இசையரசி - 6

பி.சுசீலா -ஒரு சாதனைச் சரித்திரம்
பி. சுசீலா
பி. சுசீலா
Published on

Music is the ocean

That pulls me to the shore.

Music is the rhythm

That moves me to the core. – Bryanna T. Perkins.

இசை என்னைக் கரைக்கு இழுக்கும் ஒரு கடல். என்னை வாழ்வின் மையப்புள்ளியை நோக்கி நகர்த்தும் இசை ஒரு லயம்.

– ப்ரையன் டி. பெர்கின்ஸ் - "A Friend Found In Music." கவிதையின் ஒரு பகுதி.

ராம் மோகன் ராவ் மருத்துவத் துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அவரும் பி. சுசீலாவின் சொந்த ஊரான விஜயநகரத்தைச் சேர்ந்தவர்தான்.

இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அவர். குறிப்பாக லதா மங்கேஷ்கரின் குரலின் மீது அபாரப் பிரேமை.

இசைக்குயில் என்றால் அது லதாதான். அவரை மாதிரி குரல் வளமோ, இனிமையோ தென்னாட்டில் யாருக்குமே கிடையாது என்ற அபிப்பிராயத்தில் இருந்தவர் அவர்.

இதெல்லாம் பி. சுசீலா என்ற கானதேவதையின் குரலைக் கேட்கும் வரைதான்.

இனிமை, பாவம், பாடும்போது வெளிப்படுத்தும் சின்னச் சின்ன சங்கதிகள், சமத்தில் பாடும்போது வெளிப்படுத்தும் நளினம், உச்சத்தில் பாடும்போது தெறிக்கும் ரீங்காரம் – இவை எல்லாம் அவரது அபிப்பிராயத்தை அடியோடு மாற்றி விட்டன.

அவருக்கு திரை உலகத் தொடர்பு இருந்ததால் அடிக்கடி ஒலிப்பதிவுக் கூடங்களுக்கு செல்லும் வழக்கம் உண்டு.

அப்படி ஒரு முறை ஒரு பாடல் பதிவிற்கு சென்றபோது பி. சுசீலாவின் பாடலைக் கேட்க முடிந்தது.

பாடலில் மட்டுமல்ல: அவரது குத்துவிளக்கு போன்ற அடக்கமான அழகிலும் தனது மனதைப் பறிகொடுத்தார் அவர்.

தொடர்ந்து வந்த சந்திப்புகளில் தனது காதலை வெளிப்படுத்தினார் அவர். தனது காதலை அவர் வெளிப்படுத்தியபோது பி. சுசீலாவின் மனதில் நினைவுக்கு வந்த பாடல் எது என்று தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

“அவர் லவ்வை ப்ரபோஸ் பண்ணினதும் நான் அப்படியே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். பாட்டாவது நினைவுக்கு வர்றதாவது.?” – இதுதான் சுசீலாவின் பதில்.

ஆரம்பத்தில் தயங்கிய சுசீலா இறுதியில் அவரது காதலை ஏற்றுக்கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் சிறப்பாக நடந்தேறியது.

“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்” என்று சொல்வார்கள்.

இங்கு பி. சுசீலாவின் வெற்றிக்குப் பின்னால் ஆரம்பத்தில் அவரது தந்தை இருந்தார். திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் டாக்டர் ராம் மோகன் ராவ் அவர்கள் அந்த இசைக்குயிலின் திறமைக்குத் தடை போடாமல் அவரது முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணையாகவே இருந்தார்.

கரம் பற்றிய கணவரின் துணையோடு வெற்றிப்படிகளில் ஏற ஆரம்பித்தார் பி. சுசீலா.

கணவருடன் சுசீலா
கணவருடன் சுசீலா

ஆரம்பத்தில் சொன்னதுபோலவே நிதானமான ஏற்றமே ஐம்பதுகளின் இறுதி வரை அவருக்கு இருந்து வந்தது.

தொடர்ந்து வந்த 1958-இல் கூட அவருக்கு வாய்ப்புகள் படிப்படியாகத்தான் உயர்ந்து கொண்டு இருந்தன.

பொங்கல் வெளியீடாக “பூலோக ரம்பை”, “பொம்மைக் கல்யாணம்”, பானை பிடித்தவள் பாக்கியசாலி”  ஆகிய படங்களில் பி. சுசீலாவின் பங்களிப்பு சிறிய அளவிலேயே இருந்தது.

“பூலோக ரம்பை” படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து சி.என். பாண்டுரங்கனின் இசையில் அவர் பாடியிருந்த “உன் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும்” என்ற வில்லிப்புத்தன் எழுதிய பாடலைச் “செவியில் நிறையும் சுவையுள்ள பாட்டு” என்று கல்கி பத்திரிகை விமர்சனம் செய்திருந்தது.

“பொம்மை கல்யாணம்” – திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் பி. சுசீலா – ஜமுனா ராணியுடன் இணைந்து “நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே” என்ற கவிஞர் மருதகாசியின் பாடலைப் பாடி இருந்தார்.  கே.வி.மகாதேவன் இசையில் பி. சுசீலா பாடிய முதல் பாடல் இதுதான். 

பாடல் ஆரம்பவமாவதே பி. சுசீலாவின் ஹம்மிங்கில் தான்.  ஹம்மிங்கைத் தொடர்ந்து

‘நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே.

உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த

உலகில் இருளை நிறைக்காதே.. நிலவை மூடி மறைக்காதே.’

- என்று பி.சுசீலாவின் குரல் எடுக்கும் அழகே தனி.

அருமையான மெலடியாக மனதை வருடும் இசையும் பி.சுசீலா – ஜமுனா ராணி ஆகிய இருவரின் குரல்களும் மாறி மாறிச் சரணங்களைப் பாடும்போது நமது இசை அரசியின் குரல் கணீர் என்று ஒலிக்கும் அழகே அவரைத் தனியாக அடையாளம் காட்டிவிடும். Nillu Nillu Megame (youtube.com).  

ஆனால் படத்தின் நீளம் கருதியோ அல்லது வேறு என்ன காரணத்தினாலோ பி. சுசீலா பாடிய இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாமல் போனது.  ஆனால் பாடல் வானொலியில் ஒலிபரப்பானது.  பிறகு வெளிவந்த “பிள்ளைக்கனியமுது” படம் கே.வி.மகாதேவனின் இசையில் பி. சுசீலா பாடி வெள்ளித் திரையில் இடம் பெற்ற முதல் படம் என்ற பெயரைத் தட்டிக்கொண்டு சென்றது.

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் “சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சை சும்மா சும்மா கூவ” வைத்தார் பி. சுசீலா.  அவரது குரலில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்திய பாடல் இது.

அதே நேரத்தில் 1957-இல் ஏ.வி.எம். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிட புதிதாக இன்னொரு இளம் பாடகி ஏ.வி.எம். நிறுவன அடையாளத்துடன் களமிறங்கினார்.

அவர் தான் எஸ். ஜானகி.

படு வேகமாக இருந்தது எஸ். ஜானகியின் பிரவேசம்.

அறிமுகமான முதல் வருடத்திலேயே தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பெரிய நிறுவனங்களின் படங்களில் முதன்மைக் கதாநாயகியருக்காக பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 

மிகப்பெரிய அளவில் வருவதற்கான அறிகுறிகள் இருந்தும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது ஒரு பின்னடைவை அவருக்குக் கொடுத்தது.

அதே நேரத்தில் பி. சுசீலாவிற்கு திருப்புமுனையாக இருந்த சில படங்கள் 1958-இல் வெளிவந்தன.

அவற்றில் குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான முதல் படம் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த “உத்தம புத்திரன்”.

பின்னாளைய புதுமை இயக்குனர் ஸ்ரீதர் திரைக்கதை வசனம் எழுத நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடித்து கே.எஸ். பிரகாஷ் ராவ் அவர்கள் இயக்கிய படம்.

இதற்கு முந்தைய வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பான “அமர தீபம்” படத்தில் சாவித்திரிக்கு பின்னணி பாடிய பி. சுசீலா நாட்டியப்பேரொளி பத்மினிக்கு பின்னணி பாடிய படம்.  ஏற்கெனவே “கோடீஸ்வரன்” படத்தில் பத்மினிக்கு பி. சுசீலா பாடி இருந்தாலும் அவருக்கு இவர் என்னும் அளவுக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த படம் “உத்தம புத்திரன்”தான்.

படத்தின் பாடகியர் வரிசையில் டைட்டிலில் முதல் வரிசையில் “பி. சுசீலா – பி. லீலா” என்று அமைத்திருப்பது பி. சுசீலாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அருமையான பாடல்களைப் பாடும் வாய்ப்பை  பி. சுசீலாவிற்குக் கொடுத்திருந்தார்.

கதாநாயகியின் அறிமுகப் பாடலாக “மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேலை இது மாலையின் லீலை” என்ற கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய பாடலில் பல்லவியிலேயே அழகான ரவை சங்கதிகளின் பிரயோகத்தோடு செவிகளில் பி. சுசீலாவின் குரல் பாய வைக்கும் இன்பத் தேனின் இனிமை தொடர்ந்து அவர் பாடிய மூன்று பாடல்களிலும் தொடர்கிறது. (3219) Uthama Puthiran Old Tamil Movie Songs | Mannulagellam Ponnulagaga Video Song | Padmini |G Ramanathan - YouTube

ஆம்.  உத்தம புத்திரன் படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள்.  இவற்றில் பெண் குரல் தனித்தும் இன்னொரு குரலோடு இணைந்தும் இசைக்கும் பாடல்கள் ஒன்பது.  இவற்றில் நான்கு பாடல்களை பி. சுசீலாவை பாடவைத்தார் ஜி. ராமநாதன். 

மற்றவற்றில் ஆர்.பாலசரஸ்வதி, ஏ.பி. கோமாளாவுடன் இணைந்து “ஆடப் பிறந்த என் செல்வமே” பாடலைப் பாடினார். 

ஏ.பி.கோமளா ஜமுனா ராணி - ஜிக்கியுடன் “யாரடி நீ மோகினி” பாடலில் இணைந்தார். 

அதே போல ஜிக்கி ராகினிக்காக பி.சுசீலாவுடன் மேலே பார்த்த “மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக” பாடலில் இணைந்தார்.

பி. லீலாவிற்கு மூன்று பாடல்கள்.

இவற்றில் “காத்திருப்பான் கமலக்கண்ணன்”, “கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்” ஆகிய பாடல்களைத் தனித்தும் “புள்ளி வைக்குறான் பொடியன் சொக்குறான்” பாடலை சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்தும் பாடியிருந்தார் அவர்.

ஆக படத்தில் முதன்மைப்பாடகியாக பி.சுசீலாவே இருந்தார்.

பத்மினிக்கு பி. சுசீலாவின் குரல் கனகச்சிதமாகப் பொருந்தி வந்தது.

இசைச் சக்ரவர்த்தியின் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்ன ஆரம்பித்தார் பி. சுசீலா.

“அன்பே அமுதே அருங்கனியே” – பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த டூயட் பாடலில் டி.எம். சௌந்தரராஜனுடன் இணைந்த பி. சுசீலாவின் குரலினிமை இன்றும் சொக்க வைக்கும். Anbe Amuthey - Sivaji Ganesan, Padmini - Uthama Puthiran - Tamil Romantic Song - YouTube

“என்ன தவம் செய்தேன்” என்று அவர் ஆரம்பிக்கும் எடுப்பே செவிகளில் ரீங்காரமிடும் அளவிற்கு இனிமையைக் கூட்டியது.

கே.எஸ்.ஜி. அவர்கள் எழுதிய “உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே” பாடல் வெளிப்படுத்தும் பாவங்களும் சங்கதிகளும் கேட்கக் கேட்கத் திகட்டாதவை. (3219) Unnazhagai Kanniyargal | உன்னழகை கன்னியர்கள் | P. Susheela | Siavji Ganesan Hit Song | Bravo Music - YouTube

பொதுவாகவே இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் குறில்களை நீட்ட மாட்டார். நெடில்களை மட்டுமே கூடுதலாக ஒரு மாத்திரை நீட்டுவார்.  அந்த அம்சம் இந்தப் பாடலில் தனியாக ஆரம்பத்திலேயே தெரியும்.

அந்த அமைப்பைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு பி. சுசீலா பாடியிருக்கும் திறமை குறிப்பிடப்படவேண்டிய ஒன்று..

“உன்னகழைக் கன்னியர்கள் சொன்னதினா..ஆ.லே.” சங்கதி முடியும்போது சமத்தில் நிற்கும் இசை அரசியின் குரல் “உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினா ..ஆ.லே” என்ற வரிகளில் ஏற்ற இறக்கங்களோடு சங்கதிக்கு வரும் அழகே தனி.  எப்போதுமே மந்தர ஸ்தாயிக்குச் செல்லும்போது பி.சுசீலாவின் குரல் தனி அழகோடு ஒருவித நளினத்தோடு சஞ்சாரம் செய்யும். அந்த சஞ்சாரம் முடிந்து மத்யமத்தை தொட்டு உச்சத்துக்கு பயணிக்கும் நேரத்தில் ஒரு விதமான தெய்வீக அழகை லாவகத்துடன் அந்தக் குரல் நம் செவிகளுக்குக் கடத்தும்.

அந்த அழகை – அதுவும் இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதனின் இசையில் – இந்தப் பாடலில் கேட்கும்போது “இன்பத்தேன் வந்தது காதுகளில் பாயாமல் இருக்குமா என்ன?

பாடலின் சரணங்களுக்கிடையே வரும் ஆலாபனைகள் – (hummings) - பாடுவதற்கே சவாலான சங்கதிகள் நிறைந்த அவற்றை அனாயாசமாகச்  சுசீலா தனது குரலில் கொண்டுவரும் லாவகம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.  

இரண்டு சரணங்களின் இறுதி வரிகளில் வரும் நிறுத்தற் குறிகளுக்குக் கூட ஜி. ராமநாதன் இசை அமைக்க ..

 “உன்னாசை ஒன்றே, இன்பம் என்றே”

“ஆசை சிங்காரா, தீரா, மாறா”...

ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்து சுசீலா உச்சரித்துப் பாடியிருக்கும் அழகு ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிப் பாடுவது எப்படி என்று இன்றைய இளைய தலைமுறைப் பாடகியருக்கு ஒரு பாடம்.

என்ன சார் இது.  இந்தப் பாடல்களை எல்லாம் குறிப்பிட்டு இருக்கீங்க.  முக்கியமான பாட்டை விட்டு விட்டீர்களே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடலல்லவா அது?  ஸ்பெஷலான அந்தப் பாடலை இசை அரசி பாடியிருக்கும் அழகை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது என்பது அந்தப் பாடலைபோலவே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் அல்லவா? அதுமட்டுமல்ல அந்தப் பாடலைக் குறிப்பிட்டு விட்டு மற்ற பாடல்களைக் குறிப்பிட்டால் அந்த நயத்தில் மனதை பறிகொடுத்தவர்கள் மற்ற பாடல் நயங்களைக் கவனிக்க முடியாமல் போய்விடக் கூடுமோ என்ற அச்சம் காரணமாக தள்ளி வைத்திருந்தேன்.

இப்போது நமது இசை அரசி அந்தப் பாடலில் வெளிப்படுத்தி இருக்கும் சஞ்சாரங்களையும், பாடி இருக்கும் விதத்தையும் என்னால் எந்த அளவுக்கு வார்த்தைகளில் கொண்டு வரமுடியுமோ அந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.

அதுதான் “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே” என்று கானடா ராகத்தின் அத்தனை நயங்களையும் இதற்கு மேல் வேறு யாராலும் கொண்டு வரவே முடியாது என்று அழுத்தம் திருத்தமாக ஜி. ராமநாதன் நிரூபித்த பாடல்.

இந்தப் பாடல் நமக்கு மட்டுமல்ல பி. சுசீலா அவர்களுக்குமே மிகவும் ஸ்பெஷலான ஒரு பாடல் தான்.

அவருக்கும் திரு. ராம்மோகன் ராவ் அவர்களுக்கும் திருமணம் முடிந்தபிறகு அவர் முதல் முதலாக ஒலிப்பதிவில் கலந்துகொண்டு பாடிய பாடல் இதுதான்.

பாடலின் முகப்பிசையிலேயே வயலின்களின் வீச்சில் கானடா ராகத்தின் பிரயோகங்கள் ராகத்தின் வடிவத்தை புலப்படுத்திவிடுகிறது.

“முல்லை மலர் மேலே..” என்று மத்யம ஸ்ருதியில் ஆரம்பிக்கும் பி. சுசீலா “மே….லே” என்ற வரிகளுக்குக் கொடுக்கும் அழுத்தம் பாடல் வரிகளுக்குக் கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.

ஆம். வண்டு வந்து முல்லை மலர் மீது வந்து அமரும்போது ஒரு அழுத்தம் ஏற்படும் அல்லவா?  அந்த அழுத்தத்தை தனது குரலில் அப்படியே வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பி. சுசீலா.

அதே போல சரணங்களில் “வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையா...லே.., “சிந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே..” ஆகிய வரிகளின் முடிவில் அவர் கொடுக்கும் சங்கதிகள் கேட்பவர் சிந்தையை நிறைத்து மனதை மயக்கத் தவறாதவை. இரண்டாவது சரண முடிவில் அவர் வெளிப்படுத்தும் சிறு ராக ஆலாபனை கானடா ராகத்தின் சொரூபத்தை அப்படியே கொண்டுவந்து நிறுத்தும்.

கர்நாடக இசையில் “சௌக்கியம்” என்று ஒரு அம்சம் உண்டு. இந்தப் பாடலில் அந்த அம்சம் பரிபூரணமாக நிறைந்திருக்கும். 

ஆகக்கூடி உத்தம புத்திரன்  பி. சுசீலாவின் அழுத்தமான திறமைக்கு ஒரு சான்றாக அமைந்தது.

 ****

“குடும்ப கெளரவம்”  - தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரான ஒரு திரைப்படம்.

பொம்மைக் கல்யாணம், நிச்சய தாம்பூலம், பட்டிக்காட்டு பொன்னையா – ஆகிய படங்களை தயாரித்து இயக்கிய பி.எஸ். ரங்கா அவர்கள் தயாரித்து இயக்கி இருந்த இந்தப் படத்தில் ஜெமினி கணேசன் – சாவித்திரி, கண்ணாம்பா, ஈ. வி. சரோஜா, சாரங்கபாணி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.

இந்தப் படத்தில் பி. சுசீலா பாடியது ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் அந்த ஒரே பாடலே அவர் பெயர் சொல்லும் பாடலாக அமைந்தது.

ஜி. ராமநாதனின் பாசறையில் புடம் போடப்பட்டதால் இந்தப் படத்தில் அவரைச் சுத்தமான கர்நாடக சங்கீதப் பாடல் ஒன்றைப் பாடவைத்தனர் மெல்லிசை மன்னர்கள்.

“தென்னவன் தாய் நாட்டு சிங்காரமே – இங்கு

சிற்பங்களும் பாடும் சங்கீதமே.”

என்று தொடங்கும் கவியரசரின் பாடலை ரீதிகௌளை, கமாஸ், ஹம்ஸாவினோதம்  ஆகிய ராகங்களில் ஒரு ராகமாலிகைப் பாடலாக  வெகு அருமையாக மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் இசையைச் சொல்வதா, அதை உள்வாங்கி ராகங்கள்  மாறும் இடங்களை வெகு அநாயாசமாகவும் அற்புதமாகவும் பாடி இருக்கும் பி. சுசீலாவின் திறமையைச் சொல்வதா.?

பிரமிக்க வைத்தார் பி. சுசீலா.

இந்தப் பாடல் 1956-இல் வெளிவந்த “தெனாலி ராமன்” படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல் என்று  இந்தப் பாடல் பற்றிய யு-டியூப் பதிவுகள் அனைத்துமே இந்தப் பாடலை தெனாலி ராமன் படப்பாடல் என்றே குறிப்பிடுகின்றன.  ஆனால் “குடும்ப கெளரவம்” படப் பாட்டுப் புத்தகத்தில் இந்தப் பாடல் அடங்கி இருக்கிறது.  தனது “தெனாலி ராமன்” படத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட பாடலை அதில் இடம்பெறச் செய்ய முடியாத காரணத்தால் இயக்குனர் பி.எஸ். ரங்கா அவர்கள் “குடும்ப கெளரவம்” படத்தில் இடம் பெறச் செய்தார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.  எது எப்படியோ மெல்லிசை ஒன்றில் மட்டும் அல்ல சுத்தமான கர்நாடக சங்கீத அமைப்பில் உள்ள பாடல்களையும் தன்னால் வெகு அற்புதமாகப் பாடமுடியும் என்று பி. சுசீலா அவர்கள் நிரூபித்த பாடல் இது. Thennavan Thai Naattu - YouTube

***

“பதி பக்தி” -  அம்மையப்பன், ராஜா ராணி -  ஆகிய படங்களின் தோல்விக்குப் பிறகு ஏ. பீம்சிங் புத்தா பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி மீண்டும் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் “பதி பக்தி”.

மெல்லிசை மன்னர்களின் இனிய இசையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள்.

படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மொத்தம் பத்து.  இவற்றில் பெண் குரல்களுக்கான பாடல்கள் நான்கு.  இவற்றில் மூன்று பாடல்கள் பி. சுசீலாவிற்கு.

“அம்பிகையே முத்துமாரியம்மா” என்ற பாடலை டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடியிருந்தார் பி. சுசீலா.

“இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே”, “சின்னஞ்சிறு கண்மலர்” ஆகிய நயமான பாடல்களை நடிகையர் திலகம் சாவித்திரிக்காகப் பாடி அவருக்குப் பொருத்தமான குரலாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள “பதி பக்தி” அவருக்கு பேருதவி புரிந்தது.

தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வந்த படம்தான்  ஜெமினி நிறுவனத்தின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்”.  பிரம்மாண்ட வெற்றி பெற்ற “சந்திரலேகா”விற்குப் பிறகு பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய படம்.

இசை : சி.  ராமச்சந்திரா.

இந்த இடத்தில் சி. ராமச்சந்திரா அவர்களைப் பற்றி இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மராத்திய பிராமண வகுப்பைச் சேர்ந்த சி. ராமச்சந்திரா மகாராஷ்ட்ராவில் அஹ்மத் நகர் மாவட்டத்தில் உள்ள புந்தம்பா என்ற சிற்றூரில் பிறந்தவர். விநாயக்புவா பட்வர்த்தனின் கந்தர்வ மகாவித்யாலத்தில் ஹிந்துஸ்தானி இசையைக் கற்றுத் தேறியவர். நாக்பூரைச் சேர்ந்த சங்கர்ராவ் சாப்ரே அவர்களிடமும் பயின்று தனது இசைத் திறமையை வெகுவாக வளர்த்துக் கொண்டவர்.

ஒரு நடிகராகத்  தனது திரை உலகப் பிரவேசத்தை ஆரம்பித்த சி. ராமச்சந்திரா தேர்ந்த இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

1953-இல் வெளிவந்த “அனார்கலி” ஹிந்தித் திரைப்படம் ஒன்றே போதும் இவரது மகத்தான திறமையைப் பறைசாற்ற.  சாகா வரம் பெற்ற பாடல்கள்  இன்று கேட்டாலும் நம்மை மெய்மறக்க வைப்பவை.

அவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே ஒரு சம்பவம்:

“அனார்கலி” ஹிந்தித் திரைப்படத்தை ஒரு மகத்தான இசைக்காவியமாக கொடுக்க நினைத்த தயாரிப்பாளரும் இயக்குனரும் அதற்கு இசை அமைத்துக்கொடுக்க நௌஷத் அவர்களை அணுகினார்கள்.

நௌஷத் அவர்களோ, “இந்தப் படத்திற்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகச் சிறப்பான இசையை என்னால் கொடுக்க முடியும்.  ஆனால் அதற்கு கால அவகாசம் வேண்டும். இரண்டு வருடங்கள் ஆகும்.” என்றார் நிதானமாக.

படக்குழுவினர் ஆடிப்போய்விட்டார்கள்.

தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி “அவ்வளவு நீண்ட காலம் காத்திருக்க முடியாது. அதற்காக உங்களை விடுத்து வேறு ஒருவரை இசைக்காக நினைத்துக் கூட எங்களால் பார்க்க முடியவில்லை.” என்று அவரிடம் சொன்னபோது நௌஷத் ஒரு மாற்று ஏற்பாட்டை பரிந்துரைத்தார்.

“நீங்கள் ஏன் சி. ராமச்சந்திராவை இசை அமைக்க ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது? இந்தக் கதைக்கு நான் இசை அமைத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களோ அதை விடப் பலமடங்கு சிறப்பான இசையை அவர் ஒருவரால் தான் குறுகிய காலத்திற்குள் கொடுக்க முடியும். ஆம். நான் இரண்டு வருடம் எடுத்துக்கொண்டு முடித்துக் கொடுக்கும் இசையை ஒரே மாதத்தில் அமைத்துக் கொடுக்கக்கூடியவர் ராமச்சந்திரா” என்று நௌஷத் அவர்களை சி. ராமச்சந்திராவிடம் அனுப்பி வைத்தார்.

இன்று வரை காலத்தை வென்று நிலைத்திருக்கும் அனார்கலியின் காவியப் பாடல்கள்,  இயக்குனர் சாந்தாராம் அவர்களின் “நவ்ரங்” படப் பாடல்கள் என்று எல்லாமே சி. ராமச்சந்திராவின் மேதமையையும், புகழையும் நிலை நாட்டிக் கொண்டிருப்பதே அவரது ஈடு இணை இல்லாத திறமைக்குச் சான்றுகள்.

அப்படிப்பட்ட மகாமேதையின் இசையில் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தில் அதுவும் அவருடன் இணைந்து லதா மங்கேஷ்கருக்கு அடுத்தபடியாகப் பாடிய ஒரே தென்னிந்தியப் பாடகி என்ற பெருமை பி. சுசீலா அவர்களுக்கே கிடைத்தது.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் மொத்தம் பன்னிரண்டு பாடல்கள். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு பாடல்களை – அதாவது நான்கு பாடல்களைப் - பி. சுசீலா ராமச்சந்திரா அவர்களின் இசையில் பாடியிருந்தார்.

 “கானகமெல்லாம் திரிந்தாலும் காப்பவன் ஸ்ரீராம்” என்று ஆரம்பித்து “ஜெய் ஜெய் ராம்” என்ற பாடலை – சரியாக 62 வினாடிகளே இடம் பெறும் இந்தப் பாடலை சி. ராமச்சந்திராவுடன் இணைந்து சிறுமி டெய்சி ராணிக்காகப் பாடினார் பி. சுசீலா.

சுசீலாம்மா அவர்களுடன் அலைபேசியில் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டு “லதா மங்கேஷ்கருக்கு அடுத்தபடியாக சி. ராமச்சந்த்ரா அவர்களுடன் இணைந்து பாடிய ஒரே தென்னிந்தியப் பாடகி நீங்கள் தான்” என்று நான் சொன்னதுமே சி. ராமச்சந்திரா அவர்களைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி விட்டார் நமது இசை அரசி.

“அவர் என்னை மராத்தியிலே பாடவைக்கவும், ஹிந்தியிலே பாடவைக்கவும் எவ்வளவோ கூப்பிட்டாரு.  நான் தான் எனக்கு தமிழும், தெலுங்குமே போதும். அங்கே தான் லதாஜி இருக்காங்களே. அவங்க எனக்கு மானசீக குரு. அவங்க இருக்குறப்போ நான் எதுக்கு அங்கே போகணும்”னு இருந்துட்டேன்.” என்றார் சுசீலா.

இனி மீண்டும் “வஞ்சிக்கோட்டை வாலிபனு”க்கே வருவோம்.

இந்தப் படத்தில் தொடர்ந்து “எத்தனை கேள்வி என்னிடம் கேட்டார்”, “இன்பக் கனவொன்று நானே கண்டேனடி” ஆகிய  பாடல்களைக் கதாநாயகி பத்மினிக்காகப் பாடினார் பி. சுசீலா.  தேனினும் இனிய குரலால் கேட்பவரை முணுமுணுக்க  வைக்கும் பாடல்கள்.

ஆனால்...

பி. லீலா – ஜிக்கி இருவரும் இணைந்து பாடிய “கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே” என்ற வைஜயந்திமாலா – பத்மினியின் போட்டி நடனப்பாடல் அடைந்த மகத்தான வெற்றியில் மற்ற பாடல்கள் எல்லாமே மங்கித்தான் போயின.

அது மட்டுமல்ல.  படத்தில் டைட்டிலிலும் கூட வசனம் – பாடல்கள் கொத்தமங்கலம் சுப்பு,  சங்கீத கவனம் : சி. ராமச்சந்திரா என்று முக்கியத்துவம் கொடுத்த எஸ்.எஸ். வாசன் – உழைத்துப் பாடிய பாடக – பாடகியரின் பெயர்களை ஏனோ இடம் பெறச் செய்யாமல் தவிர்த்துவிட்டார்.

அதனால் பி. சுசீலா பாடி இருக்கும் இந்தப் பாடல்கள் உரிய அங்கீகாரத்தைப் பெறாமல் போயின  என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.  ஆனாலும் இன்று கேட்டாலும் இனிமை மிகுந்த அருமையான பாடல்கள் இவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

(இசைப் பயணம் தொடரும்..)

இசையரசி -1

இசையரசி- 2

இசையரசி- 3

இசையரசி- 4

இசையரசி- 5

logo
Andhimazhai
www.andhimazhai.com