இசையரசி - 4

பி. சுசீலா
பி. சுசீலா
Published on

I touch by the edge of the far spreading wing of my song

thy feet which I could never aspire to reach.

Drunk with the joy of singing I forget myself and

call thee friend who art my lord. 

-         Rabindranath Tagore (in Geethaanjali)

என் பாடலின் வெகுதூரம் விரிந்து கிடக்கும் சிறகுகளின் விளிம்பால்

நான் தொடவே முடியாத உன் பாதங்களைத் தொடுகிறேன்.

பாடும் மகிழ்ச்சியில் நான் என்னை மறந்து என் ஆண்டவனாகிய

உன்னை நண்பன் என்று அழைக்கிறேன்.

-ரவீந்திரநாத் தாகூர் (கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பிலிருந்து)

தொடர்ந்து வந்த 1956-ஆம் ஆண்டில்  பி.சுசீலா பாடிய படங்களின் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது.

 இந்த வருடம் பத்து திரைப்படங்களில் பாடினார் பி. சுசீலா.  (நான் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கெடுத்துச் சொல்கிறேன்.)

 கணவனே கண்கண்ட தெய்வம் – படப்பாடல்கள் அடைந்த வெற்றியால் இவரது தமிழ் உச்சரிப்பின் மீது நம்பிக்கை கொண்ட டி.ஆர். பாப்பா, தான் இசை அமைத்த “ரம்பையின் காதல்”, “ரங்கோன் ராதா” ஆகிய படங்களில் பாட வைத்தார்.

 இதில் ரம்பையின் காதல் படத்தில் பி. பானுமதியுடன் இணைந்து “கண்ணாளா வாழ்வில் காதல் பொய்தானா” என்று பாடினார் பி. சுசீலா.

 தனிப்பாடலாக “ரங்கோன் ராதா”வில் “ஊரடங்கும் வேளையிலே உள்ளம் கவரும் சோலையிலே” என்ற பாடலைக் குழுவினருடன் இணைந்து பாடினார் சுசீலா. இந்தப் பாடலில் அவர் கொடுக்கும் கார்வைகளும், சங்கதிகளும் இனிமையாக வெளிப்பட்டன.

 அட்டபல்லி ராமராவ் அவர்களின் இசையில் “பெண்ணின் பெருமை”,  எஸ். ராஜேஸ்வரராவ் அவர்கள் இசையில் “பிரேமபாசம்”, “மாதர்குல மாணிக்கம்” ஆகிய இரண்டு படங்களில் பாடினார் சுசீலா.  இதில் “மாதர் குல மாணிக்கம்” படத்தில் அவருக்கு நான்கு பாடல்கள்.

 “மாதர் குல மாணிக்க”த்தில் இரண்டு கதாநாயகர்கள் – இரண்டு கதாநாயகிகள்.  நாகேஸ்வராவ் – சாவித்திரி : ஜெமினி கணேசன் – அஞ்சலிதேவி என்று இரட்டை ஜோடிகளில் சாவித்திரிக்கு பி. லீலாவும், அஞ்சலிதேவிக்குப் பி. சுசீலாவும் பாடினார்கள்.

 “காதலின் ஜோதி இதே” என்ற தஞ்சை ராமைய்யா தாஸின் பாடலை உற்சாகத் துள்ளல் பொங்கப் பாடினார் பி.சுசீலா.

 ஏ.வி.எம். நிறுவனத்தின் “குலதெய்வம்” படத்தில் ஆர். சுதர்சனம் இசையில் “கோட்டுப் போட்ட மச்சானை” வம்புக்கு இழுத்து மைனாவதிக்காகப் பாடினார் பி. சுசீலா.  இசை : ஆர். சுதர்சனம்.

 திகில் மன்னன் வேதாவின் இசையில் “மர்ம வீரன்’ படத்தில் “பவழ நாட்டு எல்லையிலே முல்லை ஆடுது” என்ற பாடலை கே. ராணியுடன் இணைந்தும், “விழி பேசுதே வலை வீசுதே” பாடலை தனித்தும் பாடினார் பி. சுசீலா.

 என்றாலும் நம்மை எல்லாம் தேனுண்ணும் வண்டாக அவரது இசையில் கிறங்கடித்தது வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த  “அமர தீபம்” படத்தில் சாவித்திரிக்காக அவர் முதன்முதலாகத் “தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு” என்று ஏ.எம். ராஜாவுடன் பாடிய டூயட் பாடல்தான்.  (3198) Sivaji Ganesan & Savitri - Then Unnum Vandu - Amara Deepam - Tamil Romatic Song - YouTube

 ஸ்ரீதரின் முக்கோணக்காதல் கதையை டி. பிரகாஷ்ராவ் அவர்கள் இயக்க இதில் இரண்டு நாயகியர் – சாவித்திரி – பத்மினி.  இதில் சாவித்திரிக்காக பி. சுசீலா பாட, பத்மினிக்காக ஜிக்கி பாடினார்.

 இந்தப் பாடலைப் பி. சுசீலா பாட அழைக்கப்பட்டதே ஒரு தனிக் கதை.

 அதுவரை நடிகையர் திலகம் சாவித்திரிக்கு பி. லீலா தான் பாடி வந்தார். இந்தப் பாடலையும் ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பாட முதலில் பி. லீலா அவர்களைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 

 ஆனால் ஒலிப்பதிவிற்கு பி. லீலா அவர்களுடன் வந்திருந்த அவரது தந்தை “என் பொண்ணு பாடனும்னா அவருக்கு தனி மைக் கொடுக்கவேண்டும்” என்று நிபந்தனை விதித்தார்.

 அப்போதெல்லாம் பாடுவதற்கு ஒரே மைக்தான்.  டூயட் பாடல் என்றால் ஆண் பாடகர் தனது பகுதியை பாடி முடித்ததும் அதே மைக்கில் பாடகி பாடுவார். இப்படித்தான் ஒலிப்பதிவுகள் நடந்து வந்தன.

 அதுவரை பி. லீலாவும் கண்டசாலா, ஏ.எம்.ராஜா இன்னும் பிற பாடகர்களுடன் அப்படித்தான் இணைந்து பாடி வந்தவர்தான். 

 இப்போது திடீரென தனி மைக் வேண்டும் என்று லீலாவின் தரப்பில் இருந்து பிறந்த நிபந்தனை எளிதில் உணர்ச்சி வசப்படும் ஏ.எம்.ராஜாவின் தன்மானத்தை தூண்டி விட்டது.

 படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், கதை வசனகர்த்தாவாகவும் இருந்த பின்னாளைய இயக்குனர் ஸ்ரீதரிடம்,”இது என்ன புது கண்டிஷன்? இத்தனை நாளா என் கூட ஒரே மைக்கிலே தானே பாடிகிட்டு இருந்தாங்க. திடீர்னு தனி மைக் வேணும்னா என்ன அர்த்தம்? நான் என்ன கெட்டவனா? கூட பாடுற என் மேல நம்பிக்கை இல்லை என்கிற மாதிரிதானே இது இருக்கு? அப்போ இத்தனை நாளா பாடினதெல்லாம் சக பாடகர் மேல நம்பிக்கை இல்லாமலா பாடினாங்க?” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

 அதோட நிற்கவில்லை அவர். “தனி மைக் கொடுத்தால் தான் பாட முடியும்னு அவங்க சொல்லறப்போ ஒரே மைக் இல்லாவிட்டால் நான் பாடமாட்டேன்னு சொல்ல எனக்கும் உரிமை இருக்கு இல்லே.” என்று தன் முடிவில் தானும் உறுதியாக நின்றார் ஏ.எம். ராஜா.

 பிரச்சினை பெரிதாக அன்று பாடல் பதிவே நடக்கவில்லை. கான்சல் ஆகிவிட்டது.

 அதோடு நிற்கவில்லை ஏ.எம். ராஜா.

 “ஸ்ரீதர். நீ இந்தப் பாட்டை கண்டிப்பா ரெக்கார்ட் பண்ணத்தான் போகிறாய். ஆனால் பாடப்போவது நானா இல்லை பி. லீலாவா என்பதை நீயே முடிவு பண்ணிக்கொள்’ என்று ஸ்ரீதரிடம் தீர்மானமாகப் பேசிவிட்டார் ஏ.எம். ராஜா.

விளைவு.

மறுநாள் பி. லீலாவிற்குப் பதிலாக பி. சுசீலாவை ஏ.எம்.ராஜாவுடன் பாட வைத்து பாடல் பதிவு செய்யப்பட்டது.

அதுவரை நடிகையர் திலகத்திற்கு ஜிக்கியும், பி. லீலாவும் தான் பாடி வந்தார்கள்.

 “மிஸ்ஸியம்மா” , “மாயா பஜார்” “மனிதன் மாறவில்லை” “கடன் வாங்கிக் கல்யாணம்” ஆகிய வெற்றிப்படங்களில் பி.லீலாவின் குரலே அவருக்கு கச்சிதமாகப் பொருந்தி வந்தது. மிஸ்ஸியம்மா, மனிதன் மாறவில்லை ஆகிய படங்களில் பி. சுசீலா ஜமுனாவுக்குப் பின்னணி பாடி இருந்தார். 

 “தொங்கா ராமுடு” என்ற தெலுங்குப் படம் கே.வி. ரெட்டியின் இயக்கத்தில் 1955-இல் வெளிவந்த படம். இந்தப் படத்தில் ஏ.நாகேஸ்வரராவ் – சாவித்திரி, ஜக்கையா – ஜமுனா என்று இரட்டை ஜோடிகள்.  இதிலும் சாவித்திரிக்கு ஜிக்கிதான் பாடி இருந்தார். 

 இதில் ஜமுனாவிற்காக  “அனுராகமு விரிஸேனா” என்று தொடங்கும் ஒரு அற்புதமான மனதைத் தொடும் பாடலைப் பெண்டியாலாவின் இசையில் பாடி இருந்தார் பி. சுசீலா. 

 ஆபேரி ராகத்தில் இசை அமைக்கப்பட்ட இந்தப் பாடலைப் பி.சுசீலா அவர்களின் குரலில் கேட்கும் போது..அதுவும் இரவு நேரத்தில் கேட்கும்போது அலைபாயும் மனம் அப்படியே சம நிலைக்கு வந்து அமைதி நம்மை ஆட்கொண்டுவிடும்.  தெலுங்கில் பி. சுசீலாவின் பெருவெற்றி பெற்ற பாடல்களில் கண்டிப்பாக இந்தப் பாடலுக்கு ஒரு தனி இடமே உண்டு. (3360) Donga Ramudu Songs - Anuragamu Virisena - ANR Savithri Jamuna - YouTube

 நீங்களும் கேட்டுப்பாருங்கள். செவிகளில் இன்பத் தேன் பாய்வது என்று சொல்வார்களே அதன் அர்த்தம் கண்டிப்பாகப் புரியும்.

 இந்தப் பாடல் ஒலிப்பதிவிற்கு வந்திருந்த விஜயா – வாகினியின் அதிபர்களுள் ஒருவரான சக்ரபாணி  அவர்கள் பி.சுசீலா பாடிய இந்தப் பாடலால் ஈர்க்கப்பட்டவர் உடனடியாக தமிழ் – தெலுங்கு ஆகிய இருமொழித் தயாரிப்பான “மிஸ்ஸியம்மா” படத்தில் ஜமுனாவிற்காக எஸ். ராஜேஸ்வர ராவின் இசையில் பாடவைத்தார்.  எஸ். ராஜேஸ்வர ராவின் இசையில் பி.சுசீலா பாடிய முதல் படமும் மிஸ்ஸியம்மா தான். (ஆனால் தொங்கா ராமுடு தாமதமாகத்தான் வெளிவந்தது.)

 “தொங்கா ராமுடு” தமிழில் “திருட்டு ராமன்” என்ற பெயரில் மொழிமாற்றம் (DUBBING) செய்யப்பட்டபோது இந்த “அனுராகமு விரிஸேனா” பாடலை   “எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா” என்று கவியரசு கண்ணதாசன் எழுத அதையும் பி. சுசீலாவே பாடினார்.  அந்த வகையில் பி. சுசீலா பாடிய முதல் கவியரசரின் பாடல் இதுதான். (இந்த மொழி மாற்றுப்படமும் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.)

 அதோடு நிற்கவில்லை “தொங்கா ராமுடு”வின் தயாரிப்பாளரான டி. மதுசூதன ராவ்.

 தனது அனைத்துப் படங்களிலும் பி. சுசீலாவிற்குத்தான்  முன்னுரிமை கொடுத்துப் பாடவைத்தார். அந்த வகையில் பி.சுசீலா அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த பாடலாக இந்த “அனுராகமு விரிஸேனா” அமைந்துவிட்டது. 

 மிஸ்ஸியம்மாவில் எஸ். ராஜேஸ்வரராவ் அவர்களின் இசையில் பி. சுசீலா பாடிய  “அறியாப் பருவமடா”, “பிருந்தாவனமும் நந்த குமாரனும்” ஆகிய பாடல்கள் இன்றளவும் மனதில் இன்பத் தேனை பரவச் செய்யும் பாடல்கள்.  மிஸ்ஸியம்மா படத்தை ஏ.வி.எம். நிறுவனம் ஹிந்தியில் எல்.வி. பிரசாத் அவர்களை இயக்கவைத்து தயாரித்த போது அதற்கு இசை அமைத்த ஹேமந்த் குமார் ‘பிருந்தாவனமும் நந்த குமாரனும் “ பாடல் மெட்டை அப்படியே தழுவி ஹிந்தியின் லதா மங்கேஷ்கர் – முகமது ரபி ஆகியோரைப் பாட வைத்தார்.

 “மனிதன் மாறவில்லை” படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து ஜமுனாவிற்காக பி. சுசீலா பாடிய “காதல் யாத்திரைக்குப் பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏனோ ” பாடல் பெருவெற்றி பெற்ற பாடல்.

 இப்போது அமர தீபத்தில் முதன் முதலாகத்  தனக்குப் பின்னணி பாடிய பி.சுசீலாவின் குரல் தேன் உண்ட வண்டாக நடிகையர் திலகத்தை கவர்ந்துவிட அன்றிலிருந்து நடிகையர் திலகத்தின் ஆஸ்தானப் பாட்டுக் குரலாக மிளிர ஆரம்பித்தார் பி. சுசீலா.

“பி.சுசீலாவைத் தவிர வேறு யார் பாடினாலும் நான் நடிக்க மாட்டேன்” என்று சாவித்திரி உறுதியாக நின்ற கதையும் உண்டு.

 இன்றளவும் மறக்கமுடியாத திரை இசைப்பாடலாக காற்றலைகளில் கலந்து வரும் “தேனுண்ணும் வண்டு” பாடல் டி. சலபதிராவ் அவர்களின் இசைக்கும் சுசீலாம்மாவின் குரலின் இனிமைக்கும் அழுத்தமான தமிழ் உச்சரிப்புக்கும் அசைக்க முடியாத சாட்சியாக அமைந்துவிட்ட பாடல்.

 இப்படி மெல்ல மெல்ல வேகமெடுக்க ஆரம்பித்த பி.சுசீலாவின் இசைப் பயணம் அடுத்து வந்த 1957-ஆம் ஆண்டில் வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்தது.

 இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அவரது இசைத் திறமைக்கு சரியான தீனி போட்ட பாடல்களாக தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழித் தயாரிப்பாக வெளிவந்த “அலாவுதீனும் அற்புத விளக்கும்” படத்தின் பாடல்கள் அமைந்தன. எஸ். ராஜேஸ்வர ராவும் – எச். அனுமந்தராவும் இணைந்து இசை அமைத்திருந்தனர்.

பெண் குரலுக்கான ஏழு பாடல்களில் ஐந்து பாடல்கள் பி. சுசீலாவின் வசம் வந்தன. மற்ற இரண்டு பாடல்களில் ஒன்றை ஜிக்கியும், மற்றதை ஏ.பி. கோமளாவும் பாடினார்கள்.

 படத்தில் டைட்டிலில் பாடியவர்கள் பெயரிலும் பி. சுசீலாவே முதலிடம் பிடித்தார்.

 கவியரசு கண்ணதாசனின் “சேலாடும் நீரோடை மீதே” என்ற இரு குரலிசைப் பாடலை ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பாடினார் பி. சுசீலா. 

 பாடலின் முகப்பிசையும் பல்லவியும், முதல் சரணமும் அப்படியே படகில் பயணம் செய்யும் உணர்வை மனதில் கடத்துகின்றன.

“சேலாடும் நீரோடை மீதே.....

தேன் சிந்தப் பண் பாடுவாயே ...

கண்ணோடு கண்ணும் பேசாமல் பேசும்..

கனிரசமே சுவையமுதே காண்போம் இங்கே.” என்று பி.சுசீலாவின் எடுப்பே தனி அழகாக மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்த பாடல். (3198) Chelaadum neerodai meethe - Alavudeenum Arputha vilakkum 1957 - YouTube

 திரைப்படத்தில் இந்தப்பாடல் படத்தின் இறுதியில் கதையின் முடிவில் தனியாக இடம் பெற்ற பாடல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

 பொதுவாக இறுதிக்காட்சி முடிவடையப்போகிறது என்று உணர்ந்ததுமே நமது ரசிகப் பெருமக்கள் திரை அரங்கிலிருந்து எழுந்து வெளியேற ஆரம்பித்துவிடுவார்கள்.

 அதேபோல இந்தப் படத்திலும் படம் முடிவடைந்ததும் பாடல் காட்சிக்கான முகப்பிசை ஆரம்பித்ததும் வெளியேற தொடங்கிய ரசிகர்களைச்  “சேலாடும் நீரோடை மீதே..” என்று ஆரம்பித்த பி.சுசீலாவின் குரலின் இனிமை அப்படியே தடுத்தி நிறுத்திவிட இருக்கையை விட்டு நகர ஆரம்பித்தவர்கள் அப்படியே மீண்டும் அமர்ந்துவிட்டார்கள்.

 அந்த அளவிற்கு பாடலின் இசையும், பி.சுசீலா – ஏ.எம். ராஜா ஆகிய இருவரின் குரல்களில் வெளிப்பட்ட இனிமையும் கவர்ந்து இழுக்கிறது. 

 நிதானமாக மத்யம ஸ்ருதியில் ஆரம்பிக்கும் பாடலில் “கனிரசமே சுவை அமுதே.” என்ற வரிகள் வரும்போது ஒரு திருப்பத்துடன் துரித நடைக்கு தாவி “காண்போமே நாமே” என்று முடியும் போது நமது சுசீலாம்மாவின் குரல் அப்படியே தழைந்து சீரான நடையில் முடியும் அழகே தனிதான்.

 “கண்ணுக்கு நேரிலே கலை என்ற பேரிலே” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலை தனித்துப் பாடி செவிகளில் தேன் பாயவைத்தார் பி. சுசீலா. (3198) கண்ணுக்கு நேரிலே, கலை என்ற பேரிலே பாடல் | Kannukku Nerile, Kalai Enra Perile song | P. Susheela song - YouTube

 எச். வேணு மாஸ்டரின் இசையில் இருமொழித் தயாரிப்பாக வெளிவந்த படம் “எங்க வீட்டு மகாலட்சுமி”.  இந்தப் படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரிக்காக “ஆடிப்பாடி வேலை செய்ஞ்சா அலுப்பிருக்காது” என்ற உடுமலை நாராயண கவிராயரின் பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார் பி. சுசீலா. (3198) TAMIL OLD--Aadi paadi velai(vMv)--ENGA VEETTU MAHALAKSHMI - YouTube

 இதே படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் முதல் முதலாக இணைந்து பாடிய பாடல்தான் இன்றளவும் பெருவெற்றி பெற்ற பாடலான “பட்டணம் தான் போகலாமடி பொம்பளே” என்ற தனி நடனப்பாடல்.

 பி.சுசீலாவின் குரலின் மீது தனித்த அபிமானம் கொண்ட இசை அமைப்பாளராகிவிட்ட எஸ்.ராஜேஸ்வரராவின் இசையில் “இரு சகோதரிகள்” படத்திற்காக “தங்கச் சிலையே வாடா: தமிழ்க் கலையே வாடா” என்ற குழந்தையைச் சீராட்டும் பாடலை அழகாக மனதை அள்ளும் வகையில் பாடி இருக்கிறார் பி. சுசீலா. தான் பெற்ற குழந்தைக்கே தாதியாக வரும் தாயுள்ளம் பாடும் பாடல் . எஸ். ராஜேஸ்வர ராவின் இசை போகும் பாதையை சரியாகப் பற்றிக்கொண்டு பி.சுசீலா பாடி இருக்கும் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாது. கேட்டு உணர்ந்துதான் அனுபவிக்க வேண்டும்.

 “மகாதேவி” பி.சுசீலாவின் இசைப் பயணத்தில் மறக்க முடியாத படம்.  இத்தனைக்கும் மெல்லிசை மன்னர்கள் இசையில் இந்தப் படத்தில் அவருக்கு ஒரே ஒரு பாடல்தான்.  கதாநாயகி சாவித்திரிக்காக எம்.எஸ். ராஜேஸ்வரி தான் “சேவை செய்வதே ஆனந்தம்”, “சிங்காரப் புன்னகை கண்ணாரக்கண்டாலே”, காக்கா காக்கா மை கொண்டு வா” ஆகிய பாடல்களைப் பாடினார்.  ஆனால் பி. சுசீலாவிற்கோ, “கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே” என்ற ஒற்றைப் பாடல்தான்.  ஆனால் ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பாடிய இந்த ஒற்றைப் பாடலிலேயே அருமையாக ஸ்கோர் செய்துவிட்டார் பி. சுசீலா. (3198) கண்மூடும் வேளையிலும் | Kanmoodum Velaiyilum (Color) | A. M. Rajah , P. Susheela | B4K Music - YouTube

 ஆர். பார்த்தசாரதியின் இசையில் “மகதல நாட்டு மேரி” படத்தில் “கண்ணாடி நான் ஒரு கண்ணாடி”, “பறந்து செல்லும் வெண்புறாவும்” ஆகிய பாடல்களை இசைத்தார் பி. சுசீலா.

(இந்தப் படத்தில் தான் எம்.பி. சிவம் எழுதிய “கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை” என்ற பாடலை பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் இணைந்து பாடி திரை உலகில் தனது முதல் பாடலைப் பாடினார் எஸ். ஜானகி.  இதற்கு முன்பே அவர் பாடியிருந்த “விதியின் விளையாட்டு” பாதியிலேயே நின்று போனதால் இந்தப் படம்தான் அவர் பாடி வெளிவந்த முதல் படம்.)

 சிட்டாடல் தயாரிப்பாக டி.ஆர்.பாப்பா அவர்கள் இசையில் வெளிவந்த படமான “மல்லிகா” படத்தில் பி. சுசீலா பாடிய இரண்டு பாடல்களும் பெருவெற்றி பெற்ற பாடல்கள். 

 “நீல வண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்” – என்ற பத்மினியின் நடனப்பாடலில் தான் நமது இசையரசியின் குரல் என்னவெல்லாம் ஜாலம் புரிகிறது.  காதல், வெட்கம், நாணம், பெருமை,பொய்க்கோபம் என்று அனைத்துவிதமான உணர்வுகளையும் தனது குரலில் வெகு அழகாக மிக நயமாக வெளிப்படுத்தி இருக்கிறார் பி. சுசீலா. (3198) நீலவண்ணா கண்ணனே | Neela Vanna Kannane Unadhu | P. Suseela Hit Song - YouTube

 ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பாடியிருக்கும், “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே” பாடலில் தான் நிறைவேறாத காதலின் ஏக்கத்தையும் சோகத்தையும் என்னமாய்த்தான் பிரதிபலிக்கிறது அவரது குரல்.

 இதே வருடம் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வெளிவந்த ஒரு படம் பி. சுசீலாவின் திரைப்பட வாழக்கையில் ஒரு மைல்கல் என்றால் அது மிகை இல்லை.

 இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதனின்  இசையில் முதல் முதலாகப் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கதாநாயகி சாவித்திரிக்கு பின்னணியாக அவர் பாடிய மூன்று  பாடல்களும் அவருக்கு உண்மையிலேயே “ராஜயோகத்தை”க் கொண்டு வந்து சேர்த்தன என்றால் அது மிகையே இல்லை.

அந்தப் படம்தான்..

 வணங்காமுடி.

(பயணம் தொடரும்..)

logo
Andhimazhai
www.andhimazhai.com