இசையரசி-20

பி. சுசீலா - ஒரு சாதனைச் சரித்திரம்
பி. சுசீலா
பி. சுசீலா
Published on

“எந்த மொழிப் பாடலைப் பி. சுசீலா பாடினாலும் அதில் பாவம் நிறைந்திருக்கும். அனுபவித்துப் பாடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவரிடம் இனிய குரல் வளம் மிகுந்திருக்கிறது.  பார்த்தால் கூச்சமுள்ளவராகத் தோன்றுவார். ஆனால் பழகப் பழக அவருடைய சாந்த சுபாவம் நம்மைக் கவர்ந்து விடும்.”

-     பின்னணிப் பாடகி திருமதி. பி. லீலா.

 

ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.

இயக்குனர் ஸ்ரீதர் எதிர்பார்த்த ஹான்ட்டிங் டியூன் கிடைக்காதால் அந்தப் பாடல் இல்லாமாலேயே படத்தை முடித்தேவிடும் முடிவுக்கே வந்துவிட்ட நிலையில் தான் அன்று காலையில் மெல்லிசை மன்னரிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஸ்ரீ. நீங்க கேட்டமாதிரி அருமையான டியூன் ஒண்ணு மனசிலே ஓடிக்கிட்டு இருக்கு. இதுக்காகத்தான் நாம ஆறு மாசமாக் காத்துக்கிட்டு இருந்தோம்.” என்றார்.

புதுத் தெம்புடன் நிமிர்ந்தார் ஸ்ரீதர்.

ஆர்மோனியத்தில் தனது மெட்டை வாசித்துக்கொண்டே எம்.எஸ்.வி. பாடிக் காட்ட அப்படியே உற்சாகத்தில் திளைத்தார் ஸ்ரீதர்.  அவர் எதிர்பார்த்ததற்கு மேலாகவே மெட்டு அமைந்துவிட்டது. 

அந்த ஹான்ட்டிங் டியூன் நமது இசை அரசியின் குரலில் வெளிவந்தது.

இன்று வரை நம் அனைவரின் நெஞ்சங்களும் மறக்கவே முடியாத அந்தப் பாடல்தான் “நெஞ்சம் மறப்பதில்லை. அது நினைவை இழக்கவில்லை” பாடல். நெஞ்சம் மறப்பதில்லை காதல் பாடல் | Nenjam Marappathillai song | கண்ணதாசன் இனிமையான காதல் பாடல் . (youtube.com)

 

பாடலின் ஆரம்பத்தில் சரியாக இருபத்திரண்டு நொடிகளுக்கு வரும் அந்த ஹம்மிங்...அதில் பளிச்சிடும் இனிமை...  நடுங்கும் குரலில் தென்படும் லேசான விசும்பல்.. இசை அரசி ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட மெட்டுக்கு ஏற்றவகையில் பாடி கேட்பவர் மனங்களை வேட்டை ஆட முடியும்.

படத்தில் “தீம் சாங்” ஆக நான்கு முறை இடம்பெறுகிறது இந்தப் பாடல்.

அதில் மூன்று முறை பி. சுசீலாவின் குரலில் ஒலிக்கிறது.  ஒரு முறை டூயட் ஆக பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் சேர்ந்து...மற்ற இருமுறைகள் இன்பச் சூழலில் ஒருமுறையும், சோகமாக ஒருமுறையும்.

எத்தனை முறை கேட்டாலும் நம் நெஞ்சம் மறப்பதே இல்லையே.

 ------------------------------------

1963-இல் மெல்லிசை மன்னர்களும், திரை இசைத் திலகமும் அதிகளவுப் படங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியபோது இருவரது இசையிலும் அற்புதமான பாடல்களைப் பாடும் வாய்ப்பு நமது இசை அரசிக்கு கிடைத்த வண்ணம் இருந்தன.

தமிழ், தெலுங்கு இரண்டிலும் கே.வி.மகாதேவனின் வெற்றிக் கொடி பறக்க ஆரம்பித்தன.  அதே நேரம் அவருக்குச் சரி சமமாக மெல்லிசை மன்னர்களும் புகழ்க் கொடியைப் பறக்கவிட்டார்கள்.

அந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழித் தயாரிப்பாக வெளிவந்த ஒரு வண்ணத் திரைப்படத்தையும் அதில் பி. சுசீலாவின் பங்களிப்பையும் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

பொதுவாக தயாரிப்பில் தாமதமாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

ஆனால் கிட்டத்தட்ட ஐந்து வருட காலம் தயாரிப்பில் இருந்த ஒரு திரைப்படம் வெளிவந்ததும் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் சர்வ சாதாரணமாக  நூறு நாட்கள், நூற்று எழுபத்தைந்து நாட்கள் கடந்து பரபரப்பான வெற்றியைப் பெற்றது என்றால் ...

அப்படிப்பட்ட பெருமைக்குரிய திரைப்படம் தான் சங்கர ரெட்டி என்பவர் தயாரித்து வெளிவந்த புராணத் திரைப்படமான “லவகுசா”.

லவகுசா
லவகுசா

இந்தப் படத்தை 1958 ஆம் வருடமே தயாரிக்க ஆரம்பித்தார் சங்கர ரெட்டி.  ஆனால் கால் வாசிப் படம் முடிந்ததும் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த முடியாமல் பணப் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். 

ஆரம்பத்தில் உச்ச கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு மெல்ல மெல்ல அங்குலம் அங்குலமாக படம் முன்னேறிக்கொண்டு வந்து..  1963-இல் ஒருவழியாக முடிவடைந்து திரைக்கு வந்தது.

முக்கால்வாசி படம் முடிந்ததும் இயக்குனர் புல்லையாவின் உடல் நலம் பாதிக்கப்பட அவருக்குப் பதிலாக அவரது மகன் சி.எஸ். ரெட்டி படத்தை இயக்கினார்.

தெலுங்கில் முதல் வண்ணத் திரைப்படம் “லவகுசா” தான்.

உத்தர ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் லவன், குசன் என்ற ராமரின் இரு புதல்வர்களின் பாட்டுக் குரலாகப் பி. லீலாவுடன் இணைந்து பரிமளித்தார் பி. சுசீலா.

தெலுங்குப் பதிவுக்கு கண்டசாலா இசை அமைக்க, தமிழ்ப் பதிவுக்கு திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் – கண்டசாலா இருவரும் இணைந்து  இசை அமைத்தனர்.  ஆனால் பாடல்களில் கே.வி.மகாதேவனின் டச் தான் தனியாகத் தெரிகிறது.  பின்னணி இசைக் கோர்வை இரண்டிலும் ஒன்றாகவே அதை மட்டும் கண்டசாலாவே கவனித்துக்கொண்டார் என்று நினைக்க தோன்றுகிறது.

தெலுங்கில் பாடல்கள் அதிகம்.  அதிலும் ஸ்லோகங்கள், பத்யங்கள் என்று முப்பத்தெட்டு பாடல்கள் ..

தெலுங்கில் பாடல்களை சமுத்ராலா (சீனியர்), வேம்பட்டி சதாசிவ பிரம்மம் ஆகியோர் எழுதினர்.  அதோடு வால்மீகி இராமாயண ஸ்லோகங்கள் வேறு பயன்படுத்தப்பட்டன.

தமிழில் ஏ.கே. வேலன் வசனங்களை எழுத அனைத்துப் பாடல்களையும் கவிஞர் மருதகாசியே எழுதினார்.

“லவ குசா” என்றதுமே பி. லீலாவுடன் இணைந்து கணீர் என்று ஒலிக்கும் பி. சுசீலாவின் குரலில் பாடல்கள் அனைத்துமே தேன் சொட்டுக்கள் தான்.

ஆரம்பத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வால்மீகி, சீதாதேவி, லவ குசர்கள் ஆகியோர் பாடும் “திருவளர் நாயகன் ஸ்ரீராமனே” பாடல். முனிவருக்காக கண்டசாலா, சீதாதேவிக்கு பி. லீலா- லவ குசர்களுக்கு பி.லீலா – பி. சுசீலா. THIRUVALAR NAAYAGAN SRI RAAMANEY GS, PS, PL @ LAVA KUSAA (youtube.com)

 

இருவரும் இணைந்து பாடும்போது இருவரின் குரல்களையும் பிரித்து இனம் காண்பது கடினம். அந்த அளவிற்குக் கணீர் என்று வெண்கல மணி நாதம் போல இருவரின் குரல்களும் நேர்த்தியாகவே ஒலிக்கின்றன.

அடுத்து “ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே” – இருபத்து நான்காயிரம் சுலோகங்களில் மகரிஷி வால்மீகி அவர்கள் படைத்த ஆதி காவியமான ராம காதையை வெறும் ஐம்பத்திரண்டே வரிகளில் எளிமையாக, அற்புதமாக பாமரருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் பாடலாகக் கவிஞர் மருதகாசி  வடித்துக் கொடுக்க அந்த வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த இசையை வெகு நேர்த்தியாக கே.வி. மகாதேவன் வெளிக்கொண்டு வர அதற்கு தங்களது குரல்களால் உயிரூட்டி நமது செவிகளுக்குப் புண்ணியத்தைச் சேர்த்திருக்கிறார்கள் பி. லீலாவும் நமது இசை அரசியும்.

இசைத்தட்டாகக் கேட்கும்போது மொத்தம் பன்னிரண்டு நிமிடங்கள் ஒலிக்கும் பாடல் படத்தில் மூன்று பகுதிகளாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.

ஹிந்தோளம், சிந்துபைரவி, சிவரஞ்சனி, காபி ஆகிய ராகங்களில் அமைந்த பாடல் இது.Jagan Pugazhum (youtube.com)

“மாரி போலக் கண்ணீரும் சிந்தக் காரணம் ஏனம்மா” பாடலும், “ஸ்ரீ ராம சுகுணா சீலா” பாடலும் சரி..முன்னதில் தாயைத் தேற்றும் வீர மகன்களையும், அடுத்ததில் உருக்கத்தையும் சரி சமமாகவே இருவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர்.

ராமரின் அஸ்வமேத யாகக் குதிரையை லவ குசர்கள் சிறைப் பிடிக்கும் கட்டத்தில் பாடும் “ஈடு இணை நமக்கு ஏது?” என்ற மோகன ராகப் பாடலைக் கேட்கும்போது உண்மையிலேயே உங்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது அம்மா என்று கொண்டாடத் தோன்றுகிறது.

பத்யம் என்று ஒரு வகை தெலுங்கில் உண்டு.  அதாவது அந்தக் காலத்தில் மேடை நாடகங்களிலும் , பாகவத மேளாக்களிலும் ஒரு வார்த்தை வசனமாகப் பேசிவிட்டு அடுத்த வார்த்தையை பாடலாக தனது பிரதாபத்தை ராஜபார்ட் நடிகர் தெரிவிப்பது போல இருக்கும்.

“இந்த உத்தியான வனத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்த நீர் யார்?” என்று நாயகியின் தோழி  கேட்க அதற்கு..”என்னையா யாரென்று கேட்கிறாய்..நான் யார் தெரியுமா?” என்று வசனமாகப் பேசிவிட்டு..தனது பரம்பரைப் பெருமைகளை பாடல் போல விருத்தமாக நீட்டி முழக்கிப் பேசுவார் கதாநாயகன்.

அஸ்வமேத யாகக் குதிரையின் நெற்றியில் பதிக்கப் பட்டிருக்கும் பட்டயத்தில் எழுதப்பட்ட வாசகங்களை சிறுவன் லவன் இந்தப் பத்ய வகையில் விருத்தமாக பாடுவதாக அமைந்த சிறு பாடல்தான் “வீரமாதா கௌசல்யா தேவி பெற்ற..”என்ற பாடல். இந்தப் பாடல் வரிகளைத் தொடர்ந்து “ஹ்ஹூம்” என்று ஒரு அலட்சிய பாவனையில் வார்த்தையை உதிர்த்துவிட்டு பி.சுசீலா பாடும் அழகே தனி.

லவ குசா படத்தின் பாடல்கள் பி. சுசீலாவிற்கும் பி. லீலாவிற்கும் சிறப்பான புகழைப் பெற்றுத் தந்தன.

“ஜெகம் புகழும்’ பாட்டு புட்டபர்த்தி சத்ய சாய் ஸ்வாமிக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு. இந்தப் பாட்டு வந்தப்புறம் நானும் லீலாவும் எப்போ ஸ்வாமியைப்பார்க்கப் போனாலும் “லவ குசா” என்றே எங்களை அன்போடு கூப்பிடுவார் சுவாமி” என்று கூறியிருக்கிறார் பி.சுசீலா. 

படத்தில் காட்சியில் நடிக்கும் நட்சத்திரங்களுக்குக் கிடைக்கும் அந்தப் பெருமை பின்னணி பாடிய இருவருக்கும் கிடைத்திருப்பது உண்மையிலே பெரிய பாக்கியம் தானே.

அந்த வருடப்படங்களில் பி. சுசீலாவின் தன்னிகரற்ற திறமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்த படம் “கற்பகம்”.

“புன்னகை அரசி” என்று அன்போடு அழைக்கப்படும் கே.ஆர். விஜயாவின் முதல் படம்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களும் பெண் கதாபாத்திரங்களுக்கே.  அதுவும் பி. சுசீலாவே தான் இரண்டு நடிகையருக்கும் பாடவேண்டும்.

கற்பகம் படத்தில் இரண்டு கதாநாயகியர். ஒருவர் அறிமுக நடிகை கே.ஆர். விஜயா.  மற்றவர் நடிகையர் திலகம் சாவித்திரி.

சாவித்திரிக்கு பி. சுசீலா சரி. ஆனால் புதுமுக நட்சத்திரம் கே. ஆர்.விஜயாவிற்கு ...?

கொஞ்சமும் அசரவில்லை பி. சுசீலா.  அற்புதமாக விஜயாவின் பாட்டுக்குரலாக உருமாறி விட்டார் அவர்.

அதைப் பார்ப்பதற்கு முன்பாக கே.எஸ்.ஜி. அவர்களின் மற்றொரு படமான “சித்தி” படத்தைப் பற்றிக் கூறியே ஆகவேண்டும்.

“சித்தி” படத்திற்கு கவியரசர் பாடல் எழுத வந்தபோது அவரிடம் காட்சி அமைப்பை விளக்கினார் கே.எஸ்.ஜி.  ஒரு பெண் குழந்தை தூங்கவேண்டும். பெண்ணாகப் பிறந்துவிட்டதால் இப்போது தூங்கினால் தான் உண்டு.  இதனை ஒரு தாலாட்டுப் பாடலாக எழுதித் தரவேண்டும்.

இதனைக் கேட்டதும் கொஞ்சம் கூட தயங்காமல் கவியரசர் “பெண்ணாகப் பிறந்தவர்க்குக் கண்ணுறக்கம் இரண்டு முறை.

பிறப்பில் ஒரு தூக்கம்: இறப்பில் மறு தூக்கம்.

இப்போது விட்டுவிட்டால் எப்போதும் தூக்கமில்லை.

என்னருமைக் கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு ..

என்று பாடல் வரிகளை அநாயாசமாகக் கொடுக்க...

அதை பத்மினிக்காக மெல்லிசை மன்னர்கள் இசையில் பி. சுசீலா மனமுருகும் வகையில் பாடிக் கொடுத்தார்.

இதே படத்தில் ஆரம்பத்தில் “தண்ணீர் சுடுவதென்ன” என்ற டூயட் பாடலை டி.எம்.எஸ்.அவர்களுடன் இணைந்தும் பாடி இருக்கிறார்.

இரண்டிலும் எவ்வளவு வேறுபாடு?

இரண்டையுமே பத்மினிக்குத்தான் பாடி இருந்தாலும்...இதில் ஒரு கன்னிப்பெண்ணின் துள்ளலும் துடிப்பும்...

“காலமிது” பாடலிலோ நான்கைந்து குழந்தைகளுக்குத் தாயாக  உருமாறி இருந்ததால் பக்குவப்பட்ட தாயின் மனமுதிர்ச்சி அவரது குரலில் பாடலைக் கேட்கும்போது வெளிப்படும்.

படம் வெற்றி அடைந்ததும் கவியரசர் கே.எஸ்.ஜி.யிடம், “என் பாட்டாலதான் உன் படம் ஜெயித்தது.”என்று விளையாட்டாகச் சொல்ல..

“அப்படியா..என் அடுத்த படத்துலே நீங்க இல்லாம  வேற கவிஞரை எழுத வச்சு அதையும் வெற்றிப்படமாக்கிக் காட்டட்டுமா?”என்று வேடிக்கையாகப் பதில் சொன்னவர் சொன்னதோடு நிற்காமல் “கற்பகம்” படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலியை எழுத வைத்தார்.

“ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு.” என்ற பாடலில் .. மெல்லிசை மன்னர் சரணங்களில் ஈற்றடிகளில் வரும் வார்த்தைகளைக்   கோடிட்ட இடங்களை நிரப்பும் பாணியில்  கேட்கும் நம்மிடமே விட்டுவிடுவார். Karpagam - Aayiram Iravugal song (youtube.com)

“வயதில் வருவது ஏக்கம் – அது

வந்தால் வராது......................   (தூக்கம்)

வந்ததம்மா மலர்க் கட்டில் – இனி

வீட்டினில் ஆடிடும்.......................  (தொட்டில்)

“வருவார் வருவார் பக்கம்

உனக்கு வருமே வரும் ஹூஹும்ம்.. (வெட்கம்)

தருவார் தருவார் நித்தம் – இதழ்

தித்திக்க தித்திக்க.........................

சாவித்திரி பாடுவதாக அமைந்த “பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்”.. பாடலில் லேசாக இழுத்து முடிப்பாரே அந்த அழகே தனி.

இன்றளவும் படத்தின் பெயர் சொன்னாலே போதும் . நினைவில் பளிச்சென்று வந்து மோதும் பாடல் “அத்தை மடி மெத்தையடி”

கற்பகம்
கற்பகம்

புதுக் கதாநாயகி கே.ஆர்.விஜயாவிற்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் பாடல்.  பாடலின் ஆரம்பத்தில் “ஆயி ஆயி ஆராரோ..” என்று முடிக்கும் விதத்திலேயே அதீத இனிமையும் நளினமும் அந்தக் குரலில் தெறிக்கும். Athai Madi Methaiyadi Full Video Song 4K | P Susheela | Vaali | Viswanathan Ramamoorthy | KR Vijaya (youtube.com)

இதையும்  “மன்னவனே அழலாமா” பாடலையும் கேட்டுப் பாருங்கள். இரண்டையும் ஒரே விதமாக நளினமும் நயமும் இனிமையும் பளிச்சிடும் குரலில் அற்புதமாகப் பாடிக் கொடுத்திருப்பார் பி. சுசீலா. Karpagam Tamil Movie Songs | Mannavaney Video Song | AP International (youtube.com)

 

“கற்பகம்” படத்தை ஹிந்தியிலும் “ரிஸ்தே நாடே” என்ற பெயரில் கே.எஸ்.ஜி.யே ராஜ்குமார், ஜமுனா, நூதன் ஆகியோரை நடிக்க வைத்து இயக்கினார்.

மதன்மோகன் இசை.  இதிலும் ஒரே பெண் குரல்தான். லதா மங்கேஷ்கர்.

அதுவரை ஹிந்தித் திரை மெட்டுக்களே தமிழில் பயன்படுத்தப் பட்டு வந்திருக்க.. மெல்லிசை மன்னரின் இசை மெட்டால் கவரப்பட்ட மதன்மோகன் “அத்தை மடி மெத்தையடி” பாடல் டியூனைத் தழுவியே ”ஆரி நீண்டியகி பாரி” பாடலை அமைத்தார்.  Aari Nindiya Ki Pari 1 - Lata Mangeshkar - RISHTE NAATE - Raaj Kumar, Nutan (youtube.com)

இதே “கற்பகம்” பின்னாளில் தெலுங்கில் “தோடு நீடா” என்ற பெயரில் கே.வி.மகாதேவனின் இசையில் வெளிவந்தது. ஆனால் அவற்றில் ஆண்குரல் பாடல்களும் அமைந்திருந்தன.  தெலுங்கில் அனைத்துப் பாடல்களும் முற்றிலும் மாறுபட்ட இசை வடிவத்தில் வந்து செவிகளை மயக்கத்தான் செய்தன.

“அத்த ஓடி புவ்வாலே”என்று தெலுங்கில் பி.சுசீலா பாடும் பாடல் ஹிட் பாடலானது. Thodu Needa Movie Songs - Attha Odi Song - K V Mahadevan Songs (youtube.com)

 

என்றாலும் நமக்கெல்லாம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தவை தமிழில் இசை அரசி தனது குளுமைக் குரல் என்னும் தேனில் தோய்த்துக் கொடுத்த பாடல்கள் தான்.

(இசையின் பயணம் தொடரும்)

logo
Andhimazhai
www.andhimazhai.com