வராத படம்
சினிமாக்கள் வெளிவராமல் தவிக்கும் பிரச்னை பல இடங்களில் இருக்கிறது. பிரான்சில் மேட் இன் பிரான்ஸ் என்று ஒரு திரில்லர் படம் எடுத்தார்கள். பாரிசை தீவிரவாதிகள் தாக்குவது பற்றிய படம். படத்தை வெளியிடத் திட்டமிட்டபோது பாரிஸில் கார்ட்டூன் பத்திரிகை அலுவலகம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை. சரி கொஞ்சநாள் ஆனது. நவம்பரில் வெளியிடலாம் என நினைத்திருந்தார்கள். இதோ தீவிரவாதிகள் பாரிஸ் நகரில் ரணகளப்படுத்திவிட்டார்கள். திரும்பவும் படத்தை வெளியிடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். ஒரு சினிமா எடுத்தது குத்தமாய்யா?
ஒப்பந்த திருமணம்: மேல்நாடுகளில் ஒப்பந்தம்போட்டு திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருப்பது நமக்குத் தெரியும். பிரியமானவளே திரைப்படம் மூலம் தெரிந்துவைத்திருக்கிறோம். இப்படி ஒப்பந்த திருமணம் செய்தவர்களில் ஒருவர் டைகர்வுட்ஸ்! அவர் மனைவியைப் பிரிந்தபோது ஒப்பந்தப்படி கொடுத்த தொகை 110 மில்லியன் டாலர்கள். அதாவது 650 கோடி! பிரபல பாடகர் தம்பதியான ஜே இசட் - பியான்ஸ் ஜோடியும் ஒப்பந்த திருமணம்தான். முதல் இரண்டு ஆண்டுகளில் பிரிவதென்றால் பத்து மில்லியன் மனைவிக்குத் தரவேண்டும். அதன் பிறகு பிரிந்தால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் கூடுதலாக தரவேண்டும். குழந்தைகள் பெற்றுக்கொண்டால் பிரியும்போது ஒரு குழந்தைக்கு ஐந்து மில்லியன் தரவேண்டும். இன்னமும் இந்த ஜோடி பிரியவில்லை. மீட்டர் ஓடிக்கொண்டே இருக்கிறது! இந்தியாவிலும் விவாகரத்து வழக்குகளில் தம்பதிகள் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். இதைத்தவிர்க்க இப்படி ஒப்பந்தங்களை முறைப்படுத்தலாமா என்று ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்!
பலே விற்பனை: கடந்த ஆண்டு 2014-----&15- மட்டும் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் நடந்த தொகை எவ்வளவு தெரியுமா? 6616 கோடிரூபாய்! ஐபோன்கள், கணினிகள் விற்பனையான தொகை இவ்வளவாம்!
பச்சை எச்சரிக்கை: நடிகைகள் உடலில் பச்சை குத்திக்கொள்வது இங்குமட்டுமல்ல உலகெங்கும் நடைமுறை. கேலி சீபோ என்ற அமெரிக்க டிவி நடிகை முதுகின் மீது தன் திருமணநாளை பச்சை குத்திக்கொண்டார். அந்தோ பரிதாபம்! அந்த திருமணம் பணால் ஆகிவிட்டது. எனவே அந்த நாளை மறைக்க பச்சை குத்துபவரிடம் போய் சிறப்பு டிசைன் பண்ணிக்கொண்டார். அத்துடன் தனக்குத்தானே ட்விட்டரில் அறிவுரையும் கூறிக்கொண்டார்: இனி வர இருக்கும் திருமண நாட்களை உடலில் பச்சை குத்தக்கூடாது! இது எப்படி இருக்கு?
டிசம்பர், 2015.