நான்கே வயதான கவிஞன்

நான்கே வயதான கவிஞன்
Published on

ஒரு கவிதைத் தொகுப்பு விரைவில் வர இருக்கிறது. அதற்காக  பிரபல நிறுவனம் ஒன்று கவிஞரிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதில் விஷயம் என்னவென்றால் நதீம் ஷம்மா சோர்ஜென் என்ற அந்த கவிஞருக்கு வயது நான்கு தான். இப்போதுதான் எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுவருகிறார். அவர் கவிதைகளை அம்மாவிடம் வாய்மொழியாகச் சொல்வார். அதை அம்மா எழுதுவார். அவற்றை ட்விட்டரில் அந்த தாய் வெளியிட்டுவந்தார். அவற்றைப் படித்தவர்கள் பாராட்டினர். அதுதான் பதிப்பகம் ஒன்று அச்சிறுவனின் கவிதைகளை நூலாக வெளியிட முன்வந்திருப்பதற்குக் காரணம். கீட்ஸும் ஷெல்லியும் பிறந்த பிரிட்டனில்தான் இந்த நிகழ்வு. குழந்தைகளுக்கே உரிய அச்ச உணர்வும், உலகளாவிய அன்பும் இவரது கவிதைகளில் உள்ளன.

எல்லோரிடமும் இருக்கிறது அன்பு

வில்லன்களிடமும்

அவர்கள் தங்கள் சக வில்லன் நண்பர்களிடம் அன்புகாட்டுகிறார்கள்

ரொம்ப மோசமான வில்லன்கள்கூட

காவலர்கள் அவர்களைக் கைதுசெய்யலாம்

இருப்பினும் அன்பு அப்படியே இருக்கிறது- என்கிற  ரீதியில் ஆங்கிலத்தில் செல்கின்றன கவிதை வரிகள்.

இக்கவிதைகளை கேட் க்லான்சி என்கிற பிரபல கவிஞர்தான் முதலில் அங்கீகரித்துள்ளார். இச்சிறுவனை சண்டே டைம்ஸ், ஸ்கை நியூஸ் போன்ற செய்தி நிறுவனங்களும் பேட்டி கண்டு பிரசுரம் செய்துள்ளன. வாக்கர் புக்ஸ் என்ற  பதிப்பகம் இந்த கவிதைகளை வெளியிட உள்ளது. “இந்த சின்ன வயதில் இப்படி அழகான கவிதைகளை எழுத முடிவது பெரும் ஆச்சர்யம்’ என்கிறார் பதிப்பாளர்.

கின்னஸ் உலக சாதனை புத்தகம் டொரொத்தி ஸ்ட்ரைட் என்ற சிறுமிதான் உலகில் மிக இளம் வயதில் வணிகரீதியாக நூல் எழுதிய  எழுத்தாளர் என்கிறது. இது  1962-இல் எழுதப்பட்டு  1964-ல் வெளியானது. எழுதியபோது நான்கு வயது. வெளியானபோது வயது ஆறு. மிக இளம் ஆண் எழுத்தாளருக்கான சாதனை இலங்கையின் தானுவான சரசிங்கே வசம் உள்ளது. 4 வயது 356 நாட்களில் இவரது புத்தகம் வெளியானது (2017).

நதீமின் கவிதைகள் வெளிவரும்போது உலகின் மிக இளம் எழுத்தாளர் பட்டியலில் அவனுக்கு ஓர் இடம் உண்டு.

ஆகஸ்ட், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com