நடராஜனின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து எங்கள் சேலம் மாவட்டத்தைச் சுற்றிலும் புதிதாக பத்துப் பதினைந்து கிரிக்கெட் அகாடமிகள் தொடங்கப்பட்டுள்ளன. மூன்று வயது சிறுவன் முதல் முப்பது வயது இளைஞர் வரை எல்லோரும் நாங்கள் நடராஜன் மாதிரி ஆகணும் என்று சொல்கிறார்கள்,'' என பெருமையுடன் சொல்கிறார் கண்ணன், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர். சேலம் கிங்ஸ் என்ற கிரிக்கெட் கிளப்பின் செயலாளர்.
‘‘2009இல் சேலம் மாவட்டம் மேச்சேரியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி ஒன்றின் தொடக்க விழாவுக்குப் போனபோதுதான் நடராஜனை முதலில் பார்த்தேன். யாரோ ஒரு இளைஞர் நன்றாக பந்துவீசுகிறார் என்று நினைத்துக்கொண்டேன். நடராஜனின் சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் இருந்து ஜெயபிரகாஷ், அசோக்குமார் என்று இரு இளைஞர்கள் எனது சேலம் கிங்ஸ் அணியில் ஆடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் நடராஜன் என ஒரு இடதுகை பந்துவீச்சாளர் இருக்கிறார், அணிக்கு அழைத்துவரவா எனக் கேட்டனர். அப்படித்தான் எங்கள் அணிக்கு அவர் ஆடினார். முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியது ஞாபகம் இருக்கிறது,'' என்று நடராஜனின் தொடக்கத்தை விவரித்தார் கண்ணன்.
அதன் பிறகு சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் சேர்ந்த நடராஜன் கல்லூரி அணிக்காகவும் பல்கலைக்கழக அணிக்காகவும் ஆடினார். 2011&12இல் சேலம் மாவட்ட 23 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடினார். இதன் பின்னர் நடராஜனின் நண்பரும்
சொந்த ஊர்க்காரருமான ஜெயபிரகாஷ், நடராஜனை சென்னையில் உள்ள ஓர் அணியில் சேர்த்துவிட, அதன் பின்னர் அவரது வளர்ச்சி தொடங்கியது. இன்றும் தன்னுடையை பேட்டிகளில் நடராஜன் ஜெயபிரகாஷை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடத்தவறியதே கிடையாது.
நடராஜனின் ஆரம்ப காலங்கள் கடினமானவை. ரஞ்சி ஆடவேண்டும் என்பதுதான் எல்லா வீரர்களுக்கும் முதல்கட்ட கனவு. அது நிறைவேறிய முதல் ஆட்டத்திலேயே 2015 ஆம் ஆண்டு நடராஜனுக்கு பெரும் சோதனை காத்திருந்தது. அவரது பந்துவீசும் ஆக்ஷன் தவறானது என்று சொல்லப்படுகிறது. அவர் ஆட்டத்தில் இருந்து விலகி தன் ஆக்ஷனை சரி செய்ய பயிற்சி எடுத்து மீண்டும் திரும்ப வந்து தன் திறமையை நிரூபித்தார். ஐபிஎல் ஆட முதலில் தேர்வான 2017-இல் தேர்வானபோதும் 2020&இல்தான் பிரகாசமாக வெளியே தெரியவருகிறார்.
ஆஸ்திரேலியாவில் மூன்று வடிவப் போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது!.
‘‘ஆரம்ப காலகட்டத்தில் எதேனும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டினால் அதை அப்படியே பிடித்துக்கொண்டு வெற்றிகரமாக நடத்திக்காட்டுவார். ஒரு நாள் கூட எங்கள் அணியில் ஆடியபோது அவர் காலதாமதமாக வந்ததே கிடையாது. கடின உழைப்பும் தன்னம்பிக்கையும்தான் நடராஜனின் முன்னேற்றத்துக்குக் காரணம்,'' எனக் கூறுகிறார் கண்ணன். உண்மை!
பிப்ரவரி, 2021