சமீபத்தில் அம்பலப்புழாவுக்குச் சென்றிருந்தேன்.அம்பலப்புழா கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கிறது.கேரளத்தின் ஏழு புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணன் கோயில் இங்கு இருக்கிறது. இங்கு நைவேத்தியமாய்த் தரப்படும் பால்பாயாசம் புகழ்பெற்றது.
சமீபத்தில் இரா. முருகன் எழுதிய ‘மிளகு' நாவல் படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஆலப்புழா அடிக்கடி வருகிறது. இல்லாவிட்டாலும் நான் கேரளத்துக்குள் அடிக்கடிப் பயணம் செய்கிற ஆள்தான். இதுபோன்று கதைகளைப் படித்துவிட்டு அதில் விவரிக்கப்பட்டிருக்கும் இடங்களைத் தேடிச் செல்வதை Xanaduism என்கிறார்கள். அவை நிஜமான இடங்களாகவோ கற்பனையான இடங்களாகவோ இருக்கலாம்.கேரளத்தில் இன்னொரு புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயிலான குருவாயூருக்கும் அம்பலப்-புழாவுக்கும் ஒரு தொடர்புண்டு. பதினேழாம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் கேரளத்துக்குள் படையெடுத்து வந்தபோது அவன் குருவாயூரைத் தாக்கக்கூடும் என்று அஞ்சி குருவாயூர் கிருஷ்ணனின் பிரதிமையை அம்பலப்புழாவில் கொண்டு சில காலம் வைத்திருந்தார்கள்.(இதே போன்று மாலிக்காபூர் படையெடுப்புக்கு அஞ்சி மதுரை மீனாட்சி அம்மன் சிலையை குமரி மாவட்டத்தில் கொண்டு வைத்திருந்தார்கள். இந்த வரலாற்று சம்பவத்தை வைத்து ஜெயமோகன் ‘குமரித் துறைவி' என்கிற உணர்ச்சிகரமான நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.)இந்த நிகழ்வின் நினைவாக அம்பலப்புழை ஆலயத்தில் குருவாயூர் நடை என்று குருவாயூர் கிருஷ்ணனுக்குத் தனிச் சன்னிதி உள்ளது.
குருவாயூருக்குப் போய்விட்டாலும் இங்கு படைக்கப் படும் பால்பாயாசத்தை விரும்பி ஒவ்வொரு உச்சிகால பூஜைக்கும் கிருஷ்ணன் வந்துபோவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.இந்தப் பால்பாயாசம் காரணமாகவே குருவாயூர் கிருஷ்ணன் கோவில் பூசகர்களுக்கும் அம்பலப்புழை கோயில் பூசகர்களுக்கும் ஒரு சிறிய பகைமையும் உள்ளது. அம்பலப்புழை கிருஷ்ணனையும் குருவாயூர்க் கிருஷ்ணனையும் ஒரே நாளில் தரிசிக்கக்கூடாது என்கிற நம்பிக்கை இதிலிருந்து கிளைத்தது. நான் போனபொழுது இந்தப் புகழ்பெற்ற ‘திருமதுரம்' கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கோயிலின் இன்னொரு விசேடமான ‘வேலக்களி' என்னும் போர் நடனத்தை காணமுடிந்தது.இதை கிருஷ்ணனின் பிரதிமையை ஆனை மேல் ஏற்றிக்கொண்டு பிரகாரத்தைச் சுற்றி வரும்போது அதன் முன்பு ஆடுகிறார்கள். குருஷேத்திர யுத்தத்துக்கு முந்தின நாள் இரவில் அல்லித் தண்டுகளையும் இலைகளையும் வைத்துக்கொண்டு கிருஷ்ணனின் போர்வீரர்கள் ஆற்றங்கரையில் ஒரு மாதிரியுத்தத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதை பிரதிநிதித்துவப் படுத்துவது போல நாயர் படைவீரர்கள் சிகப்பு ஆடைகளையும் ஒரு குத்தீட்டி, கேடயம் சகிதமாக பஞ்சவாத்தியம் எனப்படும் ஐந்து வாத்தியங்களின் இசைக்கேற்ப ஆடுகிறார்கள். நூற்றுக்கணக்கான சேவல்கள் ஒரே நேரத்தில் ஆடுவது போல் இருந்தது.
அம்பலப்புழா கிருஷ்ணனைக் குறித்து ஒரு சுவராஸ்யமான கதை இருக்கிறது. அம்பலப்புழா இருக்கும் செம்பகச்சேரி நாட்டின் அரசனைத் தேடி ஒரு முதியவர் வடிவில் கிருஷ்ணன் வந்தார். அந்த அரசனுக்குச் சதுரங்க விளையாட்டில் பிரியம் அதிகம். அவர் அவனை ஒரு சதுரங்கப் போட்டிக்கு அழைத்தார். பந்தயம் அரிசி மணிகள். அதாவது தோற்றவர் வென்றவருக்கு அரிசிமணிகள் கொடுத்தால் போதும். அதாவது இந்தக் கணக்கில். முதல் கட்டத்துக்கு ஒரு அரிசி மணி. இரண்டாவது கட்டத்துக்கு இரண்டு மணி. அடுத்து நாலு மணி. இப்படி இரட்டிப்பாகிக்கொண்டே செல்லும். அரசர் தோற்றுவிட்டார். பந்தயத் தொகையை அந்த முதியவருக்குக் கொடுக்க உத்தரவிட்டார்.அதன்பிறகுதான் அவருக்குப் புரிந்தது. அவருடன் களஞ்சியத்தில் இருக்கும் அத்தனை அரிசியையும் கொடுத்தாலும் அந்தக் கடனைக் கொடுத்துத் தீர்க்கமுடியாது!
சதுரங்கப் பலகையில் உள்ள 64 கட்டங்களையும் நிரப்ப டிரில்லியன் டன் அரிசியை அரசர் கொடுக்க வேண்டி இருக்கும். அரசர் சதுரங்கத்தில் மட்டுமில்லாது கணக்கிலும் வீக்! அவர் திகைத்து நிற்க கிருஷ்ணன் தன் சுயவடிவில் தோன்றி இந்தக் கணக்கை ஒரே தவணையில் கொடுக்கவேண்டாம் என்று சொல்லியதாகவும் அந்தக் கணக்கைத் தீர்க்கும் விதமாகவே தினம்தோறும் பால்பாயாச நைவேத்தியம் அவனுக்கு வழங்கப்படுகிறது என்றும் தொன்மம் சொல்கிறது.
ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்