வங்கித்துறை வேலை வாய்ப்பு

Published on

வங்கிகள் 1969-ல் அரசுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலையில் சேர்ந்த பலரும் இன்று பணி ஓய்வு பெற்றுவிட்டனர். மேலும் புதிதாக 23 வங்கிகள் தொடங்க சமீபத்தில் ரிசர்வ் வங்கி அனுமதி தந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு மூன்று  ஆண்டுகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் வங்கித்துறையில் உருவாகப்போகின்றன. வங்கிப்பணியில் பள்ளியிறுதி, பட்டப்படிப்பு இரண்டு தகுதிகளுக்குமே பொருத்தமான பணியிடங்கள் உள்ளன. www.ibps.in   இணையதளத்தில் அவ்வப்பொது இதற்கான அறிவிப்புகள் வெளிடப்படுகின்றன. பள்ளித் தரத்திலான கணிதம், ஆங்கில அறிவு, reasoning, கணினி திறன் போன்றவற்றில் உள்ள அறிவு கிளர்க்குகள் தேர்விலும், அதிகாரிகளுக்கான தேர்வில் கூடுதலாக பொதுஅறிவு, வங்கித்துறை பற்றிய அறிவு ஆகியவையும் பரிசோதிக்கப்படும். ரிசர்வ் வங்கிக்கு ஆன்லைன் தேர்வு எழுதவேண்டும். ஆரம்பகட்டம் மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். மேற்கண்ட பாடங்கள் தவிர நிதித்துறை மேலாண்மை, பொருளாதாரம், புள்ளியியல் ஆகிய பாடங்களில் ஒன்றை விருப்பப்பாடமாகத் தேர்வு செய்து போட்டித்தேர்வு எழுதவேண்டும். பின்னர் நேர்முகத் தேர்வும் உண்டு.

ரிசர்வ் வங்கி

நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கிற அரசு சார்ந்த ஒரு நிறுவனம் இது. பணத்தின் மதிப்பை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பது இதன் தலையாய பணி. மத்திய மாநில அரசுகளும் வங்கிகளும் கணக்கு வைத்திருக்கும் வங்கியாகவும் இது உள்ளது.  மேலும் அனைத்து வங்கிகளும் நிதிநிறுவனங்களும் சரியாக நடைபெறுகின்றனவா என்று கண்காணிப்பதும் இதன் பிரதான பணியாகும். அதனால் வங்கித்துறை சார்ந்த வாடிக்கையாளர் பிரச்னைகளுக்கான குறைதீர்ப்பாளர் அலுவலகமும் ரிசர்வ வங்கி வசம் உள்ளது. வங்கி வசதி இல்லாத கிராமப்புறங்களில் அடிப்படை வங்கிப்பணிகளைச் செய்ய, வீடு தேடிச்செல்லும் பிரதிநிதிகளை நியமிப்பது போன்ற திட்டங்கள் தீட்டுவதும் ரிசர்வ் வங்கியே.  கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு வங்கிசாராத நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களை எச்சரிப்பதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இதன் பணிகளில் ஒன்று. சமீபகாலத்தில் எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலமாக நடக்கும் வங்கிசார்ந்த ஏமாற்று வேலைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அஞ்சல்துறையுடன் சேர்ந்து நேரடியாக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும்  இதுபற்றி கடிதங்கள் அனுப்ப சென்னை ரிசர்வ் வங்கி முயற்சி எடுத்திருப்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம்.

ஜனவரி, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com