நான் சொல்வதை நீங்கள் நம்ப மறுப்பீர்கள், எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்களில் சுகிசிவமும் ஒருவர், அதெப்படி ஒரு ஆன்மீகப் பேச்சாளரை உனக்குப் பிடிக்கும், இதுவே கதைதானே என்று சிரிப்பீர்கள்.
’ஒரு விறகுவெட்டி கடைத்தெரு வழியாகப் போகும்போது அங்குள்ள கடைக்காரர்கள் எல்லோரையும் கும்பிடறங்கோ, கும்பிடறங்கோ என்று சொல்லி, கும்பிட்டபடியே போவது வழக்கம். ஆனால், பதிலுக்கு யாரும் அவரைத் திரும்பக் கும்பிட்டதில்லை.
ஒரு நாள் அந்த விறகுவெட்டி வாங்கிய லாட்டரிச் சீட்டிற்கு ரூ.25 இலட்சம் பரிசு விழுகிறது, அதன்பிறகு அவர் கடைத்தெரு வழியாகப் போனபோது கடைக்காரர்கள் அனைவரும் கும்பிடறங்கோ, கும்பிடறங்கோ என்றனர். விறகுவெட்டி திரும்பக் கும்பிடாமல் சொல்றங்கோ, சொல்றங்கோ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
மறுநாளும் விறகுவெட்டி அதே கடைத்தெரு வழியாகச் சென்றார்; கடைக்காரர்கள் கும்பிடறங்கோ என்றனர்; விறகுவெட்டி, சொல்லிட்டங்கோ, சொல்லிட்டங்கோ என்று பதில் சொல்லிவிட்டுச்சென்றார்.
இந்தப் பதிலால் கடுப்பான கடைக்கார் ஒருவர், ’டேய், நாங்க கும்பிட்டா பதிலுக்கு கும்பிடறன்னு சொல்லு, அதைவிட்டுட்டு நேத்து சொல்றேன் சொல்றேன்னு சொன்னே, இன்னிக்கு சொல்லிட்டேன் சொல்லிட்டேன்னு சொல்றேயே, இதுக்கு என்னடா அர்த்தம்?’னு கோபமாக் கேட்டாரு.
அதற்கு அந்த விறகுவெட்டி சொன்னார், ‘இவ்வளவுநாள் நான் கும்பிடறேன் கும்பிடறேன்னு சொன்னேன், நீங்க யாரும் பதிலுக்குச் சொன்னதில்ல; எனக்கு 25 இலட்சம் அடிச்சதும் நீங்க எல்லாரும் கும்பிடறோம்ன்னு சொல்றீங்க; அந்தக் கும்புடு எனக்கில்ல, என்கிட்ட இருக்கற பணத்துக்குத்தானே; அதைத்தான் நேத்து சொல்லிடறேன் சொல்லிடறேன்னு சொன்னேன். லாட்டரில அடிச்ச பணத்தை நான் பேங்குல போட்டுட்டு பாஸ்புக்கை வீட்டுல வெச்சிருக்கேன். நேத்து வீட்டுக்குப்போய் அந்தப் பாஸ் புத்தகத்தை எடுத்து, மொதலாளிமார் எல்லாரும் உன்னைக் கும்பிட்டாங்கனு சொன்னேன். அதைத்தான் சொல்லிட்டேன் சொல்லிட்டேன்னு சொன்னேன்.’ என்றார்- இது சுகிசிவம் தன் சொற்பொழிவு ஒன்றில் சொன்ன ஒரு கதை.
அவர் தன் பேச்சில் நம்பமுடியாத, பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணக்கதைகள் எதையும் சொல்வதில்லை. சமரசமான வாழ்க்கைக்கு உகந்த எளிய போதனைகளைக் கதையாகவும் ஆலோசனையாகவும் சொல்கிறார்.
யார் இந்த சுகிசிவம்?
சுகி.சிவத்தின் இயற்பெயர் சுகி.சதாசிவம். அந்தக் காலத்தில் பிரபலமான சொற்பொழிவாளராகவும் வானொலியில் புகழ்பெற்ற சுகி. சுப்பிரமணியம் இவரது தந்தை. எழுத்தாளர் கோமதியம்மாள், இவரின் தாய். அரசுத் தொலைக்காட்சியின் சென்னை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்,பெருமாள், சுகி.சிவத்தின் மூத்த சகோதரர். ஞானம்மிக்க குடும்பத்திலிருந்து வந்த சுகி.சிவம் சட்டம் படித்து வழக்கறிஞராக ஆனார். தான் சொல்லவருகிற செய்திகளை மிக எளிமையாகவும், யாரும் மறுக்கமுடியாதபடியும் திறமையாகவும் சொல்வதற்கு ஒருவேளை அவர் சட்டம் படித்ததும் காரணமாக இருக்கலாம்.
ஆழ்வார்ப்பேட்டை ஆன்மீக சமாஜத்தில் அவர் சமயச் சொற்பொழிவாளராக நுழைந்தபோதே, அவரை மீசையை எடுக்கச்சொல்லி வற்புறுத்தினார்கள். அப்போதே அதை மறுத்த சுயமரியாதைக்காரர், சிவம்.
வேலைக்குப் போகிற இளைஞர்களாக இருக்கட்டும் அல்லது பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளாக இருக்கட்டும்.. பொதுவாக நாம் என்ன சொல்லுவோம்..? ‘ஒரு நாள்கூடத் தவறாம போகணும், அதுவும் பள்ளிப் பிள்ளைகளுக்கு அட்டனென்ஸ் ரொம்ப முக்கியம்’னு சொல்லுவோம்.
நூறு சதவீத அட்டனென்ஸ் இருந்தா, அந்தப் பிள்ளையைப் பாராட்டி ஸ்கூல்லருந்து ஒரு பிளாஸ்டிக் கப்பு கொடுப்பாங்க அல்லது ஒரு பேப்பர்ல சர்டிபிகேட் குடுப்பாங்க. ஆனா அந்தப் புள்ள நம்ம வீட்டுக்கு யாராவது சொந்தக்காரங்க வந்தா, அது சித்தப்பாவான்னு, பாட்டியா, மாமாவா, அத்தையான்னு தெரியாது.. Somebody Came- ன்னு சொல்லும்.
காரணம், அந்தப் புள்ளைய நாம தாத்தா செத்ததுக்கோ, பெரியப்பா வீட்டுக் கல்யாணத்துக்கோ, மாமா பொண்ணு காதுகுத்துக்கோ அழைச்சுட்டுப் போனதில்ல.. இதெல்லாம் நாங்க பாத்துக்கறோம், அட்டனன்ஸ் முக்கியம், நீ பள்ளிக்கூடத்துக்குப் போன்னு விட்டுட்டுப்போறோம். அப்ப அந்தக் கொழந்தைக்குச் சொந்தக்காரங்க எல்லாரும் somebody- யாத்தான் தெரியும். ஆகவே செண்ட் பர்சண்ட் அட்டனன்சுக்குக் கிடைக்கிற சர்டிபிகேட் பேப்பர் வெறும் குப்பை. அதைவிட உறவுகள் முக்கியம்’ என்பதும் சுகிசிவம் சொன்னதுதான்.
சரி, இப்படி எளிய வாழ்க்கைக்கான போதனைகளைச் சொன்னவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம்; அவர்களைவிடவும் உன்னதமாகச் சொல்வதற்கு சுகி.சிவத்திடம் என்ன இருக்கிறது?
இருக்கிறது. காரணம் வெறும் போதனைகளையோ, பக்திக் கதைகளையோ மட்டும் அவர் சொல்லும் பேச்சாளர்கள் வரிசையில் அவரை நிறுத்த முடியாது. திரு.வி.க. போல, குன்றக்குடி அடிகளார்போல பக்தியோடு சமூகநீதியையும் போற்றுபவராக சுகி.சிவம் நிற்கிறார். பக்தியையும் சனாதனத்தையும் பிரித்துப் போதிக்கிறார். இதனால் காலம்காலமாக பக்தியைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டிருப்பவர்கள் சுகி சிவத்தை எதிர்க்கிறார்கள்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் சாதி பார்க்காமல் விவேகானந்தரை தன் சீடராக ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த மடாதிபதிகள் மட்டும் ஏன் அடுத்த வாரிசாக தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களையே தேடுகிறார்கள் என்கிறார் சுகி.சிவம்,
‘இந்த நாடு கிறித்துவ நாடாவதோ, இஸ்லாமிய நாடாவதோ, இந்து நாடாவதோ எந்த நன்மையையும் நமக்குத் தராது; சமயச் சார்பற்ற நாடாக இருப்பதுதான் இப்போதும் நன்மையைத் தரும்.. இந்த நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பது சாதியும், மதமும்தான்.
ஒரு கடவுள் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவங்கள மட்டுந்தான் காப்பாத்துவாரா.. மத்தவங்களுடைய கோரிக்கையோட போனா உன் அப்ளிகேஷனை எடுத்துக்கிட்டு அந்த டிபார்ட்மெண்டைப் போய்ப் பாருன்னு தள்ளிவிட்ருவாரா.. மதமும், சாதியும் மனிதனின் தவறான புரிதல்.’ என்கிறார் சிவம்.
அத்திவரதர் வழிபாட்டிற்காக உயிருக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பெருங்கூட்டம் கூடியது; ஒரு கூட்டம் அதை வைத்து பெருங்கொள்ளையடித்தது. அந்த நேரத்தில் சுகி.சிவம் பேசினார்: ‘இவ்வளவு கஷ்டப்பட்டு கடவுளை வந்து காணவேண்டியதில்லை; உண்மையில் கடவுள் உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பமாட்டார்.. வீட்டிலிருந்தபடியே உங்கள் வீட்டிலிருக்கும் கடவுளைக் காணுங்கள் போதும்’ என்றார். இது ஒருதரப்புக்குப் பெருங்கோபத்தை ஏற்படுத்தியது.
ஆளுநர் திருவள்ளுவர் படத்திற்கு காவியுடுத்தியபோது அதற்கும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார், சுகி.சிவம். ‘காவி என்பது இல்லற வாழ்வைத் துறந்தவர், அதேபோன்று இல்லறத்தைத் துறந்தவருக்கு வழங்குவது; திருவள்ளுவர் வாசுகியோடு இல்லறம் நடத்தினார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, அவர் துறவறம் பூண்டவராக எங்கும் சொல்லப்படவில்லை; அதேபோல் அவருக்கு காவி உடுத்தும் ஆளுநரும் துறவியல்ல; எனவே, திருவள்ளுவருக்குக் காவியுடுத்துவது தர்மத்திற்கு விரோதமானது.’ என்றார்.
தமிழில் குடமுழுக்கு நடத்துதல் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலியில் ஒரு கருத்துக்கூட்டம் நடத்தியது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிரவை குமரகுரு சுவாமிகள், பேரூர் மருதாச்சல அடிகளார், அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, அறநிலையத் துறை அதிகாரிகள் போன்றோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் சுகி.சிவமும் கலந்துகொண்டார்.. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு அழைக்கப்பட்டிருந்தன.
இதில் தமிழில் குடமுழுக்கு நடத்த சில இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.. இதனை நேரடியாகச் செய்ய முடியாமல் இந்து அறநிலையத் துறையின் சார்பாக நடத்தப்படும் கூட்டத்தில் கடவுள் படம் வைக்கவில்லை என்று கூச்சல் எழுப்பினர். தூணிலும் துரும்பிலும் இருப்பவர் கடவுள், படம் வைத்துத்தான் அவரை நிரூபிக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்று அதனைக் கடந்துசென்றார் சிவம்.
ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளரின் நேர்காணலில் கலந்துகொண்டு முருகன் தமிழ்க்கடவுள், ஆகமவிதிகள் முருகனுக்குப் பொருந்தாது என்று வாதிட்டார் சிவம்.
தொகுப்பாளர் அதற்கு ஆதாரம் கேட்டபோது, கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ்க்கடவுள் முருகன் என்னும் புத்தகத்தைக் கொடுத்தார். முருகனுக்கு ஆதாரமாக ஒரு பெரியாரிஸ்ட் எழுதிய நூலைக் கொடுக்கிறீர்களே என்று தொகுப்பாளர் கேட்க, யார் எழுதியதாக இருந்தால் என்ன, முருகன் தமிழ்க்கடவுள் என்பதற்கு பல சங்கப்பாடல்களிலிருந்து அவர் ஆதாரங்களைத் தந்திருக்கிறார்.. முடிந்தால் அதெல்லாம் பொய் என்று நிரூபியுங்கள் என்று கேட்டார்.
தொகுப்பாளர் தனது வழக்கமான பாணியில் வேறொரு விவாதமாக அதைத் திசைதிருப்ப முயன்றார். உங்கள் டி.ஆர்.பி. வெறிக்கு என்னையும் கடவுளையும் பயன்படுத்த முயலாதீர்கள் என்று அந்நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறிய துணிச்சலும் நேர்மையும் கொண்டவர் சுகி.சிவம்.
உண்மையான ஆன்மிகத்திற்கும், உண்மையான அரசியலுக்கும் மனிதனின் மாண்பைக் காப்பதே நோக்கம். அரசியலும் ஆன்மிகமும் சந்தித்துக்கொள்ளும் புள்ளி மனிதனின் மாண்பைக் காப்பதுதான். அதனால்தான் திரு.வி.க., குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் தங்கள் சுயத்தையும் இழக்காமல் பெரியாரோடு நட்போடு இருக்கமுடிந்தது.
மார்க்சின் பெயரால், பெரியாரின் பெயரால், அம்பேத்கரின் பெயரால் மட்டுமல்ல, கடவுளின் பெயரால் சமூகநீதியை வலியுறுத்தும் சுகி.சிவமும் மனிதகுலத்தின் போராளியாகப் போற்றத்தக்கவர்தான். சனாதனிகள் விரும்பும் ஆன்மிகத்தைப் பேசியிருந்தால் சுகி.சிவம் இன்னும் பல வகைகளில் வசதியாக இருந்திருக்க முடியும்; ஆனால் அவற்றை மறுத்து மனிதகுல மேம்பாட்டிற்கான ஆன்மிகத்தைப் பேசுவதாலேயே அவர் இந்தப் பெருவழிப்பாதையின் மாண்புமிக்க பயணியாகிறார்.