துணி மனிதர்!

உலகம் உன்னுடையது
துணி மனிதர்!
Published on

“புதுடெல்லியில் ஒரு கொடுமையான குளிர் நிறைந்த காலை நேரத்தில் ‘கைவிடப்பட்ட பிணங்களை ஏற்றிச்செல்லும் சைக்கிள் ரிக்ஷா’ என்று எழுதப்பட்ட ரிக்ஷாவைப் பார்த்து அதைப் பின் தொடர்ந்து சென்றேன். அந்த ரிக்ஷா ஓட்டுநரான ஹபீப், அவரது கண் தெரியாத மனைவி அம்னா பேகம் ஆகியோருடன் உரையாடினேன். இது என்ன புதுத் தொழிலாக இருக்கிறதே என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்கள் சொன்ன தகவல் என்னை உலுக்கி விட்டது. ஹபீப் சொன்னார்: குளிர்காலத்தில் கோடைகாலத்தைவிட இருமடங்கு அதிகப் பிணங்கள் கிடைக்கும்.  சிலசமயம் ஒரே நேரத்தில் 10-12 பிணங்களைக்கூட எடுத்திருக்கிறேன். அதைவிடக் கொடுமை அவரது சின்னமகள் அப்பாவித்தனமாக சொன்னது. ‘அங்கிள்.. குளிராக இருக்கும்போது பிணத்தைக்கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கிவிடுவேன். அது புரளாது என்பதால்பிரச்னை ஏதும் இல்லை’. குளிரில் வீடற்று பிளாட்பார்ம்களில் வசிப்பவர்கள் குளிரால் இறந்துவிட்டார்கள் என்று எவ்வளவு செய்தி பார்க்கிறோம். அவர்கள் யாரும் குளிரால் இறக்கவில்லை. குளிரிலிருந்து பாதுகாக்க ஆடை இல்லாததால் இறக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.” என்று அந்திமழையிடம் சொல்கிறார் அன்ஷு குப்தா.

ஏழை எளிய மக்களுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடம் என்கிற மூன்றில் இரண்டாவதாக வரும் உடைகளை அளித்துக் கொண்டிருக்கிறார் அன்ஷு குப்தா.  1999-ல் அவரும் அவருடைய மனைவி மீனாட்சியும் இணைந்து தங்களிடமிருந்த 67 உடைகளை ஏழை மக்களுக்குக் கொடுத்து தங்கள் பணிகளைத் தொடங்கினார்கள். இன்று அவருடைய தொண்டுநிறுவனமான கூஞ்ச், 150 தொண்டர்களுடன் பல்லாயிரம் பேருக்கு ஆடைகளை வழங்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஒவ்வொருமாதமும் 80-100 டன்கள் வரை துணிகளை இவர்கள் சேகரித்து வழங்குகிறார்கள்.

பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் நிர்வாகியாக இருந்தவருக்கு  இந்த சேவை எண்ணம் வரக் காரணம் அவர் ஓர் இளம் ப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருந்தபோது டெல்லியில் கண்ட ஆரம்பத்தில் சொன்ன சம்பவம்தான்.

அதன் பாதிப்பில்தான் குளிரில் வாடும் மக்களுக்கு ஆடைகளைக் கொடுக்கவேண்டும் என்ற கனவு அவருக்குள் தோன்றியிருக்கிறது. அதுதான் கூஞ்ச்சின் தொடக்கப் புள்ளி.

1991-ல் அவர் கல்லூரி மாணவராக இருந்தபோதே உத்தரகாசியில் நிகழ்ந்த பூகம்பத்தாக்குதலின் போது அங்கு சென்று கூடாரங்களில் தங்கி மீட்புப்பணி செய்திருக்கிறார். “நாட்டின் கிராமப்புறங்களில் நிலவும் பிரச்னைகளுடனான என் முதல் நேரடி அனுபவம் அதுதான். நகரத்தில் பிறந்தவனான என் உணர்வுகளை அது மிகவும் பாதித்தது. படிப்பு முடிந்ததும் கார்ப்பரேட் துறையில் வேலைக்குச் சென்றாலும் எனக்குள் ஒரு வெற்றிடம் இருந்துகொண்டே இருந்தது. தன்னலத்தை மீறிய சேவையில் இருக்கும் திருப்தி என்னை ஈர்த்துக்கொண்டே இருந்தது. 98-ல் வேலையை விட்டுவிட்டு உடனே நண்பர்களிடமும், என் வீட்டிலும் இருந்த ஆடைகளைச் சேகரித்து குளிர்காலத்தில் சாலையோரத்தில் வசித்தவர்களுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டேன்”.

நாடுமுழுக்க வளர்ச்சி அடையாத கிராமப்பகுதிகளுக்கு பயணம் செய்து அங்குள்ளவர்களின் பிரச்னைகளை அடையாளம் காண ஆரம்பித்த அவர் உள்ளூர் சமூகக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.

 “ஒவ்வொரு இடத்துக்கும் தேவைகள் மாறுபடும். பல கிராமப்புற பெண்களிடம் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் துணிகள் பற்றி எந்த வித அறிவும் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்களுக்கு இதற்காக சுகாதாரமான துணிகளால் ஆன நாப்கின்களை வழங்கவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தேன். கிராமப்புற பள்ளிகளைப் பார்ததபோது அவர்களுக்கு இருக்கும் தேவைகளுக்காக நகர்ப்புற பள்ளிகளை அணுகினோம். இப்படி பள்ளிகளுக்கு இடையிலான திட்டங்களை உருவாக்கினோம்.”

ஒருவருக்கு இலவசமாக ஆடைகளை அளிக்கும்போது அவரின் கௌரவம் பாதிக்காமல் அதைச் செய்யவேண்டும் என்பது இவரது கணிப்பு. எல்லோரும் பெரிய இயந்திரங்களைப் பற்றிப்பேசுகிறார்கள். நாங்கள் அடிப்படைத் தேவைகளாக சின்ன ஊசிகளைப் பற்றிக் கவலைப்படுகிறோம் என்கிறார்.

“மக்கள் ஆரம்பத்தில் இதைத் தர்மகாரியமாக நினைத்தார்கள். இந்த மனோநிலையை மாற்றுவதே பெரும் சவாலாக இருந்தது. ஒருவருக்கு இலவசமாக துணியைக் கொடுத்தீர்கள் என்றால் அவரின் கௌரவத்தை நீங்கள் பறிக்கிறீர்கள் என்று அர்த்தம். இதை மனதில்கொண்டே இந்தப் பணியைச் செய்கிறோம். கிராமப்புறங்களில் வறிய மக்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பொதுப்பிரச்னையை அவர்களே அடையாளம் காணவைக்கிறோம். அவர்கள் அந்தப் பொதுப் பிரச்னையைத் தீர்க்க வேலை செய்கிறார்கள். அதற்கு ஆடைகளை அவர்களுக்கு சம்பளமாக அளிக்கிறோம். இது அவர்களின் கௌரவத்தைப் பறிப்பதாக அமைவதில்லை. இதற்காக பல இடங்களில் இப்படி ஆடைக்காக செய்யப்பட்ட பணிகளை பற்றிய கருத்துப்படங்களை அவர்களுக்குக் காண்பிக்கிறோம். நகரங்களில் வீணடிக்கப்படும் துணி இதுபோன்ற தேவை இருக்கும் இடங்களில் கௌரவமானதிட்டங்களைச் செய்ய பயன்படுகிறது. வறிய குடும்பங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துகிறது.”

வருங்காலத்தில் தங்கள் சேவையைப் பாதிக்கக்கூடியவையாக அவர் கருதுவது எது?

“பொருட்களை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. அத்துடன் எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் நிதியுதவி அளிக்கும் நிறுவனங்களைக் கண்டறிவது” என்று சொல்லும் அன்ஷு குப்தா இப்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்,ஜலந்தர், பாட்னா, புவனேஷ்வர் போன்ற இடங்களில் நேரடி அலுவலகங்கள் வைத்துள்ளார். உத்தரகாண்ட், ஒரிஸ்ஸா மாநிலங்களின் உட்பகுதியில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் குழுக்களை வைத்துள்ளார். “எங்கள் தொண்டர்கள் நகர்ப்புறங்களில் பயனற்றதாகக் கருதப்படும் துணிகளைச் சேகரிக்கிறார்கள். இந்த துணிகளைப் பிரித்து, தைத்து, கலாச்சாரம், பிராந்திய அடிப்படையில் தரம்பிரிக்கிறோம். பல தொண்டுநிறுவங்கள், பஞ்சா யத்துக்கள், சமூக சேவகர்கள், இந்திய ராணுவ அமைப்புகள் என பலர் எங்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்” என்கிற இவரை துணிமனிதர் என்றே இப்போது அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். இவரிடம் கூஞ்ச் என்றால் என்ன என்று கேட்டோம்.

“எதிரொலி” என்றார். பொருத்தமான பெயர்!

டிசம்பர், 2013 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com