மரணம் பூக்கள்

முள்ளரும்பு மரங்கள் -2
மரணம் பூக்கள்
Published on

பேரப்பனின் வீட்டிலிருந்து ஏதோ சில பெண்களின் அழுகுரல்கள்உரத்துக் கேட்டன. பல தோட்டவீடுகளுக்கு அப்பாலிருக்கும் அவரது வீட்டைநோக்கி ஓடினேன்.

பேரழகனான பேரப்பன் எனது அப்பாவின் மூத்த அண்ணன். பால்யத்தில் நான் பார்த்த அழகும் கம்பீரமும் கொண்ட முதன்முதல் ஆண். அப்பா அளவிற்கு உயரம் இல்லை என்றாலும் தோல் வண்ணம் அப்பா மாதிரி கருப்பு அல்ல. வெளிர் கோதுமை நிறம். வட்ட முகத்தின்மேல் வடிவான மூக்கும் அடர்த்தியான மீசையும். வேட்டி ஜிப்பா தான் ஆடை. வேறுவேறு வண்ணங்களில் அழகான ஜிப்பாக்களை அணிவார். அழகாக முடிவெட்டிய தலைமேல் பெரும்பாலும் எதாவது இளம் வண்ணத் துண்டால் வட்டக்கட்டோ முண்டாசோ இருக்கும். தலை நிமிர்த்தி கைகளை இருபுறமும் தாளகதியில் ஆட்டிக்கொண்டு சுறுசுறுப்பாக நடப்பார். ஆனால் பேரப்பனுக்கு நேர்மாறானதுஅவரது மனைவியின் தோற்றம்.

இருண்ட தோலும் நீண்டுருண்ட முகமும் துருத்தி நிற்கும் பற்களும் கொண்ட பேரம்மாவை ஆணழகனான பேரப்பன் எதற்குத் திருமணம் செய்துகொண்டார் என்று பலமுறை நான் யோசித்ததுண்டு. எந்தவகையிலும் பேரப்பனுக்கு இணையில்லை என்றாலும் சாதுவான ஒரு பெண்மணிதான் பேரம்மாவும். தனதுபாரங்கள்அனைத்தையும் கடவுள்மேல் போட்டுக்கொண்டு வாழ்ந்தவர். இருவருக்கும் குழந்தைகள் என்றால் உயிர். அதனாலோ என்னமோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துக்கொண்டேயிருந்தார் பேரம்மா. ஏற்கனவே எட்டு குழந்தைகள் இருக்கையில் ஓரிரு வாரங்-களுக்கு-முன்புதான் அவர்களுக்குஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.

பல குழந்தைகளை வளர்ப்பதற்கான பொருளாதாரம் எதுவும் பேரப்பனுக்கு இருக்கவில்லை. பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் அவருக்கு நாட்டமே இல்லை. அவரது மூன்று ஏக்கர் நிலம் பெரும்பாலும் களைச்செடிகள் மண்டிக்கிடந்தது. சிறு வியாபாரங்கள் செய்வதுதான் அவருக்குப் பிடிக்கும். கோவில், தேவாலயத் திருவிழாக்களை ஒட்டி தற்காலிக உணவுக் கடைகளை நடத்துவார். அத்தகைய ஒரு கடையிலிருந்துதான் முதன்முதலில் ‘சுற்றப்பம்'

சாப்பிட்டேன். சுற்றுச் சுற்றாக வருவதால் பரோட்டாவுக்கு நானே வைத்துக்கொண்ட பெயர் அது. இலவசப் பரோட்டா தான்! எனக்கு மட்டுமில்லை, பேரப்பனின் கடை என்றால் ஊரில் பலருக்கு இலவச உணவென்று பொருள். ஒருபோதும் திரும்பி வராத கடன்.

தேன் நிலா, ஆரஞ்சு, எலுமிச்சை எனப் பல்சுவைப் பலவண்ண மிட்டாய்கள், கருமுரா பிஸ்கேட்டுகள், பலரக வாழைப் பழங்கள், ஸ்குவாஷ் எனும் பழச்சாறு, சிரப் எனும் கடுமதுரம் ஊற்றிய எலுமிச்சை சர்பத்... எல்லாம் கலந்து ஈர்த்திழுக்கும் நறுமணம் கமழும் பல சிறு கடைகளை பேரப்பன் நடத்தியிருக்கிறார். நான் கடைக்குமுன் சென்று நின்று ‘‘பேரப்பா.. ஆரஞ்சு முட்டாயி.. பேரப்பா... நாரங்ஙா வெள்ளம்.. பேரப்பா வாளப்பளம்..'' என்று கேட்பேன். எல்லாவற்றையும் அள்ளித் தருவார். நான் அத்தோடு விடாமல் நாலு பசங்களுக்குஇதைச் சொல்வேன். அவர்களும் ஓடிச் சென்று பேரப்பனின் கடை முன் குழுமி நிற்பார்கள். அனைவருக்கும் கைநிறைய மிட்டாய் கிடைக்கும். குழந்தைகள் சங்கடப்படுவது பேரப்பனால் தாங்கிக்கொள்ள முடியாது.

ஒருசில நாட்களில் கடையைத் திறந்து வைத்து எங்கோ போய் விடுவார். ஊரின் பல குழந்தைகளும் சில வளர்ந்தவர்களும்  வந்து கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு போவார்கள். கடையை இழுத்து மூடுவதற்கு எவ்வளவு நாள் ஆகும்! இப்படி ஒவ்வொரு வியாபாரமும் தோற்றுப் போகும்போது பேரப்பன் மௌனமாகி விடுவார். யாரிடமும் பேசாமல் சில நாட்களைக் கழித்த பின்னர் ஊரை விட்டு எங்கோ செல்வார். மாதங்கள் கடந்து திரும்பிவரும்போது பெரும்பாலும் அவரது உருவமே மாறியிருக்கும். தலையில் முடியிருக்காது. முகத்தில் மீசையிருக்காது. உடலில் ஆங்காங்கே ரணத் தழும்புகள் தென்படும்.ஓர் ஏறும்பைக் கூட நோகடிக்காதவரான, கருணையின் ஆளுருவமான எனது பேரப்பனை யார் இப்படிச் சித்திரவதை செய்தார்கள் என்று யாருமே என்னிடம் சொல்லவில்லை.

அன்று நான் அவரது வீட்டிற்குச் செல்லும்போது உள்ளேயிருந்து பெண்களின் அடக்கிய அழுகையும் புலம்பல்களும் கேட்டன. திண்ணையில் சாய்வு நாற்காலியில் ஆகாயத்தைப் பார்த்து அமர்ந்திருந்தார் பேரப்பன். முகத்தில் துயரம் தோய்ந்திருந்தது. என்னை ஒருநொடி பார்த்து முகம் திருப்பி மறுபடியும் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தார். நான் உள்ளே சென்றேன். நெல் சேகரித்து வைப்பதற்கான மரப் பத்தாயத்தின்மேல் வெள்ளைத் துணியில் அந்தப் பெண்குழந்தையின் மரித்து மரத்த உடல் வைக்கப்பட்டிருந்தது. அதன் முகத்தருகே கடும் வாசம் வீசும் சில காட்டுப்பூக்களை வைத்திருந்தனர். நான் பார்த்த முதல் மரணம். காற்றோட்டமற்ற அந்த அறையின் பூஞ்சை மணத்துடன் கலந்த சவம் நாறிப் பூக்களின்மணம்தான் இன்றளவும் எனக்கு மரணத்தின் மணம்.

பேரம்மாவும் சில பெண்களும் குழந்தையின் சடலத்திற்-கருகே நின்று அழுது பேசிக் கொண்டிருந்தனர். யாரோ ஒருத்தி ஒடுங்கிய குரலில் ‘‘மனிதனின் நிலை இவ்வளவுதான்..'' என்று சொன்னாள். எங்கள் சொந்தக்காரப் பெண் ஒருவர் அந்தக் குழந்தையின் கன்னம் வருடியபடி அதன் முகத்தைப் பார்த்து ‘கவலப்படாதடா செல்லக்குட்டீ.. ஒன்ன நாங்க எடுத்திருவோம்டா.. எடுத்து நடந்திருவோமடா..‘ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்கள் எடுத்து நடப்பதற்கு இறந்துபோன அந்தக் குழந்தை திரும்பி வருமா?

இறந்துபோன விஷயங்களையும் இறந்துபோன மனிதர்களையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள மனிதன் நடத்தும் ஊர்வலத்தின் பெயர்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்துகொண்ட பின்னர்தான் குழந்தையின் சடலத்திடம் அந்தம்மா பேசியதன் ஆழ்பொருள் எனக்கு விளங்கியது.

ஐந்தாவது படிக்கும்போது உடன் படித்த ரோசம்மா எனும் பிள்ளை திடீரென்று இறந்து போனதாகச் செய்தி வந்தது. எங்களை வரிசையில் நடத்தி அவள் வீட்டுக்குக் கொண்டுசென்றனர் ஆசிரியர்கள். போகும் வழியில் சில குழந்தைகள் வேலிகளிருந்து முள்ச்செடிப் பூக்களைப் பறித்தெடுத்தனர். ‘சவ'த்தின் மேல் வைப்பதற்காம். பயந்த சுபாவம் கொண்ட அப்பாவியான ரோசம்மா ஒரே நொடியில் எப்படிச் சவம் ஆனாள்? உயிரற்ற அவளது உடலுக்கு இனிமேல் பூக்கள் எதற்கு என்றெல்லாம் யோசித்தபடியே நானும் ரோசம்மாவுக்காக பூக்களைப் பறித்தேன்.

‘பாபுவண்ணே.. மொகத்துல லைட் அடிக்காதீங்கண்ணே.. பயமாயிருக்-குண்ணேன்னு எங்கொழந்த எவ்ளோ கெஞ்சினாலும் அவ மொகத்துல லைட் அடிசிட்டே இருப்பியேடா பாவீ.. இதோ பொணமாக் கெடக்குறா.. இப்பவும் அவ மொகத்துல லைட் அடிடா...‘ என்று ரோசம்மாவின் அண்ணனிடம் கத்திக்கொண்டு அழுதாள் அவளது அம்மா. ‘‘ஏசுவே.. எங்கொழந்தய பிஞ்சிலேயே பறிச்சிட்டுப் போயிட்டியே நீ..''. மங்கலான அந்த அறையில் வெள்ளை உடையில் படுத்திருந்த ரோசம்மாவின்மேல் பூக்களை வைக்கும்போது எனது கைகள் நடுங்கின. சடலங்களின்மேல் வைக்கப்படும் பூக்களுக்கெல்லாம் ஒரே வண்ணம், ஒரே வாசனை.

அந்திமாலை போல் ஆகாயம் மூடிக்கிடந்த ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில், மூங்கில் மறைத்துப் புல்வேய்ந்த தனது குடிலுக்குள்ளே சசிதரன் என்ற ஏழை விவசாயி இறந்து கிடந்தார். மரணத் துடிதுடிப்பில் அவர் வாந்தியெடுத்த நீலப்பச்சைப் பூச்சி மருந்து, சாணிமெழுக்கு உரிந்த தரையின் குழிகளில் முடைநாறிக் கிடந்தது. கிழிந்துபோன அழுக்குநிறச் சேலை கட்டிய அவரது மனைவி, என்னை விடச் சிறுவனான தன் மகனைக் கட்டிப்பிடித்து நுரையீரல் வெடிப்பதுபோல் ‘‘ஓன் அப்பா போயிட்டாரேடா தங்கமே... அய்யப்பசாமி ஒன்ன அநாதை ஆக்கிட்டாரே...''என்று கதறி அழுதார்.

ஒருநாள் அதிகாலையொளி பரவுமுன்னே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தேன். நகரத்துக்குப் போகும் முதல் பேருந்தைப் பிடித்தே ஆகவேண்டும். புல் புதர்களுக்கிடையே வளைந்து நெளியும் யாருமற்ற ஊடுபாதையில் ஒரு நடுவயதுப் பெண் எனக்கெதிரே கதறிக்கொண்டு ஓடி வந்தாள். பக்கத்து ஊரிலுள்ள முதலாளி வீட்டில் வேலைக்குப் போகும் கமலாட்சி. மூச்செடுக்கத் திணறியபடி என்னைக் கடந்து ஓடும்போது ‘‘அடே செறுக்கா.. அந்தப் பக்கம் போகாதே.. திரும்பி ஓடிரு.. புன்னன் சேட்டனோட பேழு மரத்துல யாரோ ஒத்தன் நாண்டுக்கிட்டு செத்து நிக்குறான்..'' என்றாள்.

அதற்குள்ளேயே பல மரணங்களைப் பார்த்து விட்டிருந்தேன் என்றாலும் பெரும் பீதி என்னைக் கவ்விக்கொண்டது. அப்பெண்ணின் பின்னால் ஓடலாம் என்றே நினைத்தேன். ஆனால் பேழ் மரத்தில் தொங்கும்  அந்த ‘யாரோ ஒருத்தன்' யார் என்று அறிய வேண்டுமே! பயந்தோடினால் அது நடக்காது. மாற்றுவழி போனால் முதல் பேருந்தைப் பிடிக்கவும் முடியாது. வருவது வரட்டும். நடுங்கிக்கொண்டே அதே வழியில் நடை தொடர்ந்தேன்.

ஊடுபாதைக் கீழிறங்கும் இடத்தில் வளர்ச்சி முடங்கிப்போன பேழ் மரத்தின் தாழ்ந்த கிளையொன்றில் வேட்டித் தூக்கில் தொங்கிநின்றான் கோவாலன். அதைப்பார்த்து நடுங்கிய என் இதயத் துடிப்பைக் காதாலேயே கேட்டேன். யாருமற்ற வெளியில் பிணமாகத் தொங்கியாடுகிறான் என்றாலும் அடிப்படையில் அப்பாவியான கோவாலன் என்னை எதுவுமே செய்யப்போவதில்லை என்ற தைரியம் எங்கிருந்தோ எனக்குள் வந்தது. இருந்தும் பதைபதைப்புடனேயே கோவாலனின் உடலருகே சென்றேன்.

கட்டுமஸ்தான அவனது உடம்பில் பட்டாபட்டி அடியாடை மட்டுமே. யாரையோ குத்தப் போவதுபோல் முறுக்கிய கைமுட்டிகளைத் தொடைகளுக்கு இருபுறமும் அணைத்துப் பிடித்திருந்தான். வேட்டித் தூக்கு ஆழ்ந்து இறுகிக் கழுத்து ஓடிந்ததால் அவன் முகம் மிகவும் குனிந்துபோயிருந்தது. கண்கள் வெறித்துத் திறந்திருந்தன. வெளியே தள்ளிய நாக்கை இறுகக் கடித்ததில் வாயிலிருந்து ரத்தம் கசிந்திருந்தது.

கோவாலனின் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றபோது பயமும் நடுக்கமும் எனக்குள் குறைந்துவருவதை உணர்ந்தேன். பேழ் மரத்தைச் சுற்றிவந்து கோவாலனின் உடலை மீண்டும் ஒருமுறை பார்த்த பின்னர் போகவேண்டிய வழியில் நடக்கத் தொடங்கினேன். மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள முச்சந்தியின் எதாவது ஒரு தேநீர் கடைக் குசினியில் இருக்க வேண்டிய கோவாலன் இவ்வளவு தூரம் வந்து புன்னன் சேட்டனின் தோட்டத்தில் தற்கொலை செய்ததன் காரணம்தான் என்ன?

தொலைவில் உள்ள ஏதோ ஊரிலிருந்து எங்களூரில் வந்து தேநீர்க் கடைகளில் வேலை செய்தான் கோவாலன். கேட்பாரும் கேள்வியுமற்றவன். கிராமத்துக் கிணறுகளிலிருந்து பெரிய தகர டப்பாக்களில் தண்ணீர் சேந்தி வருவதும் பெரிய ஆட்டுக்கற்களில் மாவாட்டுவதும்தாம் அவனது முக்கிய வேலைகள். சட்டை அணியவே மாட்டான் என்பதால் அமோகமான அவனது உடற்கட்டு அனைவருக்குமே தெரியும். அய்யாமி என்றொரு பெண்மணிதான் அக்காலம் எங்களூரின் ஆஸ்தான விலைமாது. இரவானால் அங்கே சென்றுவந்த கோவாலன் தன்னைவிட அதிகமான வயதிருந்தும் அந்தம்மாவுடன் ஆழ்காதலில் விழுந்தான்.

‘இனிமேல் பணத்துக்காக நீ யாரிடமும் போக வேண்டாம். உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று அய்யாமிக்கு வாக்குறுதி அளித்த கோவாலன் பாறைமேல் இருந்த அய்யாமியின் குடிசை வீட்டில் அவளுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்தான். அய்யாமிக்கு வேட்டி பிளவுஸ், சோப்பு சீப்புக் கண்ணாடி, சாந்துப்பொட்டுச் சந்தனப்பொட்டு எல்லாவற்றையும் வாங்கித் தந்தான். விசேஷ நாட்களில் அய்யாமியைக் கோவில்களுக்குக் கூட்டிச் சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்தான். கட்டப்பன சாகாராத் திரை அரங்குக்குக் கொண்டுபோய் ‘அவளுடெ ராவுகள்' படம் காட்டினான். மனைவியுடன் பெருமையாக நடப்பதுபோல் அவ்வப்போது கிராமப் பாதைகளில் அய்யாமியுடன் ஒட்டி நடந்தான்.

கருத்து மெலிந்து தனது ஒன்றரைக் கண்ணிலிருந்து மஞ்சள் சளி வடியும் புன்னன் சேட்டன் கையில் காசிருக்கும் ஒரு சிறு நிலக்கிழார். ஆலயங்களுக்கு நன்கொடைகள் வழங்குவதில் பேர்பெற்றவர். பெண்டாட்டிபிள்ளை குட்டிக்காரனாகயிருந்தும் தொழில் ஆரம்பித்த காலத்திலிருந்தே அய்யாமியின் நடப்பு வாடிக்கையாளர். ஒருநாள் பகல் முழுவதும் கடினமாக வேலை செய்து அசதியான கோவாலன் அய்யாமியின் மார்பில் இளைப்பாற ஓடிவந்தபோது அருவருப்பான ஒரு சாணி வண்டைப்போல் அய்யாமியின் உடலைத் துளைத்துக் கொண்டிருந்தார் புன்னன்.

கோபம் தலைக்கேறிய கோவாலன் புன்னனை அய்யாமியிடமிருந்து முழு நிர்வாணமாகப் பறித்தெடுத்து மிதிமிதியென்று மிதித்தான். இதைப்பார்த்துக் கொதித்தெழுந்த அய்யாமி அம்மணக் காளியாகக் கலி துள்ளிக்கொண்டு ‘எங்க நடுவே புகுற நீ யாருடா மைரு? நீ எங்கணவனாடா பரதேசித் தேவடியா மவனே? நா எனக்குப் புடிச்சவங்கூடப் படுப்பேன்.

பேசாம இங்கேர்ந்து ஓடிப்போயிரு பொறுக்கி நாயே...' என்றுக் காட்டுக் கத்தல் கத்தினாள். அதைக்கேட்டுக் கோபமெல்லாம் ஆவியாகிப் போன கோவாலன் தலைதொங்கி அழத்தொடங்கினான். ‘ஓடுறா வேச மவனே...‘ என்று அய்யாமி கத்திக்கொண்டிருக்கையில் வலியிலும் அவமானத்திலும் கூனிக்குறுகிப் போயிருந்த புன்னன் விறைத்தெழுந்து ‘அவன் அங்கேயே நிக்கட்டும்டீ.. இந்தத் தாயளி முன்னாடி வெச்சு ஒன்ன நான்பண்ணணும்..... நின்னு வேடிக்க பாக்கட்டும் இந்தக் கேணக்கூமவன்..' என்று சொல்லி மறுபடியும் அய்யாமியைப் படுக்கவைத்துப் புணர ஆரம்பித்தார்.

தனக்கு நெருக்கமான ஓரிருபேருக்கு மட்டும் இதயம் நொறுங்கி இந்தச் சம்பவத்தைச் சொன்ன கோவாலன் ‘அந்த அசிங்க மூஞ்சி அவராதி மவன் புன்னன நான் என்ன பண்ணப்போறேன்னு பாருங்கடா நீங்கல்லாம்.... அவன உண்டு இல்லன்னு ஆக்கலன்னா எம் பேரு பாறத்தோடு கோவாலன் இல்ல ... ஆனாலும் என்னோட தங்கம் அய்யாமிய ஏங்கிட்டேர்ந்து பிரிச் சிட்டானே கள்ளத் தாயளி.....' என்று சாராய போதையில் கதறினானாம்.

காமத்திற்கு மனிதன் வைத்திருக்கும் பல பெயர்களில் ஒன்று மட்டும்தான் காதல் என்பது. காமம் உயிர்களை உருவாக்கும்போது காதல் உயிர்களைக் காவுகொள்கிறது என்கின்ற சிந்தனைக் கோட்பாட்டை எதிர்கொள்ளும்போதெல்லாம் என் மனதில் வந்து போகிறது கோவாலனின் அந்த அபத்தக் காதல். கோவாலனின் தற்கொலை வேலைக்காரி கமலாட்சியையும் என்னையும் தவிர வேறு யாரையும் இவ்வுலகில் பாதித்ததாகத் தெரியவில்லை.

காதல் உயிரெடுப்பதை நெருங்கி நின்று நான் பார்த்த இன்னொரு இடம் என்னைவிட வயது அதிகமிருந்தாலும் சிலகாலம் எனது நண்பனாகயிருந்த பொன்னச்சனுடைய வாழ்க்கை. பல விவசாய நிலங்களை வைத்திருந்த பணக்-காரரான குழித்துரும்பு ஓனாச்சனின் மகன் பொன்னச்சன். குழித்துரும்பின் உருவத்தை வைத்துக்கொண்டு, பார்க்க அசிங்கமான அப்பனுக்குப் பிறந்த அழகான பையன் என்று பொன்னச்சனைப் பற்றி ஊரில் சொல்வார்கள். குழித்துரும்பு ஒரு தேவாலயக் காரியதரிசியும் கூட. நேரத்தில் பாதியும் தேவாலயத்திலேயே கழிப்பவர். பொன்னச்சனும் பக்திமான் தான். பாதிரியாரோடு சேர்ந்து பூஜையில் தூபம் காட்டுவான்.

அவர்களது தோட்ட வீட்டிற்கு அருகே காந்தா, பிரமீளா, விஜயா என்று மூன்று சகோதரிகள் தமது காணிநிலத்து வீட்டில் வசித்து வந்தனர். பெரிய மளிகைக் கடை ஒன்றை நடத்திவந்த காந்தாவின் கணவர் வியாபாரம் ஓய்ந்து பெரும் கடனாளியாகி ஊரைவிட்டு எங்கோ ஓடிப்போயிருந்தார். பார்வைக்கு அழகான காந்தா இரண்டு சிறு குழந்தைகளையும் இளமையை எட்டிய அழகிகளான தங்கைகளையும் வைத்துக்கொண்டு வாழ வழியில்லாமல் வறுமையில் அல்லாடினார். சிறு தேநீர்க் கடையை நடத்திப் பார்த்தார். கூலிவேலைக்குக் கூட இறங்கினார்.கோவிலான கோவிலுக்கெல்லாம் சென்று பிரார்த்தனை செய்தார். எதுவுமே சரிவரவில்லை.

காந்தாவும் தங்கைகளும் ஒழுங்கற்று நடப்பதாக ஊரில் சிலர் கிசுகிசு பேசத் தொடங்கினார்கள். அது எல்லை மீறிப்போன நாளொன்றில் முச்சந்திக்கு இறங்கிவந்த காந்தா ‘இண்ணுவர ஒளுங்கு மரியாதையாத்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கிறோம். ஆனா எங்களுக்கு அஞ்சு கிலோ அரிசி வாங்கித்தர ஆணொருத்தன் வந்தான்னா அத வாங்கிக்க எந்தத் தேவடியா மவன் அனுமதியும் எனக்குத் தேவையில்லை‘ என்று அனைவரும் கேட்கும்படியாக உரக்கச் சொல்லிவிட்டார்.

இக்காலத்தில்தான் காந்தாவின் தங்கை பிரமீளாவுடன் பொன்னச்சன் காதலில் விழுந்தான். தெய்வீகமான காதல். ஏலக்காய், காப்பிக்கொட்டை, மிளகு, உலர்ந்த இஞ்சி எனத் தமது விவசாய அறுவடைப் பொருட்களைச் சேகரித்து வைக்கும் பொன்னச்சனின் சேமிப்பறை பிரமீளாவின் வீட்டிற்கு அருகில்தான் இருந்தது. அங்கே இரவில் பொருட்களைக் காவல் காத்துக் கிடக்கும் பொன்னச்சனுடன் வந்து ஆனந்தமாகக் குடும்பம் நடத்தினாள் பிரமீளா.

அடிக்கடி நாங்கள் சந்திப்பதில்லை என்றாலும் தனது சுகமான காதல் வாழ்க்கையின் சில வெள்ளோட்டங்-களை அவ்வப்போது எனக்குச்

சொல்வான் பொன்னச்சன். கேட்கப் பொறாமையாக இருக்கும். வயது குறைந்தவன் என்றாலும் பிரமீளா மீது எனக்கும் மோகம் இருந்ததே. உயரம் சற்று குறைவானாலும் கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவளல்லவா பிரமீளா!

இருந்தும் நண்பனுக்காக உளமாற சந்தோஷப்பட்டேன். பொறாமைப் படுவதால் என்ன பயன்? அது நமது நிம்மதியையும் தூக்கத்தையும் கெடுக்குமே ஒழிய பிரமீளா நம்மிடம் வரப் போகிறாளா என்ன? பிற்காலத்தில் பொறாமை எனும் குணக் கோளாற்றை அடியோடு ஒழிக்க எனக்கு உதவியது பொன்னச்சன் அன்று அளித்த ஆரம்பத் தத்துவப் பயிற்சிதான் என்றே நினைக்கிறேன்.

தனது மலைச் சரக்குகளிலிருந்து முதல்தரமானவற்றைத் தனியாக எடுத்துவைத்து அவற்றை நல்ல விலைக்கு நகரங்களில் கொண்டு சென்று விற்பதற்காக அவ்வப்போது பொன்னச்சன் வெளியூர்களுக்குப் போவான். அப்படிச் சென்று வரும்போது வித்தியாசமான சட்டைகள் பேன்டுகள் வாங்கி வருவான். அவற்றிலிருந்து சிலதை இரவல் வாங்கி நானும் அணிவேன்.

இடிந்துபோன பழைய தேவாலயத்தின் பாழடைந்த மயானக் காட்டில் பொன்னச்சன் இறந்து கிடக்கிறான் என்ற திகில் செய்தி ஒருநாள் காலையில் ஊரில் பரவியது. அனைவரும் அந்தப்பக்கம் ஓடும்போது நான் மட்டும் பேய் அறைந்தவனைப்போல் உறைந்து நின்றுகொண்டிருந்தேன். சிலநாள் முன்பு பொன்னச்சனிடமிருந்து இரவல் வாங்கிய அவன் சட்டையைத்தான் அப்போது நான் அணிந்திருந்தேன்.

பொன்னச்சனின் சலனமற்ற உடலைப் பார்த்து அனைவரும் எதேதோ குசுகுசுக்கும்போது நான் மட்டும் கதறி அழுதேன். என் நண்பன் எப்படி இறந்தான்? அந்தப் பிரமீளாவுக்குத் தெரிந்திருக்கவேண்டும். அவளிடம் இப்போதே கேட்பேன் என்று வேகமாகப் பிரமீளாவின் வீட்டுப் பக்கம் சென்றேன். அவள் முகத்தில் துளியளவும் துயரமோ வலியோ தென்படவில்லை. ஒரு பதற்றம் மட்டும் காணக்கிடைத்தது. அங்கு நின்றிருந்த சில பெண்களிடம் ‘ஒடன போலீஸ் வருமா? எனக்கு போலீஸுன்னு கேட்டாலே பயம்...' என்று அவள் சொல்வதைக் கேட்டேன். காதலன் இறந்துபோனதில் பிரச்சினை இல்லை.போலீஸ் எதாவது செய்யுமா என்று பயம்! என்னை யாரென்றே தெரியாததுபோல் முகம் திருப்பி நடந்துபோனாள் பிரமீளா. சில நாட்கள் கழிந்தபோது பொன்னச்சனின் சாவுக்குக் காரணமாக ஊரில் ஒரு கதை பேசப்பட்டது.

இறப்பதற்கு மூன்றுநாள் முன்பு, ஒருவாரம் கழித்துத் திரும்பிவரும் திட்டத்துடன் பொருள்கள் விற்பதற்காக வெளியூர் சென்ற பொன்னச்சன் ஏதோ காரணத்தால் இரணடுநாளில் திரும்பிவந்தான். நள்ளிரவு கடந்த நேரம் ஊர் திரும்பியதால் வீட்டிற்குப் போகாமல் தனது சேமிப்பறைக்கே சென்றான். அறைக்குள்ளே மெழுகுவர்த்தி எரிகிறது! உள்ளே யாரோ இருக்-கிறார்கள்! சத்தம்போடாமல் சுவர்ப்பலகைகளின் ஓட்டை வழியாக உற்றுப் பார்த்தான். படுக்கையில் முழு-நிர்வாணமாகக் கிடக்கும் பிரமீளாவின்மேல் உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தார் பொன்னச்சனின் தந்தை ஓனாச்சன்.

அடுத்தநாள் முழுவதும் பொன்னச்சனைக் காணவில்லை. அவனது அப்பா ஆட்களை வைத்து ரகசியமாகத் தேடினார். அன்று இரவில் பிரமீளாவின் வீட்டின் பின்னாலிருக்கும் அடர்ந்த புதருக்குள்ளே பூச்சி மருந்து குடித்து அவன் இறந்து கிடப்பதை கண்டார்கள்.  ‘எனது சாவிற்குக் காரணம் அப்பாவும் பிரமீளாவும் தான்' என்று அவன் எழுதி வைத்திருந்த மரணக் கடிதம் எரிக்கப்பட்டது. அடுத்தநாள் காலையில் தற்கொலை செய்ததன் அடையாளங்கள் எதுவுமே தென்படாமல் பொன்னச்சனின் சடலம் பழைய மயானக் காட்டில் கிடந்தது. யாருமே செல்லாத அந்த இடத்தில் அவனது உடல் கிடப்பதை முதன்முதலில் கண்டவர் யார்?

இக்கதை உண்மை அல்ல, அல்லது உண்மை என்று நிரூபிக்கும் ஆதாரங்களெவையும் ஒருபோதும் கிடைக்கவில்லை. இதை வெறும் கட்டுக் கதை என்றே நம்பினேன். ஆனால் சாந்தியில்லாத பொன்னச்சனின் ஆத்மா ‘அந்த ஆளயும் அவளயும் போடணும்டா.. போடணும்டா..' என்று சொல்லி என்னைப் பிடித்து இறுக்குவதாக நீண்டநாட்கள் நான் கொடுங்கனவுகண்டுவந்தேன்.

‘இத்தகைய ஓர் உலகில் நாம் ஏன் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்பது மட்டும்தான் மனிதன் முன் இருக்கும் ஒரே தத்துவப்பிரச்சினை‘ என்று அல்பேர் காம்யூ சொன்னது பொன்னச்சனைப் போன்றவர்களுக்காகத்தானோஎன்று பிற்பாடு நான் எண்ணியதுண்டு.

தனது நூற்றுக்கணக்கான வாத்துகளை மேய்த்துக் கொண்டு அறுவடை முடிந்த நெல் வயல்கள் இருக்கும் ஊர்கள் தோறும் அலைவார் கொச்சுமோன். சாகுபடிக் காலம் முடியும்போது எண்ணற்ற உதிரி நென்மணிகளை உண்டு தடிதுக் கொழுத்த வாத்துகளுடன் ஊருக்குத் திரும்பி வருவார். ஒருமுறை பலநாள் கழித்து ஊர் திரும்பியகொச்சுமோன் அன்றைக்கே பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து உயிர் எரிந்து துடித்துக் கொண்டிருந்தார். சுற்றும் குழுமிய ஊரார்களின் முன்னே அவரைத் தயிர் கொடுத்துக் காப்பாற்ற முயன்ற தனது மனைவியையும் அவளது அக்கா புருஷனையும் அந்த மரண ஓலத்திற்கிடையேயும் ‘அவசாரிகளா.. ஒங்க ரெண்டுபேராலத் தான்டா நான் சாகுறேன்' என்று எட்டி உதைத்துக் கொண்டு உயிர் துறந்தார் கொச்சுமோன். அவரது மனைவியோ, சொந்தமாக ஒரு கோவிலை நிறுவி நடத்தி வந்த அவளது அககா புருஷனோ கொச்சுமோனின் தற்கொலையால் பாதிக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை. படபடத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிய வாத்துகளை அடுத்த நாளே கறிவிலைக்கு விற்றனர்.

கோவில், தேவாலயத் திருவிழாக்களில் பணம் வைத்தாடும் சூதாட்டமான லங்கர் கட்டை களைகட்டும். ஆவிவிளக்குகளின் முன்னால் விரித்த கட்டைப் படங்களைச் சுற்றிக் கூட்டமாக நின்று விளையாடுவார்கள். பலர் திருவிழாக்களுக்கு வருவதே அதை விளையாடத்தான். ஒருமுறை அடையாளமலைக் கோவில் திருவிழா இரவில் மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கானோர் லங்கர் கட்டை விளையாடிப் பணத்தைஇழந்துகொண்டிருந்தனர்.

சொந்தக் குழந்தைகளை கத்திமுனையில் நிறுத்தி பயமுறுத்துவது அடக்கம் வீட்டிலும் வெளியிலும் எந்தவொரு கொடூரச் செயலுக்கும் தயங்காதவன் எனப் பெயர்பெற்ற கரும்புலிக் காட்டான் வேறு ஊரிலிருந்து வந்த லங்கர் கட்டைக்காரனிடம் கையிலிருந்ததும் கடன் வாங்கியதும் என எல்லாமே இழந்தான். பாதிப் பணமாவது திருப்பித் தரவேண்டும் என்று அவன் வாதாடத் தொடங்கினான். அது பெரும் வாய்ச்சண்டையாக மாறி கரும்புலிக் காட்டான் கத்தியை எடுத்தான்.

கெட்டவார்த்தைகள் அனல் பறக்கத்தொடங்கிய நேரத்தில் இது எதற்கும் சம்பந்தமில்லாத தேவனேஸ் என்பவர் அங்கே வந்தார். எனது அப்பாவின் நெருங்கிய நண்பர். சூதுவாதற்றவர். சண்டையைச் சமாதானமாக்க அவர் உள்ளே புகுந்தார்.‘என்னதிது தேவையில்லாத சண்டை?  முதல்ல எல்லாரும் படத்தை மடித்து ஆட்டத்தை நிறுத்துங்கடா' என்றார். ஆட்டம் பெரும்பாலும் நின்றது.

‘கரும்புலிக் காட்டா... நீ கத்திய உள்ள வை. வேறு ஊர்ல இருந்து வந்தவங்க நம்ம விருந்தாளிங்க. நாமதான் பாதுகாப்பா அவங்களத் திருப்பி அனுப்பணும்'

‘அதெப்படி தேவனேஸு? இந்த வந்தேறிக்*** மவங்க கள்ள ஆட்டத்துல என் மொத்தக் காசையும் சுருட்டிட்டாங்க. பாதிக் காசாவது திருப்பித் தரச் சொல்லு. இல்லன்னா ஒரு ...மவனும் இங்கேர்ந்து உயிரோட திரும்ப மாட்டான்'

‘ஓ.. இவிங்க திருட்டு வெளையாட்டுக் கும்பலா? சரி, நடந்தது நடந்துபோச்சு. இனி பிரச்சினை வேண்டா' என்று தேவனேஸ் சேட்டன் சொல்லி முடிக்கும் முன்னே லங்கர் கட்டைக்காரன் ரப்பர் மரப் பாலை எடுக்கும் எட்டுமுனைக் கத்தி எடுத்துத் தேவனேஸையும்  கரும்புலிக்  காட்டானையும் சரமாரியாகக் குத்தி இருட்டில் ஒடி மறைந்தான். ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவனேஸ் சேட்டனை ஜீப்பில் படுக்கவைத்து மருத்துவமனைக்குக் கொண்டுபோனார் எனது அப்பா.போகும்வழி ஓரத்திலுள்ள தனது வீட்டைத் தாண்டும்முன்னே தேவனேஸ் சேட்டன் இறந்துபோனார்.

நிறையக் குத்துப்பட்டும் உயிர் தப்பிய கரும்புலிக் காட்டானை சில ஆண்டுகளுக்குப் பிறகு அவனது மகள்களே கொலை செய்தனர். பத்து கிலோ எடை தூக்கும் இரும்புக் கட்டிகளை வீட்டின் கூரைத் தட்டிலிருந்து அவன் தலைமேல் போட்டனர். மண்டை உடைந்து இறந்து கிடந்த கரும்புலிக் காட்டானின் பிரேதத்தைப் போலீசார் பரிசோதனை செய்யும்போது அங்கேமுண்டியடித்த கூட்டத்தின் முன்வரிசையில் நானும் நின்றுகொண்டிருந்தேன். பிணத்தைப் போலீசார் திருப்பிப் போடும்போது நெருங்கிநின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்த எனது முகத்திலும் வாயிலும் தரையில் தளமாகக் கிடந்த கரும்புலிக் காட்டானின் ரத்தம் தெறித்து விழுந்தது. என் வாயிலேயே அந்த ரத்தம் ஒட்டியிருக்கிறது எனும் அருவருப்பில் அடிக்கடி துப்பிக்கொண்டுதான் பலநாள் திரிந்தேன்.

குரூரத்துக்கு கைகால் முளைத்தவன் கரும்புலிக் காட்டான். ஆனால் அவனது பிள்ளைகள் பக்திமதிகளாக இருந்தவர்கள். அவர்களில் ஒருத்தி பள்ளி நிகழ்ச்சிகளில் கர்த்தராகிய இயேசுவாகி உருக்கமாக நடிப்பதைக் கண்டிருக்கிறேன். காட்டான்

 சாகவேண்டியவன் என்றும் அப்படியில்லை, யாராக இருந்தாலும் ஒரு மனித உயிரைக் கொல்வது தவறு அதுவும் சொந்த அப்பனைக் கொலைசெய்வது கொடூரத்திலும் கொடூரம், அதைக் கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்றும் ஊரே சிலகாலம் இரண்டுபட்டுக் கிடந்தது.

கடவுள் என்றால் அன்பு, இரக்கம், பரிவு என்று அனைத்து மதங்களும் போதிக்கின்றன. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி மட்டுப்-படுத்து-கிறார். பிறகு இதெல்லாம் எப்படி நடகக்கிறது? நல்லவன் வாழ்வான் என்பார்களே.. ஆனால் நல்லவர்கள் வீழ்வது மட்டும்தானே பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையான அன்பு, கருணை எல்லாம் புத்தகங்களிலும் மதப் பிரச்சாரங்களிலும் மட்டும் தானே இருக்கிறது? நடைமுறை வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரிவதில்லையே! பதில் தேடி அலைந்துகொண்டிருந்தேன்.

அக்காலத்தில்தான் சிபி எனக்கு நண்பனான். அவனுடன் நட்பு வைக்கக் கூடாது என்று வீட்டிலும் ஊரிலும் பலர் என்னை எச்சரித்தனர். காரணம் அவன் கடவுள் நம்பிக்கையற்ற, மத நம்பிக்கையற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தப் பகுதிகளில் எங்குமே அப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் இருக்கவில்லை. அக்குடும்பத்தினர் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் எதிரானவர்கள். அவர்களுடனான நட்பு நமக்கு இன்னல்களையும் தீமைகளையும் மட்டுமே வரவழைக்கும் என எண்ணற்றோர் என்னைப் பயமுறுத்தினார்கள்.

சிபி வீட்டிற்கு நான் அடிக்கடி போகத்தொடங்கினேன். சொந்தமாக நூலகம் வைத்திருந்தவரும் நிறையப் படித்தவரும், கடவுள், மதம், சமூக மனநிலை போன்றவற்றின் ஆராய்ச்சியாளருமாகயிருந்த சிபியின் அப்பா தூவல் மத்தாயிச் சேட்டனுடன் நான் நெருங்கிப் பழகத் தொடங்கினேன்.

அவரது பரிந்துரையில் பேராசிரியர் கோவூர் எழுதிய கடவுள்கள், பூதங்கள், ஆவிகள், மரணம், மறுபிறப்பு, இந்துமதம், கிறித்துவ மதம், மனித உளவியல் போன்றவற்றைப் பற்றியான பல புத்தகங்களைப் படித்தேன். மகத்தானவை என்று மனிதன் சொல்லும் அனைத்தும் அவனது கற்பனைகளோ கனவுகளோ மட்டுமே என்றும் அவற்றை வைத்துக்கொண்டு தன்னை ஓர் உயரிய பிறவியாகக் காட்ட முயல்கிறான் என்றாலும் அடிப்படையில் அவன் உண்மையற்றவன், நடைமுறையில் ஒரு சல்லிப்பயல் என்பதை அந்த வயதிலேயே ஓரளவுக்கு அறிந்துகொண்டேன்.  

பேரப்பன் ஊரை விட்டுப்போய்ப் பலமாதங்கள் ஆகியிருந்தன. அவர் தன்னிச்சையாகப் போவதும் வருவதும் அடிக்கடி நிகழ்வதால் யாருமே அவரைத் தேடவில்லை. திருவனந்தபுரம் அரசு மனநலக் காப்பகத்தில் பலநாட்களாக அடைபட்டிருந்த அவர் அங்கேயே இறந்துபோனார் என்று ஒருநாள் செய்தி வந்தது. அநாதைப் பிணமாக எண்ணி அவரது உடலை மருத்துவ மாணவர்களுக்கு அறுத்துப் படிக்கக் கொடுத்தார்கள்.

பேரப்பனின் உடலை எப்படியாவது மீட்டெடுத்து ஊரில் கொண்டுவந்து முறைப்படி அடக்கம் செய்யவேண்டும் என்று அப்பாவும் நண்பர்களும் திருவனந்தபுரம் சென்றார்கள். ஆனால் அது எளிதில் சாத்தியப்படவில்லை. எம் எல் ஏ, மந்திரிகள் எனப் பலரின் கைகால் பிடித்து ஓரிரு நாட்கள் அலைந்து இறுதியில் ஒருவழியாக அழுகத்தொடங்கியிருந்த பேரப்பனின் உடலை ஊருக்குக் கொண்டுவந்தார்கள்.

மனிதனால் சற்றுமே சகித்துக்கொள்ள முடியாத துர்நாற்றம் என்பது மனிதனின் உடல் அழுகும் நாற்றம். பேரப்பனின் உடலைக் கொஞ்சமும் நெருங்காமல் அவரது மனைவியும் மகன்களும் கூடத் தள்ளித் தள்ளியே நின்றனர். தன் மனது கூடத் தனக்குத் துணையில்லாமல் அநாதைகளில் அநாதையாக இவ்வுலகை விட்டுப்போன எனது பேரப்பனின் மூக்கிற்குள்ளே வரிசையாக நுழைந்துகொண்டிருந்த வெள்ளைப் புழுக்கள் உயிர்ப் பூக்களாக அவர் முகத்தில் மலர்ந்துகொண்டிருந்தன. 

(வளரும்)

ஆகஸ்ட், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com