம்.ஜி.ஆர்.- சிவாஜி ஆகிய இருவரும் உச்சத்தில் இருந்த அறுபதுகளில் அவர்களது படங்களில் நாயகியர் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்குப் பி.சுசீலா தான் பாடி வந்தார்.
செக்கச் செவேல் என்று இருந்த எம்.ஜி. ஆரை கன்னங்கருப்பாக டி.ஆர்.ராமண்ணா உருமாற்றி முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் அவரது முழுத் திறமையையும் வெளிக் கொண்டு வந்த படம்தான் “பாசம்”.
மெல்லிசை மன்னர்களின் இசையில் அனைத்துப் பாடல்களும் தேனாக இனித்தன.
ஒரே பாடலில் சோகம், சந்தோஷம் ஆகிய இரு வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்திப் பி. சுசீலா பாடிய பாடல் தான் –
“தேரேது சிலையேது திருநாளேது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது..” என்ற பாடல்.
அற்புதமான வார்த்தைகளை எளிமையாகக் கோர்த்துக் கொடுத்து ஒரு பெண்ணின் காதல் உள்ளத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் கவியரசர். Therethu silaiyethu thirunaal...PS / (youtube.com)
மனதில் நிறைந்த நாயகன் வராதபோது இருக்கும் பெண்ணின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக பாடலின் பல்லவியும் தொடரும் இரண்டு சரணங்களும் அமைந்திருக்கின்றன.
“உயிர் போன பின்னாலும் உடல் நின்றது
உதவாத உடல் இங்கு அசைகின்றது”
என்று பிரிவுத் துயரின் எல்லைக்கோட்டில் பெண் நிற்பதை வெகு அருமையாக தனது குரலின் மூலம் அற்புதமாக உணர்த்தி இருப்பார் பி. சுசீலா. சரணத்தின் கடைசி அடியை இரண்டாவது முறை பாடும்போது “அசைகின்றது” என்ற வார்த்தையில் அவர் பயன்படுத்தி இருக்கும் கமகப் பிரயோகம் நம் மனதையே அசைத்துவிடுகிறது.
இப்படித் தனது மனம் கவர்ந்தவனைக் காணாமல் அவள் தவித்துக்கொண்டிருக்கும்போது அங்கே அவன் வந்துவிட்டால்.. அவள் மனம் எப்படி பரபரக்கும்.. மகிழ்ச்சியில் எப்படி எல்லாம் துள்ளும். அந்த உற்சாகத் துள்ளலை அப்படியே கவியரசர் முந்தைய சரணத்தில் பயன்படுத்திய அதே வார்த்தைகளையே சற்று இடம் மாற்றிப் பயன்படுத்தி எழுதி இருப்பார்.
“அசைகின்ற உடல் தேடி உயிர் வந்தது.
உயிர் வந்த வழி தேடி மனம் வந்தது.
மனத்தோடு குணம் சேரும் இனம் வந்தது
இனத்தோடு இனம் சேரும் தினம் வந்தது” என்றவர் பல்லவியின் கடைசி சற்று மாற்றிப்
“தெய்வம் போல் மனிதரெல்லாம் மாறும்போது” என்று வார்த்தை மாற்றம் செய்திருப்பார்.
இந்தச் சரணத்திற்கு முன் வரும் இணைப்பிசையின் வயலின்களின் வேகமான சுழற்சிக்கு ஈடுகொடுத்து ஒரு ஹம்மிங்குடன் ஆரம்பித்திருப்பார் பாருங்கள். இப்படி ஒரே பாடலில் இருவேறுவிதமான உணர்வுகள் வெளிப்படப் பாடிய இந்தப் பாடல் பி. சுசீலாவின் நிகரற்ற குரல் வளத்திற்கும் அதன் இனிமைக்கும் அவரது திறமைக்கும் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.
இதே படத்தில் “உறவு சொல்ல ஒருவனின்றி வாழ்பவன்” பாடலில் உற்சாகத் துள்ளல் அழகாக வெளிப்படப் பாடி இருப்பார். Uravu Solla Oruvarindri Song HD | Paasam (youtube.com)
“மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே – உன் கை வண்ணம் அங்கு கண்டேன். கால் வண்ணம் இங்கு கண்டேன்” என்று விச்வாமித்திர முனிவர் ராமபிரானைப் புகழ்வதாக கம்பராமாயணப் பாடல். அதன் பாதிப்பில் கவியரசர் “எழுதிய பாடல்தான் “பால் வண்ணம் பருவம் கண்டேன் வேல் வண்ணம் விழிகள் மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்” – என்ற எம். ஜி.ஆருக்குப் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய இரண்டாவது டூயட் பாடல்.
இந்தப் பாடலில் “கண்வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்” என்று பி. சுசீலா தொடரும்போது அந்தக் குரலில் வெளிப்படும் நளினமும் அழகும் தெவிட்டாத இனிமையும் திரும்பத் திரும்பக் கேட்க வைத்து பாடலை ஒரு வெற்றிப்பாடலாக்கி விட்டன.
படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போன்ற முடிவை மக்கள் ஏற்காததால் பாடல்கள் வெற்றிபெற்ற அளவிற்கு “பாசம்” படத்திற்கு பாசமான வரவேற்பை மக்கள் அளிக்கவில்லை என்பது நிஜம்.
இயக்குனர் டி.ஆர். ராமண்ணாவிற்கு நூற்றுக்கணக்கான கண்டனக் கடிதங்கள் வந்து குவிந்தன.
“எம்.ஜி.ஆர் அவர்களை எந்த அளவிற்கு தமிழக மக்கள் நேசிக்கிறார்கள் என்பதை மட்டுமல்லாமல் மக்களின் உணர்வுகளுக்கு நேர் எதிரான விஷயங்களை சொல்லக் கூடாது என்ற மிகப்பெரிய உண்மையையையும் எனக்கு அந்தக் கடிதங்கள் உணர்த்தின” என்று பாசம் படத்தின் தோல்வியைப் பற்றிக் குறிப்பிடுகிறார் டி.ஆர்.ராமண்ணா.
****
ஆண் குரலும் பெண்குரலும் இணைந்து பாடும் ஜோடிப் பாடலைப் போல இரு பெண்குரல்கள் இணைந்து பாடிய ஜோடிப் பாடல்களிலும் தனது நேர்த்தியான குரலினிமையால் வசீகரித்தார் பி.சுசீலா.
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில் “குங்குமம்” படத்தில் டைட்டில் காட்சிப் பாடலாக அவர் பாடிய “குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்” பாடல் ஆபேரி ராகத்தில் வெகு அற்புதமாக அமைந்த பாடல்.
அடுத்து “பூப்பறிக்க இத்தனை நாளா” என்று பூந்தோட்டக் காவல்காரனை பாடலை விஜயகுமாரிக்காகக் கேட்ட பி. சுசீலா விஜயகுமாரிக்காக மட்டும் அல்லாமல் சுசீலாவிற்காகவும் பி. சுசீலா பாடியிருந்தார்.
“சுசீலாவுக்காக பி. சுசீலா பாடி இருக்கிறாரா?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
“குங்குமம்” படத்தில் தான் தேசிய விருது பெறும் அளவிற்கு தேர்ந்த நடிப்புத் திறமை மிக்க நடிகை “ஊர்வசி” சாரதா முதல் முதலாகத் திரை உலகில் அறிமுகமானார். படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர்தான் சுசீலா.
அந்த வகையில் சுசீலாவுக்காக (சாரதாவிற்காக) சுசீலாவே பாடினால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்த மாதிரிதானே இருக்கும்!
இந்தப் படத்தில் நமது இசை அரசி பாடிய “தூங்காத கண்ணென்று ஒன்று” என்ற சாருகேசி ராகப் பாடல் தேனான ஹிட் பாடல். தூங்காத கண்ணென்று HD Video Song | குங்குமம் | சிவாஜி கணேசன் | சரிதா | K. V. மஹாதேவன் (youtube.com)
பாடல் முடியும் இடத்தில் கொடுக்கும் அந்த ஹம்மிங்..ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு விதமாக ஒலிக்கும். இறுதியில் “ஆஹாஹா ஹா ...ஹா....” என்று அவர் சாருகேசியை உச்சத்தில் ஏற்றி நிறுத்தும் அழகே தனி.
சாதா திருடனையும் காதல் திருடனையும் ஒற்றுமைப்படுத்திக் கவியரசர் எழுதிய அற்புதமான பாடல்தான் “காலங்கள் தோறும் திருடர்கள் இருப்பார் அறிவாயா தோழி – அதில் காதல் திருடர்கள் பாதிக்குமேல் என்று அறிவாயா தோழி”. பி. சுசீலா பாடும் இந்தப் பாடலைக் கண்டிப்பாகக் கேட்கவேண்டும். KUNGUMAM (1963)-Kaalangal thorum thirudargal irundhar- P.Suseela-K.V.Mahadhevan (youtube.com)
‘ஹூஹும் ஹூஹும்..ஹூஹு..ஹூஹும்...’ என்று மெல்லிய ஹம்மிங்குடன் ஆரம்பித்து மிகச் சிறப்பான மெட்டை அமைத்து மிக மிகச் சிறப்பான முகப்பிசை, இணைப்பிசைகளைக் (prelude & interlude) கோர்த்துக் கொடுத்து அவற்றை நமது இசை அரசியின் குளுமைக்குரலில் தோய்த்தெடுத்துக் கொடுத்திருக்கிறார் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் என்றால் அது மிகை இல்லை.
இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தில் “திருடிய பொருளே திருடனை விரும்பும் – தேகத்திலே ஒரு பாதியை வழங்கும்” என்று கவியரசர் எழுதிய வரிகள் தணிக்கைத் துறையினரால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டதால் “நேசத்திலே ஒரு பாசத்தை வழங்கும்” என்று மாற்றி எழுதிக் கொடுத்து மறுபடியும் பி.சுசீலாவைப் பாடவைத்து மீள் பதிவு செய்யப்பட்டது.
ஆனாலும் இனிமையான இசை நயமும், கவிதை நயமும் மிளிர்ந்த இந்தப் பாடல் ஏனோ அகில இந்திய வானொலியால் அறவே புறக்கணிக்கப்பட்ட பாடலாக அமைந்துவிட்டதால் பெருவாரியான ரசிகர்களைச் சென்றடையாமலேயே போய்விட்டது.
இதே நிலை “குலமகள் ராதை” படத்தின் பாடல் “கள்ளமலர்ச் சிரிப்பிலே” பாடலுக்கும் ஏற்பட்டது.
“குலமகள் ராதை” படத்தில் சரோஜாதேவி – தேவிகா என்று இருவருக்குமே பாடி அசத்தி இருந்தார் பி. சுசீலா.
“சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா” என்ற மருதகாசியின் பாடலை டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்து பாடி இருந்தார் பி. சுசீலா. Chandhiranai Kanamal Alli Mugam சந்திரனை காணாமல் K.V.மகாதேவன் இசையில் TMS P.சுசீலா பாடிய பட பாடல் (youtube.com)
சந்தர்ப்ப வசத்தால் பிரிவு ஏற்பட்டுவிட அந்தப் பிரிவுத் துயரம் வாட்டி எடுக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை கவியரசர் அற்புதமாக பாடலாக்கிக் கொடுக்க அந்தப் பாடல்தான் “ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம் – உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்” பாடல். Aaruyire mannavare... PS. / (youtube.com)
ஆரம்பத்தில் வீணையின் சிறு மீட்டலைத் தொடர்ந்து சாரங்கியின் இழுமையான வீச்சைத் தொடரும் குழலோசை.. அந்தக் குழலோசை முடியும் இடத்தில் நமது இசை அரசி “ஆருயிரே மன்னவரே ...” என்று ஆரம்பிக்கும் எடுப்பே ஒரு பெண்ணின் மனத்தவிப்பை நம் மனத்திற்குள் கடத்தி விடும்.
“வந்த துன்பம் என்னுயிரை எடுத்துக்கொண்ட போதும் நான் மறுமுறை பிறக்கும்போது மாலையிட்டால் போதும்” என்று முடிக்கும் இடத்தில் அந்தக் குரலில் வெளிப்படும் சோகம் கேட்பவர் மனதைப் பிழியத் தவறாது.
கவியரசரின் வார்த்தைகளும் , திரை இசைத் திலகத்தின் இசையும், நமது இசை அரசியின் குரலும் ஒருசேரச் சங்கமிக்கும் பாடல் இது.
அடுத்து சிலேடை நயத்தில் “பகலிலே சந்திரனைப் பார்க்கப்போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்” பாடல். பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் பாடல் |Pagaliley Chandiranai Song | P.Susheela | Kulamagal Radhai (youtube.com)
இப்படி சரோஜாதேவிக்காக சோகத்தில் உருகவைத்தவர் இதற்கு நேர்மாறாக தேவிகாவுக்காக இரண்டு உற்சாகப் பாடல்களைக் பாடிக்கொடுத்து நம்மை இதை எல்லாம் பாடியது ஒருவர்தானா என்று வியக்கவைத்திருக்கிறார்.
“இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று..” – இன்றளவும் இந்தப் படப் பாடல்களில் முதலிடம் பிடிக்கும் பெண்குரல் பாடல் - படத்தின் தீம் சாங் என்றே இந்தப் பாடலைச் சொல்லலாம். இரவுக்கு ஆயிரம் கண்கள் பாடல் | Iravukku Aayiram song | P. Susheela | Kulamagal Radhai . (youtube.com) வார்த்தைகளின் உச்சரிப்பிலேயே அது இடம் பெறும் சூழலை அப்படியே நம் மனதுக்கு கடத்திவிடுவதில் பி. சுசீலாவிற்கு நிகர் அவரே தான். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம் மனம் இனம் புரியாத உற்சாகப் பரவசத்தில் மிதக்கும்.
அடுத்து தேவிக்காவுக்காக இவர் பாடிய மற்றொரு பாடல் “கள்ள மலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே” என்ற கவிஞர் மருதகாசியின் பாடல். Kallamalar sirippile - Kulamagal radhai (youtube.com)
சரணத்தில் “சொல்லுமில்லை பொருளுமில்லை மௌனமாகப் படித்தாள்” என்று வரிகளுக்குப் பிறகு ஒரு சின்னஞ்சிறு ஹம்மிங்கிற்குப் பிறகு பாடலைத் தொடர்வார் பி. சுசீலா. அந்தக் துக்கினியூண்டு ஹம்மிங்கில் தான் எத்தனை லாவகம், சங்கதிகள் ப்ரயோகங்கள்... பாடலைக் கேட்டால்தான் அதனை உணரமுடியும். இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் முகப்பிசை (prelude)..அடடா. அதைப் பற்றிக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எந்த இலக்கணத்துக்குள்ளும் வரையறுக்க முடியாத அற்புதமான இசை அது. ஒரு சிறிய இடைவெளிக்குள் நான்கைந்து ஏவுகணைகளை தொடர்ந்து செலுத்தினால் எப்படி இருக்குமோ அப்படி நமது மனதை அசைத்துவிடும் விதமாக அதனை அருமையாகக் கொடுத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.
ஆனால் அகில இந்திய வானொலியில் இந்தப் பாடல் ஏனோ ஒலிபரப்பப் படாமல் போனதால் இந்தப் பாடல் படத்தில் இருந்ததா என்பதே சந்தேகத்துக்குரியதாகி விட்டது.
நடிகர் திலகத்தின் முதல் சொந்தத் தயாரிப்பான “அன்னை இல்லம்” படத்தில் கே.வி. மகாதேவனின் இனிய இசையில் தேவிகாவுக்காகப் பாடி இருந்தார் பி. சுசீலா.
இன்றளவும் அனைத்துத் தொலைகாட்சி ஊடகங்களிலும் கண்டிப்பாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் “பஹாடி” ராகத்தில் திரை இசைத் திலகம் அமைத்துக் கொடுத்து டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பி. சுசீலா பாடி இருக்கும் “மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்.”என்ற கவியரசரின் பாடலில் அவரது குரல் புரிந்திருக்கும் இந்திர ஜாலம் வார்த்தைகளுக்குள் அடங்காத ஒன்று. MADI MEETHU THALAI VAITHTHU SSKFILM017 PS,TMS @ ANNAI ILLAM (youtube.com)
இந்தப் பாடலின் இணைப்பிசையைப் பற்றிக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மேற்கத்திய இசையில் “கெனான்” (canon) பாணியைப் பயன்படுத்தி இந்த இணைப்பிசையைச் சேர்த்திருக்கிறார்கள் கே.வி.மகாதேவனும் அவரது உதவியாளர் டி.கே. புகழேந்தியும்.
“கெனான்” என்றால்...?
ஒரு குறிப்பிட்ட இசைச் சங்கதி யை முதில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட வாத்தியக் கருவிகளோ இசைக்க.... அதையே ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் முன்னதற்கு மாறுபட்ட வாத்தியக் குழு பின்னணியில் தொடர்வதுதான் “கெனான்”. catch and round என்று இதைச் சுருக்கமாக ஆக்ஸ்போர்ட் இசை அகராதி குறிப்பிடுகிறது.
“மடி மீது தலை வைத்து” பாடலின் முதல் சரண இணைப்பிசையில் வயலின்களும் குழலிசையும் வெளிப்படுத்தும் சங்கதியை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வயலினோடு brass வகையைச் சேர்ந்த இசைக்கருவிகள் பின்னணியில் தொடர்ந்துகொண்டே வருவதைப் பாடலைக் கவனித்தால் நம்மால் உணர முடியும்.
பாடல் முடிவில் “காயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் இரவிலே” என்ற வரிகளைத் தொடர்ந்து முன்போலவே ஹம்மிங்.. ஹம்மிங் முடிந்ததும் “மடிமீது தலை வைத்து” என்று மறுபடி இசை அரசியின் குளுமைக் குரலிலேயே முடியும்போது நமது கண்களும் மனமும் ஒரு சேரச் சொக்கத் தொடங்கிவிடும்.
இப்படி முழுக்க முழுக்க வெற்றிப்பாடல்கள் இசை அரசியின் வெற்றிச் சரித்திரத்தின் பக்கங்களை நிரப்பிக்கொண்டே இருந்தன.
(இசையின் பயணம் தொடரும்..)