பெண் வேடத்தில் சென்று ஜல்லிக்கட்டு காளையை பிடித்தேன்!

பெண் வேடத்தில் சென்று ஜல்லிக்கட்டு காளையை பிடித்தேன்!
Published on

அன்று சாம்பார் மான்கள் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் பார்வையாளர்களுடன் ஒரு பார்வையாளனாக நின்றிருந்தேன். வண்டலூர் உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவராக பணியில் சேர்ந்து ஒரு வாரம்தான் கழிந்திருந்தது. மூத்த கால்நடை மருத்துவர் என்னை தனியாக விட்டுவிட்டு விடுமுறையில் போய்விட்டார். எனக்கு பூங்காவில் எங்கெங்கே என்னென்ன விலங்குகள் அடைக்கப்பட்டுள்ளன என்று மட்டுமே தெரிந்திருந்தது.

அந்த மான்கள் அருகில் வந்தபோது அவற்றில் ஒன்றுக்கு கொம்பு உடைந்து புழுக்கள் வைத்திருந்தது தெரிந்தது. இன்னொன்றுக்கு கண்களில் காயம். இன்னும் சிலவற்றுக்கு உடலின் சில பாகங்களில் காயம் ஏற்பட்டு புழு வைத்திருந்தது. பார்வையாளர்கள் சிலர் உச் கொட்டினார்கள்.

இனி பொறுத்ததுபோதும், நாளையே களத்தில் குதிப்பது என முடிவு செய்தேன். வேலைக்கு சேர்ந்த முதல் என்னைக் கண்ட பூங்கா இயக்குநர்,‘ஆள் குள்ளமாக இருக்கிறார். வன விலங்குகள் பற்றி எந்த அனுபவமும் இல்லை. இவரையெல்லாம் எதற்கு இங்கே அனுப்பி இருக்கிறார்கள்?' என்று சொன்னதாக எனக்குத் தகவல் வந்திருந்தது.

மறுநாள் கடகடவென ஒவ்வொரு மானாக மயக்க மருந்து செலுத்தி, தேவையான சிகிச்சைகளை செய்து முடித்தேன்.

தகவல் இயக்குநருக்குப் போயிருக்கிறது. அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி, பதற்றத்துடன், ‘மான்கள் எல்லாம் உயிரோடு இருக்கின்றனவா?' எனக் கேட்டிருக்கிறார்.

‘எல்லாம் நலமாக இருக்கின்றன' என்று பதில் சொன்னதுதான் அவர் நிம்மதி ஆகி இருக்கிறார். ஏனெனில் சாம்பார் மான்களை போதுமான முன்னேற்பாடு இல்லாமல் மயக்கமருந்து கொடுத்து

பிடித்து சிகிச்சை அளித்தால் அவை பரலோகம் போய்விடும். அவர் பார்த்தவரை எந்த மான்களும் பிழைத்தது இல்லை! நான் சரியாக பாடப்புத்தகங்களையும், பூங்கா பதிவேடுகளையும் பார்த்து அதன் படி செய்து, என் முதல் வெற்றியை ருசித்திருந்தேன். இயக்குநரின் பாராட்டும் உடனே கிடைத்தது!

சில நாட்களில் பாம்புப் பராமரிப்பாளரிடமிருந்து அழைப்பு. ராஜநாகம் சரியாக சாப்பிடவில்லை! அது பதினாறரை அடி நீளமான பாம்பு! மழைக்காடுகளில் வசிக்கக்கூடியது. மரத்தில் கூட ஏறி வாழும். பிற பாம்புகளை சாப்பிடக்கூடியது. அதற்கு சாப்பிடப் போட்ட சாரைப்பாம்பை அது உண்ணவில்லை. பதிலுக்குராஜநாகத்தின் மீது  சாரைப்பாம்பு ஏறி ஆடிக்கொண்டிருந்தது. நான் அதன் கூண்டுக்குள் நுழைந்தேன். ஒரே கடியில் ஒரு அவுன்ஸ் விஷத்தை செலுத்தக்கூடிய அந்தப் பாம்புக்கு கண்பார்வை தெரியவில்லை! ஒரு குருடனைப்போல் சுற்றிக்கொண்டிருக்கிறது எனக் கண்டேன். உற்றுப்-பார்த்தால் அதன் கண்களைச் சுற்றி எறும்புகள் மொய்க்கின்றன. என்ன பிரச்னை? வழக்கமாக உரியும் சட்டை, அதற்கு இம்முறை சரியாக உரியவில்லை. தலையில் உரியாததால் கண்ணையும் அதன் தோல் மறைக்கிறது. கையில் இருந்த நீண்ட ஊதுகுழல் துப்பாக்கி முனையால் அதைப் பரிசோதித்து வெளியே வந்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே ஒரு செல்லோ டேப்பை எடுத்து குழல் துப்பாக்கியின் முனையில் அரை அடி அளவுக்கு பசை தடவிய பக்கம் வெளியே இருக்குமாறு சுற்றினேன். மீண்டும் உள்ளே சென்று அதன் தலையில் குச்சியை வைத்து உருட்ட, காய்ந்த தோல் அதில் ஒட்டிக்கொண்டது. கொஞ்சகொஞ்சமாக உரித்து எடுத்தேன். கண்ணை மறைத்த தோல் உரிந்ததும், ராஜ நாகம் கொஞ்சம் சிலிர்த்துக்கொண்டது, விருட்டென எழுந்தது. என் உயரத்துக்கு படம் விரித்து எழுந்து நின்று, ‘யாருலே நீ?' என்று பார்த்தது. உடனே கூண்டை விட்டு எகிறிக்குதித்து ஓடிவந்துவிட்டேன். அடுத்த சில நிமிடத்தில் அந்த சாரைப்பாம்பை தன் ‘லஞ்ச்' ஆக்கிக்கொண்டு, டின்னருக்கு என்ன பாம்புடா கொடுக்கப்போறீங்க? எனக் கேட்பது போல் நின்றது!

தொடர்ந்து, அதன் கூண்டில் மூங்கில்களை நட்டு வைத்தோம். ஈரமான தண்ணீர் நிரம்பிய பானை ஒன்றும் காய்ந்த பானை ஒன்றும் வைத்து அதற்கு ஏதுவான வெப்பநிலை வசதியை செய்து கொடுத்தோம். ஓரளவுக்கு இயற்கையான இந்த சூழலில் அது தன் சட்டையை எளிதாக உரித்துக்கொண்டது!.

கபில்தேவ், அஸ்வினி, வெங்கடேஷ், பரணி ஆகிய நான்கு யானைகள் அங்கு இருந்தன. ஒரு நாள் கபில்தேவ், வெங்கடேஷ் என்ற ஆண் யானையை தன் தந்தத்தால் பின்புறமாகக்குத்தி கிழித்துவிட்டது. யானைப்பாகன் கபில்தேவை பிடித்துக் கட்டிவிட்டார். நான் பார்த்தபோது வெங்கடேஷுக்கு ரத்தம் வழியுமாறு பெரிய காயம். கபில்தேவ் ஜம்மென நின்றுகொண்டிருந்தது. இரு ஆண் யானைகளுக்குள் யார் பெரியவன் என சண்டை.

இப்ப என்ன பண்ணலாம்? கபில்தேவின் கூர்மையான தந்தங்களை நறுக்கி, மொழுமொழுவென தேய்த்து விடலாம் என தீர்மானித்தேன். பூங்கா இயக்குநரிடம் சொன்னபோது, அவர் எப்போது செய்யப்போகிறீர்கள்? நானும் வருகிறேன் என்றார்.

அவரிடம் வரும் செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி என சொன்னேன். சொன்னபடி அதே சமயம் வேலையைத் தொடங்கினேன். அந்த யானையை அடிக்கடி நான் பார்ப்பது வழக்கம். அப்போதெல்லாம் கரும்புத் துண்டுகளை அளிப்பதால் அதனுடன் பழக்கம் உண்டு. யானைகளுக்கு சுட்ட தேங்காய் என்றால் மிகவும் பிரியம். எனவே முதல்நாள் இரவே முற்றிய தேங்காய்க்குள் கருப்பட்டி, பொட்டுக்கடலை போட்டு நிரப்பி தீயில் சுட்டு, ஓட்டை நீக்கி தயார் செய்தோம். கரும்புகளை துண்டாக்கி வைத்துக்கொண்டேன். கேரட், பொரி உருண்டை, கடலை மிட்டாய் எல்லாம் தயார்.

யானை அருகே சென்றதும் பாகன்களிடம் இந்த உணவுகளை ஒவ்வொன்றாகக் கொடுங்கள் என சொல்லிவிட்டு, நான் ரம்பம் கொண்டு தந்தத்தை அதற்கென்று உள்ள அளவுகளின் படி அறுக்கத் தொடங்கினேன். அறுத்த துண்டை வனப் பாதுகாவலரிடம் அளித்துவிட்டு, முனைகளை நன்கு தேய்த்து மழுமழு என ஆக்கினேன். வேலை முடிந்தது கிளம்பிவிட்டேன்.

பூங்கா இயக்குநர் ஒருமணி நேரம் கழித்து வந்திருக்கிறார். அப்போது யானை தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தது. பாகன்களைப் பார்த்து, மயக்க மருந்து கொடுத்த யானையை ஏனப்பா தண்ணீரில் விடுகிறீர்கள் என்று அவர் பதற்றத்துடன் கேட்டிருக்கிறார். பாகன்களோ,‘மயக்க மருந்தா? டாக்டர் சும்மா கரும்பு கொடுத்தே அறுத்துவிட்டார்!' என்று சொல்ல, இயக்குநர் உடனே என்னை வயர்லெஸ்ஸில் அழைத்தார். அலுவலகத்துக்கு அழைத்து அன்பாகக் கடிந்துகொண்டார். ‘உங்கள் பணி எங்களுக்கு ரொம்பநாள் தேவை. இப்படி ஆபத்து வேண்டாம்' என்றார். நான் சிரித்துக்கொண்டே அந்த யானையுடன் நல்ல பழக்கம் இருந்ததால் அப்படிச் செய்ய முடிந்தது என்று சமாளித்தேன்.

அடுத்ததாக முதலை ஒன்றை ஓர் இடத்தை விட்டு இன்னொரு இடத்துக்கு மாற்றும் ஆபரேஷன். இயக்குநர் வழக்கம்போல் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரித்தார். என்னை கண்காணிக்கவும் ஓர் அதிகாரியை நியமித்தார். முதலைக்கு மயக்க மருந்து அளித்து அதன் மீது சாக்குப்பைகளைப் போட்டு பதினைந்துபேர் சேர்ந்து அதன் மேல் ஏறிப் பிடித்துக்கொண்டு சைக்கிள் ட்யூபால் கட்டி பலகையின் மீது தூக்கி வைத்து வேறிடத்துக்கு எடுத்துச் செல்வதுதான் திட்டம்!

மயக்க மருந்து அளித்து, முதலை சற்று மயங்கியது. சாக்குப்பைகளை மேலே போட்டோம். நான் சொல்லும்போது எல்லாம் ஏறி மேலே விழுந்து அமுக்கிப் பிடிக்கவேண்டும் என சொல்லிவிட்டு,.. எல்லாம் சரி பார்த்தேன். ‘ரைட்.. எல்லாம் நல்லா பிடிங்க' என சொல்லிவிட்டு நான் தலைப்பகுதியில் விழுந்து பிடித்தேன். அப்புறம்தான் பார்க்கிறேன். நான் மட்டும்தான் பிடித்திருக்கிறேன். மீதிப்பேர் யாரும் பிடிக்கவில்லை. அப்படியே சிலைபோல் நிற்கிறார்கள். இதைப் பார்க்க வந்திருந்த அலுவலர் பதறிப்போய், எல்லாம் புடிங்கப்பா எனக் கத்த, அப்புறம்தான் அவர்கள் பிடித்தார்கள். முதலை மட்டும் துள்ளி இருந்தால் அப்போது நான் சில உறுப்புகளை இழந்திருப்பேன்.

இந்த செய்தியும் இயக்குநர் காதுக்குப் போய், எனக்கு வழக்கம்போல் அர்ச்சனை!

இதுக்கே இப்படி அசந்துட்டா எப்படி? இன்னும் ஒரு ஸ்பெஷல் அயிட்டம் நம்ம கரியர்ல இருக்கே...

சர்க்கஸ் சிங்கம் ஒன்றை பூங்காவில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றவேண்டும் என இயக்குநர் ஆணையிட்டார். இதுவரை நான் சிங்கத்துக்கு மயக்கமருந்து கொடுத்தது இல்லை. எனவே பூங்கா பதிவேட்டைப் பார்த்து டோஸ்களைப் பார்த்துக்கொண்டேன். சிங்கத்துக்கு மருந்தை அளித்ததும் அது சுருண்டு படுத்தது. டக்கென்று அதை பள்ளிக்கூடப் பையனைப் போல் தூக்கி, வேன் ஒன்றின் சீட்டில் படுக்க வைத்து, அதன் அருகில் அமர்ந்து பயணம் செய்து 2 கி.மீ. தள்ளி உள்ள இன்னொரு சிங்கக்கூண்டு இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்தேன்.

அந்தக் கூண்டில் வெளிப்புற கேட்டை நீக்கி உள்ளே சிங்கத்தை விடவேண்டும்.  இந்த அறையைத் தாண்டி உள்ளே இருக்கும் இன்னொரு கூண்டில் இரண்டு பெண் சிங்கங்கள் இருந்தன. அவற்றிடம் செல்ல இந்த கூண்டு வழியாக உள்ளே இன்னொரு கேட் உள்ளது.

சிங்கத்தை  ஒரு ஸ்டெரெச்சரில் படுக்கவைத்து, கோணிப்பை போட்டு மூடி தூக்கிக் கொண்டுபோனோம். கூண்டின் கதவைத் திறந்து நான் உள்ளே போனேன். ஏனெனில் நான் தான் குள்ளம். மற்ற உதவியாளர்கள் உயரம். சிங்கத்தை அந்த சின்னக் கதவு வழியாக தள்ளுங்கள். நான் உள்ளே போய் இழுத்துவிடுகிறேன். அப்புறம் வெளியே வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அந்த சிங்கத்தை இறக்கும்போது சரிவாக இறக்க, அது வேகமாக சரிந்து கூண்டுக்குள் விழுந்ததில் அதன் தலை சுவரில் முட்டிக்கொண்டது. வலிமையான ஒரு தூண்டுதல் இருந்தால் மயக்கத்தில் இருந்து விலங்கு விடுபட்டுவிடும். உள்ளே சிங்கமும் நானும் மட்டும். அப்போது சிங்கம் விழித்து எழுந்துகொண்டது! இச்சமயம் வெளிப்புற கதவும் பூட்டிக்கொண்டது. 

கதவுக்கும் எனக்கும் நடுவே சிங்கம். நான் உடனே கோணிப்பையால் என்னை மறைத்துக்கொண்டு, கதவைத் திறங்க என சைகை காட்டினேன். ஆனால் உதவியாளர்களோ அப்படியே அச்சத்தில் உறைந்துபோய் நின்றுவிட்டனர். ஒருவர் அழவே ஆரம்பித்துவிட்டார். இன்னொரு கேட் பின்புறம். அதைத் திறந்தால், இரண்டு பெண் சிங்கங்கள்.

ஒவ்வொரு கூண்டுக்கும் மூன்று கதவுகள் இருக்கும். இன்னொரு கதவைத் திறங்க என சைகை காட்டினேன். இருபது சாவிகள் கொண்ட பெரிய கொத்தை வைத்து திறக்க முயன்றார்கள். எந்த சாவி என்று தெரியாமல் ஒரே பதற்றம். அதற்குள்  மூன்று நிமிடத்துக்கு  மேல் ஆகிவிட்டது. அப்போது இன்னொரு ஊழியர் வந்து, சட்டென திறந்துவிட்டார்!

நான் கோணிப்பையை சிங்கத்தின் முகத்தில் போட்டேன். கொஞ்சநேரம் சிங்கம் என்ன நடக்கிறது என தெரியாமல் விழிக்க, நான் அதைத் தாண்டிக் குதித்து, கதவு வழியாக வெளியே வந்தேன். எப்படி வந்தேன் என்று இப்போது நினைத்துப் பார்த்தாலும் தெரியவில்லை!

ஒரு சிம்பன்சிக்கு பேதி என்று தகவல் வந்தது. இந்த குரங்குகளுக்கு மருந்துகொடுப்பது என்பது பெரிய சவால். போய் பரிசோதனை செய்துவிட்டு, அதன் எதிரிலேயே குளிர்பானத்தில் மருந்தைக் கலந்துகொடுத்தேன். பார்த்துக் கொண்டே இருந்தது,  அதை வாங்கி என் முகத்திலேயே எறிந்துவிட்டது. என்ன செய்வது என யோசித்து மதியம் கேண்டினிலேயே குளிர்பானம் வாங்கி ஒன்றில் மருந்தைக்கலந்தேன். மேலும் மூன்று குளிர்பானங்களை வாங்கிக்கொண்டேன். சிம்பன்சி கூண்டுக்கு வந்து அதன் எதிரிலேயே நாங்கள் குளிர்பானம் அருந்தினோம். அதனுடன் இருந்த குட்டி சிம்பன்சிக்கு மருந்துகலவாத ஒரு பானத்தைக் கொடுத்தோம். அது குடித்தது. நாங்கள் மூவரும் குடிப்பதைப் பார்த்த நோய்வாய்ப்பட்ட சிம்பன்சிக்கு நம்பிக்கை வந்து, தனக்கும் தருமாறு கையை நீட்டியது. மருந்து கலந்த பானத்தைக் கொடுத்தேன். வாங்கி சப்தம் செய்யாமல் குடித்துவிட்டது!

இதுபோல் பல அனுபவங்களுக்குப் பின்னால், எனக்கு உதவிப்பேராசிரியர் பணி கிடைத்து, பூங்காவை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் பணிபுரிந்தேன். பல ஆண்டுகளுக்குப் பின் திருநெல்வேலியில் பணிபுரிந்தபோது வனத்துறையினருக்கு சில உதவிகள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. எனவே என்னை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் முடிதிருத்தும் கடைக்குச் செல்வதற்காக கிளம்பிக்கொண்டிருந்தேன். பழக்கமான வன அலுவலர் ஒருவர் அழைத்தார்.

‘நெல்லை திருமால்புரத்தில் சிறுத்தை ஒன்று புகுந்துவிட்டது வாருங்கள், அதை பிடிக்கவேண்டும்'

‘சிறுத்தைதானா?'

‘நிச்சயமாக, என் கண்ணால் பார்த்தேன்' என்றார் அவர்.

என்னிடம் பழைய ஊதுகுழல் துப்பாக்கி ஒன்று இருந்தது. அதையும் மயக்க மருந்துகளையும் எடுத்துக்கொண்டு போய்ச்சேர்ந்தேன்.

காவல் அதிகாரி ஒருவர் என்னை எதிர்கொண்டார்.

‘சார் புடிச்சுடுவீங்களா? இல்லன்னா ஷூட்டிங் ஆர்டர் வாங்கிடுவோமா?' என்றார்.

‘புடிச்சிடலாம் சார். முதலில் கூட்டத்தை கட்டுப்படுத்துங்கள். பிறகு உள்ளே போவோம்' என்றேன்.

அவரும் துணிச்சலானவர். ‘நான் உங்க கூட வருகிறேன்' என்றார். இன்னொரு கவுன்சிலர் ஒருவரும் நானும் வருகிறேன் என கூட வந்தார். மூன்று பேரும்  சிறுத்தை நடமாட்டம் இருந்த தெருவில் நடந்தோம். சட்டென எதிரே வந்தது  சிறுத்தை. நான் எகிறி, சுவர் பக்கமாக ஒதுங்க, காவல் அதிகாரி ஜன்னல் ஒன்றில் ஏறிக்கொள்ள, பாவம் கவுன்சிலர்தான் கடி வாங்கிவிட்டார்!

நிலைமை முற்றிய நிலையில், சிறுத்தை எங்கே வரும் என எதிர்பார்த்து அங்கே மறைந்திருக்க முடிவு செய்தேன். அங்கே நின்று இருந்த கமாண்டோக்களில் துணிச்சலான யாராவது ஒருவர் என்னுடம் வர முடியுமா எனக் கேட்டேன். ஒருவர் முன்வந்தார். இரண்டு லத்திகளை எடுத்துக்கொண்டோம். ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தவழ்ந்த மரத்தின் கிளையில் நான் ஏறிக்கொண்டேன். அவர் அங்கிருந்த தண்ணீர் தொட்டி பின்னால் பதுங்கிக் கொண்டார். சிறுத்தை சுவரைத் தாண்டி நாங்கள் இருந்த வீட்டுக்குள் குதித்தது. மரத்தின் மேலே இருந்த என்னை அது கவனிக்கவில்லை. டக்கென ஊதுகுழல் துப்பாக்கியை இயக்கினேன்.

சிறுத்தை மேல் பாய்ந்தது. அது  உறுமலுடன் தாண்டி ஓடிவிட்டது. கீழே போய் ஊசியை எடுத்துப் பார்த்தேன். சிறுத்தை மேல் பாய்ந்ததற்கான அடையாளமாக அதன் உடல் முடி அதில் ஒட்டி இருந்தது. ஆனாலும் சரியாக மருந்து பாயவில்லை என்றார் காவலர்.

பிறகு சிறுத்தையைத் தேடினோம். அங்கிருந்து மூன்றாவது வீட்டில் கழிவறையில் பதுங்கி நடுங்கிக்கொண்டிருந்தது. உடனே கதவை மூடிவிட்டோம். அது பிளாஸ்டிக் கதவு. எனவே இன்னொரு இரும்புக் கதவையும் போட்டு அதை அடைத்துவிட்டோம். அப்புறம் அதன் ஜன்னல் வழியாக இன்னொரு டோஸ் மயக்க மருந்தையும் செலுத்தினோம். மயங்கியது உறுதியானதும், கூண்டை எடுத்து வந்தால், அந்த வீட்டுக்கு உள்ளே எடுத்து வர முடியவில்லை. பிறகு சுற்றுச்சுவரை இடித்து கூண்டைக் கொண்டு வந்தனர். ஒருவழியாக சிறுத்தையைக் கயிற்றில் கட்டி இழுத்து கூண்டுக்குள் தள்ளி, அந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.

அப்பாடா என பெருமூச்சு விட்டேன். அப்போது யாரோ சொன்னார்கள்: ‘சிறுத்தை கழிவறை நாற்றத்தால் மயக்கமாகி விட்டது!' எனக்கு வலித்தது.

ஜல்லிக்கட்டு என்றால் உங்களுக்குத் தெரியும். லட்சக்கணக்கில் செலவிட்டு திறமையான மாடுகளை ஆர்வலர்கள் வாங்குவார்கள்; அவற்றை ஜல்லிக்கட்டுகளில் விடும்போது, அவை நாலுபேரைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியே ஓடும். அவற்றை உரிமையாளர்கள் பிடித்துக்கொள்வார்கள். ஆனால் சில சமயம் அவை பிடிபடாமல் தப்பித்துப் போய்விடுவது உண்டு. தமிழகத்தின் மத்திய பகுதியில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட கிராமப்பகுதிகளில் இப்படி ஏராளமான காளைகள் திரியும். அந்த காளைகளைப் பின் தொடர்ந்து ஆட்கள் கிராமம் கிராமமாக செல்வார்கள். காளைகளோ இவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு காட்டுப்பகுதிகள் வழியாக சுற்றித் திரியும். கிட்டே போனால் ஒரே ஓட்டம்; இல்லையெனில் ஆட்களைத் தூக்கி எறிந்துவிடும். கன்றாக இருப்பதில் இருந்து வளர்ப்பவர்களுக்குத் மட்டும்தான் அவை கட்டுப்படுவதுதான் வழக்கம்.

ஒரத்தநாட்டில் பேராசிரியராக நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தபோது நண்பர் ஒருவர் மூலமாக எங்களுடைய காளை ஒன்று இப்படி  சுற்றுகிறது. மூன்று மாதமாக அதைப் பிடிக்க விரட்டி, வாங்கிய பணத்தை விட கூடுதலாக செலவாகிவிட்டது. ஏதாவது செய்யமுடியுமா? என்று ஒரு கோரிக்கை வந்தது. மறுக்க முடியாமல், ‘சரி செய்துட்டா போச்சு!' என்றேன். எவ்வளவு நாட்கள் ஆகும்? அடுத்த கேள்வி. மாடு இருக்கும் இடத்தைக் காண்பித்தால் இரண்டு மணி நேரம் என்று நான்  சொன்னதை அவர்கள் சுத்தமாக நம்பவில்லை! அந்த காளைக்கு அஜீத் என்று பெயரும் வைத்திருந்தார்கள்.

ஒரு விடுமுறை நாளில் என்னை கூட்டிப்போனார்கள். கையில் ஒரு ஊதுகுழல் துப்பாக்கியுடன், மயக்கமருந்து ஊசிகளுடன் புறப்பட்டுப் போனேன். ஆட்கள் யாருக்கும் நம்பிக்கை இல்லை. இவன் என்ன கையில் ஒரு குச்சியுடன் வருகிறான். நாம் வலைகள், கயிறுகளுடன் திரிந்தும் பிடிக்காததை இவன் எப்படிப் பிடிப்பான் என்று நினைத்திருக்கக்கூடும்.

அஜீத்தை... அதாவது காளையைக் காண்பித்த வுடன் நீங்கள் எல்லாம் தூரப்போய்விடுங்கள். ஒரே ஒரு பையனை மட்டும் என்னுடன் அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு பாண்ட் சர்ட்டுகளைக் கழற்றிவிட்டு பச்சை கலரில் ஒரு பனியன், சிறிய ட்ரவுசர், அதன் மேல் ஒரு துண்டு கட்டி, தயார் ஆனேன். மாடு இருக்கும் இடம் நோக்கி, போனேன். காளையைக் காண்பித்தவுடன் அந்த பையனை மாட்டின் பார்வை படும் இடத்தில் தூரமாகப் போய் நீ நில்லு என்று அனுப்பிவிட்டேன். ஒரு முள்காட்டில் காளை அசைபோட்டுக்கொண்டு படுத்து இருந்தது.  நான் அதன் பின்னால் தரையோடு தரையாகப் பதுங்கிப் போய், கிட்டே போய்விட்டேன். காளை என்னைக் கண்டு எழுந்துவிட்டது. சட்டென  மயக்கமருந்தை அடித்தேன். அதுபோய் உடலில் தைத்தவுடன், காளை முள்காட்டுக்குள் தெறித்து ஓடிவிட்டது.

மாடு ஓடிருச்சு சார்.. இப்படி வுட்டுட்டீங்களே என்று ஆட்கள் வருத்தப்பட்டனர். இருங்கப்பா என்றவாறு அவர்களுடன் அமர்ந்து டீ பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுவிட்டு, வாங்க மாட்டைத் தேடுவோம் என்று ஆரம்பித்தோம். சரியாக 100 மீட்டர் தூரத்தில் மாடு சுருண்டு கிடந்தது. உடனே அதற்கு திரவ மருந்துகள் அளித்து, கயிறுகளால் கட்டி வண்டியில் ஏற்றிவிட்டேன். இந்த மாட்டின் உரிமையாளர் பெயர் டேவிட் உடையார். அவருக்குத் தகவல் போனதும் அவரால் நம்ப முடியாமல் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்து வந்து சேர்ந்தார். அன்று பார்த்தால் ஒரே கொண்டாட்டம்தான்!

அவர் ஜல்லிக்கட்டு ஏரியாவில் பெரிய ஆள் என்பதால், இந்த செய்தி, காளைமாடுகளின் உரிமையாளர்களுக்கு எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டது. பிறகு இப்படி ஓடிப்போன காளைகளைப் பிடிப்பதற்காக என்னை அணுக ஆரம்பித்தார்கள். நானும் அவர்களுக்காக களம் இறங்கினேன்.

செங்கிப்பட்டி, திருக்கானூர்ப்பட்டி, மஞ்சப்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, ஜெயங்கொண்டம், ஆதனக்-கோட்டை, காரைக்குடி, சிவகங்கை,  ஏரியூர், உப்பூர், சூரியூர், மணப்பாறை, கள்ளிப்பட்டி, கருங்கலப்பட்டி, முசிறி, தொண்டி, சோழவரம்- இவையெல்லாம் நான் காளைகளைப் பிடித்துக்கொடுத்த ஊர்கள். நூற்றுக்கணக்கான காளைகள்!

ஒவ்வொரு காளையைப் பிடித்ததும் ஒவ்வொரு சுவாரசியமான அனுபவம். மாயாவி என்கிற கருத்த காளையைப் பிடித்ததை மட்டும்  சொல்கிறேன். ஏரியூர் என்ற ஊரில் நடந்த சம்பவம். மாயாவி ஜல்லிக்கட்டில் இருந்து தப்பி ஓடிவந்து சுற்றிக்கொண்டு இருந்தது. இதை சிங்கபுணரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வாங்கி இருந்தார். அவருக்கு இதைப் பிடித்துச் செல்லவேண்டும். ஆனால் காளையைப் பிடிக்கமுடியாமல் பல்லாயிரம் ரூபாய் செலவழித்துவிட்டார். அந்த ஊர் நாட்டாமை பெத்தாச்சி அம்பலம் என்பவரின் மகன் பாலாஜி என்பவர்தான் என்னை அழைத்துப்போனார். அதே ஊரில் காளைகளைப் பிடித்துக் கொடுக்கிற வேலையை செய்துவந்த இன்னொருவருக்கு இது பிடிக்கவில்லை. நான் போகிறபோதெல்லாம் காளையைக் காண்பிக்கிறேன் என்று வருவார். அதை முன்கூட்டியே பார்த்து கல்லெறிந்து விரட்டிவிடுவார். இது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஏமாந்து திரும்புவோம். சிலமுறை ஆனபிறகு, அங்கிருந்த ஒரு இளைஞனிடம் பேச்சுக்கொடுத்து, விஷயத்தைக் கண்டுபிடித்தேன். எனவே பாலாஜி, அடுத்தமுறை வரும்போது ஒரு நாள் முன்கூட்டியே வருவேன். யாரிடமும் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

மாயாவிக்கு ஒரு பழக்கம். பெண்கள் ஓரளவு பக்கத்தில் சென்றால் அது ஓடாமல் படுத்துக்கிடக்கும். ஆண்களைக் கண்டால் ஓடிவிடும். கிழவிப்பட்டி என்ற ஊரில் தோட்டத்தில் படுத்திருப்பதாக போன் வந்தது. நான் ஒரு சேலையை உடலில் சுற்றிக்கொண்டு தோளில் ஒரு கட்டு வைக்கோலை எடுத்துக்கொண்டு நெருங்கினேன். வைக்கோல் கட்டுக்குள் ஊதுகுழல் துப்பாக்கியை மறைத்துக்கொண்டேன். கிட்டே போனதும் வைக்கோலை கீழே போட்டவுடன் ஊதுகுழல் மூலம் ஊசியை ஊதிவிட்டேன். ஆனால் அதற்குள் அது ஆண் வாசனை முகர்ந்து எழுந்துவிட்டது. இருந்தாலும் குறி தவறவில்லை. ஊசி அதன் மீது பாய்ந்தது. திடுதிடு என ஓடிவிட்டது. பின் தொடர்ந்து பைக்கில் சென்றோம். ஓரிடத்தில் சுருண்டிருந்தது. உடனே கட்டித் தூக்கி வண்டியில் போட்டு சிங்கம்புணரிக்கு அனுப்பியாகிவிட்டது!

          (நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

---------------------------------------------------------------------------------------------------------------------------

கால்நடை உடற்கூறியல் துறை பேராசிரியராகப் பணிபுரியும் மருத்துவர் முத்துகிருஷ்ணன்,  துணிச்சலும் சாகச உணர்வும் அதே சமயம் விலங்குகள் மீது கனிவும் நிரம்பியவர். இரண்டுமுறை காட்டுக் கரடிகளின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகிப் பிழைத்தவர். வனத்துறையினருக்கு

சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக அழைக்கப்படும் மருத்துவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கானா மாநிலத்தில் வனவிலங்குகளை மீட்கும் படையில் கௌரவ உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com