“ சிதையாமல் வந்து விழும் சொற்கள், குறையாமல் இணைந்து வரும் சுருதி, குலையாத தாளக்கட்டு, சரளமாக வந்து உதிரும் பிருகாக்கள் முதலிய எல்லாவற்றையும் சகோதரி பி. சுசீலா அவர்கள் பாடும்போது அவரது குரலில் கண்டேன்”
- பாரத ரத்னா லதா மங்கேஷ்கர்
வருடம் 1961 –இந்த வருடம் சற்றேறக்குறைய நேரடித் தயாரிப்புகளாக முப்பது தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. (இவற்றில் ஒன்றிரண்டு கூடுதலாகவும் இருக்கலாம்). இவற்றில் இருபத்து நான்கு படங்கள் பி. சுசீலாவின் பாடல்களைத் தாங்கி வந்தன. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி உருவாக்கிய மெல்லிசை அலை பி. சுசீலாவை அழகாக வெற்றிக்கரையில் கொண்டுவந்து சேர்த்தது.
அவற்றில் குறிப்பிடப்படவேண்டிய முதல் படம் டி.ஆர். ராமண்ணாவின் “மணப் பந்தல்”
இந்தப் படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கும், ஈ.வி. சரோஜாவிற்கும் பின்னணி பாடினார் பி. சுசீலா. படத்தில் இடம்பெற்ற எட்டுப் பாடல்களில் சரிபாதி பாடல்கள் பி.சுசீலாவின் குரலினிமையில் தோய்ந்து வந்தன.
கதைப்போக்கை அப்படியே பாடலில் கவியரசர் வடித்தெடுத்த பாடல் “ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பிறந்ததம்மா”.
எப்போதுமே கீழ் ஸ்தாயியில் பாடும்போது பி. சுசீலாவின் குரலில் ஒரு நளினம் பளிச்சிடும். இந்த நளினம் பாடலின் முதல் வரியிலேயே அமைந்து செவிகளுக்கும், மனதுக்கும் தேன் வார்க்கும் பாடல் இது.
“கண்கள் சிலைபோல அசையாமல் பார்க்கும்
பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும்”
- இரண்டாவது வரியில் வரும் ‘தவறாமல்” என்ற வார்த்தையை லேசாக அசைத்து சிறு சங்கதி சேர்த்து இசைப்பார்.
இதே போல அடுத்த சரணத்தில் “ இன்று குலத்தோடு மணம் பேசக்கண்டேன்” என்ற வரிகளில் “குலத்தோடு” என்ற வார்த்தையையும் அதே போல லேசாக நீட்டி சிறு சங்கதி சேர்த்து பாடுவார். “அவருக்கு சங்கதிகள் எல்லாம் வலியச் சேர்க்கணும் என்று அவசியமில்லாமல் பாடிக்கொண்டே போகும்போது தானாக வந்து விழும்” என்று பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் சொல்வது போல இந்தச் சங்கதிகள் அவரையும் அறியாமல் வந்து விழும் நகாசு வேலைகள். பாடலுக்கு ஒரு தனி மெருகையே இவை சேர்க்கின்ற அழகு .. பாடலைக் கேட்டுத்தான் ரசிக்கவேண்டும். Ore Ragam Ore Thalam Songs 4K P.சுசீலா பாடிய பாடல் ஒரே ராகம் ஒரே தாளம் (youtube.com)
“பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்” பி. பி. ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் டூயட் பாடல். மெல்லிசை மன்னரின் தனித் திறமைக்கு ஒரு எடுத்துக் காட்டு இந்தப் பாடல். ஆரம்பத்தில் இருவரும் இசைக்கும் ஹம்மிங் கிலேயே மனதை கவர்ந்துவிடுகிறார் பி. சுசீலா. பார்த்து பார்த்து நின்றதிலே மணப்பந்தல் Manapandal 1961 720p HD song (youtube.com).
இன்றளவும் படத்தின் பெயர் சொன்னாலே நினைவுக்கு வரும் பிரபலப் பாடல் “உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் – அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே” பாடல் தான். இந்தப் பாடலில் “ரகசியம்” என்ற வார்த்தையை இசை அரசி உச்சரிக்கும் அழகே ஒரு ரகசியமாக இருக்கும். அதே போல இந்த சொல்வேன், சொல்லிவிடாதே ஆகிய வார்த்தைகளில் வரும் “சொ” என்ற எழுத்தை இவர் உள்வாங்கி உச்சரித்ததைப் போல வேறு யாராலும் உச்சரிக்க முடியாது. இந்த வல்லின எழுத்தை எப்படித்தான் மாத்திரை குறைத்து மெல்லினம் போல வார்த்தையின் அர்த்தபாவம் குறையாமல் உச்சரிக்க இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று வியக்க வைக்கும் உச்சரிப்பு. உனக்கு மட்டும் Unakku mattum unakku mattum ragasiyam solvenvia torchbrowser com (youtube.com). இந்தப் பாடலை ஈ.வி. சரோஜாவுக்காக பாடி இருக்கிறார்.
படத்தில் இரு முறை இடம் பெறும் பாடல் இது. காதல்வயப்பட்ட நிலையிலும், காதல் தோல்வியிலும் என்று இரு முறை. இரண்டிலுமே அசத்தினார் பி. சுசீலா.
இந்த வருடம் இயக்குனர் பீம்சிங்கின் “ப” வரிசைப் படங்களும், தேவர் பிலிம்ஸின் “த” வரிசைப் படங்களும் மெல்லிசை மன்னர்களுக்கும், திரை இசை திலகத்திற்கும் ஒரு அசைக்க முடியாத இடத்தைக் கொடுப்பதில் போட்டி போட்டுக்கொண்டு வெளிவந்தன. அதோடு நிற்காமல் பாடகர்களில் டி.எம். சௌந்தரராஜன் அவர்களையும் பாடகியரில் பி. சுசீலாவையும் வெற்றிச் சிகரத்தின் உச்சத்தில் நிறுத்தி வைத்துவிட்டன.
ஒலிப்பதிவாளர் டி.எஸ். ரங்கசாமி அவர்களிடம் “எழுதி வச்சிக்க. இனிமேல் டி.எம்.எஸ்.- பி. சுசீலா ராஜ்ஜியம்தான். இதுவரைக்கும் ஏ.எம். ராஜா – ஜிக்கி தான் பிரபலமான ஜோடி. அவங்கள அடையாளம் தெரியாமல் இவங்க ஆக்கிடப்போறாங்க.” – என்று அடித்துச் சொன்னார் சின்னப்பா தேவர்.
இந்த வார்த்தைகள் ஏ. எம். ராஜா – ஜிக்கியை குறைத்து மதிப்பீடு செய்யச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. டி.எம்.எஸ் – பி. சுசீலா ஆகிய இருவரின் திறமையின் மீது அவருக்கு ஏற்பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு.
அந்த நம்பிக்கை பொய்யாகவில்லை என்பதை இருவர் குரலிலும் வெளிவந்த பாடல்கள் நிரூபிக்கவே செய்தன.
தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான பின்னணிப் பாடகியாக அடுத்த தலைமுறையில் ஸ்ரீதேவி – ரத்தி அக்னிஹோத்ரி வரை பி. சுசீலாவே இருந்தார்.
ஏ.வி.எம். நிறுவன வெளியீடாக வெளிவந்த “பாவ மன்னிப்பு” – மத நல்லிணக்கத்திற்கான ஒரு மகத்தான திரைப்படம். இந்து – முஸ்லிம் – கிறிஸ்தவ சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இது போல ஒரு படம் என்றுமே வரப்போவதில்லை.
இந்தப் படத்தில் பாடல்களில் ஒரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் காதல் பாடல்கள் உண்டு. ஆனால் அவை டூயட் பாடல்களாக இல்லை.
“காலங்களில் அவள் வசந்தம்” – பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்களை ஜெமினி கணேசனின் நிரந்தரப் பாட்டுக்குரலாக உயர்த்திய படம். இதற்கு முன்பே வீரபாண்டிய கட்டபொம்மனில் அவர் ஜெமினிக்காக பாடி இருந்தாலும் அவருக்கு நூறு சதவிகிதம் பொருத்தமான பாடகராக பி.பி. ஸ்ரீனிவாசை உயர்த்திய படம் இதுதான்.
இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகியர். நடிகையர் திலகம் சாவித்திரி, தேவிகா .. ஆகிய இருவருக்குமே ஆளுக்கு ஒன்றாக இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார் பி. சுசீலா.
ஆனால் அந்த இரண்டு பாடல்களும் அடைந்த வெற்றியோ மகத்தான ஒன்று.
அதிலும் இந்த “அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்” பாடல் இருக்கிறதே. “இப்படி ஒரு பாட்டு எனக்கு கிடைக்கும்னா அதுக்கு பணமே வாங்காமல் நான் தமிழ்ப் படத்திலே பாடத் தயாராக இருக்கிறேன்” என்று லதா மங்கேஷ்கரை அறிவிக்க வைத்த பாட்டு.
இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும் நாளில் பி. சுசீலா அவர்களுக்கு தொண்டை கட்டிக்கொண்டு விட்டது. பாடல் பதிவைத் தள்ளிப் போடவும் முடியாத சூழ்நிலை. தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஓய்வே இல்லாமல் பிசியாக பாட ஆரம்பித்த நேரம்.
மெல்லிசை மன்னரிடம் தனது நிலையை விளக்கினார் பி. சுசீலா. அவரோ “நீ வா. நான் பார்த்துக்கறேன். தைரியமா பாடு.” என்று தைரியம் கொடுத்து அவருக்கான சுருதியைக் குறைத்து பாடலை அமைத்துப் பாடவைத்தார்.
பாடலின் சரண வரிகள் இப்படி வரும்..
“......
சென்ற பெண்ணைத் தான்
கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி”
......
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி”
இவற்றைப் பாடும்போது குரல் உயர்ந்து உச்சத்தை எட்டிச்சென்று “பிடித்தான் அணைத்தான்” என்ற வரிகளில் கீழிறங்கி சமத்திற்கு வரவேண்டும்.
வழக்கமாக பி.சுசீலா உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்திருக்கும் பாடல்களைக் கேட்டுவிட்டு இந்தப் பாடலைக் கேட்டோமானால் ஸ்ருதியில் மாற்றம் ஏற்பட்டதை நாம் உணர முடியும்.
தொண்டைக் கட்டுடன் பாட வந்தவரை ஸ்ருதியில் லேசாக மாற்றம் கொடுத்து பாடவைத்து பாடலை ஹிட் பாடலாக்கிய பெருமை மெல்லிசை மன்னரைச் சேரும் என்றால் அதற்கு ஈடுகொடுத்து சிரமப்பட்டு சிரத்தை எடுத்துக்கொண்டு பாடிய பெருமை நமது இசை அரசியைச் சேரும்.
பாடலின் பல்லவி முடிந்தபிறகு வரும் இணைப்பிசையில் அக்கர்டியனின் இனிமையான சுழற்சியும், அது முடிவுக்கு வரும்போது வயலின்களின் இழைவும்.. (இணைப்பிசையில் தாள வாத்தியங்களே இருக்காது)..மீட்டலாக நீண்டு தழைந்து வயலின் இசை முடியும் இடத்தில் .. “ஏனத்தான் என்னைப் பார் அத்தான்” என்று பி. சுசீலா ஆரம்பிக்கும் போது தபேலாவின் தாளக்கட்டு ஆரம்பமாகும். “ஹரிகாம்போதி”ராகத்தில் மனதை மயக்கும் பாடலில் பி. சுசீலாவின் தழைந்த குரலில் கேட்கும்போது மனம் அப்படியே அமைதியில் லயப்பட்டு விடும்.
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு பாடு பட்டதற்கு கை மேல் பலன் கிடைத்துவிட்டது. பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். மெல்லிசை மன்னரின் டாப் டென் ஹிட் பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்து விட்டது.
அடுத்து “பாலிருக்கும் பழமிருக்கும்” பாடல். பி. சுசீலாவின் குரலும் எம்.எஸ்.வி. யின் மெல்லிய ஹம்மிங்கும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் பாடல்.
சென்சார் போர்டின் கெடுபிடிக்கு உள்ளான பாடல்.
“வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே – அது
வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே” – என்று கண்ணதாசன் எழுதிய வரிகளை மாற்றச் சொல்லி தணிக்கைத் துறை கெடுபிடி செய்ய (வானொலியில் மட்டும் இதே வரிகள் தான் பி. சுசீலாவின் குரலில் ஒலிக்கின்றன) வேறு வழி இல்லாமல் “அது வேதம் செய்த உருவைப் போல மறைவதில்லையே” என்று மாற்றி அமைத்து திரையில் ஒலித்த பாடல்.
“பாவ மன்னிப்பு” படம் வெளியானதும் ஏ.வி.எம். நிறுவனம் பாடல்களுக்காக ஒரு போட்டியை அறிவித்து ரசிகர்களுக்கு பரிசை அறிவித்தது. படம் வெள்ளிவிழாவை நோக்கி நகர்ந்தபோதும் இந்த அறிவிப்பு தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. பாட்டுப் போட்டிக்கு வந்த கடிதங்களை சார்ட் அவுட் செய்யவென்று ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒரு படப்பிடிப்புத் தளத்தையே ஒதுக்கி இருந்தார்கள்.
பெண்கள் மத்தியில் பி. சுசீலாவின் குரலுக்கு ஒரு தனி இடம் உருவானது. “பி. சுசீலா மாதிரி பாடணும்” என்று சாதாரணக் குடும்பப் பெண்கள் முதல் மாதர் சங்கப் பெண்கள் வரை அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகவே மாறிவிட்டார் பி. சுசீலா.
தொடர்ந்து அந்த ஆண்டு மே மாதத்தில் வெளியானது “பாசமலர்”.
அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்றளவும் ஒரு உதாரணமாகத் திகழும் பாசமலரை மிஞ்ச ஒரு படம் இனி என்றுமே வரப்போவதில்லை என்ற அளவுக்கு அமைந்த படம்.
நடிகர் திலகம் – நடிகையர் திலகம் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பின் சிகரத்தையே எட்டிப்பிடித்தார்கள்.
படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அவற்றில் மூன்று பாடல்கள் பி. சுசீலாவிற்கு. ஜமுனாராணி, எல்.ஆர். ஈஸ்வரிக்கு தலா ஒரு பாடல்.
“எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்” – முன்னேற்றத்தை எதிர்நோக்கி வருங்காலத்தை கற்பனை செய்து அண்ணனும் தங்கையும் பாடும் பாடல்.
“யார் யார் யார் அவள் யாரோ” – பி.பி. ஸ்ரீநிவாஸ் – பி. சுசீலா இணைவில் ஒரு அற்புதமான டூயட் பாடல்.
நடிகையர் திலகத்திற்கு பி. சுசீலா பாடினாரா அல்லது சுசீலாவின் குரலுக்கு கச்சிதமாக வாயசைத்து அந்தக் குரல் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை தனது நடிப்பில் சாவித்திரி கொண்டுவந்தாரா என்று இனம் பிரித்துச் சொல்லமுடியாதபடி இருவருமே கதாபாத்திரத்தோடு ஒன்றிப் போய்விட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
“மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” – பாடல் இப்போது பி. சுசீலாவின் குரலில் கேட்டாலும் நடிகையர் திலகத்தை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி விடுமே. (438) Malarnthum Malaratha | 4K Video Song | Pasamalar | Sivaji | Savitri | GeminiGanesan | Raj 4K Songs - YouTube
“தங்கக் கடிகாரம் வைர மணியோடும்
தந்து மணம் பேசுவார் – பொருள் தந்து மனம் பேசுவார்.
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்.. ஆ.ஆ..ஆ.ஆ.. உலகை விலை பேசுவார்.”
சகோதரனின் பெருமையை முதல் இரண்டு வரிகளில் மகிழ்ச்சியோடு பிரதிபலிக்கும் குரல் படிப்படியாக அப்படியே அண்ணனின் பிரிவின் சோகத்திற்கு மாறும் ரசவாதம் சாவித்திரியின் முகத்தில் மட்டுமல்ல.. பி. சுசீலாவின் குரலிலும் வெளிப்படும் அதிசயம்..
அவரது ஈடு இணை அற்ற திறமைக்கு ஒரு துல்லியமான எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்.
ஏ.எல்.எஸ். நிறுவனம் சின்ன அண்ணாமலையுடன் இணைந்து கூட்டுத் தயாரிப்பாக தயாரித்த படம் “திருடாதே”.
அதுவரை மன்னாதி மன்னனாகவே வலம் வந்துகொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சமூகப் படத்திலும் தன்னால் சோபிக்க முடியும் என்று நிரூபித்த படம். எம்.ஜி.ஆர். பாண்ட் – சர்ட் அணிந்து நடித்தால் அந்தப் படம் ஓடாது என்று அதுவரை இருந்து வந்த சென்ட்டிமென்ட்டை தகர்த்தெறிந்த படம் .
எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில் இந்தப் படத்தில் “என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்” என்ற டூயட் பாடலை பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து பாடி இருந்தார் பி. சுசீலா. En aruge ne irunthal song... (youtube.com)
தனது முந்தைய படத்திற்காக மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்த இந்தப் பாடலை அதில் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போகவே, இதில் உபயோகப் படுத்திக்கொள்ள விரும்பிய இயக்குனர் ப. நீலகண்டன் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவை அணுகி தயக்கத்துடன் கேட்க, “நம்ம விசுவோட பாட்டா..அதுக்கென்ன..தாரளாமா பயன்படுத்திக் கொள்ளலாமே” என்று அவர் பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள பாடல் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.
“மின்சாரம் பாய்ந்தது போல் மேனி எல்லாம் நடுங்குவதேன்” என்ற வரிகளை பி. சுசீலா இசைக்கும்போது கேட்கும் நமக்கே உடலில் ஒரு சிறு சிலிர்ப்பு தோன்றி மறையும்.
ஆகக் கூடி டி.எம். எஸ். – பி. சுசீலா இருவரின் வெற்றிக்கொடிகளும் பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்தன.
(இசையின் பயணம் தொடரும்)