திருமா வலியுறுத்தும் மதுவிலக்கு சாத்தியமா?

திசையாற்றுப்படை - 19
Thirumavalavan
திருமாவளவன்
Published on

 உலகில் 13 இஸ்லாமிய நாடுகளிலும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், மிசோரம், நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களிலும் மது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த பதிமூன்று நாடுகளிலும் சில நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மது அருந்தலாம். உரிய இடங்களில் அருந்தலாம் என்பதான விலக்குகளும் உண்டு. மது தடை செய்யப்பட்ட இந்திய மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும் அங்கு கள்ளச் சந்தையில் மது கிடைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆக உலகில் பூரண மதுவிலக்கு என்பது எந்த மூலையிலும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மது மனித நாகரிகத்தோடு கொண்டுள்ள தொடர்பு அத்தகையது.

மதுபானத்தின் தோற்றம் பற்றி பல்வேறுவிதமான ஊகங்கள் உண்டு. அவற்றில் ‘குடிகாரக் குரங்கு’ எனும் கருதுகோள் (drunken monkey hypothesis) முக்கியமானது. அதாவது பழுத்து கீழே உதிர்ந்த அழுகிய பழங்களில் உள்ள சர்க்கரையை, இயற்கையாக மண்ணில் உள்ள ஈஸ்டுகள் உண்ணத்தொடங்கும்போது சர்க்கரை ஆல்கஹாலாக மாறிவிடுமாம். குரங்குகளும் பறவைகளும் அவற்றைத் தின்று போதை என்று பெயரிடப்படாத அந்த மெல்லிய போதைப் பழங்களைத் தேடித்தின்னுமாம்.  இப்படித்தான் மதுவின் தோற்றம் தொடங்கியதாக ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள். ஆதிமனிதர்களுக்கு முன்னரே இந்தப் பொல்லாத போதைப்பழக்கத்திற்கான விதை ஊன்றப் பட்டு விட்டது. நம்முடைய மூதாதைகள் ஆரம்பித்த பழக்கத்தை வரலாற்றில் பாதியில் நிறுத்திவிடுவது சாத்தியமா என்ன?

இயற்கைப் பொருட்களிலிருந்து சர்க்கரையைப் புளிக்கவும் நொதிக்கவும் வைத்து ஆல்கஹால் தயாரிக்கும் முறை என்பது மனித நாகரிகத்தின் முக்கியத் தொழில்நுட்பமாகவும் திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது. ஆதிமனிதர்கள் மட்டுமல்லாமல் பூச்சிகள், பறவைகள், பழ வௌவால்கள், குரங்குகள், யானைகள் என பல்வேறு உயிரினங்களும் மதுவின் ருசி அறிந்தவையே என்கிறார்கள். ஆக இது பல உயிரினங்களோடு மனுசப்பயல்களும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி.

எல்லாத் தொல்பழங்குடிகளும் மதுவைத் தயாரித்திருக்கிறார்கள். குடித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அவரவர் வாழிடங்களில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு அவர்களே தயாரித்திருக்கிறார்கள். இன்றும் வடகிழக்கு மாநிலங்களில் ‘ரைஸ் பியர்’ மற்றுமான பல்வேறு பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒயின் வகைகள் வீடுகளிலேயே தயாரிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை மது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுக்கவில்லை என்றே தெரிகிறது. ஒரு வணிக நுகர்பொருளாக மது மாறியபிறகுதான் அது வேண்டாத விளைவுகளுக்குக் காரணமாகத் தொடங்கியது. குறிப்பாக நவீன காலமும் அதன் விளைவுகளாக நகரவாழ்க்கையும், வாழ்வியல் சிக்கல்களும் இன்னபிற காரணிகளும் இணைந்தபின் குடிப்பழக்கம் உடலியல், உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த சிக்கல்களோடு இணைந்த ஒன்றாக மாறிவிட்டது. 

மது அருந்தும் பழக்கத்தைப் பொறுத்தவரை இந்தியா 86 வது இடத்தில் இருக்கிறது. உச்சத்தில் முதலிடத்தில் இருப்பது ரஷ்யா. சைபீரியக் குளிர் ஒரு காரணமாக இருக்கலாம். ரஷ்யாவில் 16% பேர் குடிப்பழக்கம் உள்ளவர்களாம். ஒப்பிடும்போது இந்தியர்களில் 4% த்திற்கும் குறைவானவர்களே குடிக்கிறார்கள். ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் உலகின் 3வது பெரும் சந்தையாக இந்தியாவே இருக்கிறது. ஏறத்தாழ 6கோடி குடிமகன்கள் அல்ல, குடியர்கள் வாழும் நாடு நமது. இந்தியாவில் மதுப்பிரியர்களின்  மையங்களை மூன்றாகக் குறிப்பிடுகிறார்கள். முதலாவது மையம் வடகிழக்கு மாநிலங்கள். குறிப்பாக அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது மையம் சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட், தெலுங்கானா மூன்றாவது மையம் தமிழ்நாடு மற்றும் கேரளா.

சில புள்ளி விபரத் தரவுகள் பொதுப்புத்தியில் உலவும் கற்பனைகளை உடைத்தெறியக்கூடியவையாக இருக்கின்றன. நகரங்களிலில் தெருவுக்குத் தெரு செயல்படும் மதுக்கடைகளைப் பார்க்கும்போது நகரத்தில்தான் குடிப்பழக்கம் அதிகமிருப்பதாகத் தோன்றும். ஆனால் கிராப்புற மக்களே அதிகமும் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள். அதுபோலவே பெண்களிலும் கிராமப்புறத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிக குடிப்பழக்கம் இருக்கிறது.

இந்தியாவில் குடிப்பவர்களில் 25% பேர் மதுவினால் தங்கள் உடல்நலத்தைச் சீரழித்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.  இந்தியாவில் 2.5 மில்லியன் மக்கள் குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. மேலும் உயிராபத்தை விளைவிக்கும் 60 வியாதிகளுக்கு குடிப்பழக்கம் காரணமாகிறது.

குடிப்பழக்கத்தை மூன்று நிலைகளில் வகைப்படுத்துகிறார்கள். 1. எப்போதாவது அருந்துபவர் (occasional drinker) 2. கூடுகைகளில் குடிப்பவர் (social drinker) 3. குடிப்பதை பழக்கமாகச் செய்பவர் (hapitual drinker) 4. குடி நோயாளி (addict). இவை போக, ஓசியில் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர்கள், நொறுக்குத் தீனிக்காகவே குடிப்பதுபோல் நடிப்பவர்கள் என மேலும் இரண்டு வகையும் நம்மூரில் உண்டு. இவர்களால் சமூகத்திற்குப் பாதகங்கள் ஏதும் இல்லை என்பதால் இவர்களை ஓரமாக அமர்த்திவிடலாம். மேற்கண்ட நான்கில் மூன்று மற்றும் நான்காவது பிரிவினரே சிக்கலானவர்கள். குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்பவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் குடிநோயாளியாகப் பதவி உயர்வு பெறுவது உறுதி.

குடிப்பழக்கம் உலகம் முழுமையும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பழக்கமாக இருந்தாலும் உலகின் சில பகுதிகளில், குறிப்பிட்ட சமூக பொருளாதார பின்புலங்களைச் சார்ந்தவர்களை பாதிக்கக்கூடியதாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு அடித்தள மக்கள் திரளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்ற வகையில் திருமா மதுவிலக்கை வலியுறுத்துவதில் ஒரு தர்க்கம் இருக்கவே செய்கிறது. ஏனெனில் குடிப்பழக்கம் பற்றி ஆய்வுகள் முன் வைக்கும் தரவுகள் அத்தகையனவாக இருக்கின்றன. பள்ளிப் படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை என்று கல்வி வளர்ச்சியைப் பொறுத்து குடிப்பழக்கம் இறங்குமுகத்தில் காணப்படுகிறது. ஆக கல்வியறிவின்மையும் அதன் காரணமான பொருளாதாரப் பின்தங்கிய நிலையும் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக உள்ளன. நான் நடைப்பயிற்சிக்குக் செல்லும் சாலை, அருகிலுள்ள பல சிறு கிராமங்களை இணைக்கக்கூடியது. நூற்றுக்கணக்கான அன்றாட தொழிலாளர்கள் காலையில் இருசக்கர வாகனங்களில் நகருக்குள் வந்து மாலை திரும்புகிறவர்கள். அவர்களில் கணிசமானோர் மாலையில் வீட்டுக்குத் திரும்பும்போது நகரிலிருந்து வாங்கி வரும் மதுபானங்களை நண்பர்களுடன் சாலையோரங்களில் அமர்ந்து குடித்துவிட்டுச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது. இது இயல்பான ஒரு காட்சியாக மாறிவருகிறது. 20 வயதிற்குள் குடிப்பழக்கத்தை ஆரம்பித்து பத்திருபதாண்டுகளில் முழுக்குடிநோயாளியாகி குடும்பங்களை நிர்கதியாக்கிவிட்டு மரணிக்கும் குடும்பத்தலைவர்கள் அதிகமாகி வருகிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் தமிழக கிராமப்புறத் திருமணங்களில் மதுவிநியோகம் என்பதும் பரவலாகி வருவதாகச் சொல்கிறார்கள். ஆக குடிப்பழக்கம் தமிழக சமூக வாழ்வியல் சூழல்களில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பது  உண்மைதான்.

அப்படியானால் இத்தகைய எதிர்விளைவுகளுக்குக் காரணமான மதுவை ஒழித்துவிடுவதைத் தவிர வேறென்ன வழியிருக்கமுடியும் என்று தோன்றலாம். ஆனால் அப்படி முற்றிலுமாக ஒழித்துவிடுவது சாத்தியமா? என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உலகில் எங்குமே 100% மது ஒழிப்பு சாத்தியமாகியிருக்கிறதா? இரண்டாவதாக அரசு மது ஒழிப்புச் சட்டங்களை இயற்றி அமல்படுத்தியவுடன் குடிப்பழக்கம் ஒழிந்துவிடுமா? பல ஆண்டுகள் குடிப்பழக்கத்திலிருக்கும் குடியர்கள் தடைவிதித்த நாளிலிருந்து நீர்மோர் அருந்தத் தொடங்கிவிடுவார்களா? எல்லாவற்றையும் விட சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட பழக்கத்தை மேற்கொண்டிருக்கும் ஒரு தனிமனிதனை இனிமேற்கொண்டு அதைக் கைவிடும்படி நிர்பந்திப்பது தனிமனித சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகாதா? உலகளவிலான ஆய்வுகளில் குடிப்பழக்கமுள்ளவர்களில் 13இல் ஒருவரோ 10இல் ஒருவரோதான் குடிநோயாளியாக மாறிவிடுகிறார்கள். 100க்கு 90 நபர்கள் கமுக்கமாகக் குடித்துவிட்டு கண்ணியமான குடியர்களாகவும் குடிமகன்களாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும்போது எங்களின் எளிய மகிழ்ச்சியை, கேளிக்கையை தடை செய்வது அரச பயங்கரவாதமாகாதா? என்ற வாதங்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லையா? எல்லாவற்றையும்விட மது விலக்கப்பட்ட காலங்களின் வரலாறுகளும் நாம் அறியாததல்ல. கள்ளச் சந்தைகள் உருவாகி பெரும் லாபத்தைக் கள்ளச்சந்தைக்காரர்கள் அள்ளிக்கொண்டு போவார்கள். இன்னொருபுறம் உள்ளூரில் மது காய்ச்சத் தொடங்குவார்கள். கருவேலங்காடுகளுக்குள் ஒளிந்து குடித்து கள்ளச்சாராய மரணங்களை செய்தித்தாள்களில் படிக்கத் தொடங்குவோம். கூடுதலாக இப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்கள் வேறுபல போதை பொருட்களை உட்கொள்ளத் தொடங்குவார்கள்.

ஆக மதுவிலக்கு என்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல என்பது  மதுவிலக்கை வலியுறுத்தும் அத்தனை தலைவர்களும் அறிந்ததே. அப்படியானால் மதுப்பழக்கம் தொடர்பாகச் செய்வதற்கு எதுவும் இல்லையா? என்ற வினா எழலாம். உண்மையில் மதுவை ஒழிப்பதா? அல்லது மதுப் பழக்கத்தை முறைப்படுத்துவதா? அதாவது மதுப்பழக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்பதே நம்முன்னுள்ள வினா. வளர்ந்த நாடுகள் இவற்றை எப்படிக் கையாள்கிறார்கள்? அமெரிக்கா உட்பட்ட மேற்கத்திய வளர்ச்சியடைந்த நாடுகளில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உணவுச் சாலைகளில்கூட பியர் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் அங்கு மாணவர்கள் அதை எப்போது அருந்தவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் வீடுகளில் இரவு உணவு மேசையில் ஒயின் அருந்துவது கலாச்சாரத்தின் பகுதியாக இருக்கிறது. மொத்தமாக ஒயின் பாட்டிலகளை வாங்கி அடுக்குவதற்கென்றே தனியிடங்கள் வீடுகளில் உள்ளன. அங்கு குறிப்பிட்ட வயது வரும்வரை அவற்றைக் குழந்தைகள் கேட்டு அடம்பிடிப்பதுபோல் தெரியவில்லை.

நாம் சோமபானமும் சுரா பானமும், கள்ளும் குடித்துக் களித்திருந்த காலத்தில் ஐரோப்பாவில் மனித சஞ்சாரம்  இருந்ததில்லை என்று பெருமை பேச நாம் தகுதியுடையவர்களே. அதே நேரத்தில்  நவீன வாழ்க்கைமுறைக்குள் நம்மைத் தகவமைத்துக் கொள்வதிலுள்ள சிக்கல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அணுகுமுறை நம்மிடம் இருக்கிறதா?  மேற்கு நாடுகளிலும் குடியினால் விளையும் அத்தனை தீமைகளும் உண்டுதான் என்றாலும் பெரும்பான்மை சமூகம் குடிப்பழக்கத்தைக் கையாளப் பழகிவிட்டது என்பதே சரியானது. மதங்களால் நடைமுறை வாழ்க்கையில் நேரடியான பலன்கள் எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொண்டிருந்தாலும் மதங்கள் ஒழிந்துவிடவில்லையல்லவா?  மதங்களிலிருந்து விலகி நின்று வாழமுடியும் என்பதை மேற்கத்திய சமூகங்கள் கண்டுகொண்டுள்ளன. அதுபோலவே மனித நாகரிகத்தோடு நீண்ட தொடர்புள்ள மதுப் பழக்கத்தால் சமூகங்கள் அழிந்துவிடவில்லை. பழங்குடிச் சமூகங்களுக்கும்கூட அவற்றைக் கையாளத் தெரிந்திருந்தது. மனிதர்கள் நீண்ட நாள்கள் வாழவேண்டும் என்பதைவிட அவ்வப்போது  நவீன வாழ்க்கை அனுமதிக்கும் சிறு பொழுதுகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கழிக்கவேண்டும் நினைக்கிறார்கள். கேளிக்கைக்கான விருப்பம் என்பது மனித மனங்களின் ஆதிவிழைவுகளில் ஒன்றல்லவா?

உலக சுகாதார நிறுவனம் உலகளவில்  மதுப்பழக்கத்தால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை 30 லட்சம் என்கிறது. ஆனால் உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை இதைவிட  மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு மட்டும் அதீத உடல் பருமனால் இறந்தவர்கள் 30 லட்சம். 2014இல் 85 கோடி மக்கள் ஊட்டச் சத்துக் குறைவால் துன்புற்றனர். ஆனால் 210 கோடி மக்கள் மிதமிஞ்சிய உடற்பருமனால் துன்புற்றனர். 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் ஐம்பது சதவீதத்தினர் மிதமிஞ்சிய எடையால் வியாதிகளை எதிர்கொள்வர். இந்தத் தரவுகள் ஒட்டு மொத்த உலகு சார்ந்தவை என்று புறம் தள்ளிவிட முடியாது. உலகிலேயே சாலை விபத்துக்களில் மரணிப்பவர்கள், உடல் உறுப்புகளை இழப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். ஆனால் இவை யெல்லாவற்றையும்விட குடிப்பழக்கம் மையப்பிரச்சனை யாகப் பார்க்கப் படுவதற்கு அதிலுள்ள ‘ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடு’ ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.

1980களின் இறுதியில் எய்ட்ஸ் நோய்பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் கல்லூரிகளில் தீவிரமாக இருந்தன. அப்போது அறியாதவர்களுடனான உறவைத் தவிர்க்க சுய இன்பம் தவறல்ல, அது இயல்பானதே. அதில் உடல்நலத்தை கெடுக்கும் அம்சங்கள் ஏதுமில்லை என்று பிரச்சாரம் செய்தோம். மேற்கத்திய நாடுகளில் பள்ளிகளில் வளரிளம்பருவ சிறுமிகளின் கர்ப்பத்தைத் தடுக்க அவர்களுக்கு கருத்தடைச் சாதனங்கள் பற்றி கற்பிக்கப்படுகிறது. பள்ளியிலிருந்து சுற்றுலா செல்லும்போது நீங்கள் ஏன் உங்கள் மகளுக்கு கருத்தடை சாதனத்தை கொடுத்தனுப்பவில்லை என்று பெற்றோரைப் பள்ளி நிர்வாகம் கண்டிப்பதும் உண்டு. மாறும் காலங்கள் நம்முன் நிறுத்தும் சவால்களுக்கேற்ப முற்றிலும் வேறான முறையில் பிரச்னைகளை அணுகவேண்டியவர்களாக இருக்கிறோம்.

குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரையில் பூரண மதுவிலக்கு என்பது இல்லாத ஊருக்கு வழிதேடுவதைப்போன்றதே. இன்றைய அவசரத் தேவை மதுப்பழக்கத்தைக் கையாள்வது பற்றிய விழிப்புணர்வே. குறிப்பாக பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் ‘மதுப் பழக்கம் என்பது என்ன? பழக்கம் என்பது எப்படி குடி நோயாக மாறக்கூடும். மது அருந்தத் தொடங்கும் 10 பேரில் ஒருவர் குடிநோயாளியாக மாறிவிடும் சாத்தியம் உள்ளது. அந்த ஒருவர் நீயாக இருக்கக் கூடும். மிதமிஞ்சிய குடி எத்தகைய உடல், மன நலப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். குடும்பங்களில் எத்தகைய விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை விரிவாகத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மேற்கண்ட ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இருக்கப்போவதில்லை. ஆனால் இவற்றுக்கிணையாக ‘அப்படியே குடிக்கத் தொடங்கினால் குடிபானங்களின் வகைகள், அவற்றின் மூலப் பொருட்கள், அவற்றிலிருக்கும் ஆல்கஹால் அளவு, அவற்றை பாதுகாப்பாகப் பருகும் முறை என்பனவற்றையும் இணைத்தே அறிவுறுத்த வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இப்பிரச்சனையைக் கையிலெடுப்பவர்கள் இன்னொரு விசயத்திலும் கவனம் செலுத்தவேண்டும். அது தமிழகத்தில் கீழ் நடுத்தர வர்க்க, எளியவர்களுக்கு அரசு வழங்கும் மதுவகைகளின் தரம். இதுபற்றி பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஏனெனில் மேல்நடுத்தரவர்க்கத்தினர் இறக்குமதி செய்யப்பட்ட பானங்களை வாங்கும் சக்தியுள்ளவர்கள். அதற்கு சக்தியற்றவர்களின் புகலிடமாக அரசு மதுவகைகள் இருக்கின்றன. கலப்படமற்ற தரமான பொருட்களை நுகர்வது ஒரு குடிமகனின் உரிமை அல்லவா? நன்கு திட்டமிட்ட விழிப்புணர்வுப் பிராச்சாரங்களை அரசு இளையோர் மத்தியில் முன்னெடுப்பதே இப்போது செய்யவேண்டுவது.

(நன்றி: ஸாகே (போதையின் கதை), லோகமாதேவி, விஷ்ணுபுரம் பதிப்பகம்:2013, உலக சுகாதார நிறுவன இணைய வெளியீடுகள், National Library of Medicine இணையப் பக்கங்கள்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com